Advertisement

மதுரை வீரன் பொம்மி 21

இத்தனை வருடங்கள் காத்திருந்து நினைத்ததை விடவும் அதிகமாக செய்து முடித்துவிட்ட திருப்தியில் ஜனகன் கார் வீடு நோக்கி சென்றது. அவன் வீடு. சொந்த வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான்.

 வேலய்யன் மகன் வரும் தகவல் அறிந்து வெளி கேட்டிலே காத்திருக்க, ஜனகன் கார் வந்து நின்றது. “ராஜி..” என்ற குரலை தொடர்ந்து, அவர் நடையே ஓட்டமாக வந்தார்.

ஜனகன் காரில் இருந்து இறங்கி தன் வீட்டு வாசலிலே நின்றான். நீண்ட நெடிய வருடங்கள். கடைசியாக இந்த வீட்டுக்குள் கூட வராமல் ஸ்டேஷனில் இருந்து அப்படியே சென்றிருந்தான்.

‘வந்திருந்தால் நிச்சயம் ஊரை விட்டு சென்றிருக்க மாட்டேன்..’ அவனுக்குள் சொல்லி கொண்டான்.

“வா’ப்பா..” என்ற அப்பாவை பார்த்தான் மகன். அவர் அவனை பாசமாய், பரவசமாய் பார்த்திருக்க தொண்டை குழி ஏறி இறங்கியது.

“ஏய்யா..” என்ற ராஜலக்ஷ்மி ஆரத்தி தட்டுடன் நிற்க, பட்டென முகம் திருப்பினான் மகன். அம்மாவை கண்டதும் என்னை துரத்திட்டிங்க இல்லை என்ற கோவம் பொத்து கொண்டு வந்தது. அம்மாவிற்கு அவன் கோவம், முகம் திருப்பல் எல்லாம் தெரியவில்லை. என் மகன் வந்துட்டான் என்ற ஆனந்தம், ஆர்ப்பரிப்பு மட்டுமே.

ஆரத்தி சுற்றி நெற்றி திலகம் இட்டு முடியவும், மகன் கையை பிடித்து வருடி கொடுத்தவர்,  “உள்ள வாய்யா..” என்றழைக்க,

“அன்னைக்கு போக சொன்ன..?” என்று கேட்டிருந்தான் மகன். ராஜலக்ஷ்மிக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.

“தப்பு தான்ய்யா.. அம்மாவை மன்னிச்சிரு..” என்றிருந்தார் அவரும். அம்மாவின்  மன்னிப்பில் மகிழவா முடியும்..? அதுவும் வலித்தது.

திருமணத்திற்கென வந்திருந்த சொந்தங்கள்  நிற்க, “ராஜி ஏதா இருந்தாலும் முதல்ல வீட்டுக்குள் கூப்பிட்டு வைச்சு பேசு..” என்றார் வேலய்யன்.

ராஜலக்ஷ்மி மகன் கை பிடித்து வீட்டுக்குள் அழைத்து செல்ல, அக்காக்கள் குடும்பம் அவனை சூழ்ந்து கொண்டனர். பானுமதி அவனுக்கு குடிக்க தண்ணீர் நீட்ட, வாங்காமல் அவரை உர்ரென்று பார்த்தே இருந்தான். “என்னடா வாங்கு..” அக்காவிடம் ஒரு அதட்டல்.

“இத்தனை நாளா என்னை கண்ணுக்கு தெரியாத உன்கிட்ட நான் எதுக்கு தண்ணீர் வாங்கணும்..?” தம்பியும் எகிறினான்.

“முதல்ல வாங்கி குடிச்சுட்டு சண்டை போடு..” பானுமதி அக்காவாக சொல்லி நீட்ட, வாங்கி ஒரு மடக்கு குடித்தவன்,

“இப்போ மட்டும் என்ன திடீர் பாசம்.. நான் ஊருக்கு வந்து இத்தனை நாள் ஆச்சு, ஒரு நாளாவது என்னை வந்து பார்த்தியா..?” தம்பி விடாமல் கேட்க,

“வந்தன்னைக்கு மூஞ்சை திருப்பிகிட்டு போன..? இப்போ என்ன என்கிட்ட வந்து கேள்வி கேட்டுட்டு இருக்க..? நீ தான் எனக்கு முன்ன பிறந்தியா..?” அக்காவும் பேசினார்.

