Advertisement

அத்தனை மீடியாக்களிலும் இது தான் ஓடி கொண்டிருக்க, ஜனகனை நெருங்கி கேட்க தான் ஆள் இல்லை. அவனின் பெர்சனல் போனுக்கு அப்படி யாரும் சாதாரணமாக அழைத்து விட முடியாது என்பதோடு, அவன் பக்க ஆட்களும் யாரும் இங்கில்லை. திருமணத்திற்கு வேலை சம்மந்தமாக யாரையும் அழைக்கவில்லை இவன். தனியே பார்த்துகிறேன் என்றிருந்தான்.

“ஏற்கனவே தடைபட்ட கல்யாணம் கூடி வரும் போது தான் இதை எல்லாம் செய்வானா இவன்..?” என்று பானுமதியும் புலம்பி கொண்டிருக்க, தேவேந்திரனும் அவரின் மகள் பொம்மியும்  மட்டும் மௌனம் காத்தனர்.

ஜனகன் விஷயம் இது.. அப்படி யாரிடமும் எதுவும் அவர்கள் பேசிவிட மாட்டார்களே..!

“நீங்க அவன்கிட்ட என்ன எதுன்னு கேட்காம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்..? காலையில  முகூர்த்தம், திரும்ப ஏதாவது பிரச்சனை வந்தா, ஏன் கீர்த்தி உனக்கு கூட அவன் இப்படி எல்லாம் பண்றான்னு தெரியாதா..? வேண்டாம் சொல்ல மாட்டியா நீ..?” என்று கணவனிடம், மகளிடம் ஆதங்க பட்டவர், பெற்றவர்களிடம் பேச சென்றார்.

அறையில் அப்பா, மகள் மட்டும் இருக்க, தேவேந்திரன் அலறி கொண்டிருக்கும் போனை பார்த்து பெருமூச்சு விட்டார். ” தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு எல்லாம் கூப்பிட்டுட்டே இருக்காங்க..” என்று மகளுக்கு காட்டினார்.

“மாமா இதோட விடுவார்ன்னு எனக்கு தோணலைப்பா..” கீர்த்தனா சொல்ல,

“அதெல்லாம் ஆரம்பிச்சு வைச்சிருப்பான்.. ஒவ்வொண்ணா தான் வெளியே வரும்..” என்றார் தேவேந்திரன்.

“செய்யட்டும் விடுங்கப்பா.. நாமும் முன்ன மாதிரி இல்லை தானே..”

“இல்லை தான்.. ஆனா கல்யாணம் முடியற வரை பொறுத்திருந்திருக்கலாம், இப்போ நைட் கடக்கிறதுக்குள்ள என்னென்ன நடக்கும்ன்னு சொல்ல முடியாது..”

“மாமாவுக்கும் எல்லாம் தெரிஞ்சும் தான் இருக்கும்ப்பா.. பார்த்துக்கலாம்..”

“ம்ம்..  பாதுகாப்பு பிரச்சனையில்லை.. இவனை மண்டபத்துக்குள்ள பிடிச்சு வைச்சா போதும்.. கல்யாணம் முடிஞ்சிடும்..” என்று சொல்லி கொண்டிருக்க,

“கிளம்பலாமா..?” என்று வந்தான் ஜனகன்.

அப்பாவும், மகளும் நொந்து போய் முகம் பார்த்தனர். நேரமோ நள்ளிரவு. “இப்போ எங்கேயும் போக முடியாது கண்ணு.. அவனை போய் ரூம்ல  ரெஸ்ட் எடுக்க சொல்லு..” என்றார் மகளிடம்.

“உங்களை கிளம்புங்க சொன்னேன்..” ஜனகன் உறுதியாக நிற்க,

“அதான் நினைச்சதை சாதிச்சுட்டான் இல்லை.. திரும்ப என்ன செய்யணுமாம்..?” தேவேந்திரன் மகளிடம் பேச,

“என்கூட வந்தா தெரிஞ்சுட போகுது..” என்றவன் போனில் ஏதோ மெசேஜ் செய்தான்.

“நான் எங்கேயும் வர மாட்டேன் கண்ணு.. அவனும் எங்கேயும் போக போறது இல்லைன்னு சொல்லு..” தேவேந்திரன் கண்டிப்புடன் சொல்ல,

‘க்கும்.. அவளுக்கும் எனக்குமே போன் ஒயர் பிஞ்சு போச்சு, இதுல அவகிட்ட போய் சொல்ல சொன்னா..’ மனதுள் முனகி பொம்மியை பார்க்க, அவளோ கை கட்டி எங்கோ பார்த்திருந்தாள்.

