Advertisement

மதுரை வீரன் பொம்மி 22

இதோ விடிந்தால் திருமணம். இன்னும் சில மணி நேரங்களில் மண்டபமே விழித்து விடும். முதல் வேலையாக மாப்பிள்ளையை தான் தேடுவர். இவனோ இங்கு ஸ்டேஷனில் தீனதயாளனிடம் மோதி கொண்டிருக்கிறான்.

இருவரின் பார்வையிலும் அவ்வளவு உரசல். பார்த்திருந்த தேவேந்திரனுக்கு தான் பதட்டம், கவலை. முதல் முறையே பத்திரிக்கை எல்லாம் கொடுத்து திருமணம் நின்றுவிட்டது. இந்த முறை மண்டபம் வரை வந்து எதாவது தடங்கல் நேர்ந்துவிட்டால்..? நினைக்கவே உடல் நடுங்கியது.

மகளுக்கு அப்பாவாக மட்டும் அந்த நடுக்கம் இல்லை. இதோ.. பார்வையாலே போர் முரசு கொட்டி கொண்டிருப்பவனுக்கும் சேர்த்து தான்.

இவனுக்கோ அப்படி எதுவும் இல்லை போல. ‘வந்து பார்..’ என்று தீனதயாளனை நேருக்கு நேர் பார்த்து நின்றிருந்தான் ஜனகன்.

“சோ நீ தான் எல்லாத்துக்கும் காரணம்..?” தீனதயாளன் கூர்மையாக கேட்க,

“நான் சொல்ற வரைக்கும் கண்டுபிடிக்காம இருந்துட்டு இப்போ என்னங்க தலைவரே கிராஸ் கேள்வி..?” என்றான் ஜனகன்.

“இப்போ தெரிஞ்சிடுச்சு இல்லை பார்த்துக்கலாம்..” தீனதயாளன் சொன்னவர், வலியில் துடித்து கொண்டிருந்த மகன் அருகில் சென்றார்.

தர்ஷன் எழ கூட முடியாமல் துடித்து கொண்டிருக்க, “இவரை கொண்டு போய் GHல அட்மிட் பண்ணுங்க..” என்றார் DSP.

“என் மகன் கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கா..?” தீனதயாளன் கொதித்தெழ,

“எங்க விருந்தாளிகளை அங்க தான் சேர்க்க முடியும்..” DSP அழுத்தமாக சொன்னவர், கான்ஸ்டேபிளை பார்க்க, தர்ஷன் வாசம் அரசாங்க மருத்துவமனையில் என்றானது.

“நாளைக்கு காலையில கலெக்ட்ர் சாருக்கு கல்யாணம் இல்லை.. எங்களுக்கு எல்லாம் அழைப்பு இல்லையா..?” தீனதயாளன் வெஞ்சினத்துடன் கேட்க,

“அழைப்பு கொடுக்க எனக்கும் ஆசை தான்.. ஆனா நீங்க தான் ஊர்ல இல்லையே..” என்றான் ஜனகன்.

தீனதயாளன் புருவங்களை சுருக்க, சரியாக அவரின் போன் ஒலித்தது. கட்சியின் தொடர்பாளர். அவரை உடனே கிளம்பி சென்னை வர சொல்லி ஆர்டர். “எனக்கே ஆர்டரா..? யாருடா போட்டது..?” என்று எகிற,

“சரித்திரன் சார்.. பத்து மணிக்கு கட்சி மீட்டிங், தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு..” என்றனர்.

“தலைவர் நான் இருக்கும் போது எதுக்கு வாக்கெடுப்பு..?” தீனதயாளன் பொரிய, பதில் சொல்ல அங்கு ஆள் இல்லை. போன் வைத்திருந்தனர்.

ஜனகன் அவரையே கை கட்டி பார்த்திருக்க, தீனதயாளன் கை மீறி செல்லும் விஷயங்களில் தினறி கொண்டிருந்தார். தொழிலை  மட்டுமே வைத்து இந்தளவு அவரால் அரசாள முடியுமா..? கட்சி வேண்டும், பதவி வேண்டும். அதிகாரம் வேண்டும்.

இப்போதோ எல்லாம் கை விட்டு செல்வது போல் இருக்க, கிறுக்கு பிடித்தது மனிதருக்கு. தலையை பரபரவென தேய்த்து விட்டு கொண்டார். ஜனகன் சிரித்தான். சத்தமில்லாமல் சிரித்தான். அதில் தீனதயாளனை விட தேவேந்திரனுக்கு தான் அல்லு விட்டது.

