Advertisement

மதுரை வீரன் பொம்மி 23

இரவு நீண்டு மணமக்களுக்கு விடியல் பிறந்தது. ஜனகன் கை மேல் படுத்திருந்த பொம்மி மாமனையே  பார்த்திருந்தாள். தூக்கம் வரவில்லை. சோர்வு அவ்வளவு, ஆனாலும் மனதின் கேள்வி அவளை தூங்க விடவில்லை.

ஏன் மாமா என்னை பொம்மி என்று அழைக்கவில்லை என்பது தான் அந்த கேள்வி.

விடிய விடிய கொண்டாடி தீர்த்தான். ஒரு முறை கூட அந்த அழைப்பு இல்லை. கொஞ்சினான், கெஞ்சினான், மயங்கினான், மயக்கினான். பிரிய விடவே இல்லை. இதோ தூக்கத்திலும் அவளை அணைத்து தான் படுத்திருக்கிறான். ஆனாலும் அவனுக்கான அழைப்பு இல்லை.

சிறு குறை போல் தான் தெரிந்தாலும் முழு பானையின் துளை அல்லவா அது.

‘அப்படியென்ன என்னை பொம்மி கூப்பிட கூடாதுன்னு..?’ ஆழ்ந்த தூக்கத்தில் ஏறி இறங்கும் நெஞ்சின் மீது தலை வைத்தாள். இப்போதும் அவன் இதய துடிப்பு பொம்மி என்று தான் சொன்னது. தானே சிரித்து கொண்டாள்.

‘நாம் என்ன எதிர்பார்க்கிறோமா அந்த பேர் தான் நமக்கு கேட்கும்..’ லேசாக முட்டினாள். ஜனகன் தூக்கம் அதில் தடைபட, “என்னடி..” என்றான் கண்களை திறக்காமலே அவளை தட்டி கொடுத்து.

பொம்மி வாகாக படுத்து அவன் முகம் பார்த்தவள், மீசை முடிய பற்றி இழுத்தாள். “ஸ்ஸ்..” என்ற ஜனகன் கண்களை திறந்து அவளை பார்த்து புருவம் தூக்கினான்.

“ஏன் என்னை பொம்மி கூப்பிடல மாமா..?” என்று கேட்டாள். ஜனகனோ திரும்ப கண்களை மூடி கொண்டான்.

“மாமா..” பெண் எழுப்ப,

“தூக்கம் வருதுடி..” என்றான் அவன்.

“விடிஞ்சிடுச்சு மாமா..” மனைவி  சொல்ல,

“நமக்கு இன்னும் விடியலை.. கொஞ்ச நேரம் தூங்குடி..” என்று தட்டி கொடுத்தான்.

“என் கேள்விக்கு பதில் சொன்னா தூங்குறேன் மாமா..” என்றாள் கீர்த்தனா.

“அப்போ தூங்காத..” என்றுவிட்டான் அவன்.

“மாமா..” மனைவி சிணுங்க, ஜனகன் கைகள் தோளில் இருந்து கீழே இறங்கியது. கீர்த்தனா அவன் கையை பிடித்தவள், “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம இதென்ன மாமா..?” என்றாள்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல கதவு தட்டிடுவாங்கடி.. அதுக்குள்ள சின்னதா..”

“மாமா..”

“கையை விட்டுட்டு எவ்வளவு வேணா மாமா சொல்லு..”

“முடியாது.. எனக்கு பதில் வேணும்..”

“நானும் முடியாது..”

“மாமா..”

“கீர்த்தனா..” சட்டென ஒரு அதட்டல் அவனிடம். மனைவி  அதில் முகம் சுருங்க எழுந்துவிட, இழுத்து திரும்ப மேலே போட்டான். “அவ்வளவு ரோஷம் வருமா உங்களுக்கு..?” என்றவன் அவள் உதடுகளை குவித்து நசுக்கினான்.

“ஸ்ஸ்.. மாமா வலிக்குது..” கீர்த்தனா அவன் கையை எடுத்துவிட,

“வலிக்கட்டும்.. பட்டுன்னு எழுந்து போற.. ம்ம்..”

“நீங்க கீர்த்தனா சொல்லி அதட்டுவீங்க.. நான் கேட்டுட்டு இருக்கணுமா..?”

“கேட்டு தான் ஆகணும்.. நான் கூப்பிட்டப்போ என்னோட வரலை இல்லை..”

“எனக்கு தெரியும் உங்களுக்கு அந்த கோவம் தான்னு..”

“தெரியுது இல்லை அப்பறம் என்ன இதுக்கு கேட்கிற..?”

“கேட்பேன்.. நீங்க பொம்மி சொல்லி கூப்பிடுற வரை கேட்டுகிட்டே தான் இருப்பேன்..”

“சரி கூப்பிடுறேன்.. நீயும் உன் அப்பாவும் தொலைஞ்சு போன ஆறு வருஷத்தை எனக்கு திருப்பி கொடுங்க..”

