Advertisement

இன்று அவரின் கடைசி மகளின் நீராட்டு விழா. பெரிதாக செய்ய வேண்டும் என்று வீட்டு பெரியவர்கள் பிடிவாதம். ஜனகனுக்கு இது அந்தளவு ஒப்பாது. ஆனால் அவர்கள் பக்கம் இது பெரிய விஷயமாக பார்க்கப்படும். இவன் தான் தாய்மாமா வேறு. எந்த காரணத்தையும் முன்னிட்டு  மறுத்துவிட முடியாது.

எனவே “பாப்பா சின்ன பொண்ணு.. இரண்டு வருஷம் போகட்டும், செஞ்சுடலாம்..” என்று இப்போது கொஞ்சம் வளர்ந்து பிறகு அக்கா மகள் சரி என்ற சொன்ன பிறகே பங்க்ஷன் வைக்க சொன்னான்.

பெரியவர்களால் அவனை ஒரேடியாக மறுத்துவிட முடியாதே. ஏற்று கொண்டு இன்று விழா. இதோ இன்னும் சிறிது நேரத்தில் தாய்மாமா சீர் வரும். வந்திருந்த உறவுகள் எல்லாம் வாசலில் காத்திருந்தனர்.

கணேசன், மனைவியிடம் காத்திருக்க, சீரும் வந்தது. ஜனகன் மனைவியுடன் முன் வர, அவனுக்கு பின் பெரிய படை. சட்டென்று எண்ணி விட  முடியாதளவு சீர் தட்டு வந்து கொண்டே இருக்க தாய்மாமாவை மிக மரியாதையுடன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

மண்டபத்தின் மேடையில் சீர் தட்டு அடுக்க இடம் போதவில்லை. கீழேயும் வைத்தனர். ஜனகனின் அக்காக்கள், அவர்களின் பிள்ளைகள் எடுத்து கட்டி எல்லாம் செய்து கொண்டிருக்க, ஜனகன் மனைவியுடன் அப்பா, அம்மாவை தேடி சென்றான்.

முன் வரிசையில் முகம் முழுக்க பூரிப்புடன் அமர்ந்திருந்தவர்கள் கையை கணவனும், மனைவியுமாக பற்றி கொண்டு மேடைக்கு அழைத்து வந்தனர். ஜனகன் தானே அப்பா, அம்மாவிற்கு சேர் எடுத்து போட்டான்.

அடுத்து தாய்மாமா முறை செய்ய வேண்டும். ஜனகனுக்கே அந்த முறைகள் எல்லாம் செய்து அத்துப்படி என்றாலும் அப்பா, அம்மாவை கேட்டே எல்லாம் செய்தான். பொம்மி கணவனுடன் நின்று அவனுக்கு கை கொடுத்தாள்.

இருவரிடமும் பேச்சே இல்லை. ஒருவர் கண் பார்த்து மற்றவர் செய்து கொண்டிருக்க, தேவேந்திரன் வந்தவர் மகளையும், மருமகனையும் ரசித்து சென்றார்.

அதிதிக்கு திருமணம் முடிந்திருக்க, தாத்தா, பாட்டி பக்கத்திலே இருந்து கொண்டாள். பானுமதி வீட்டின் பெரியவராக எல்லோரையும் வேலை வாங்கி கொண்டிருந்தார். ராஜலக்ஷ்மிக்கு அடுத்தபடி அந்த வீட்டில் அவர் தானே. தங்கைகளும் அக்கா சொல் பேச்சு கேட்டு ஓடினர்.

பார்த்திருந்த வேலய்யன், ராஜலக்ஷ்மி தம்பதிக்கு ஆனந்த கண்ணீர் இல்லாமல் இல்லை. என் பிள்ளைகள், எங்க குடும்பம் இது.. என்று நிறைந்து போயினர்.

சடங்குகள் எல்லாம் முடிய, கணேசன் தன் மாமியார் வீட்டு ஆட்களை  சாப்பிட அழைத்தார். “முதல்ல வந்தவங்க எல்லாம் சாப்பிட்டட்டும் மாமா..  நாம அப்பறம் பார்த்துக்கலாம்..” ஜனகன் சொல்லிவிட்டவன், தானும் பந்திக்கு சென்றான்.

அடுத்த சில நிமிடத்தில் தன் வீட்டு ஆட்களுக்கு ஜுஸ், ஸ்வீட் என்று வந்து கொண்டே இருந்தது. பெரிய குடும்பம். தட்டு தட்டாக வர, “இதுக்கு நாம பந்திக்கே போயிருக்கலாம்..” என்றார் தேவேந்திரன் அண்ணா சிரிப்புடன். அவரின் கடமை எல்லாம் முடிந்த திருப்தி அவரிடம்.

