Advertisement

அன்றே நாள் குறித்து திருமண வேலைகளையும் ஆரம்பமாகி விட்டது. ராஜலக்ஷ்மியின் வேண்டுதலுக்காக கோவிலில் தாலி கட்டு. பெரிய மண்டபத்தில் விருந்து. அதுவே தான் ரிசப்ஷன் போன்று. தனியே வேண்டாம் என்று சுதாகர் மூலம் மறுத்துவிட்டான் ஜனகன். அவர் மூலமாக தான் இப்போது எதுவாக இருந்தாலும். அப்பா, அம்மா மட்டுமில்லை தேவேந்திரனுக்கும் சேர்த்து தான்.

பானுமதி தவிர மூன்று அக்காக்கள், அவர்கள் குடும்பங்கள், அதிதி என்று எல்லோரும் அவனுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் தனி தனியாக பணமும் கொடுத்தான் திருமண உடைகளுக்காக.

வீட்டுக்கும் திருமண செலவிற்கென பணம் சென்றது. தந்தை மறுக்க, மகனுக்கு கோவம், ஆதங்கம். “ஏன் மாமா   இப்போவும் அவருக்கு நான் வேணாமாமா..?” என்று போனில் சுதாகரிடம் கேட்டிருக்க, வேலய்யன் வாங்கி கொண்டார்.

“ஜில்லாவுக்கே கலெக்ட்ரா இருந்தாலும் அப்பா, அம்மாவுக்கு மகன் தான்னு உன் மகன் நிரூபிக்கிறான் ராஜி  அவனோட கோவத்தை நம்மகிட்ட எப்படி காட்டன்னு அவனுக்கு தெரியல..” என்று மனைவியிடம் பணத்தை கொடுத்து சொல்ல செய்தார். ராஜலக்ஷ்மியும் மகனின் மனம் புரிந்து தானே தள்ளி இருக்கின்றார்.

“உண்மைங்க.. என் மகன் தவிக்கிறான், அவன் மனசுல நாம பண்ணது ஆறாம கிடக்கு, அவனும் என்ன பண்ணுவான். வருவான்.. நம்மகிட்ட வராம எங்க போயிடுவான்..? நீங்க முதல் வேலையா அவன் கொடுத்த பணத்திலே தாலி, பட்டு எடுக்க, பத்திரிக்கை அடிக்க ஏற்பாடு பண்ணுங்க.. மண்டபம் பொண்ணு வீட்ல சார்பில பண்றதுன்னு மாப்பிள்ளை உறுதியா நிக்கிறார், அதை அப்பறம் பார்ப்போம், இதை முதல்ல முடிங்க..” என, வேலய்யனும் களத்தில் இறங்கிவிட்டார்.

மகனின் சொந்த கார் கைவசம் இருக்க அலைச்சலுக்கு கவலையில்லை. நாள் குறிக்க செல்லும் நாள் அன்றே தன் காரை பெற்றவர்களுக்கு டிரைவருடன் சேர்த்து அனுப்பிவிட்டான்.

“அதான் மகன் கார் வந்துடுச்சு இல்லை, இனி எங்க கார் உங்களுக்கு தேவைப்படுமா..?” என்று அதிதி வம்பிழுத்த போதும், தேவேந்திரன் அவர் காரை அங்கிருந்து எடுக்கவில்லை. மாமனாரும் சொல்லவில்லை. மாப்பிள்ளை செய்யாத செயலை செய்ய சொல்லி அவர் சொல்ல மாட்டார். அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி.

“தேதி குறிக்க என் மகன் வரணும்ன்னு நீங்க விருப்பப்பட்டா அவன் வருவான் மாப்பிள்ளை..” என்று வேலய்யன் அவரிடம் கேட்டு,

“இல்லை மாமா.. பார்த்துக்கலாம்.. ” என்று தேவேந்திரனும் சொல்லி முடித்து வைத்த விஷயம் தான் அது என்றாலும் தேவேந்திரனுக்கு அப்பாவாக இதை ஏற்று கொள்ள முடியவில்லை. தனியே தனக்குள்ளே மறுகுகிறார். அது அவரின் முகத்திலும் தெரிய, மகள் கண்டுபிடித்து மாமனிடம் கேட்டு தான் அவன் இப்படி தோட்டத்தில் நடந்து கொண்டிருப்பது.