என்னை பார்க்க கூட மாட்டாளாமா.. “சரி நான் போகலை.. உங்க பொண்ணை என்கிட்ட சொல்ல சொல்லுங்க..” என்றான்.

பொம்மி பல்லை கடிக்க, ஜனகன் முகத்தில் வம்பான சிரிப்பு. “கண்ணு.. நீ சொல்லு, அவன் ரூம் போகட்டும்..” அப்பா  சொல்ல,

“நீங்க சொன்னதே காது கேட்டிருக்கும் ப்பா..” என்றாள் மகள்.

“எனக்கு கேட்கல.. யாராவது ஒருத்தர் என்னை நேரா பார்த்து பேசினா தான் கேட்கும். அப்பாவும் மகளும் சுவரை பார்த்து பேசினா எனக்கு எப்படி கேட்கும்..” என்றான் சீண்டலாக.

தேவேந்திரனுக்கு ஏதோ புரிய, “என் மககிட்ட சண்டை போட்டியாடா..?” என்று ஜனகனிடன் நேரே கேட்டார்.

“விடிஞ்சா மக கழுத்துல தாலி கட்ட போற மாப்பிள்ளை, என்னை ‘டா’ போட்டு பேசுறாரு உன் அப்பா, அவருக்கு நான் மரியாதை கொடுக்கலைன்னு என்கிட்ட சண்டை போட்ட..?” என்று பொம்மியிடம் கேட்டான் அவன்.

“ஓஹோ.. கலெக்டர் இல்லை.. மரியாதை எதிர்பார்க்கிறாரா என்கிட்ட..?” தேவேந்திரன் கடுப்பாக, ஜனகனின் போன் ஒலித்தது.

“நீங்க இப்படியே பேசிட்டிருந்தா அங்க ஸ்டேஷன்ல நடக்கிறதுக்கு நான் பொறுப்பு இல்லை..” என்றான் ஜனகன்.

“ஸ்டேஷன்லவா.. அங்க என்ன.. தர்ஷன், அவனை என்னடா பண்ண போற..” தேவேந்திரன் அதிர்ந்து போய் கேட்க, ஜனகனிடம் பதிலில்லை.

“சரி நான் அண்ணங்ககிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்..” என்று ஓட, ஜனகன் கதவை லாக் செய்தான்.

பொம்மி பதறாமல் அப்படியே சுவற்றை பார்த்து நிற்க, அவள் அருகில் நின்றான். பொம்மி மறுப்பை தள்ளி நின்று காட்ட, இவன் விருப்பத்தை நெருக்கம் கூட்டி காட்டினான்.

இவனை பார்க்காத அவளை தன்னை நோக்கி திருப்பியவன், “நீ ரொம்ப பேசிட்ட..?” என்றான்.

பொம்மி அவனை நேரே பார்க்க, விடிந்தால் என் மனைவி.. ம்ம்ம்.. முறைக்கும் மாமன் மகள் அவனை அவ்வளவு ஈர்த்தாள். “உன்னை அப்படியே கட்டிக்கணும் தோணுது, ஆனா கட்டிக்க மாட்டேன்டி..” என்றான்.

பார்வையில், நெருக்கத்தில்  ஆசையை காட்டி, பேச்சில் விலகி நிற்கும் மாமன் கோவத்தில் பெண்ணிடம் மாற்றம். இளக்கம்.

அவள் உடல் இறுக்கத்தை விட்டு தளர, ஜனகன் விரல்கள் அவள் கன்னத்தை பற்றியது. “இப்போ பேசுடி..” என்றான்.

பொம்மி அமைதியாக இருக்க, அவன் விரல்கள் அவள் கழுத்தை தூக்க, மச்சம் பளிச்சென தெரிந்தது. “மாமா..” என்றாள் பெண்.

“இப்போ மட்டும் பேசுற.. ம்ஹ்ம்..” என்றவன் மூச்சு காற்று மச்சத்தில் பட்டது.

“மச்சம் கரையுமாடி..” என்று கேட்டான்.

இதென்ன கேள்வி..? அவள் பார்க்க, “ஈரம் பட்டா கரையாது இல்லை..” என்றவன் சொன்னதை உணர்ந்து விலகும் முன், ஈரத்தை பதிருந்தான் அவன். ‘ஸ்ஸ்’ பெண் கண்களை மூடிவிட்டாள்.