அவர்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தொழில்கள்  இன்னும் தேவேந்திரன் தலைமையில் கூட்டாக  செய்து கொண்டிருந்தாலும் பங்கு பிரித்தாகிவிட்டது. அண்ணன்கள் வைத்து ஆண், பெண் எல்லோருக்கும் சமமாக கொடுக்க வைத்தார் தேவேந்திரன். தன் பெண்கள், அண்ணா பெண்கள் என்று பார்க்கவில்லை.

அதில் சித்தப்பா மேல் அண்ணா பெண்களுக்கு அளவில்லா பிரியம். இவரை முன்னிறுத்தி தான் எல்லாம் செய்கின்றனர். ஆனால் அவர் பிரியம் எப்போதும் போல ஜனகனிடம் மட்டும் தான். அதிலும் கடந்த வருடங்களில் கூடி தான் போனதே தவிர குறையவில்லை.

ஜனகன் டிரான்ஸ்பர் என்று எந்த ஊர் சென்றாலும் மனிதர் பின்னால் சென்றுவிடுவார். “மகளை குடி வைக்கணும், அக்கம் பக்கம் எல்லாம் பார்த்து கொடுக்கணும், பாவம் அவ தனியா பிள்ளைகளை வைச்சுட்டு என்ன பண்ணுவா..?” என்று காரணம் அடுக்கி சென்றுவிடுவார். ஆனால் வந்து சுற்றுவது என்னமோ மருமகனுடன் தான். பானுமதி இவர் இப்படி தான் விட்டுவிட்டார். மகளுக்கு பழகிவிட்டது.

இதோ இன்று பங்க்ஷனிலும் ஜனகன் சொல்லிவிட்ட ஒரே காரணத்திற்காக இறங்கி வேலை செய்து கொண்டிருந்தார். உணவு தீர தீர சமையல் நடந்து கொண்டே இருந்தது. அவரின் ஹோட்டல் மாஸ்டர்களையும் வர வைத்து கொண்டார். காலியாகும் முன்னே பொருட்கள் வந்திறங்கியது. எல்லாம் அவரின் கட்டுப்பாடே. பங்க்ஷன் வீட்டுக்காரர்  கணேசனே மூன்றாம் ஆளாய் நின்று பார்த்தார்.

“எதாவது வேணுமா மாமா..?” என்று ஜனகன் சமையல் நடக்கும் இடத்திற்கு வர, அவன் சோர்ந்த முகம் கண்ட தேவேந்திரன் ஜுஸ் எடுத்து கையில் கொடுத்துவிட்டார். வேலை இடத்தில் இருந்து இன்று காலை தான் வந்திருந்தான். பொம்மி மட்டும் மாமனார், மாமியார்  தன் இரண்டு ஆண் பிள்ளைகளுடன் மூன்று நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்துவிட்டாள்.

“நீ இப்படி நில்லு..” என்று அனல் இல்லாத இடத்தில் அவனை நிறுத்தி கொள்ள,

“உள்ள எல்லோருக்கும் குடிக்க, சாப்பிட கொடுத்துவிடுங்க மாமா..” என்று அவன் குடித்தான்.

“நான் பார்த்துகிறேன்..” என்று அவர் செய்து கொண்டிருக்க, தாத்தா.. என்று ஓடி வந்தனர் ஜனகன் பிள்ளைகள். ஏழு, ஐந்தில் இரண்டும். “தூக்குங்க தாத்தா.. கண்ணு எரியுது..” என்று இரண்டாம் வாண்டு சொல்ல, “ஐஸ்கிரீம் சீக்கிரம் கொடுங்க தாத்தா.. எடுத்து வச்சிட்டீங்க இல்லை..” என்று முதல் வாண்டு அட்டகாசம்.

ஜனகன் தள்ளி நின்று பார்த்திருந்தவன், “க்ருஷ்.. அபி..” என்று ஒரு அதட்டல். “ப்பா..” என்று இரண்டும் பம்ம, ஜனகன் பார்வை இரண்டாம் மகன் மேல் பட்டது. அவன் பட்டென தாத்தாவிடம் இருந்து இறங்கிவிட, முதல் மகனை பார்த்தான். “சாரி ப்பா..” என்றான் அவன்.

“அம்மாகிட்ட போங்க.. ஐஸ்கிரீம் சாப்பிடும் போது வரும். அதுவும் ஒன்னு தான்..” என்று கண்டித்து அனுப்ப, இரண்டும் ஓடிவிட்டது.

“என்கிட்ட தானே கேட்டாங்க.. நீ எப்படி அவங்களை கண்டிக்கலாம்..?” தேவேந்திரன் அவனிடம் சண்டைக்கு செல்ல,

“உங்ககிட்ட கேட்டா மட்டும்..” இவன் பதிலுக்கு முறுக்கினான்.

“அவங்களுக்கு தாத்தாடா நான், எங்க விஷயத்துல நீ தலையிடாது..” அவர் பேச,

“ஓஹ்.. நான் பேச கூடாதா..? சரிதான்.. அப்போ யாரோ மிரட்டினாங்கன்னு என்னை ஊரைவிட்டே அனுப்பி வைச்சவர் தானே நீங்க, இப்படி தான் பேசுவீங்க..?” என்று இவனும் பதிலுக்கு பேசினான்.

