Advertisement

மதுரை வீரன் பொம்மி 25

கந்தன் கோயிலில் நின்றிருந்தனர் ஜனகன் தம்பதி. பொம்மியின் வேண்டுதலுக்காக வந்திருந்தனர். தரிசனம் கண்டு, பிரசாதம் வாங்கிவிட்டு சுற்றி ஓரிடத்தில் அமர்ந்தனர். ஜனகனை அடையாளம் தெரிந்திருக்க, எட்டி நின்று தங்களுக்குள் பேசி சென்றனர் மக்கள்.

அன்று விஷேஷ நாள் என்பதால் கூட்டம் சேர ஆரம்பிக்க, “நாம கிளம்பலாமா..?” என்று மனைவியிடம் கேட்டான் ஜனகன்.

 பொம்மிக்கு இருக்க ஆசை இருந்தாலும் கணவனை முன்னிட்டு எழுந்து கொண்டாள். தங்கள் காரிலே கிளம்பினர். மெல்ல தான் ஓட்டினான் கணவன். காலை நேரம் தரும் இதத்தோடு தன் மனைவியும் அருகில் இருக்க ரசித்து சென்றான் அந்த பயணத்தை.

“வழிலே சாப்பிட்டுக்கலாமா..?” என்று மனைவியிடம்  கேட்க,

“வீட்டுக்கு போயிடலாம் மாமா.. நமக்காக எல்லாம் காத்திருப்பாங்க..” என்றாள் அவள்.

“பசிக்குதுடி.. நைட் எல்லாம் என் எனெர்ஜியை உறிஞ்சு எடுத்துட்டு சோறு வாங்கி தர மாட்டேங்கிற..” என்று குறும்பாக குறை படித்தான் கணவன்.

“மாமா..” அவள் வெட்கத்தில் சிணுங்கி அவன் தோளில் அடிக்க, சிரித்த ஜனகன் அடித்த மனைவி கையை கோர்த்து அழுத்தம் கொடுத்தான். முத்தம் வைத்தான். திரும்ப அழுத்தம் கொடுத்தான்,  திரும்ப முத்தம் வைத்தான். இப்படியே செய்து கொண்டிருக்க,

“மாமா..” என்றாள் பெண் கேள்வியாக கையை பார்த்து.

“கொடுக்கணும் தோணுது.. கொடுக்கிறேன்.. உனக்கென்ன..?” என்று கேட்டு கொடுத்து கொண்டே இருக்க,

“வழில வைச்சு இதென்ன மாமா, விடுங்க போதும்..” மனைவி கையை இழுக்க போக, ஜனகனோ காரை ஓரமாக நிறுத்தி, மனைவி புறம் நன்றாக திரும்பி அமர்ந்துவிட்டவன், அவளின் இரு கைகளையும் தனக்குள் பொத்தி வைத்து கொண்டான்.

பொம்மிக்கு அவன் செயல்கள் சிரிப்பை  கொடுக்க, “நைட் ஏன் அவ்வளவு லேட் மாமா..?” என்று கேட்டாள்.

“எல்லாம் முடிச்சுட்டு வந்துட்டேன்டி..” என்றான் பெருமூச்சுடன். “பத்து மணிக்கு ரெஜிஸ்டெஷன்.. நிலம் திரும்ப நம்ம கோவிலுக்கே வர போகுது..” என்றான்.

“நல்லது மாமா..” மனைவி சொல்ல,

“ம்ஹ்ம்.. இதுக்கு தான் இவ்வளவு போராட்டம்..” என்றவன், “ஆறு வருஷத்துக்கு முன்னாடி நான் இங்கிருந்து போகும் போது அவ்வளவு கோவம்.  பேங்க் வேலை இடம் வரைக்கும் கூட போயிட்டேன், ஆனா முடியல. இப்படி சொந்த ஊரை விட்டு அனுப்பிட்டாங்களான்னே தாங்கவே முடியல, பேசாம அங்கிருந்து கிளம்பிட்டேன்..” என்றான் முதல் முறையாக.

“டெல்லி தான் போனேன்.. கொலை பட்டினியோட என்னை  மூணு நாளு அங்க தானே வச்சிருந்தாங்க..” என்றான்.

பொம்மி கலங்கிவிட்ட கண்களுடன் அவன் தோள் சாய்த்து கட்டி கொண்டாள். “அது அப்போடி..”  என்று தட்டி கொடுத்தவன், “என்ன பண்ணன்னு எல்லாம் ஐடியா இல்லை, ஆனா எதாவது பண்ணனும்ங்கிற வெறி மட்டும் அதிகம். பணம், பவர் நம்மகிட்ட இல்லை. ஆனா மூளை இருக்கு, படிப்பு இருக்குன்னு தான் IAS..”

