Advertisement

மதுரை வீரன் பொம்மி 4

திருமணத்திற்கு இன்னும் இரு வாரங்களே மிச்சம் இருப்பதால் இரு வீட்டிலும் வேலைகள் வெகு ஜோராக நடந்து கொண்டிருந்தது. பூ வைக்க அம்மா வீட்டிற்கு வந்த மூன்று அக்காக்களின் குடும்பமும் அங்கேயே இருந்துகொண்டனர்.  பிள்ளைகளுக்கு விடுமுறை தானே ஒரேடியாக திருமணம் முடித்து போகலாம் என்று.

மகள்கள் உடன் இருப்பதால் ராஜலக்ஷ்மிக்கு  பெரிதான உழைப்பு இல்லை. சொல்வது மட்டுமே. மற்றதெல்லாம் தானே நடந்தது. பத்திரிக்கை அடித்து கைக்கு வர, அவர்களின் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தனர். பெரிய மகள் வீட்டில் பானுமதி தம்பதி, அதிதி மட்டும் வந்தனர்.

முகூர்த்த புடவை எடுக்க, பஸ் வைத்து கொண்டு தான் சென்றனர். இரண்டு வீட்டிலும் ஆட்கள் அதிகமே அதிகம். தேவேந்திரன் பக்கம் பணத்துக்கு பிரச்சனை இல்லை. ஜனகன் பக்கம் என்ன செய்கிறார்கள் என்று தேவேந்திரன் மனைவியை விசாரிக்க சொன்னார்.

“மாமாகிட்ட இப்போ சொல்லிக்கிற மாதிரி வருமானம் இல்லை, முகூர்த்தமும் ரொம்ப கிட்டக்கவே வச்சுட்டோம், பணத்துக்கு என்ன பண்றாங்கன்னு அத்தைகிட்ட கேளு..” என,

“அதெல்லாம் என் தம்பி கொடுத்துட்டான், அவன் சம்பாத்தியம், எங்களுக்கு சீர் செய்யவும் தாராளமாவே கொடுத்திருக்கானாம்..” என்றார் பானுமதி பெருமையுடன். அவர் தான் முதலிலே விசாரித்து விட்டாரே.

“பாரேன்.. தம்பி பவுசு.. ம்ம்.. நடக்கட்டும், நடக்கட்டும்.. அப்பறம் சீர் உங்களுக்கு மட்டும் செஞ்சா போதுமா, எனக்கும் செய்ய சொல்லு. மாப்பிள்ளை, சம்மந்தின்னு டபுள் போஸ்ட்ல இருக்கேன்ல்ல..” என்றார் அவர்.

“பார்க்கலாம்.. பார்க்கலாம்.. அது நீங்க நடந்துகிறது பொறுத்து செஞ்சிடலாம்..” என்றார் பானுமதி மிதப்பாக.

“அடேங்கப்பா.. மாப்பிள்ளைக்கு அக்கான்னு மவுசு காட்டுறதை பார்த்தியா..” தேவேந்திரன் மனைவி பேச்சில் அவரை தோளோடு அணைத்து இறுக்க,

“ஏங்க.. விடுங்க, பசங்க வந்திட போறாங்க..” பானுமதி விடுவித்து  கொண்டார். தேவேந்திரனும் வீடு முழுக்க உறவுகள் இருப்பதால் விட்டுவிட்டவர், “எல்லாம் முடியட்டும் பார்த்துகிறேன் உன்னை..” என்று சென்றார்.

தேவேந்திரனின் வீட்டிலும் அண்ணன் பிள்ளைகள், தங்கை குடும்பம் திருமணம் முடித்து செல்ல நின்றுவிட்டனர். எந்நேரமும் பரபரப்பு, ஆர்ப்பரிப்பு, பேச்சு சத்தம் தான். தேவேந்திரன் தங்கை முதலில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், மனதை தேற்றி கொண்டார். அவருக்கு அண்ணன் மகளை தன் மகனுக்கு கட்டி வைக்க ஆசை இருந்தது. அது தவறென்றும் சொல்ல முடியாத இடத்தில் பெண்ணை பெற்றவர்கள்.