“எதுக்கு எதைடா பேசுற நீ, எப்போ பார்த்தாலும் இதுவேவா..?” தேவேந்திரன் இதற்கு முடிவே இல்லையா என்று கடுப்பாக,

“எல்லாத்துக்கும் நான் இதை தான் பேசுவேன், நீங்க கேட்டு தான் ஆகணும்..” என்றான் இவன் சட்டமாக.

அடுத்து என்ன பந்தியில் இருவரும் ஆளுக்கொரு திசையில் முகம் திருப்பி கொண்டு அமர்ந்திருந்தனர். குடும்பத்தினர் ஏன் என்று கேட்க வேண்டுமே. பொம்மி மட்டும் ஆயாசமாக தலை ஆட்டி கொண்டாள்.

கணேசன் அழைப்பின் பேரில் குடும்பத்துடன் வந்திருந்த அமுதா ஜனகனை தேடி வந்து பேசினாள். கணவன் வெளிநாட்டில் இருந்து வந்துவிட, அம்மா வீட்டிலே செட்டில் ஆகிவிட்டாள். மாமா என்ற உறவிற்காக பசுபதியை பார்ப்பது இவர்கள் தான். பிள்ளைகள் பார்ப்பதில்லை. அவருக்கு  கட்சியில் ஒன்றும் இல்லாமல் போனதுடன், தொழிலும் படுத்துவிட்டது. ஆள் மிகவும் ஒடுங்கி ஓய்ந்து போய்விட்டார்.

ஜனகன் பதவியை வைத்து ஏதேனும் ஆதாயம் தேடலாம் என்று பார்த்தால் உறவு இருந்தால் தானே. வேலய்யன் அன்று பத்திர அலுவலகத்தில் வைத்து அவரை கத்திவிட்டதோடு சரி அவருடன் உறவை முறித்து கொண்டார். அப்பாவிற்கு வேண்டாம் என்றால் மகனுக்கும் வேண்டாம் தான்.

அக்காக்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தான் தம்பி. கடைசி அக்கா இப்போது வரை அன்று வாங்கிய சொத்துக்காக வருத்தம் தெரிவித்து கொண்டிருக்கிறார். அதிலும் இன்று தம்பி தாய்மாமாவாக அசத்தியிருக்க, கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. பானுமதி தான் தங்கையை அதட்டி, பேச்சை மாற்றிவிட்டார்.

வேலய்யன் தம்பதி மகனுடன் இருக்க, இரண்டாம் அக்கா குடும்பம் அப்பா வீட்டில் தான் இருந்தனர். ஜனகனின் வேண்டுகோள் அது. அன்று இவர்கள் இல்லை என்றால் அப்பா, அம்மா, நான் என்ன செய்திருப்பேன்..? சுதாகர் மூலமாக தானே தன் குடும்பம் பற்றி எல்லாம் தெரிந்து நிம்மதியாக இருக்க முடிந்தது. சாந்தி, சுதாகர் அவனுக்கு என்றும் நெகிழ்ச்சியை கொடுப்பவர்கள்.

“நைட் கிளம்பணுமா தம்பி..” என்று சாந்தி கேட்க,

“ஆமாக்கா.. சென்னை போய்ட்டு அங்கிருந்து பிளைட்..” என்றான். நார்த் பக்கம் தான் அவனின் போஸ்டிங் இப்போது.

பங்க்ஷன் முடியவும், வீட்டில் சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு ஏர்போர்ட் சென்றனர். பிளைட் மூலம் சென்னை. அங்கு தேவேந்திரன் வாங்கியிருந்த வீட்டில் தங்கினர். அப்பா, அம்மாவிற்கு எல்லாம் பார்த்து பால் வர வைத்து  கொடுத்தான் ஜனகன்.

பொம்மி மாத்திரை எடுத்து கொடுக்க, ஜனகன் அவர்களோடு அமர்ந்து பேசி கொண்டிருந்தான். பேரன்கள் தாத்தா பாட்டி கட்டிலில் தூங்கியிருந்தனர். “நீங்க தூங்க போங்க ராசா.. காலையில சீக்கிரம் எழணும் இல்லை..” என்றார் ராஜலக்ஷ்மி.

“உங்களை அலைய வைக்கிறேன்ம்மா.. புரியுது, கொஞ்ச நாள் என்னோட இருங்க, அப்புறம் உங்களை எல்லாம் ஊர்லே செட்டில் பண்ணிடுறேன்..” என்றான் மகன் அவர் கை பிடித்து வருடி.

“அலைச்சல் என்னய்யா.. உன்னோட இருக்கணும்னு ஆசைப்பட்டு தான் நாங்களும் வரோம்..” என்றார் வேலய்யன்.

பொம்மி கதவை எல்லாம் பூட்டி செல்ல, “நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வரேன்..” என்று கிளம்பினான்.

Advertisement