“ஒரே குறிக்கோளோட டே அண்ட் நைட் படிச்சு முதல் அட்டம்ப்ட்லே கிளியர் பண்ணிட்டேன். ஓரளவு ரேங்குக்குள்ள வந்தேன். ட்ரைனிங் முடிச்சு போஸ்டிங் வந்தது. செலிபிரேஷன் நேரத்துல என்னோட பேட்ச் எல்லோருக்கும் பேமிலி இருந்தப்போ எனக்கு மட்டும் யாருமில்லை. என்னை சுத்தி இத்தனை பேர் இருந்தும் இல்லைன்ற நிலை. எனக்கு கோவம். யாரும் வேணாம்ன்னு இருந்துட்டேன். ஆனாலும் தேடும்..”

“சிவனேஷ்வரன் அண்ணா தான் போராடி எனக்கு ப்ரோமொஷனோட இவ்வளவு சீக்கிரம் ஹோம் டிஸ்டிக்ட்ல வாங்கி கொடுத்தார். வாய்ப்பே இல்லாத விஷயம் அது. எனக்கு கிடைச்சது. உடனே ஒத்துக்க தோணுமா, வீம்பு புடிச்சு மெடிக்கல் லீவ் எடுத்து அட்டகாசம் பண்ணிட்டேன். பாண்டி சார் தான் என்னோட மல்லு கட்டினார் பாவம். ரவுடியா இருந்தாலும் ஸ்வீட் ரவுடிஸ் அவங்க..”

“நீ போய் தான் ஆகணும்ன்னு சிவனேஷ்வரன் அண்ணா கூப்பிட்டு கண்டிச்சு தான் வர மாதிரி வந்தேன். வந்த நாள்லே நீயும், உன் அப்பாவும் சிக்கினீங்க. அதிலும் உன் அப்பா மூஞ்சை பார்க்கணுமே.. ஹாஹா..” என்று சிரிக்க,

“மாமா..” என்று கடுப்பாகி மனைவி தோளில் அடித்து வைத்தாள். “எங்க எல்லோரையும் விட அவர் உங்களை ரொம்ப பார்க்கிறார் மாமா. உங்களை அனுப்பிட்டு அவர் ஆளே மாறி போனார் தெரியுமா..? என்னை கண்ணு கூப்பிடுறது கூட இல்லை, அவரை போய் படுத்திட்டே இருக்கீங்க..” என்றாள் மகளாக.

“தெரியும் தெரியும்.. வருஷத்துக்கு ஒரு முறை சுதாகர் மாமா மூலமா கோவிலுக்கு வரும் போது பார்ப்பேன்..” என்றான். பொம்மிக்கு இன்னும் கோவம். கணவனை முறைக்க, “எனக்கு அப்போ உன்னை பார்க்கும் போது எல்லாம் ஒண்ணே ஒன்னு  தான் தோணும்டி, இப்படியே இவளை தாலி கட்டி தூக்கிட்டு போயிடலாம்ன்னு..” என்று அவளை இறுக்கமாக அணைத்து உச்சியில் முத்தம் வைத்தான்.

“அப்பறம் என்ன ஊருக்கு வந்து அந்த தீனதயாளனை முடிக்கலாம்ன்னு முதல்ல தொழில் சங்க தலைவர் பதவியை காலி பண்ணி, மாமாவை அந்த சீட்ல உட்கார வைச்சேன்.  அடுத்து கைக்கு கிடைச்ச  ஆதாரம் மூலம் அவர் கட்சி தலைவர் பதவியை காலி பண்ணிட்டு, மொத்தமா அவரை உள்ள அனுப்பலாம்ன்னு ரெடியானா உன் அப்பா.. என்னோட பதவி வைச்சு பேசிட்டார். அப்போ கோவம்ன்னாலும் யோசிச்சு பார்த்தப்போ உண்மை தானேன்னு தோணிடுச்சு.”

“என்னோட பதவி ஒரு ப்ரஸ்டிஜியஸ் பதவி, அதற்கான மரியாதை எல்லாம் வேற லெவல். அதுக்கேத்த மாதிரி நானும் இருக்கணும்ன்னு தான் நைட் ஒரேடியா எல்லாத்தையும் தலை முழுகிட்டு வந்ததுட்டேன்..” என்றவன் நடந்ததை சொன்னான்.

“மாமா.. ஏன் வாக்கு கொடுத்தீங்க, அந்தாள் பதவிக்காக ஒரு உயிரை எடுத்திருக்கார். அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்காம இப்படி நம்ம சுயநலத்துக்காக டீல் பேசிட்டு வந்திருக்கீங்க, போங்க மாமா..”  பெண்ணுக்கு பிடிக்கவே இல்லை.

“அதெல்லாம் செய்ய வேண்டியது எல்லாம் செஞ்சுட்டு தான் வாக்கு கொடுத்துட்டு வந்திருக்கு..” என்றான் கள்ளசிரிப்புடன். பொம்மி புரியாமல் பார்க்க, “என் வேலை அது இல்லைன்னு தான் வாக்கு கொடுத்தேன்.. ஆனா யார் வேலையோ அவர் அதை பார்த்துப்பார். எதுக்கு அடி வாங்குறோம்ன்னு தெரியாமலே இனி வாங்க போறார் மனுஷன்..” என்றான்.