மூத்த அண்ணன்கள் தங்கையிடம் பேச, தேவேந்திரன் தம்பதியும் அவரிடம் மிக இணக்கமாக நடந்து கொள்ள, அவரும் கொஞ்சம் சமாதானமாகிவிட்டார். ஜனகன் பெற்றவர்களும் முறையே தேவேந்திரன் உடன்பிறப்புகளுக்கு அவர்கள் பக்கம் பத்திரிக்கை வைத்து அழைத்தனர். மற்ற மூன்று பெண்கள் வீட்டிற்கும் நேரில் சென்று பத்திரிக்கை வைத்து வந்தனர்.

தேவேந்திரன் அவரின் கார்  ஒன்றை டிரைவருடன் மாமனார் வீட்டில் நிறுத்திவிட்டார். “ஏன் நான் கார் அரேஞ்ச் பண்ண மாட்டேனா, அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு..?” ஜனகன் போன் செய்து பேச,

“ஏன் இப்போ நான் கார் கொடுத்தா என்ன உனக்கு..? முதலாவது உனக்கு அக்கா புருஷன் மட்டும் தான், இப்போ உங்களுக்கு சம்மந்தியும் கூட பார்த்து நடந்துக்கோ..” என்றார் அவர் மிரட்டலாக.

“பயந்துட்டேன்..  ரொம்ப தான்.. பேங்க்ல இருக்கேன், அப்பறம் பேசிக்கிறேன் உங்களை..” என்று வைத்துவிட்டான் மருமகன்.

குறித்திருந்த தேதிக்கு ஒரு வாரம் முன்பு அவன் விடுமுறை கேட்டிருக்க, கிடைத்ததோ மூன்று நாட்கள் முன்பு தான். மேனேஜரிடம் கேட்க, அவரோ ஏதேதோ காரணம் சொல்லி கொண்டிருந்தார். வயசான அப்பா அங்கு வெளிவேலைகளில் அல்லாடி கொண்டிருக்க, உதவ முடியாத எரிச்சல் மகனுக்கு.

“நான் பார்த்துகிறேன்ப்பு.. நீ டென்ஷன் எடுத்துக்க வேணாம், மாப்பிள்ளைங்க கூட வராங்க, கார் தானே, கஷ்டம் எல்லாம் இல்லை, நீ சந்தோஷமா இருய்யா, முகத்துல இன்னும் களை வரலையே..” அப்பாவோ மகனை கவலையாக பார்த்தார்.

‘க்கும்.. இரண்டு வாரத்துல கல்யாணம், வளர்த்துவிட்ட அக்கா பொண்ணு, ஒன்னும் தோண மாட்டேங்குது, இதுல கல்யாண களை கொட்டிட்டாலும்..’ மனதுக்குள் சலித்து கொண்டவனுக்கு, பொம்மியும் இப்படி தான் இருப்பாளோ என்று தோன்றியது.

அன்று பூ வைக்கும் போது பார்த்து பேசியது தான். அதன் பின்  பார்க்கவோ, பேசவோ இல்லை. அக்காக்கள் சில முறை கேட்பது உண்டு. “பொம்மிகிட்ட போன்ல பேசுற தானேப்பு..?” என்று. சிரித்து நகர்ந்து விடுவான். இடையில் ஒரு முறை போன் எடுத்து வைத்துவிட்டான்.

அக்கா மகளாக தான் பேச முடியும். அவளுக்கு சொன்னது தான் தனக்கும். பாசம் தவிர வேறொன்று இருவருக்குள்ளும் வேண்டும். வரவைக்க முடியாத ஒன்று. தானே சுரக்க வேண்டும். அந்த நாள் எப்போது என்று தான் தெரியவில்லை. பெருமூச்சுடன் போனில் தெரிந்த அக்கா மகளை பார்த்தான்.

முகூர்த்த புடவை எடுக்க சென்ற நேரம் தேர்ந்தெடுத்த புடவையை அவளுக்கு கட்டி இவனுக்கு போட்டோ அனுப்பியிருந்தனர். கிட்டத்தட்ட எல்லோரும். பல கோணங்களில் அவள். பார்த்தான், பார்த்து கொண்டே இருக்கிறான். ம்ஹூம்.. அவளின் முகம் இன்னும் இவனின் முகத்துக்கருகில் வரவில்லை. தூரத்திலே தான் பார்க்கிறான்.