“அதுக்காக திரும்ப வர மாட்டியா நீ..?”

“நான் ஏண்டா வரணும்..? நீ தான் உனக்கு பொண்ணு கொடுக்கிற எங்ககிட்ட வந்து முறையா பேசியிருக்கணும், ஏன் வரலை, அவ்வளவு பெரிய ஆளாயிட்டியா நீ..?” என்று கண்டிக்க, ஜனகன் உடனே திரும்பி அங்கிருந்த தேவேந்திரனை பார்த்தான்.

‘இப்போதான் இவன் கண்ணுக்கு நான்  தெரியுறேனா..? போடா..’ என்று நின்றிருந்தவருக்கு ராஜலக்ஷ்மி தண்ணீர் கொடுத்தார். “என் மகன் நம்ம வீட்டுக்கு வந்திட்டான் மாப்பிள்ளை.. குடிங்க..” என்றார் அவர் மகிழ்ச்சியாக, நெகிழ்ச்சியாக.

ஜனகன் புருவம் சுருக்கி பார்க்க, “மாமா இத்தனை வருஷமா நம்ம வீட்ல கை நனைக்கல, தண்ணீர் கூட குடிக்கலை..” என்று சாந்தி தம்பி காதில் சொன்னாள்.

தேவேந்திரன் தண்ணீர் வாங்கி குடித்தவர், “பானு.. நாம கிளம்பணும்.. நேரம் ஆச்சு, அங்க பார்க்கணும்..” என்றார் மனைவியிடம்.

“மாப்பிள்ளை  நானே இங்கிருக்கேன்.. இவர் அங்க போய் என்ன பண்ண போறாராம்.. இருக்க சொல்லுங்க..” என்றான் அக்காவிடம்.

“பொண்ணு அழைக்க வரும் போது வரவேற்க ஆள் வேணாமா..? அப்பறம் அந்த மரியாதை கூட தெரியலன்னு சொல்றதுக்கா..?” தேவேந்திரன் கேட்டார்.

“அப்படி எத்தனை நான் இவரை கேட்டுட்டேனாம்..?” ஜனகன் எகிற,

“அத்தை.. கலெக்டர் சார்கிட்ட பேச எனக்கு இப்போ நேரம் இல்லை, என் மக கல்யாணம் முடிச்சுட்டு வரேன்னு சொல்லுங்க..” என்றவர், மனைவியை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

அவர் சென்ற பாதையை பார்த்திருந்த ஜனகன் கை பிடித்து வருடி கொடுத்த ராஜலக்ஷ்மி, “நம்மகிட்ட நேரம் இல்லை ராசா.. மண்டபம்  கிளம்பணும்..” என்றார்.

ஜனகன் மாமாக்களிடம் பேசிவிட்டு எழுந்து அவன் அறை பக்கம் சென்றான். மூடியிருந்த கதவை தள்ள, புதிதாக இருந்தது. ரூமை மாற்றியிருந்தனர். “பொம்மி சொல்லி தான் பண்ணோம் ராசா.. உனக்கு பிடிச்சிருக்கா..?” பின்னாடி ராஜலக்ஷ்மி கையில் புது உடையுடன் நின்றார்.

“முட்டி வலில ஏறி வராட்டி என்ன..?” அம்மா கையில் இருந்த உடையை வாங்கி அவரை அமர வைத்தான்.

அவர் அவன் கன்னம் தடவி “நீ நல்லா இருக்கியா ராசா..?” என்று கேட்க,

“நல்லா இல்லை..” என்றான் மகன் பட்டென.

“ஏய்யா..”

“பேசாதீங்கம்மா..”