‘நான் என்ன வேணும்ன்னா இப்படி எல்லாம் செய்றேன்..? என்னாலயும் சில காயங்களை ஏத்துக்க முடியல, அதுக்கான மருந்தை கொடுத்தவங்ககிட்டே தேடுறேன்.. அதுல என்ன தப்பு..?’  நெஞ்சம் கனத்தது.

கை கட்டி உடல் இறுக நின்றவனுக்கு தொண்டை அடைத்து கொண்டு வந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் அதே தவிப்பு தான். கண்களை இறுக்க மூடி திறந்தான்.

‘அப்பாவுடைய கண்ணீரை மகன் பார்த்தா பாவம்ன்னு சொல்றாங்க, ஆனா நான் பார்த்தேன்,  முன்னாடி சொத்தை எழுதி கொடுத்துட்டு என் அப்பா என் தோள்ல சாய்ஞ்சு அழுதார்..’

‘ஒரு மகனா  அவர் சொத்தை என்னால காப்பாத்த முடியல. என் அப்பாவை உதைக்க வந்தவனுக்கே சொத்தை தூக்கி கொடுத்துட்டு இயலாமையோடு நின்னேன்..’

‘அன்னைக்கு அவர் கண்ணீரை நான் வாங்கின பாவம் தான் இன்னைக்கு இப்படி என்னை தனியா கிடந்து அல்லாட வைக்குதோ..?’  நெஞ்சை நீவி விட்டு கொண்டான்.

இத்தனை வருடம் கழித்து சிவனேஷ்வரன் கட்டாயத்தின் பேரில் தான் வருகிறேன் என்று மேலுக்கு பந்தா காட்டிவிட்டு உள்ளுக்குள் அவ்வளவு ஆசையுடன் தன் மண்ணுக்கு ஓடி வந்திருந்தான்.

அவனுக்கு தீனதயாளன் எல்லாம் முதலில் இல்லை. அவன் குடும்பம். அவர்கள் தான் அவனுக்கு வேண்டும். பாடாய் படுத்தினாலும் அவர்களோடு எந்நேரமும் தொடர்பில் இருக்க வேண்டும். அவன் கோவத்தை காட்ட வேண்டும். மறுபடி அந்த வீட்டுக்கு, அவர்களுக்கு அவன் ராஜாவாக வேண்டும்.

தீனதயாளனை பிறகு பார்த்து கொள்ளலாம் என்று குடும்பத்தின் பின் சென்றவனுக்கு தோல்வி தான் மிச்சம். அவனாலே சில விஷயங்களை கடக்க முடியவில்லை. தூரத்தில் இருந்ததை விட அருகில் அதிகம் தகிக்கிறான். அவனுக்கே புரிகிறது. ஆனாலும் முடியவில்லை.

‘வீட்லயும் என்னால சமாதானமா போக முடியல, அந்த தீனதயாளனையும்  சும்மா வைச்சு வேடிக்கை பார்த்திட்டு இருக்கேன்.. ம்மா..  இது ஆகாது.. எதாவது ஒரு நெருப்பை அணைச்சே ஆகணும்..’

“என்ன ஆச்சு சார்..” என்று பாண்டி வர,

மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன் செய்த ஜனகன், “கல்யாணம் முடிச்சுட்டு ஆரம்பிக்க நினைச்ச வேலையை இப்போவே செய்யலாம்ன்னு நினைக்கிறேன்..” என்றான்.

“இதனால உங்க கல்யாணத்துல.. இன்னும் அஞ்சு நாள் தான் இருக்கு சார்..”

“முதல்ல எதுவும் பண்ணாம என்னால  கல்யாணமே பண்ணிக்க முடியும்ன்னு தோணல பாண்டி சார்.. ரொம்ப வெடிக்குது உள்ள. நான் உண்டு, என் குடும்பம் உண்டுன்னு இருந்தேன். என் குடும்பத்தை வைச்சே என்னை ஊரை விட்டு துரத்தி, இன்னை வரைக்கும் என்னால அவங்களோட சேர விடாம பண்ணிட்டான். அவனை.. அவனை அசைச்சே ஆகணும். ஆரம்பிச்சிடலாம்.. இப்போ.. இந்த செகண்டே ஆரம்பிச்சிடலாம். நாம ஏற்பாடு பண்ணவர்கிட்ட பேசுங்க..” என்றான் முடிவாக.