கீர்த்தனா பதில் இல்லாமல் முறைக்க, “இப்படி ஒரு பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாடி.. பர்ஸ்ட் நைட் முடிஞ்சு வெட்கப்படுலைன்னா கூட பரவாயில்லை.. இப்படி முறைச்சா ஏதோ என் பர்பார்மன்ஸ் தான் சரியில்லைன்னு சொல்வாங்க..”

“நான் ஒரு சின்ன கேள்வி தான் கேட்டேன்.. நீங்க தான் ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க..?”

“அது கூட ஏண்டி இப்போ கேட்ட..? நான் ஏதோ என் பொண்டாட்டி ஆசையா மீசை இழுக்கிறான்னு பார்த்தா சண்டை போட தான் எழுப்பியிருக்கா..”

“மாமா.. சண்டை சொல்லாதீங்க..”

“அப்போ இதுக்கு பேர் என்னடி என் பொண்டாட்டி.. ம்ம்..” அவளின் உதடுகளை வருடி கேட்டான். கீர்த்தனா திரும்ப அவன் நெஞ்சில் முகம் சாய்த்து கொண்டாள்.

வெற்றுடலாக இருந்த மாமனின் உடல் வெம்மையில் முகம் தேய்த்தாள். முத்தம் வைத்தாள். வைத்து கொண்டே இருந்தாள். ஜனகன் கண்களை மூடி அவள் உதடுகளின் ஈரத்தை அனுபவித்தான். ஒரு ஏகாந்தம் அங்கு. மனைவியின் முத்தத்தில் லயித்து போனான்.

“உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா..” என்றாள் பெண் தானே.

“தெரியும்..” ஜனகன் சொல்ல, மனைவி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டாள். உறவினர்கள் வந்து கதவு தட்டும் வரை அவள் அணைப்பு தளரவில்லை.

அதன்பின் அவர்கள் நாள் வேகமாக சென்றது. குலதெய்வ கோவில் செல்வது, பொங்கல் வைப்பது உறவினர்கள் வருகை, அவர்களுக்கு மூன்று வேளை உணவு என்று எல்லோருக்கும் நிற்க நேரமில்லை.

அங்கு தேவேந்திரன் வீட்டிலும் உறவினர்கள் நிறைந்திருக்க, பானுமதி காலையிலே கணவருடன் வந்து மகளை பார்த்து சென்றிருந்தார்.  நாளை மறுவீடு செல்ல வேண்டும். அதற்கும் முறையான அழைப்பை வைத்தனர். ஜனகன் எங்கோ பார்த்து தலை மட்டும் ஆட்டி வைத்தான். அப்பாவின் முகம் கூட பார்க்காத மாமாவை பொம்மி சந்தேகமாக பார்த்து வைத்தாள்.

வீட்டு பெண்கள் மூவரும் குடும்பத்துடன் அங்கேயே இருக்க, இரவு வரை சத்தமாக தான் இருந்தது. ராஜலக்ஷ்மி, வேலய்யனுக்கு வீட்டில் மகன் நடமாட்டத்தை பார்ப்பதே ஆனந்தமாக இருந்தது. எங்கு இருந்தாலும் அவர்கள் கண்கள் மகன் மேலே தான். தங்கள் பூரிப்பை, சந்தோஷத்தை அவர்களால் மறைக்க முடியவில்லை. பேச்சில், சிரிப்பில், நடையில் உற்சாகம் நிறைந்திருந்தது.

“ம்ஹ்ம்.. என்ன இருந்தாலும் மகன் இருந்தா தான் முகம் முழுக்க சிரிப்பே தாத்தா, பாட்டிக்கு..” என்று அதிதி வந்திருந்தவள் சொல்லும் அளவு பெற்றவர்கள் மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிந்தது.

இரவு உணவு எல்லாம் குடும்பமாக அமர்ந்து உண்ண, ஜனகன் மனைவியிடம் தேவைக்கு மட்டுமே பேசி கொண்டிருந்தான். அக்கா பிள்ளைகள் தங்களை சுற்றியே இருக்க மிகவும் கவனமாக நடந்து கொண்டான்.

“எல்லாம் இரண்டுகெட்டான் வயசு.. பார்க்கிறதே குறுகுறுன்னு தான் நம்மளை பார்க்குதுங்க..” என்று இரவு மனைவியிடம் சொல்லி அவளை அள்ளி அணைத்து கொண்டான். அன்றய இரவும் மணமக்களுக்கு விடியலே தெரியவில்லை. போதவில்லை.

“நேத்தை விட இன்னைக்கு தான் அடி தூள்..” என்ற மாமனின் கமெண்டில் பொம்மி அவன் நெஞ்சிலே அடித்து வைத்தாள். “ஏன் உனக்கு அப்படி இல்லையா..?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவளை வெட்கத்தில் திணற வைத்துவிட்டான்.