என் ஜனாவா இது..? சொல்லி அடிக்கிறானே.. இவனுள் இப்படி ஒருவனா..? அவருக்கே அவனின் இந்த பரிமாணம் சற்று கிலியை கிளப்பியது உண்மை.

“நான்.. நான் வந்து உன்னை பார்த்துகிறேன்.. பார்த்துகிறேன்..” ஜனகனை மிரட்டி காருக்கு ஓடினார் மனிதர். நேரே சென்னை சாலையை தான் பிடித்தார். மகன் அங்கு மருத்துவமனையில் இருக்க, இவர் அதிகாரத்தின் பின் ஓடினார். ஜனகனுக்கு கசந்தது மனிதனின் இந்த குணம்.

“ரொம்ப நன்றி சார்..”  DSPயிடம் கை குலுக்கினான் ஜனகன். அவர் இவனை அணைத்து கொண்டவர், திருமணத்திற்கு வாழ்த்தி விடைபெற்றார்.

ஸ்டேஷனில் இருந்த போலீஸ் ஜனகனுக்கு சல்யூட் அடித்து வழியனுப்பி வைத்தனர். “இது தான் சாதாரண ஜனகனுக்கும், IAS ஜனகனுக்கு உள்ள வித்தியாசம்..?” என்றான் கார் எடுத்து.

“இருக்கலாம்.. ஆனா இன்னைய தேதில உனக்கும், தீனதயாளனுக்கும் பெருசா வித்தியாசம் இல்லை..” என்றுவிட்டார் தேவேந்திரன். ஜனகன் அவரை திரும்பி பார்க்க,

“நீயும் அவரை போல உன்னோட அதிகாரத்தை தப்பா தான் பயன்படுத்தற..” என்றார் அழுத்தம் திருத்தமாக.

“அதாவது அவரை போல நானும் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு குடும்பத்தை துரத்தி துரத்தி அடிச்சேன் சொல்றீங்க..? அப்படி தானே..?”  அவன் கோவமாக கேட்க,

“அதுக்காக இப்போ நீ சட்டத்தை கையில எடுத்துகிறது எந்த விதத்திலும்  நியாயம் ஆகாது ஜனா..” என்றார் தேவேந்திரன்.

ஜனகன் ஓடி கொண்டிருந்த காரை நிறுத்தி இறங்கிவிட்டான். “நீ என்ன செஞ்சாலும் நான் சப்போர்ட் பண்ணுவேன்னு நினைக்காத ஜனா.. சில விஷயங்கள் தப்புன்னா தப்பு தான்..” தேவேந்திரன் தானும் இறங்கி சொன்னார்.

பாண்டி இவர்களுக்கு பின்னால் வந்தவன் காரை நிறுத்தி, “என்ன ஆச்சு..?” என்று கேட்க,

“நீங்க எல்லாம் இவனுக்கு சொல்ல மாட்டிங்களா பாண்டி..? தீனதயாளனுக்கு இப்போ பதில் கொடுத்தே ஆகணுமா..? இத்தனை வருஷம் மொத்த குடும்பமும் பட்டது போதாதா..? திரும்ப ஆரம்பிச்சு எதாவது நடந்தா..?”

“நான் போய் சேருவேன்.. நான் மட்டும் தான் போய் சேருவேன்.. உங்களை எல்லாம் அவன் தொட கூட விட மாட்டேன் போதுமா..” ஜனகன் அவரை நெருங்கி கத்திய அடுத்த நொடி அவன் கன்னம் எரிந்தது.

இவர்.. இவர் என்னை அடித்து விட்டாரா..? ஜனகன் கன்னம் மட்டுமில்லை கண்களும் சிவந்துவிட்டது. அவன் உடல் மொத்தமும் கோவத்தில் அப்படி நடுங்கியது. சட்டென அந்த இடமே பற்றி எரிவது போல வெப்பம். தாறுமாறாக ஏறி இறங்கிய மூச்சு காற்றின் அனல் எதிரில் நின்றவரை சுட்டது. உள்ளங்கைகளை இறுக்கி பிடித்தவனின் மொத்த நரம்புகளும் புடைத்து வெடிப்பது போல நின்றன.

“சார்..” என்ற பாண்டியே நடந்துவிட்டதில் அதிர்ந்து போய்விட்டான்.