ராஜலக்ஷ்மி கண்களில் கண்ணீர் சேர, “ராஜி கிளம்புற நேரம் இந்த பேச்சு எல்லாம் வேண்டாம்..” என்று வந்தார் வேலய்யன்.

“ஏன் பேச கூடாது.. நாங்க பேசுவோம்.. நீங்க பேசுங்கம்மா..” மகன் அப்பாவிடம் மல்லுக்கு நின்றான்.

“ஏய்யா என்ன இது, அப்பாகிட்ட அப்படி பேச கூடாதுப்பு..” அம்மா கண்ணீர் துடைத்து சொல்ல,

“ஓஹ்.. உங்க புருஷனை நான் பேச கூடாது, ஆனா நீங்க இரண்டு பேரும் சேர்ந்து என்னை ஊரை விட்டு துரத்தலாம். நான் கேட்க கூடாது, அப்படி தானே..?”

“தப்பு தான்ய்யா.. மன்னி..”

“ப்பா..” மகன் இடையிட்டவன், “எனக்கு கோவம், நான் இப்படி தான் பேசுவேன், கோவப்படுவேன். சண்டை போடுவேன். நீங்க விடுங்க..” என்றுவிட அங்கு ஒரு கனமான அமைதி நிலவியது.

அப்பா, அம்மா மகனை வருத்தத்துடன் பார்த்திருக்க, மகனுக்கோ தொண்டை குழி அப்படி வலித்தது. பெற்றவர்கள் இன்னும் வயது கூடி தளர்ந்திருந்தனர். அவன் வீடே அவனுக்கு தகித்தது. வெப்பம் தாங்க முடியவில்லை. சட்டென அம்மா முன் மண்டியிட்டவன், “ஏன்ம்மா இப்படி பண்ணீங்க..?” என்று கேட்டேவிட்டான்.

“ராசா..” ராஜலக்ஷ்மி உடைய,

“எனக்கு தெரியும் அன்னைக்கு சூழ்நிலை, காரணம் எல்லாம். ஆனா நீங்க ஏன் என்னோட வரமாட்டேன் சொன்னீங்க, என்மேல நம்பிக்கை இல்லையா, நான் உங்களை பார்த்திருக்க மாட்டேனா..?” சிவந்துவிட்ட கண்களுடன் கேட்டவன் அதற்கு மேல் முடியாமல் அவர் மடியில் முகம் புதைத்து கொண்டான்.

அம்மாவின் அருகாமை வாசனை கூட உணர முடியாத, அனுபவிக்க முடியாத துக்கம். கடந்து போன வருடங்களின் இழப்பு, தனியே தவித்தது எல்லாம் ஆறுமா..? இருபத்தைந்து வருடங்களாக நீ தான் ராஜா என்று உச்சியில் வைத்தவனை ஒரே நாளில் தரைக்கு தள்ளினால் வலிக்காதா, காயம் ஆகாதா..? இப்போது வரை அவனுக்கு அந்த காயம் ஆறவில்லை. ஏற்று கொள்ள முடியவில்லை.

மகனின் மனநிலை  பெற்றவர்களுக்கு புரியாமல் இருக்குமா..? வேலய்யன் துண்டால் முகம் துடைத்து கொண்டவர், “ராஜி..” என்று மனைவியை கண் காட்டினார்.

அவரும் முந்தானையில் முகம் துடைத்து கொண்டவர், “முடிஞ்சு போனதை பத்தி இப்போ என்ன பேசினாலும் அது மாறாதுப்பு.. நாளைக்கு உனக்கு கல்யாணம், எங்க மகன் எங்ககிட்ட  வந்துட்டான். சந்தோஷத்துல மனசு நிறைஞ்சிருக்கு. உனக்கு எப்போ மனசு ஆறுதோ அப்போ..”

“எனக்கு எப்போவும் ஆறாது..” மகன் அம்மா மடியிலே சொன்னவன், அவர் முந்தானை இழுத்து முகம் துடைக்க, ராஜி சரியாக துடைத்துவிட்டார்.

