Advertisement

மதுரை வீரன் பொம்மி 24

மறுவீடு முடிந்து தன் வீடு கிளம்பினாள் பொம்மி. மகளை வழியனுப்பி வைக்க, மருமகளை அழைத்து செல்ல என்று இரு பக்க சொந்தங்களும் தேவேந்திரன் வீட்டில் கூடியிருந்தனர். விருந்து முடிந்தவுடன் கீர்த்தனா கிளம்ப வேண்டும். அவளுக்கான சீர் வண்டி தயாராக இருந்தது.

வீட்டு பெண்கள் மகளை கிளப்பி கொண்டிருந்தனர். பந்தியும் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. கீர்த்தனா கிளம்பி வரவும் ஜனகன் மனைவியுடன் பந்தியில் அமர்ந்தான். தேவேந்திரன் முதல் ஆளாக பரிமாற வர, பொம்மி மெல்ல குனிந்து கணவன் காதில், “அப்பாவை பரிமாற விடுங்க மாமா..” என்றாள்.

ஜனகன் திரும்பி மனைவியை கண்ணால் மிரட்டினாலும் தேவேந்திரன் வைத்த உணவை உண்ணவே செய்தான். “அப்போ நான் சொல்லலைன்னாலும் சாப்பிட்டிருப்பீங்க அப்படி தானே..?” பொம்மி கடுப்பாக கேட்க,  கணவன்  சிரித்தான்.

“உங்க இரண்டு பேரையும் எந்த லிஸ்ட்லையும் வைக்கவே முடியாது மாமா.. எப்போ யாருக்கு பல்பு கொடுப்பீங்கன்னே  தெரியாது..” அவள் நொடித்து கொண்டே சாப்பிட்டு எழ, ஜனகனுக்கு தனியே ஸ்வீட் வந்தது.

“ப்பா..” என்று மகள் உர்ரென்று பார்க்க,

“கண்ணு.. உனக்கும் தான் இருக்கு.. டேய் கொடுங்கடா..” என்று கத்த,

“அவருக்கு மட்டும் நீங்க கொடுப்பீங்க, எனக்கு இவங்க கொடுக்கணுமா, ஒன்னும் வேணாம்.. அதையும் உங்க மாப்பிள்ளைக்கே கொடுங்க..” என்று விடைத்து கொண்டு  சென்றாள் மகள்.

ஜனகன் அந்த ஸ்வீட்டை எடுத்து கொண்டே அறைக்கு சென்றவன், பேக் செய்து கொண்டிருந்த மனைவி வாயில் வைத்தான். “மாமா..” என்று அவள் மென்று கொண்டே திணற,  அவனோ திரும்ப அவள் வாயில் திணித்து சென்றான்.

கிளம்பும் நேரமும் வந்துவிட, கீர்த்தனா முதலில் தன் பெரியப்பாக்களிடம் தான் சென்றாள். திருமணத்தின் போது ஆசீர்வாதம் வாங்கியிருந்தாலும் இன்னும் சகஜமான பேச்சில்லை. அவர்கள் பேச்சை மதிக்காது ஜனகன் வீடு சென்றதற்கு, “சாரி.. பெரியப்பா..” என்று இருவரிடமும் மன்னிப்பு கேட்டாள் மகள்.

அவ்வளவு தான் அவர்கள் உருகி போயினர். “சாரி எல்லாம் எதுக்குமா..?” என்று கணவனுடன் காலில் விழுந்த பெண்ணை கண்ணீருடன் தூக்கி தட்டி கொடுத்தனர்.

ஜனகன், தேவேந்திரன் இருவரும் ஒரு வார்த்தை கூட இது பற்றி அவளிடம் பேசாமல் அவளே செய்தது அவர்களை புன்னகையுடன் முகம் பார்க்க வைத்தது. ஜனகன் உடனே  தன் கோவம் உணர்ந்து முகம் திருப்பி கொள்ள, தேவேந்திரன் முகத்தில் புன்னகையோ கூடி போனது.