பாண்டிக்கும் அவனை புரிந்து கொள்ள முடிந்தது. மூன்று ஏக்கர் நிலத்துக்காக இவனை கடத்தி, மிரட்டி சொத்து வாங்கி, இவன் வேலையை காலி செய்ய நினைத்து, தேவேந்திரன் மேல் கேஸ் வரைக்கும் சென்று.. இறுதியில் அவன் மகனை அடித்ததற்காக ஊரை விட்டே அனுப்பி வைத்தவனை எப்படி விட முடியும்..?

“ஆரம்பிச்சிடலாம் சார்..” என்றவன், மனதில் சிவனேஷ்வரனை மெச்சியும் கொண்டான்.

“இப்படி தான் செய்வான், அவனுங்களை அசைக்காம ஜனகனால் அவனுக்கு நல்லது செஞ்சுக்க முடியாது..” என்று முன்பே கணித்து சொல்லியிருந்தானே.

அதன்படி மறுநாள் காலையிலே கலெக்டரை பார்த்து மனு கொடுத்தார் ஒருவர். அவருடைய நிலங்களை விற்க சொல்லி ஒரு கூட்டம் மிரட்டுவதாகவும், அவரையும் அவர் நிலங்களையும் காப்பாற்றும் படியும் மனு.

ஜனகன் அந்த மனுவை குறிப்பிட்ட துறைக்கு அனுப்பி பார்க்க சொன்னான். அன்று மாலையே அந்த மனு மீதான விசாரணை அறிக்கையை கேட்டு நெருக்கினான். அவர்கள் அடுத்த நாள் அறிக்கையை கொடுத்தனர். ஆனால் உண்மைக்கு முற்றிலும் மாறாக. அவன் எதிர்பார்த்தது தானே.

அதே மனுவை வேறொரு துறைக்கு அனுப்பி அறிக்கை கேட்டான். பாண்டி அந்த துறைக்கு தானே சென்றான். அறிக்கை  நியாயமாக வந்தது. அதை வைத்து கொண்டு வேறொரு தகவல் கேட்டு அந்த துறைக்கு அனுப்பினான். பாண்டி அந்த நாள் முழுதும் அந்த துறையிலே இருந்தான்.

அவன் வீட்டிலோ திருமண நிச்சயம் வைக்க, பந்தக்கால் நடுவதற்கு, மற்ற சடங்குகள் செய்வதற்கு  தொடர் போன். “முன்னாடி நாள் எனக்கும், பொம்மிக்கும் நலங்கு வைச்சுக்கலாம்.. மத்தது எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க..” என்றுவிட்டான். தேவேந்திரன் கேட்டு அமைதியாகிவிட்டார். அவனுக்கு போன் கூட செய்யவில்லை.

மாமனாரிடம் மட்டும் “உங்க மகன் ஏதோ செய்றான் மாமா..” என்றிருந்தார். வேலய்யனுக்கு கவலை. முதல் முறையாக மாப்பிள்ளையிடம் நம்பர் வாங்கி மகனுக்கு போன் செய்தார். ஜனகனுக்கு தந்தை நம்பர் மறக்குமா..? எடுக்க சென்ற விரல்கள் லேசாக நடுக்கம் காண, பாண்டியை பேசி வைக்க சொல்லிவிட்டான்.

மூன்றாம் நாள் ஜனகன் எதிர்பார்த்த ரிப்போர்ட். பாண்டி மூலம் சேகரித்த ஆதாரங்களை அந்த துறைக்கு அனுப்பினான். பத்திர பதிவு துறை. அங்கு இருக்கும் ரிவியூ டீம். பதிந்த பத்திரங்கள், சொத்துக்கள் மீதான நம்பக தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் டீம்.

நான்காம் நாள்  பல வருடங்களுக்கு முன்பு நடந்த இருபது ஏக்கருக்கான பத்திர பதிவை கேன்சல் செய்தனர் அந்த டீம். அதில் பாதி பொறம்போக்கு நிலம், மீதி பாதி வேறொருவருக்கு சேர்ந்தது. அவர் உயிரோடு இல்லாத நிலையில், அந்த பத்து ஏக்கரையும் சேர்த்து இருபது ஏக்கராக தன் பெயரில் பதிந்து கொண்டிருந்தான் தர்ஷன். தீனதயாளனின் மகன் தர்ஷன்.

வலுவான ஆதாரங்கள் பேரில் அந்த இருபது ஏக்கருக்கான பத்திர பதிவை ரத்து செய்து நோட்டீஸ் செல்ல, தர்ஷன் நிதானம் இழந்துவிட்டான். இதற்கு பின்னால் ஜனகன் தான் இருக்கிறான் என்று உறுதியாக தெரிய, நேரே அவன் இருக்கும் இடம் சென்றான்.