“சரி ஆற வேணாம்.. இப்போ நீ போய் குளிச்சுட்டு வா ராசா.. நேரம் ஆச்சு, எல்லாம் காத்திருப்பாங்க..” என்றார் வேலய்யன் சமாதானமாக.

ஜனகன் “ம்ம்..” கொட்டி அம்மா மடியிலே இருக்க, “ராஜி சொல்லு.. பொண்ணு அழைப்புக்கு ஆள்  அனுப்பணும், மாப்பிள்ளை வீட்ல எதிர்பார்த்திட்டுருப்பாங்க..”  என்றார் மனைவியிடம்.

“அவர் மாப்பிள்ளைக்கே நான் தான் மாப்பிள்ளை.. ரொம்ப தான் மாப்பிள்ளை, மாப்பிள்ளைன்னு..” ஜனகன் சொல்ல,

“மாப்பிள்ளை மேல கோவம் வைக்காதப்பு.. உன்னை திரும்ப பார்க்கிற வரைக்கும் நாங்க தவிச்ச தவிப்புக்கு கொஞ்சமும் குறைஞ்சதில்லை அவர் தவிப்பு..” என்றார் வேலய்யன்.

“நான் குளிக்க போறேன்..” மகன் எழுந்து சென்றுவிட்டான். பெற்றவர்கள் பெருமூச்சுடன் அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்து கீழே சென்றுவிட, ஜனகன் நிதானமாக குளித்து, புது உடையில் கிளம்பி வந்தான்.

கீர்த்தனாவை மண்டபத்திற்கு அழைக்க, ஜனகன் வீட்டில் இருந்து பெண்கள் சீர் வரிசையுடன் கிளம்பிவிட்டனர். தேவேந்திரன் வீட்டில் வந்தவர்களை வரவேற்று உபசரிக்க, அவர்கள் பெண் கையில் வரிசையை கொடுத்தனர். கீர்த்தனா அந்த புடவை, நகை அணிந்து வர, ஜனகனுக்கு தாய்மாமா இல்லாததில் அங்கிருந்து நேரே மண்டபம் வந்தனர்.

ஜனகனும் மண்டபம் வந்துவிட, நிச்சயம் ஆரம்பமானது. சில  வருடத்திற்கு முன்பு செய்த உறுதி என்பதால் இப்போது திரும்பவும் சொந்தங்கள் மத்தியில் நிச்சயம் நடந்தேறியது. அதை தொடர்ந்து இரவு  விருந்து முடிய, ஜனகன் போன் எடுத்து பாண்டிக்கு அழைத்தான்.

“நீங்க சொன்னபடி எல்லாம் ரெடியா இருக்கு சார்..” என்று அவன் சொல்ல,  போனை வைத்த ஜனகன் முகத்தில் தனி தேஜஸ்.

“நாளைக்கு கல்யாணத்தை வைச்சுக்கிட்டு இப்போ உன் மச்சானுக்கு இந்த வேலை எல்லாம் தேவையா தேவா..?” அவரின் அண்ணன்கள் தலையில் கை வைத்திருந்தனர். தர்ஷன் அரெஸ்ட் விஷயமாக அத்தனை போன் கால். விருந்தினராய் வந்திருந்தவர்களும் விசாரித்திருக்க பதில் சொல்ல முடியாமல் திணறி கொண்டிருக்கின்றனர்.

வேலய்யனும், ராஜலக்ஷ்மியும் மகனிடம் இது பற்றி  கேட்க யோசித்தனர். நல்ல முறையில் மகிழ்ச்சியுடன் மகன் திருமணம் நடக்க வேண்டும். இப்போது இதை எல்லாம் பேச வேண்டுமா என்று தயக்கம் காட்ட, வீட்டு ஆட்கள் தங்களுக்குள் கவலைப்பட்டு ஆராய்ந்து கொண்டிருந்தனர். அதிலும் மூர்த்தி, கணேசன் இருவரும் தனியே பேசி வந்தனர்.

Advertisement