Advertisement

மதுரை வீரன் பொம்மி 5

தேவேந்திரனை பார்த்துவிட்டு  கிளம்பிய ஜனகன், நேரே வீடு செல்லாமல் அவர்களின் பங்காளி வீட்டுக்கு சென்றான். “சித்தப்பா..” என்று கூப்பிட்டு கொண்டே வீட்டுக்குள் சென்றவனை, வரவேற்று அமர வைத்தவர்,

“என்னப்பா கல்யாண மாப்பிள்ளை இவ்வளவு தூரம்..?” என்றார்.

“தோணுச்சு வந்தேன்.. சித்தி, அண்ணா எல்லாம் எங்க..?” என்று விசாரிக்க,

“மருமகளையும், குழந்தையையும் பார்த்துட்டு வர சம்மந்தி வீடு போயிருக்காங்க..” என்றவர், வந்தவனுக்கு பழம் கொடுத்தார்.

வாங்கி கொண்டவன், “கோயில் நிலம் விவகாரத்துல என்ன நடக்குது சித்தப்பா..?”  என்றான்.

“என்னப்பா திடீர்ன்னு அதை பத்தி..?”

“ஏன் சித்தப்பா நான் தெரிஞ்சுக்க கூடாதா..?”

“நீ தெரிஞ்சுக்காம.. நிலமே உங்க பொறுப்பு தானேய்யா, நான் கேட்டது இந்த நேரத்தில வந்து கேட்கறியேன்னு தான்..”

“முன்னயே விசாரிச்சிருப்பேன், அப்பாக்கு நான் இதுக்குள்ள வரது பிடிக்கலை, ஆனா இப்போ தெரிஞ்சுக்கிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை சித்தப்பா..” என்றவன், பெரு மூச்சுடன் “அமுதா வந்து என்னை பார்த்தா..?” என்றான்.

“அந்த புள்ளை ஏன்ய்யா வந்து உன்னை பார்க்குது..? தப்பா போயிட கூடாது சாமி..” அவர் யோசனையாக சொன்னார்.

“அவங்க மாமா, அந்த பசுபதி ஏதோ பண்றார் போல, என்னை பத்தி எல்லாம் விசாரிக்கிறாராம், அந்த  நிலம் கூட அவர்கிட்ட இருந்து கை மாற போகுதுன்னு பேச்சு அடிபடுதாம்.. ஜாக்கிரதையா இருங்கன்னு சொல்லிச்சு..” என்றான்.

“அந்த புள்ள அவங்க வீட்டு ஆளுங்களை பத்தி உன்கிட்ட வந்து சொல்றதே உதைக்குதேப்பா..” சித்தப்பா சொல்ல, ஜனகன் அமைதியாக இருந்தான். அவள் இதை மட்டும் சொல்லவில்லையே. முறிந்த சம்மந்தம் ஏன் என்றும் தானே அழுதாள்.

“ஏன் மாமா அதுக்குள்ள என்னை விட்டுட்டு வேற பரிசம் போட்டுடீங்க, நான் உங்ககிட்ட அந்த நிலம் பத்தி பேசுனது உங்களுக்கு பிடிக்கலைன்னா என்கிட்ட சொல்லியிருக்கலாமே, எங்க அந்த பிரச்சனையில நம்ம சம்மந்தம் நின்னுட போகுதோன்னு பயத்துல தான் நான் அப்படி.. என்னை உங்களுக்கு பேசினது கொஞ்ச நாள்ன்னாலும் என்னால உங்களை மறக்க முடியல, நான் பேசினது தப்பு தான், அதுக்காக ஒரேடியா என்னை தலை முழுகிட்டிங்களே..?” என்று அவ்வளவு அழுகை. ஜனகனுக்கு அவள் அழுகை நிச்சயம்  வருத்தப்படுத்தியது தான்.

ஆனால் அவளுக்கு இருந்த அதே பிடித்தம் இவனுக்கும் இருந்திருந்தால் நிச்சயம் இந்த சம்மந்தம் முறியவே விட்டிருக்க மாட்டான். அவனுக்கு தான் அமுதாவின் முதல் பேச்சே  ஒப்பவில்லை. தொடர்ந்து போன் செய்து கட்டிப்படுத்த நினைக்க, எப்படி ஒட்டும்..?