அடுத்து மனைவியுடன் அவர்களிடம் தான் வர, ஜனகன் அக்கா பக்கம் நின்றான். தேவேந்திரன் பட்டென்று மனைவியை இழுத்து மறுபக்கம் விட்டு தான் ஜனகன் பக்கம் மாறியிருந்தார். மருமகனும் அவர் காலில் விழ, “நீண்ட ஆயுளோட சந்தோஷமா நல்லா இருங்க மாப்பிள்ளை..” என்றவர் அவன் முறைத்து கொண்டே எழவும் அணைத்து கொண்டார்.

“யோவ் விடுயா..” என்று ஜனகன் திமிற, சுற்றி இருந்தவர்களுக்கு அது கலாட்டாவாக தெரிய சிரிப்பு தான்.

பொம்மி இருவரையும் பார்த்து ஆயாசமாக  தலையாட்டி கொண்டவள் அம்மாவை அணைத்து கொண்டாள். பானுமதிக்கு மகள் பிரிவில் பெரிதான துக்கம் இல்லை. அம்மா வீடு, தம்பி என்ற தைரியம் அதிகமே இருக்க சிறு துளி கண்ணீருடன் அவள் உச்சியில் முத்தம் வைத்தார்.

ஜனகன் திரும்ப அக்கா காலில் விழுந்து அவரை தோளோடு அணைத்து கொண்டான். பானுமதிக்கு தம்பியின் அணைப்பில் தான் அழுகை பொங்கியது. காரணம் அவருக்கே தெரியவில்லை. ஆனால் அவ்வளவு அழுகை. அவரை பார்த்து ராஜலக்ஷ்மி, அவரின் மற்ற மூன்று மகள்களும் கண்ணீரை துடைத்தனர்.

‘இங்க யாரு புதுசா கல்யாணம் முடிச்சு மாமியார் வீடு போறாங்கன்னு தெரியல..’ பொம்மி நொந்தே போனாள்.

அவளின் பெரியப்பா பிள்ளைகள், அத்தை பிள்ளைகள் அவளை கலாட்டா செய்து அணைத்து கொண்டனர். அதிதிக்கு அக்கா மாமா வீடு கிளம்புவதில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. “இனி நானும் அங்க தான்..” என்று குதித்து கொண்டாள்.

பொம்மி கடுப்பானவள், “சும்மா பேருக்கு கூட யாராவது பீல் பண்றாங்களா பாரு.. என் பெரியப்பாங்களாவது சொட்டு கண்ணீர் விட்டாங்க, நீங்க எல்லாம் ரொம்ப மோசம், அவங்க மட்டும் தான் பாசம்..” என்று பெரியப்பாக்கள் கையை பிடித்து கொண்டு எல்லோரையும் திட்டவே செய்தாள் புதுப்பெண்.

“பீலிங்கா அப்படின்னா என்ன கண்ணு..” என்று இளையவர்கள் கூட்டம் கத்தி, புன்னைகையுடனே பொம்மியை மாமியார் வீடு  வழியனுப்பி வைத்தனர். பரத் அவனின் மனைவியுடன் தங்கையை விட்டு சீர் கொடுத்து வந்தான்.

தேவேந்திரன் அன்று மாலையே மனைவியுடன் மகள் வீடு சென்றுவிட்டார். ஜனகன் வரவேற்று போனுடன் ஒதுங்கி கொண்டான். பாண்டி கொடுத்த தகவல் அவனுக்கு ஒப்பவில்லை. இரவு உணவு முடித்து இவன் யார் யாருக்கோ அழைத்து பேசி கொண்டிருக்க, தேவேந்திரனுக்கு போன் வந்தது.

தொழில் சங்கத்துக்கு அவரை உடனே புறப்பட்டு வர சொல்லி கேட்டனர். இப்போ என்ன..? என்ற கேள்வியுடன் மனைவியை மாமியார் வீட்டிலே விட்டு, முக்கிய வேலை என்று தான் மட்டும் கிளம்பி சென்றார்.

ஜனகன் தன் வேலைகளை முடித்து வந்தவன் அக்கா இன்னும் வீடு கிளம்பாமல் அங்கேயே இருக்க நேரம் பார்த்தான். மணி பத்தே ஆக போனது. மாமாவை காணாமல்,  “மாமா எங்க..?” என்று அக்காவிடம் கேட்டான்.

“ஏதோ முக்கியமான வேலைன்னு கிளம்பி போனார்..” என்றார் பானுமதி.