“போதும் மாமா.. அப்பா வந்திடுவாங்க, மறுவீடு கிளம்பணும்..” மனைவி அவன் அணைப்பில் இருந்து விலக பார்க்க, விட்டால் தானே.

“வந்து வெய்ட் பண்ணட்டும் உங்க அப்பா..” என்றான் அவன்.

“சொல்லும் போதே கடுப்பு தெரியதே.. அப்படி என்ன பிரச்சனை  உங்களுக்கும் அப்பாவுக்கும்..?” மனைவி கேட்க, கணவனிடம் பதில் இல்லை. “அதானே நீங்க வாயை திறந்திட்டாலும்..” பொம்மி நொடித்து கொண்டு குளிக்க சென்றாள்.

ஜனகன் கைகளை தலைக்கு கொடுத்து படுத்திருந்தான். முகம் மாறிவிட்டது. ஆதங்கம். தேவேந்திரன் அறைந்தது எல்லாம் அவனுக்கு ஒன்றுமில்லை. அவரிடம் அவனுக்கு ஈகோ என்ற வார்த்தைக்கே இடமில்லை. அவன் கோவம் எல்லாம் அவன் செய்ததை தேவேந்திரன் தவறு என்று சொல்வதே..

‘அப்போ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறார் இவர். யார் நம்மளை அடிச்சாலும் வாங்கிட்டு போகணும்ன்னா.. அதுக்கு எதுக்கு நான் மனுஷனா இருக்கணும்..? கழுதையா இருந்துட்டு போயிடலாமே..?’ என்பது தான்.

‘ஏன் இவரே ஆறு வருஷத்துக்கு முன்னாடி நம்மால இவங்களை ஒன்னுமே பண்ண முடியாதான்னு புலம்பினது எல்லாம் மறந்து போச்சு போல.. அதான் இப்போ திரும்ப லைப் ஸ்மூத்தா போகுது இல்லை.. அப்படியே போகட்டும்ன்னு நினைக்கிறார். வாங்கின அடி காயம் அவருக்கு மறந்திடுச்சு. எனக்கு இல்லையே. இன்னும் எரியுதே..’

‘என் கொள்ளு தாத்தா கோவிலுக்கு கொடுத்த சொத்தை எவனோ மிரட்டி வாங்கிட்டு போவான். நான் கேட்க கூடாதா..? கேட்டா தொடர்ந்து ஓட விடுவான்.. நான் ஓடிட்டே இருக்கணுமா..? ஏன் திரும்பி நிக்க கூடாதா..?  எனக்கான உரிமையை, நியாயத்தை நான் கேட்காம வேற யார் கேட்கிறதாம்..?’

‘இழப்பு கூட அவனவன்  இருக்கிற இடத்தை பொறுத்து தானா..? அப்போ என்னோட ஆறு வருஷ இழப்பு இவர்களுக்கு ஒண்ணுமே இல்லையா..? எனக்கு எவ்வளவு வலிக்குதுன்னு நான் தானே சொல்லணும்..?’

‘இன்னைக்கு வந்து என்கிட்ட பேசுற இந்த நியாய தர்மத்தை அன்னைக்கு அந்த தீனதயாளன்கிட்ட பேசியிருக்க வேண்டியது தானே..? சிவனேஷ்வரன் அண்ணாவை தேடி தானே ஓடினார். எங்க இருந்துச்சாம் நியாயத்துக்கு மரியாதை..?’

‘பணம், பவர், அதிகாரம் இருக்கா சொல்லு நீ தான் ராஜான்னு சொல்ற உலகத்துகிட்ட போய் நியாயம், தர்மம்ன்னு பேசுறது,  அப்பறம் ஐயோ அம்மான்னு வலில கதற வேண்டியது.. ம்ஹ்ம்..’ அடிநெஞ்சு வரை கசப்பு இறங்கியது அவனுக்கு.

சுளித்த முகத்தை பார்த்தே வந்த கீர்த்தனா “என்ன மாமா..?” என்று கேட்டாள்.

“ஒன்னுமில்லை.. நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்..” என்று எழுந்து சென்றுவிட்டான்.

எதுவோ இருக்கிறது என்று மனைவிக்கு உறுதியாக தெரிய தான் செய்தது. இருவரில் யாராவது ஒருவர் வாய் திறந்தால் தான் உண்டு. பார்ப்போம்.. என்று  மாமனுடன் கிளம்பி  கீழிறங்கினாள்.

தேவேந்திரன் வந்து காத்திருக்க, இருவரும் அவருடன் மறுவீடு புறப்பட்டனர். காரில் மாமா பக்கத்தில் அமராமல் பின்னால் மனைவியுடன் அமர்ந்து கொண்டான் ஜனகன். தேவேந்திரன் முகம் வாடி போனது. உள்ளே அவருக்கு குத்தியது.

அவன் அளவில் அவன் சரியாக தான் இருக்கிறானோ..? என்று குடைந்தது.

Advertisement