உனக்கு அமுதாவை பேசலாம் என்று தந்தை முதலில் கேட்டபோது, தெரியாத ஒருவர் வருவதற்கு தெரிந்தவர் வருவது மேல் என்று தான் நினைத்தான். சம்மதமும் சொன்னான். ஆனால் அடுத்த சில நாட்களிலே இதெல்லாம் அரங்கேற,  அவனுக்கு பிடித்ததிற்கான வாய்ப்பு ஒன்று உருவாகவே இல்லை.

ஆரம்பிக்கும் போதே இப்படியா..? என்று மலைத்து தான் போனான். இருபத்தைந்து வயது.  ஒருவேளை அவன் வாழ்க்கையில் போராடி மேலே வந்திருந்தால் இந்த வயதிற்கே அனுபவ பாடம் கற்றிருப்பான். அது தான் இல்லையே. எல்லாம் கையில். பணம், படிப்பு எல்லாம்.

படிப்பும்  அவன் வசம். நல்லபடியே அமர்ந்து படித்தால் அவனின் உயரம் வேறு. பெரிதான குறிக்கோள் இல்லை. நிலையான வேலை வேண்டுமா, சரி பேங்க் வேலை போதும் என்று டிகிரி முடித்த வருடமே முதல் அட்டம்ப்டிலே  கிளியர் செய்து உள்ளூரில் போஸ்டிங் வாங்கியவன்.

சம்பாதிக்கும் பணமும் அவன் பொறுப்பு. வீட்டில் உனக்கு சேர்த்து வை என்றுவிட்டனர். சுகவாசியாய், சுமூகமான வாழ்க்கை. அதில் முதல் இடறலே அவன் திருமணம் விஷயம் தான்.

இத்தனை வருடங்களில் அவன் பின்னோக்கி யோசித்தது அமுதாவின் அணுகுமுறையில் தான். இது சரிப்பட்டு வராது என்று எல்லா புறமும் யோசித்து  நிலையான முடிவு எடுத்ததும் இந்த சம்மந்த முறிவு தான்.

தன்னை பற்றி, தன் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசித்து சுயநலமாக எடுத்த முடிவு தான் அது. இதை ஒப்புக்கொள்ள அவனுக்கு எந்தவித தடங்கலும் இல்லை. அழுது கொண்டிருந்த அமுதாவிடமும் இதையே சொன்னான்.

“என்னை, என் குடும்பத்தை வைச்சு தான் நான் வேண்டாம்ன்னு சொன்னதே, நீ இப்படி அழுகிற அளவுக்கு எல்லாம் நான் ஒர்த் இல்லை, சுயநலக்காரன், உன்னை யோசிக்கல நான், என்னையும் நீ யோசிக்காத, கிளம்பு வீட்டுக்கு போ.. இந்த நேரத்துக்கு இப்படி வழியில வந்து நிக்கிற, சொந்தம் முறிஞ்சாலும் எங்க வீட்டு பொண்ணு தான் நீ, உன்னோட பாதுகாப்பு பத்தி நான் கவலைப்படுவேன், நம்மளை மீறி எந்த பிடித்தமும் இல்லை, இனி இப்படி செய்யாத, பத்திரம்..” என்று அவளை அனுப்பி வைத்து தான் இவன் கிளம்பியிருந்தான்.

அமுதாவுடன் பேசும் போது, தேவேந்திரன் கார் இவனுக்கு பின்னால் தான் நிற்கிறது என்று தெரிந்தும் இவன்  கவலைப்படவில்லை. அதில் பொம்மியும் இருக்கிறாள் என்று டீ கடையில் பார்த்தும் அவன் அலட்டி கொள்ளவில்லை. கேட்கமாட்டார்கள் என்ற முழு நம்பிக்கை. கேட்டாலும் இவன் அமுதா பற்றி சொல்லியிருக்க வாய்ப்பில்லை.