சிறு மச்சம் தான். ஆனால் அதனில் அவன் எடுத்து கொண்ட கவனம் பெண்ணை கண் திறக்க விடாமல் செய்தது. முத்தத்தின் பித்தம் அவள் தலைக்கேற அவன் இடைய வளைத்து கொண்டாள். ஜனகனோ இன்னும் வாகாக தனக்குள் எடுத்து கொண்டான் அவளையும், அவள் மச்சத்தையும்.

நிமிடம் கரைய, “மாமா..” என்ற மெலிதாக அலறியவளின் காயத்திற்கு மருந்திட்டு விலகினான்.

கீர்த்தனா மறுபக்கம் திரும்பி, “கதவை திறங்க மாமா.. அப்பா வந்திடுவார்..” என்றாள்.

ஜனகன் அவளை பின்னிருந்து அணைத்து கொண்டவன், “நாளைக்குள்ள இதை சரி பண்ணிக்க.. புதுசா காயம் நிறைய ஆகும்..” என்றான்.

பொம்மிக்கு வெட்கத்திலும், கோவத்திலும் முகம் சிவக்க, கதவு தட்டினர். ஜனகன் அவளுக்கு அழுத்தம் கொடுத்து விடுவித்தவன், கதவை திறந்தான்.

“உங்களை தேவேந்திரன் சார் வர சொன்னார்..” என்று தகவல். ஜனகன் தானே கதவு மூடி சென்றான்.

தேவேந்திரன் அண்ணன்களும் கார் பார்க்கிங்கில் இருந்தவர்கள், “கொஞ்சம் பார்த்துக்க சொல்லு தேவா..” என்றனர்.

“அவர் என்கிட்ட பேசுறதில்லை மாமா.. நீங்களே என்கிட்ட சொல்லிடுங்க..” என்றான் அவர்களிடம் சிரிப்புடன்.

“இது விளையாட்டில்லை ஜனா.. இத்தனை வருஷம் கழிச்சு இப்போ தான் நம்ம குடும்பத்துக்கு நல்லது நடக்க போகுது.. எது செய்றதா இருந்தாலும் பார்த்து செய்..” என்றார் பெரியவர்.

“கண்டிப்பா பார்த்து தான் செய்வேன் மாமா.. நீங்க இங்க பாருங்க.. வந்துடுறோம்..” என்று தானே காரை கிளப்ப, தேவேந்திரன் பக்கத்தில் அமர்ந்தார்.

கார் நேரே ஸ்டேஷன் சென்றது. அதே ஸ்டேஷன். சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருந்த அதே ஸ்டேஷன். பாண்டி கார் கதவை திறந்து விட, போலீஸ் வாசலுக்கே வந்தது. அதில் இருவர் அவனை மணிக்கணக்காக வெளியே நிற்க வைத்தவர்கள்.

ஜனகன் பொறுப்பேற்ற நாளே வெலவெலத்து தான் போயிருந்தனர். இப்போது நேரில் நிற்கவும் விறைப்பாக சல்யூட் அடிக்க, ஜனகன் உதடுகளில் இறுக்கமான விரிப்பு. “இப்போ எவ்வளவு பணம் வாங்குனீங்க..?” என்றான் அவர்களிடம்.

“சார்..சார்..” என்று அவர்கள் வேர்த்து போய்  பயத்தில் திக்க, ஜனகன் அவர்களை அழுத்தமாக பார்த்து மாமாவுடன் உள்ளே சென்றான். தர்ஷன் செல்லில் இல்லாமல் வெளியே பெஞ்சில் இருக்க, “ஏன் இன்னும் ஜெயில் கொண்டு போகலை..?” என்று கேட்டான்.

“அது.. அது சார்..” என்று இன்ஸ்பெக்டர் இவன் வரவில் முழிக்க,

தர்ஷன் இன்னும் அடங்காமல் நின்றவன், “உனக்கு இருக்குடா..” என்றான்  ஜனகனிடம்.

“அப்படியா என்ன இருக்கு..?” ஜனகன் அவனை நெருங்க,

“ஹலோ சார்..” என்று வந்தார் DSP ஒருவர். ஜனகனின் நண்பர் அவர்.

“இவன் தான் நீங்க சொன்னா ஆளா..? அவ்வளவு ஒர்த்தா இல்லையே..” என்றார் DSP.

தர்ஷன் கோவத்தில் கொதித்து கொண்டிருந்தவன், “என்ன கலெக்டர் ஆயிட்டா உன்னை என்னால ஒன்னும் பண்ண முடியாது நினைச்சியா..?” என்று கேட்டான்.

“என்ன செய்ய முடியும்..? ம்ம்..” என்ற ஜனகன், “சார் சுண்டு விரல் கூட என்னை தொட தகுதி இல்லையாம்..” என்றான் DSPயிடம்.