இப்போதும் பார்த்து கொண்டிருக்க, புது எண்ணில் இருந்து அழைப்பு. நேரம் இரவு பத்து. எடுக்கவில்லை. திரும்ப வர, உறவுகள் யாரேனும் திருமணம் பற்றி பேச கூப்பிடுகின்றனரோ என்று எடுக்க, மறுபக்கம் “மாமா..” என்றழைப்பு. திரும்ப திரும்ப மாமா என்றழைப்பு.

சீறலான மூச்சை இழுத்துவிட்ட ஜனகன், “அமுதா.. என்ன பண்ற நீ..?” என்று கண்டிப்புடன் கேட்டான். இவள் தான் வேலய்யனின் ஒன்று விட்ட அக்கா மகள். அவளின் என்னை பிளாக் செய்து வைத்திருக்க, புது நம்பரில் இருந்து அழைக்கிறாள்.

அங்கு அமுதாவோ, “மாமா.. மாமா.. ப்ளீஸ், வைச்சுடாதீங்க, எனக்கு உங்ககிட்ட பேசணும், ப்ளீஸ் மாமா..” என்று கெஞ்ச,

“இனி பேச என்ன ஆக போகுதுன்னு இப்படி பண்ற, தப்பும்மா, விஷயம் தெரியும் தானே, பொம்மிக்கும் எனக்கும் அடுத்த வாரம் கல்யாணம்..” ஜனகன் இழுத்து பிடித்த பொறுமையுடன் சொன்னான்.

“மாமா.. தெரியும், இது.. இது வேற, கொஞ்ச நேரம், ப்ளீஸ், ஒரு அஞ்சு நிமிஷம், நான்.. நீங்க வெளியே, போன்ல பேச முடியாது, நான் வரேன், பேங்குக்கு வர முடியாது, வீட்ல தெரிஞ்சிடும், வேற.. அந்த ஸ்டார் பேக்கரி.. ஆமா.. அங்க நான் நாளைக்கு ஈவினிங் வரேன், ஒரு முறை மட்டும், அப்பறம் நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன், ப்ளீஸ் மாமா..” என்று விடாமல் கேட்க, ஜனகனுக்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

“இல்லைமா..” என்று போன் வைக்க போக,

“மாமா.. மறுக்காதீங்க, எங்க மாமா எதோ பண்றார், உங்ககிட்ட பேசணும்..” என்று அமுதா  சொல்ல,

“அவர் என்ன பண்ணாலும் நான் பார்த்துகிறேன், இது வேண்டாம்ன்னா வேண்டாம் தான்..” என்று ஜனகன் வைத்துவிட்டான். விஷயம் எதுவாக இருந்தாலும் அமுதாவுடனான சந்திப்பை அவன் விரும்பவில்லை.

இருவருக்கும் பேச ஆரம்பித்த சில நாட்களிலே அந்த சம்மந்தம் முறிந்துவிட்டது. உறுதி கூட செய்யவில்லை. அதற்குள் அந்த நிலம் விஷயத்துல நீங்க தலையிட கூடாது என்று கட்டுப்பாடு. வேலய்யனுக்கு பிடிக்கவில்லை.

என் அப்பா  குலதெய்வ கோவிலுக்கு கொடுத்த நிலத்தை எவனோ அனாமத்தா எடுத்துட்டு போவான், அதுல நான் தலையிட கூடாதுன்னா என்னை தவிர வேறெவன் தலையிடுவான்..? நான் தானே பேச வேண்டும், திருப்பி வாங்க வேண்டும். என் பொறுப்பு, கடமை அது. எனக்கு என்றால் என் மகனுக்கும் தானே அது..? இல்லையோ.. என்று மகனை அழைத்து பேச, அவனோ “முதல்ல இந்த பேச்சை நிறுத்திடுங்கப்பா..” என்றுவிட்டான். காரணம் அமுதா.