இப்போது சித்தப்பா கேட்கும் போது மட்டும் எப்படி சொல்வான்..? “நீங்க நிலம் விவகாரம் பத்தி சொல்லுங்க சித்தப்பா, அய்யா இப்போ எல்லாம் ரொம்ப கோவமா தெரியுறார், கொடுக்க மாட்டேன்னு சொல்றாங்களா..? என்ன செய்ய நினைச்சிருக்கீங்க..?” என்று கேட்டான்.

“கொடுக்க நினைக்கிறவன் சுத்த கிரயம் பண்ணுவானா..? பிடியிலே நிக்கிறான், அதான் பேசுனது எல்லாம் போதும் கோர்ட் போயிடலாம்ன்னு முடிவெடுத்திருக்கோம், மூல பத்திரம் வைச்சு தானே அவன் பேருக்கு எழுத்திட்டிருக்கான், உங்க கொள்ளு தாத்தா சொத்துல உன் அப்பாக்கும் பங்கு இருக்கு தானே, அதை வைச்சு மொத்த சொத்துக்கும் கேஸ் போடலாம்ன்னு ரெடி பண்ணிட்டு இருக்கோம்..” என்றார்.

“அப்படி பண்ணா நிலம் நம்ம கைக்கு வந்திடுமா சித்தப்பா..?” என்று கேட்டான்.

“என்னய்யா இப்படி கேட்கிற..?”

“என்ன சித்தப்பா..?” என்றான் ஜனகன் புரியாமல்.

“பின்ன அப்படி நாம கேஸ் பைல் பண்ணா எல்லா சொத்தும் தான் சிக்கும், திரும்ப முதல்ல இருந்து பங்கு பிரிக்கணும், அவனுக்கு பிரச்னையில்லை, உங்க அப்பாக்கு தான் வம்பு..” என்றார் அவர். அப்போதும் ஜனகனுக்கு புரியவில்லை.

“பசுபதிக்கு பங்கு வந்த சொத்து முழுசும் அவன் கையில இருக்கு..”
சித்தப்பா சொல்ல, ஜனகனுக்கு புரிந்து போனது. இவர்களின் சொத்தில் பெண் பிள்ளைகளுக்கு பங்கு கொடுத்துவிட்டனரே..?

அதனால் என்ன..? அவனின் அக்காக்கள் தானே, பேசலாம், சம்மதம் சொல்வார்கள், அப்பாவிற்கு துணை நிற்க  மாட்டார்களா என்ன..? முகம் தெளிந்தது ஜனகனுக்கு.

“சரி சித்தப்பா இதை கேட்க தான் வந்தேன், சமாளிச்சுக்கலாம், நிலம் கைக்கு வந்திடும், அப்பா எடுத்த முடிவு சரி தான், அப்பறம் நான் இதை பத்தி கேட்டதை அய்யாகிட்ட சொல்லிடாதீங்க, நான் வரேன்..” என்று கிளம்பிவிட்டான்.

உறவுகள் என்னவென்று அவனுக்கு புரியவில்லை. பணம், பதவி, சொத்து எல்லாம் செய்யும் மாயை என்ற ஒன்று உண்டே..!

“என்னப்பு இவ்வளவு நேரம் பண்ணிப்புட்ட..? உனக்காக காத்திருந்து அய்யா சின்ன மாப்பிள்ளையோட பத்திரிக்கை வைக்க கிளம்பிட்டார்..” ராஜலக்ஷ்மி மகன் வீட்டுக்கு வரவும் சொன்னார்.

“கொஞ்சம் லேட் ஆகிடுச்சும்மா.. நாளைக்கு அய்யாவோட போற மாதிரி பார்த்துகிறேன்..” என்றவன், அக்கா பிள்ளைகளுக்கு வழியில் வாங்கி வந்திருந்த பலகாரங்களை கொடுத்தான்.

“க்கா.. பூ..” என்று மூன்றாம் அக்காவிடம் பெரிய பண்டில் மல்லிகையை கொடுத்தவன், ரூம் சென்று குளித்து வந்தான்.

ஒருவாரத்தில் திருமணம் என்ற நிலையில் வெளிவேலைகள் அதிகம் தான். ஜனகன் மறுநாளில் இருந்து சீக்கிரமே வங்கியில் இருந்து வந்து அப்பாவிற்கு உதவி செய்தான். அக்கா குடும்பங்களுக்கு துணி எடுக்க என்று ஒரு நாள் மதியமே பர்மிஷன் வாங்கி வந்து கூட்டி சென்றான்.