“அப்படியா..” என்ற DSP தர்ஷன் கரத்தை பற்றினான். முறைத்து கொண்டிருந்த தர்ஷன் முகம் மெல்ல மாற, ஆஆ.. என்று வலியில் கத்தினான். அவன் சுண்டு விரல் உடைந்து தொங்கி கொண்டிருந்தது.

“ஜனா..” என்று தேவேந்திரன் அவனை கட்டுப்படுத்த,

“எந்த கால் மாமா அது அப்பாவை உதைக்க தூக்கினது.. இதுவா.. அதுவா..?” என்று கேட்க, DSP கைக்கு லத்தி வந்தது. தேவேந்திரன் வேண்டாம் என்று மறுக்க, லத்தியும் உடைந்தும் போனது. அவன் இரு கால்களும் உடைந்து போனது.

அடித்து பிடித்து ஓடி வந்த தீனதயாளன் பார்த்தது மயங்கி கீழே சரிந்த மகனை தான். தேவேந்திரன், ஜனகன் காலுக்கடியில் மகன் விழுந்து கிடக்க, தீனதயாளன் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது.

“சார் இவர்  நம்ம ஏரியால பெரிய புள்ளி.. மிஸ்டர் தீனதயாளன்..” என்று அறிமுகம் செய்து வைக்க,

“ஹலோ சார்..”  என்றார்  DSP

“அப்பறம் சார் உங்களுக்கு ஒன்னு தெரியுமா..? தீனதயாளன் சார் மினிஸ்டர் கேண்டிடேட்.. எலெக்ஷ்னல் கூட நின்னு ஜெயிச்சுட்டார். ஆனா பாருங்க மினிஸ்டர் ஆக முடியல..” என்றான் ஜனகன்.

“அப்படிங்களா சார் ஏன்..?” என்று அவர் கதை கேட்க,

“அது ஒரு பென்  ட்ரைவ்  விவகாரம் சார்.. இந்த கட்சிக்கு முன்னாடி தலைவரா இருந்தவர் சம்மந்தமா..? அது ஏதோ லீக் ஆகி.. இவர் மினிஸ்டர் போஸ்ட் ஜஸ்ட் மிஸ்ல மிஸ் ஆகிடுச்சு.. இப்போ அந்த முன்னாள் தலைவர் மகன் தான் மினிஸ்டர், இவர் கட்சி தலைவரா மட்டும் உட்கார்ந்திருக்கார்..” என்றான் ஜனகன்.

தீனதயாளன் அதிர்ச்சியில் மகனை கூட கவனிக்காமல் சிலையாக நிற்க, “யாரு சார் அந்த மினிஸ்டர்..” DSP கேட்க,

“மிஸ்டர் ‘சரித்திரன்’ சார் தான்..” என்றான் ஜனகன்.

தேவேந்திரன் இவன் என்ன சொல்கிறான் என்று புரிந்து கண்களை விரிக்க, தீனதயாளனுக்கு இதுவரையிலான மர்மத்துக்கு விடை கிடைத்துவிட்டது. ஜனகன் மீதான அவர் பார்வையின் தீவிரம் தேவேந்திரனுக்கு சரியாக படவில்லை. ஜனகனுக்கு அப்படி ஒன்றும் இல்லை போல.

“எலெக்ஷன்ல ஜெயிச்சா உங்க லெவலே வேற தலைவர்.. அப்போ இவெனெல்லாம் உங்களுக்கு ஒரு  ஆளே கிடையாது, ஈஸியா நசுக்கி தூக்கி போட்டுடலாம்..” இதே ஸ்டேஷனில் வைத்து ஜனகன் கேட்ட வார்த்தைகள்.. அது தான்  தீனதயாளனுக்கு வினையாக முடிந்தது. முடித்து வைத்திருந்தான் ஜனகன்.

“சார் அந்த பென் ட்ரைவ் மட்டுமில்லை. அது கூட இன்னொரு வீடியோ கூட இருக்காம்.. அது மட்டும் வெளியே வந்துச்சு கட்சி தலைவர் போஸ்ட் கூட புட்டுக்க வாய்ப்பு அதிகமாம்..” என்றான் அவரை தீர்க்கமாக பார்த்து.

இருவரின் பார்வையும் மோதி கொண்டது. தேவேந்திரனுக்கு அது உவப்பாக இல்லை.

‘கடவுளே நாளைக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்..’ என்று அவர்  உடனடி வேண்டுதல் வைத்தார்.

Advertisement