‘இந்த நேரத்துல என்ன முக்கியமான வேலை..?’ ஜனகன் புருவம் சுருக்கி தேவேந்திரனின் மேனேஜருக்கு அழைத்து பேசினான்.

“அப்படி எதுவும் இல்லை, இங்க அவர் வரவும் இல்லை..” என்றார் அவர். ஜனகன் புருவம் சுருக்க, தேவேந்திரனின் பெரிய அண்ணா இவனுக்கு அழைத்தார்.

“என்னமோ திடீர்ன்னு தேவாவை கிளப்க்கு வர சொல்லியிருக்காங்க, தீனதயாளன் தான் தம்பியை கூப்பிட சொன்னான்னு நம்மாள் தகவல் சொல்றார், நாங்க அங்க தான் போயிட்டிருக்கோம்..” என்றார் அவர் அவசரமாக.

ஜனகனுக்கு கோவத்தில் உடல் சூடாக, போன் பேசி கொண்டே கார் எடுத்து கிளம்பிவிட்டான். தேவேந்திரன் கிளப் வந்த நேரம் அங்கு சில சங்கத்து உறுப்பினர்கள் இருந்தனர். “என்னங்க சார்..” என்று தேவேந்திரன் கேட்டு அமர,

“நான் தான் வர சொன்னேன்..” என்று தீனதயாளன் வந்தார்.

தேவேந்திரன் அவரை சாதாரணமாகவே பார்க்க, “கல்யாணம் எல்லாம் சிறப்பா முடிஞ்சிடுச்சா தேவேந்திரன்..” என்று கேட்டு அமர்ந்தார் அவர்.

தேவேந்திரன் அவரின் கேள்வியை தள்ளிவிட்டு, “நீங்க வர சொன்ன விஷயத்தை சொல்லுங்க சார்..” என்றார்.

“பெருசா ஒன்னுமில்லை சார்..  என்கிட்ட ஒரு மூணு ஏக்கர் நிலம் இருக்கு, கோவிலை சுத்தி, நம்ம தொழில் சங்கம் மூலமா அங்க இருக்கிற மண்டபம், ரூமை எல்லாம் காலி பண்ணனும்..” என்றார்.

அவர் சொன்ன நிலம் புரிய, தேவேந்திரன் தன் கோவத்தை காட்டாமல், “உங்க பேர்ல இருக்கிற பத்திரத்தை கொண்டு வாங்க சார்..” என்றார். பினாமிக்கு தானே இவர்கள் எழுதி கொடுத்தது.

“பத்திரம் எல்லாம் பக்காவா என் பேர்ல தான் இருக்கு..” என்று எடுத்து கொடுக்க, தேவேந்திரன் அதிர்ச்சியை மறைத்து கொண்டார். இன்று தான் ரெஜிஸ்டர் முடித்திருக்கிறார் மனிதர்.

“யாராவது ஏதாவது பிரச்சனை பண்றாங்களா மண்டபம், ரூமை இடிக்க கூடாதுன்னு..?” என்று  தலைவராக பதறாமல் நிதானமாகவே கேட்டார்.

தீனதயாளனுக்கு அவரின் இந்த நிதானம் பிடிக்கவில்லை. “பிரச்சனை பண்ணா என்ன பண்ணன்னு தான் கேட்டு வந்திருக்கேன்..” என்றார்.

“அப்போ சரி நீங்க உங்க வேலையை பாருங்க.. அப்படி எதாவது பிரச்சனை வந்தா என்கிட்ட வாங்க.. நான் உங்களுக்கு முடிச்சு தரேன்..” என்றார் தேவேந்திரன் பத்திரத்தை அவர் கையிலே கொடுத்து.

தீனதயாளன் வாங்கி கொண்டவர்,  ‘நீ என்னடா முடிச்சு கொடுக்கிறது..? நான் உங்களையே முடிக்க போறேன்..’ என்று தனக்குள் சொல்லி கொண்டார்.