தேவேந்திரன் அவனை நகை கடைக்கு கூப்பிட்டு கொண்டிருக்க, ஒரு நாள் மாலை அவருக்கு ஒதுக்கினான். அன்றே பொம்மிக்கும் நகை வாங்கிடவும்  முடிவு செய்தான். தாய்மாமா சீர் இவன் தானே வைக்க வேண்டும். அவளையும் அழைத்து வர சொல்ல, “வீட்ல விட மாட்டாங்க..” என்றார் தேவேந்திரன்.

வங்கியில் லஞ்ச் சாப்பிட்டு கொண்டிருந்தவன், “அதான் இன்னும் மூணு நாள் இருக்கே.. பார்லருக்கு மட்டும் விடுறாங்க..” என்றான்.

“உன்கிட்ட பேசுறதுக்கு நான் கூட்டிட்டே வந்திடுவேன்..” என்ற தேவேந்திரன் வைக்க, இவன் உணவு முடித்து வேலையிடத்துக்கு வந்தான். வேலைகள் ஆரம்பமானது. இடையில் ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்த்தான். அவனை பார்த்தபடி மூவர் மேனேஜர் அறையில் இருந்து சென்று கொண்டிருந்தனர்.

யார் இவங்க..? ஜனகன் அவர்கள் பார்வையை நேர்கொண்டு எதிர்கொள்ள, மேனேஜர் எதிரே வந்து நின்றார். “ஜனகன்.. இந்த சலான் முடிஞ்சுதா..?” என்று கேட்க,

“நேத்தே முடிச்சு கொடுத்துட்டேனே சார்..” என்றான் ஜனகன்.

“ஆஹ்.. சரி சரி..” என்றவர், பின்னால் திரும்பி அவர்கள் சென்றுவிட்டார்களா என்று பார்த்து கொண்டார்.

“சார்.. என்ன ஆச்சு..?” ஜனகன் எழுந்து அவருக்கருகில் வந்து நின்றிருந்தான்.

“அது.. அது ஒன்னுமில்லை, நீங்க பாருங்க, அப்பறம் உங்க மாமா, தேவேந்திரன் சார் நம்பர் கொஞ்சம் கொடுங்க..” என்று கேட்க,

“அவர் நம்பர் எதுக்கு சார்..?” ஜனகன் புரியாமல் அவர் வேர்த்த முகத்தை பார்த்தான்.

“நம்ம கஸ்டமர்கிட்ட பேச எனக்கு காரணம் இருக்கு ஜனகன், விடுங்க, நானே எடுத்துகிறேன்..” என்று அறைக்கு வேகமாக சென்றுவிட, ஜனகன் சுருக்கிய புருவத்துடன் வேலையிடத்துக்கு சென்றான்.

‘உங்களை பத்தி விசாரிக்கிறாங்க மாமா..’ என்ற அமுதாவின் வார்த்தைகள் பளிச்சென வந்து சென்றது.

நாளையில் இருந்து விடுமுறை. இன்று தான் அவனுக்கு கடைசி நாள் என்பதால்  உடன் பணிபுரிபவர்களுக்கு காலையிலே பத்திரிக்கை வைத்து அழைத்திருந்தான்.  மாலை வேலை முடித்து சீக்கிரம் கிளம்பவும், “போகும் போது பேச்சிலரா போய்ட்டு, வரும் போது குடும்பஸ்தனா வர போறீங்க.. வாழ்த்துக்கள் சார்..” என்று உடன் பணிபுரிபவர்கள் வாழ்த்துடன் விடைகொடுத்தனர்.

சிரித்தவன், “நேர்ல வந்து விஷ் பண்ணுங்க கைஸ்.. வரேன்..” என்றவன் மேனேஜர் அறையை பார்க்க அவர் கிளம்பியிருந்தார். போன்ல பேசிக்கலாம் என்று தேவேந்திரன் சொன்ன கடைக்கு வந்து சேர்ந்தான். இரு மகள்களுடன் தேவேந்திரன் முன்னமே வந்து  காத்திருந்தார்.

Advertisement