பொம்மிக்கு சமாதானமாக, அங்கிருந்து வீடு திரும்பினர். காலை உணவு முடித்து அப்பாவுடன் பத்திர பதிவு அலுவலகம் சென்றான். தீனதயாளன் தானே வந்து மாற்றி கொடுத்தார். வேலய்யன் இன்றும் மகன் தோள் சாய்ந்து கண்ணீர் விட்டார். ஆனால் இது வேறல்லவா. மகன் ரணம் குறைந்தது.

கணேசன், மூர்த்தி இருவரையும் தீனதயாளன் முறைக்க, “உங்க கணக்கு தப்பு சார்.. நீங்க போலியா எதாவது டாகுமெண்ட் காமிச்சா  நாங்க நம்பி, எங்க மச்சானுக்கு துரோகம் பண்ணிடுவோமா..? ஒரே குடும்பம் சார்.. அப்பறம் ஏன் உங்ககிட்ட ஒத்துக்கிட்டோம்ன்னு நீங்க கேட்கலாம், நாங்க மாட்டோம் சொன்னா நீங்க வேற யாரையாவது பிடிப்பிங்க, அதான்  நாங்களே செஞ்சுட்டோம்..” என்றான் கணேசன்.

தீனதயாளன் தன் தோல்வியை ஏற்க முடியாமல் ஜனகனை கோவமாக பார்த்து செல்ல, கணேசன், மூர்த்தி இருவரும் மாமனாரிடம் சென்றனர். “அதான் கோவில் நிலம் வந்திடுச்சு இல்லை.. நாங்க அந்த சொத்தையே எடுத்துகிறோம், மச்சான் சொத்து மச்சானுக்கு போகட்டும்..” என்று கேட்டனர்.

வேலய்யன் மகனை பார்க்க, “வேண்டாம்..” என்றான் அவன். “கோவிலுக்கு ஆறு ஏக்கரா இருந்திட்டு போகட்டும், உங்களுக்கு கொடுத்ததும் உங்களுக்கு தான்..” என்றவன் பாண்டியை திரும்ப சிவனேஷ்வரனிடமே வழியனுப்ப கிளம்பிவிட்டான்.

“ஜனாக்கு அரை ஏக்கர் தான் இருக்கு மாமா, நீங்க சொல்லுங்க..” என்று மூர்த்தி மாமனாரிடம் சொல்ல,

“நம்ம மச்சானுக்கு சொத்து சம்பாதிச்சு கொடுக்க தான் நானிருக்கேனே. நீங்க ப்ரீயா விடுங்க..” தேவேந்திரன் உறுதியாக அவர்களிடம் மறுத்துவிட்டார்.

மூன்று ஏக்கர் நிலம் என்பது ஆறு ஏக்கராக கோவிலுக்கு சென்றது. பேசிய பங்காளிகள் வீடு தேடி வந்து வேலய்யனுக்கு மரியாதை கொடுத்து சென்றனர். ஜனகன் நிறைவாக நின்றான்.

சில வருடங்களுக்கு பிறகு..

அந்த மண்டபம் நிறைந்து வழிந்தது. ஆட்கள் வருகை கூடி கொண்டே போனது. “இதை விட பெரிய மைதானமே புடிச்சிருக்கணும், இது போதாது..” என்று விருந்தினர்கள் பேசும் அளவு கூட்டம் அள்ளியது.

“ண்ணா.. சாப்பாட்டை மட்டும் கொஞ்சம் பார்த்துகோங்க ண்ணா, பன்க்ஷனுக்கு வந்துட்டு யாரும் சாப்பிடாம மட்டும் போயிட கூடாது..” என்று ஜனகனின் கடைசி மாமா கணேசன் தன் மூன்றாம் சகலை மூர்த்தியிடம் கேட்டார்.

“அந்த கவலையே உனக்கு வேணாம் சகலை.. பொறுப்பு பெரிய சகலை கைக்கு போயிடுச்சு. அடிச்சு துவம்சம் பண்ணிடுவார்..” என்றார் மூர்த்தி.

“தேவா ண்ணாவா..” கணேசனும் ஆசுவாசம் கொண்டவன், எப்படி என்று கேள்வியாக பார்த்தான்.

“வேற யாரு நம்ம மச்சான் தான்.. கூட்டம் சேரவும் தகவல் போயிடுச்சு, கூப்பிட்டு சொல்லிட்டார், ஜனா சொல்லி தேவாண்ணா குறை வைப்பாரா..” என்று கேட்க, கணேசன் நிம்மதியாக விருந்தினர்களை வரவேற்க சென்றார்.

Advertisement