“வேறெதுவும் இல்லையே..?” தேவேந்திரன் கேட்க, தீனதயாளனுக்கு கொதித்தது. கோவில் நிலம், அதில் இன்னும் இடிக்காமல் இருக்கும் மண்டபம், ரூமை இடிக்க போகிறோம் என்றால் இவர் பதறுவார், வேண்டாம் என்று கெஞ்சுவார்,  அதை வைத்து பேசி கொள்ளலாம் என்று வந்திருக்க, இவர் நானே முடிச்சு கொடுக்கிறேன் சொல்றாரே..? பத்திரத்தை கையில் வைத்து தட்டினார்.

அங்கு மகன் வேறு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறான். அரசாங்க மருத்துவமனையில் போதிய வசதி இல்லை என்று தனியார் மருத்துவமனைக்கு அவனை மாற்ற அனுமதி வாங்கி கிளம்ப மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டிருக்கிறான்.

தூக்கி கொண்டு போய்விடலாம் என்று  அருகே போனால் எல்லாம் தூக்கி அடித்து, “நான் எங்கேயும் வர மாட்டேன், அந்த ஜனகனை எதாவது செஞ்சா தான் ட்ரீட்மெண்ட் எடுத்துப்பேன், இல்லைன்னா வேணவே வேணாம், இப்படி வலியிலே செத்து போறேன்..” என்று அவ்வளவு கத்தல்.

மகன் நிலையை பார்த்து தீனதயாளனுக்கு ரத்த கண்ணீர் வராத குறை. அவரின் தொழில் சாம்ராஜ்யத்திற்கு அவன் தான் இளவரசன். கணக்கே பார்க்க முடியா பணம், சொத்து இருந்தும் வலியில் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் துடித்து கொண்டிருக்கிறான். எல்லாம் யாரால்.. இவர்களால். அந்த ஜனகனால்..? குறி பார்த்து என்னை அடித்துவிட்டான்.

பணம், தொழில் அவரின் ஒரு கண் என்றால், மற்றொரு கண் இந்த பதவி, அதிகாரம். அதை முக்கியமாக கொடுத்தது தொழில் சங்க தலைவர் பதவியும், கட்சி தலைவர் பதவியும் தான். அதை பிடுங்கிவிட்டான். திறமையாக யோசித்து அவரின் பவர் ஹவுஸ் இரண்டையும் அவரிடம் இருந்து பிடுங்கிவிட்டான்.

இரண்டையும் திரும்ப மீட்க வேண்டும் என்றால் வாய்ப்பு மிக குறைவே. சரித்திரன் அங்கு இருக்க, ஜனகன் இங்கு இருக்கிறான். இருவரையும் ஒழித்து கட்ட வேண்டும்.

அதற்கு முதலில் எல்லாவற்றுக்கும் காரணமான ஜனகனை காலி செய்ய வேண்டும். அவனின் பகடை காயாக கோவில் நிலத்தை தன் பெயருக்கு மாற்றி ஆட்டத்தை ஆரம்பிக்க தான் தேவேந்திரனிடம் வந்தது. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு தேவேந்திரன் அதிரவில்லை. பதறவில்லை.

அடுத்த திட்டத்தை ஆரம்பித்து விடலாமா என்று தீனதயாளன் யோசித்தார். இவர்களின் பயம் தான் அவரின் ஆயுதம். ஆறு வருடத்திற்கு முன்பு போல கதற வேண்டும்.. இவர்கள் எல்லாம் கதற வேண்டும்.. அப்போது தான் நினைத்ததை சாதிக்க முடியும்.. என்று தேவேந்திரனை பார்க்க, அவருக்கு புரியாமல் இல்லையே.

முன்பிருந்தவர்கள் நாங்கள் இல்லை. முக்கியமாக ஜனகன். அவன் தைரியம் அவனே தான், அவனிருக்கும் பதவி கூட இல்லை. வங்கி ஊழியராக இருந்த நாளிலே தர்ஷனை ஸ்டேஷன் வாசலில் வைத்து முகத்தை பேர்த்தவன் அவன். இப்போது இன்னும் கூட மனதளவிலும், உடல்லளவிலும் பலசாளியாக வந்து நிற்கிறான். இவரின் இந்த மிரட்டல் எல்லாம் அவனிடம் என்ன செய்து விட முடியுமாம்..?

“சொல்லுங்க சார்.. வேறெதுவும் இருக்கா..” என்று தேவேந்திரன் கேட்டார்.