ஜனகன் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பி கார் பேன்ட்டை ஓங்கி அடித்த அடியில் அது நசுங்கியே போனது.

தேவேந்திரன் அவன் கோவத்தில் அசராமல் நிற்க, பாண்டி தான் அடுத்து ஓங்கிய ஜனகன் கையை வலுவாக பிடித்து தடுத்தான். அப்படியும் அடுத்த அடியில் கார் முன்பக்கம் பலமான சேதம் கண்டது.

“சார்.. சார்.. போதும்..” பாண்டி அவனை போராடி பிடிக்க, ஜனகன் அவனை உதறி தள்ளி நின்றான். தேவேந்திரனை பார்க்க கூட இல்லை அவன்.

அவருக்கோ, ஜனகனை அடித்து விட்டோம் என்பதை தாண்டி அவன் சொல்லிய வார்த்தைகள் தாங்கவில்லை. ஏற்கனவே ஒரு மாதிரி பதட்டத்தில் இருந்தவர் சட்டென கை நீட்டிவிட்டார்.

‘எவ்வளவு பெரிய நல்லது நடக்க போகுது.. இப்போ போய் இப்படி பேசுவானா..?’ பேசிவிட்ட வார்த்தைகளுக்கு யார் எஜமான் ஆவது..?

இன்றுள்ள சூழ்நிலையில் இந்த திருமணம் நல்லபடியே நடந்தால் போதும் என்றிருக்க, அவன் பேச்சை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தால் ஏதாவது பேசிவிடுவோம் என்று தோன்ற, “தாலி கட்ட வந்து சேரு..” என்று ஜனகனிடம் சொன்னவர் விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டார்.

ஜனகனை பார்த்த பாண்டி தன் காரில் அவரை ஏற்றி கொண்டு மண்டபத்தில் விட்டான். “முகூர்த்த நேரத்துக்கு அவனை கூட்டிகிட்டு வந்துடுங்க பாண்டி..” தேவேந்திரன் சொல்லி உள்ளே சென்றுவிட்டார்.

பாண்டி திரும்ப ஜனகனை தேடி வர, அவன் அங்கில்லவே இல்லை. கார் எடுத்து எங்கோ சென்றிருந்தான். பாண்டி உடனே பதறவில்லை. ஜிபிஸ் பார்த்து தன் காரை அந்த பக்கம் விட்டான்.

மணி நேரங்களே ஜனகன் மதுரையை சுற்றி வந்தான். இன்னும் அந்த தகிப்பு குறைவேனா என்றது. ஓங்கி ஸ்டியரிங்கில் அடித்தவன் கைகள் முழுக்க அப்படி சிவந்திருந்தது. வலி தெரியவில்லை. அவ்வளவு கோவம்.

காரை மிதித்து கொண்டே இருக்க, இறுதியில் டீசல் காலியாகி வண்டி ஓரிடத்தில் நின்றுவிட்டது. ச்சு.. என்றவன் சீட்டில் கண் மூடி சாய்ந்துவிட்டான்.

பாண்டி அவனுக்கு பின் தன் காரை நிறுத்தி தானும் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொண்டான். விடியல் நெருங்க தேவேந்திரன் அவனுக்கு அழைத்தார். பாண்டி சிறு தூக்கம் தூங்கி எழுந்தவன் அவருடன் பேசி வைத்தான்.

ஜனகன் இன்னும் காரில் இருக்க, பாண்டி சென்று ஜன்னலை தட்டியவன், “நேரம் ஆச்சு..” என்று வாட்ச் காட்டினான்.

ஜனகன் கீழிறங்கி வர தண்ணீர் பாட்டிலை நீட்டினான் பாண்டி. “நன்றி பாண்டி சார்..” என்றவன் முகத்தை அடித்து கழுவினான். இன்னும் லேசான எரிச்சல் மிச்சம் இருந்தது கன்னத்தில். ‘பார்த்துகிறேன் அவரை..’ என்று கருவியபடி பாண்டி காரில் ஏறினான்.

மண்டபத்தில் நடமாட்டம் ஆரம்பித்திருக்க, தேவேந்திரன் வாசலில் இருந்தார். ஜனகன் அவரை பார்க்க கூட செய்யாமல் ரூம் சென்றுவிட்டான். ராஜலக்ஷ்மி தம்பதி மகன் வரவும் நிம்மதியாகி ஏற்பாடுகளை பார்க்க ஓடினர்.

Advertisement