உண்மையில் அவனுக்கு தான் அந்த நிலம் பற்றி எதுவும் தெரியாதே. பெரியவர்கள் பார்த்து கொள்வார்கள், பேசட்டும், ஏதாவது சுமுகமாக பேசி சரி செய்வார்கள் என்று தள்ளியிருக்க, அமுதா அவனுக்கு அழைத்தாள்.

“மாமா எப்படி இருக்கீங்க..?” என்று நலம் விசாரித்தவள், “பெரிய மாமாகிட்ட கொஞ்சம் சொல்லுங்க மாமா, அந்த நிலம் விஷயம் நமக்கு வேண்டாம், எங்க அப்பா யோசிக்கிறார், நம்ம கல்யாணம் நடக்கணும்ன்னா அவரை தள்ளி இருக்க சொல்லுங்க, நீங்க பேசினா கேட்டுப்பார், பேசுங்க மாமா..” என்றாள் பெண்.

நான் பேசணுமா என் அப்பாகிட்ட..? அதை இவங்க சொல்வாங்களா..? ஜனகன் புருவம் சுருக்கினான். அவளின் அந்த முதல் பேச்சே ஜனகனுக்கு ஒப்பவில்லை. “அமுதா இது பெரியவங்க விஷயம், அவங்க பார்த்துப்பாங்க.. விடு..” என்றான்.

“இல்லை மாமா.. பெரிய மாமா முடிவா இருக்காராம், அவர் இறங்கி வரலைன்னா இந்த உறுதியே நடக்காதுன்னு எங்க அப்பா சொல்றார், அப்படியென்ன பெரிய மாமாக்கு அந்த நிலம், ஒத்தை மகன் உங்களை தானே பார்க்கணும், அவர்கிட்ட நீங்க பேசினாத்தான் சரி வரும், பேசுங்க மாமா..” என்றாள் பெண் விடாமல்.

“விஷயம் என்னன்னு நமக்கு முழுசா தெரியாது அமுதா, அவங்க பேசி முடிவுக்கு வரட்டும், விடு..” என்றான் ஜனகன் பொறுமையாக.

“நம்ம கல்யாணம் நடக்கணும் தானே மாமா..?” என்று அமுதா கேட்க, அப்படி ஒன்னும் எனக்கு நடந்தே ஆகணும்ன்னு இல்லை என்று தான் ஜனகனுக்கு தோன்றியது. “நீங்க பேசி பெரிய மாமாவை சமாதானம் பண்ணுங்க, அப்போதான் இந்த உறுதி நடக்கும்..” என்று அமுதா வைத்துவிட, ஜனகன் நெற்றி சுருக்கி நின்றான்.

இதற்கு முன் எத்தனையோ முறை அத்தை மகள் என்ற முறையில் அவளிடம் பொதுவாக பேசியிருக்கிறான் தான். ஆனால் இந்த அதிகாரம் புதிது. திருமண பேச்சு ஆரம்பித்ததற்கே இப்படியா..? அமுதா அத்தோடு விடாமல் திரும்ப திரும்ப போன் செய்து, பேசிட்டிங்களா..? என்று கேட்க, ஜனகன் முடிவுக்கே வந்துவிட்டான்.

வேல்லய்யன் அன்றய இரவு மகனை அழைத்து கேட்க, “இந்த சம்மந்தம் வேண்டாம்ப்பா..” என்றுவிட்டான். திருமணத்திற்கு முன்பே இப்படி கழுத்தை நெறிக்கும் உறவு எனக்கு வேண்டாம்.. ஆரம்பிக்கும் போதே இவ்வளவு கட்டுத்திட்டங்களா..? சம்மந்தம் முறிந்த நாள், இதையே அமுதாவின் கேள்விக்கு பதிலாக சொல்லி வந்துவிட்டான்.

அப்போதும் அவள் விடாமல் அவனுக்கு அடிக்கடி அழைக்க, அவள் எண்ணை பிளாக் செய்துவிட்டான். வேறொரு புது எண்ணில் அழைத்து பார்க்க கேட்டால் செல்ல தான் முடியுமா..? முறிந்தது திரும்ப ஒட்டாதது.

Advertisement