நாளை காலை திருமணம். இன்று மாலை நிச்சயத்திற்கு செல்ல வேண்டும். இவன் ஏதோ ஒரு கிராமத்தில் பீல்ட் விசிட்டில் இருக்கிறான். சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள்  இருக்க, ஐந்து கார்கள் பின் தொடர வந்து நின்றான் தர்ஷன். தீனதயாளன் மகனை போனில் கட்டுப்படுத்த முடியாமல் பின்னே வந்து கொண்டிருக்கிறார்.

தர்ஷன் எடுத்ததும், “எவ்வளவு தைரியம் இருந்தா இந்த வேலையை பார்த்திருப்ப..?” என்று எகிறினான். எதிரில் இருப்பது சாதாரண ஜனகன் இல்லை என்பதை மறந்துவிட்டான். பாதுகாப்பு அதிகாரிகள் அவனை தடுக்க ஜனகன் நக்கல் சிரிப்புடன் அவனை பார்த்தான்.

“என்ன நினைச்சதை சாதிச்சுட்டோம்ன்னு திமிரா..? நாளைக்கு பொழுது விடியும் போது நீ இருக்கிறியான்னு பாரு..?” என்று மிரட்ட,

“அப்படியா.. இருக்க மாட்டேனா..?” என்று அப்பாவியாக கேட்டான் ஜனகன்.

“ஏய் என்ன நக்கலா..? கலெக்டரா இருந்தா பயந்துடுவேன் நினைச்சியா..?”

“அப்போ நீ பயப்படலயா..?” ஜனகன் கிண்டலாக கேட்க,

“ஒழுங்கு மரியாதையா இந்த ஊரை விட்டு நீயே ஓடிடு, உனக்கு அது புதுசும் இல்லை, நான் ஓட வைக்க நினைச்சா ஓட உனக்கு கால் இருக்காது..”

“ஏன் என் காலை நீங்க பிடிச்சுட்டு இருப்பீங்களா சார்..?” ஜனகன் கேட்டு வைக்க,

“எவ்வளவு தைரியம் இருந்தா உன் காலை நான் பிடிப்பேன் சொல்ற..? என் சுண்டு விரல் உன்னை தொட கூட  உனக்கு தகுதி இல்லை, நான் உன் காலை பிடிப்பேனா..?” தர்ஷன் ஆங்காரமாக கேட்டான்.

“என்னை தொட தகுதி இல்லாத சுண்டு விரல் தேவையா..? தப்பாச்சே..” ஜனகன் தாடையை தடவ,

“என்னை மிரட்டுறியா..? என்னை ம*ரை கூட டச் பண்ண முடியாத நீ என்னை மிரட்டுறியா..?” தர்ஷன் கத்தவே செய்தான்.

“பொறம்போக்கு நிலத்தை உன் பேருக்கு எழுதிக்கிட்ட பொறம்போக்கு நீ.. நீ  தகுதி பத்தி பேசுறியா..?” ஜனகன் நிதானமாக கேட்க,

“யாரடா பொறம்போக்கு சொன்ன..? உன்னை என்ன பண்றேன் பாரு..” என்ற தர்ஷன் யாரும் எதிர்பார்க்காமல் ஜனகன் சட்டையை பிடித்துவிட, பிளாஷ்கள் அதிர்ந்தன அங்கு. பாண்டி மீடியாக்கு பின்னால்.

தீனதயாளன் காரில் இருந்து இறங்கி ஓடி வந்தார். மகன் கலெக்டரின் சட்டையை பிடித்திருந்தான். முடிந்தது. அடுத்த நிமிடம் ரிமாண்ட் செய்யப்பட்டான்.

“எங்களை மிரட்டி எழுதி வாங்கின மூணு ஏக்கருக்கு பலன் இல்லாம போச்சே தலைவரே..?” ஜனகன் அவரிடம் கேட்டான்.

தீனதயாளன் அதிர்ந்து  அவனை பார்க்க, “நைட் ஸ்டேஷன்ல பார்க்கலாம் தலைவரே.. அப்போ இன்னொரு ஷாக்கிங் நியூஸ் சொல்றேன், இப்போவே சொன்னா நெஞ்சு வெடிச்சிடும்..” என்ற ஜனகன் அவன் பொம்மியுடன் நிச்சயம் செய்ய கிளம்பினான்.

Advertisement