“அவ்வளவு தான் சார்..” என்றுவிட்ட தீனதயாளன், “வரும் போது தனியாவா வந்தீங்க..?” என்று கேட்டார்.

ஓஹ் என்னை வைச்சு என் மருமகனை மிரட்ட தான் இந்த ஏற்பாடா.. தேவேந்திரன் சிரித்தவர், “போகும் போது என் மருமகனோட போவேன் சார்..” என்றார்.

தீனதயாளன் பக்கத்தில் இருந்த ஆட்களை கோவமாக பார்க்க, “அவங்க சரியா தான் தகவல் சொல்லியிருக்காங்க. ஆனா இனி வர போற என் மருமகனை பத்தி அவங்களுக்கு தெரியாது இல்லை..” என்றார் தேவேந்திரன்.

“உங்க மருமகன் வரதுக்குள்ள இங்க பல விஷயங்கள் நடந்திடும் சார்.. இந்த கட்டிடம் நான் கட்டினது.. உள்ளுக்குள்ள எவ்வளவு சுரங்க வழி இருக்குன்றதும், இங்கிருக்கிற கேமரா எல்லாம் வேலை  செய்யாதுங்கிறதும், கேட்ல நிக்கிற செக்கியூட்டில இருந்து உள்ள இருக்கிற இவங்க எல்லாம் என் ஆளுங்கன்றதும் எனக்கு மட்டும் தானே தெரியும்..” என்றார் தீனதயாளன் வெஞ்சினமாக.

தேவேந்திரன் நீ திருந்தவே மாட்ட இல்லை என்று பார்க்க, “இப்போ டீல் பேசலாமா..?” என்று கேட்டார்.

“பேசுங்க..” தேவேந்திரன் சொல்ல,

“உன் மருமகனால என்னோட அதிகார மையம் இரண்டும் என் கை விட்டு போயிடுச்சு, என் மகன் இரண்டு கால் உடைஞ்சு போலீஸ் கேஸ்ல கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல இருக்கான்.. தப்பு. ரொம்ப தப்பு. ஆறு வருஷத்துக்கு முன்ன என் மகனை அடிச்சான்ற ஒரே காரணத்துக்காக அவனை ஊரை விட்டு துரத்தினவன் நான், இப்போ அவன் இவ்வளவு செஞ்சுட்டான்.. இனியும் அவனை விட்டு வைக்கலாமா..? கூடாது.. ஒன்னு அவன் இல்லாமலே போகணும்.. இல்லை அவன் வேலையை ரிசைன் பண்ணிட்டு முன்ன மாதிரி ஊரை விட்டு இல்லை நாட்டை விட்டு ஓடி போயிடணும், அவன் மட்டுமில்லை அவனோட ஒட்டு மொத்த குடும்பம் நீங்க எல்லாம் கூட.. தொழில், வேலை, சொத்துப்பத்து எல்லாம் விட்டு ஓடணும்..” என்றார் வெறியாக.

“முடியாது சார்..” தேவேந்திரன் பொறுமையாகவே சொல்ல,

“நீ  இப்போ இருக்கிற நிலமை உனக்கு புரியலன்னு நினைக்கிறன்.. நான் நினைச்சா நீ வெளியவே போக முடியாது.. ஒழுங்கா நீயே உன் மருமகன்கிட்ட பேசி இரண்டுல ஒரு முடிவெடு.. இல்லை நான் முடிவெடுத்தா உன் மக தாலி ஈரம் காயமலே..”

“டேய்..” என்று கர்ஜித்த தேவேந்திரன் உள்ளத்தில் தீ பற்றி கொண்டது. முன்னால் இருந்த சேரை எட்டி உதைத்து எழுந்து நின்றவர், “உனக்கு இவ்வளவு தான் மரியாதை.. ஏதோ நானும் இந்த பிரச்சனையை முடிச்சுக்கலாம்ன்னு பொறுமையா போனா அதிகமா பேசுற.. தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்கோ..” என்று ஆக்ரோஷமாக விரல் நீட்டி மிரட்ட,  தீனதயாளன் அவரிடம் இருந்து இப்படி ஒரு கோவத்தை எதிர்பார்க்கவில்லை.

Advertisement