Advertisement

மதுரை வீரன் பொம்மி 20

ஜனகன் பொம்மிக்கு திருமண ஏற்பாடுகள் ஆரம்பித்துவிட்டது. முகூர்த்த பட்டு எடுத்து, தாலியும் செய்ய கொடுத்தாகிவிட்டது. பத்திரிக்கை ஒரு புறம் வந்து சொந்தங்களுக்கு கொடுத்து கொண்டிருந்தனர். முகூர்த்த நாள் மாதங்கள் நீண்டு வைக்கவில்லை. அந்த மாதத்தின் கடைசிலே வைத்துவிட்டனர். இதுவே தாமதம் என்பது தான் காரணம்.

கீர்த்தனா  முகூர்த்த நாள் நெருங்கவும் தன் வீடு திரும்பிவிட்டாள். தேவேந்திரன் மகளை இன்னொரு முறை ஷாப்பிங் கூட்டி கொண்டு அலைந்தார். இருவருக்கும் முன்பு அலைந்த நினைவு எழாமல் இல்லை. பேசவில்லை. பேசி எதையும் அதிகப்படுத்தும் எண்ணமில்லை.

ஏற்கனவே அப்பாவிடம் ஏதோ சரியில்லை என்ற உறுத்தல் மகளுக்கு.  ஜனகன் வருவதற்கு முன்பிருந்த இறுக்கம் அவரிடம் திரும்ப வந்துவிட்டிருந்தது. ஓரிரு முறை கேட்டும் பார்த்துவிட்டாள் மகள், “எதாவது பிரச்சனையாப்பா..?” என்று.

தேவேந்திரன் என்ன பிரச்சனை இருக்க போகுது என்றுவிட்டார். கீர்த்தனாவிற்கு அவரின் மாற்றம் உறுதியாக தெரிய, “இப்போ நான் காலேஜ் படிச்சுட்டு இல்லைங்க ப்பா, உங்களோட தொழில் பார்க்கிறேன், எந்நேரமும் கவனமா இருக்கணும் சொல்லி கொடுத்ததும் நீங்க தான்.. இப்போ எதுவும் இல்லைன்னு நீங்களே சொன்னா கூட நான் நம்பமாட்டேன் ப்பா, எதுவோ இருக்கு.. என்ன சொல்லுங்க..” என்றாள் விடாமல்.

“கீர்த்தி உனக்கு தெரியற கட்டாயம் இருந்தா அப்பா கண்டிப்பா உனக்கு சொல்வேன்.. அப்படி இல்லன்னா விட்டுடனும்..” என்றார் தந்தையாய்.

கீர்த்தனா அவரிடம் திரும்ப கேட்காமல் அமைதியாகி விட்டாலும், ஜனகனிடன் கேட்க தவறவில்லை. “என்ன பண்ணீங்க மாமா என் அப்பாவை..?”  என்று தான் கேட்டாள்.

“நான் என்ன பண்ணினேன்..? அவர் என்ன சொன்னார்..?” அவன் இவளிடம் பதில் கேள்வி கேட்டான்.

“மாமா.. முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. அப்பா முகமே சரியில்லை..”

“அவர் என்னைக்கு கலகலன்னு இருந்தாராம் இப்போ சரியில்லாம இருக்க.. ஏதோ போனா போகுதுன்னு நாங்க தான் எங்க அக்காவை கட்டி கொடுத்தோம்..” அவன் கிண்டல் பேசினான்.

“மாமா.. என் அப்பா எப்படின்னு எனக்கு தெரியும், நீங்க அவரை பத்தி பேச வேண்டியதில்லை..” மகளுக்கு கோவம் வந்துவிட்டது.

“அதான் உனக்கே உன் அப்பாவை தெரியுது இல்லை, அப்பறம் எதுக்கு எனக்கு போன் பண்ணி கேட்கிற..?” அவன் கேலியாக கேட்டான்.

“எனக்கு நல்லா தெரியும் என் அப்பா டென்ஷனுக்கு கண்டிப்பா நீங்க தான் காரணமா இருப்பீங்க..”

“இது நல்ல கதையா இருக்கே.. நான் என்ன அவர் பொண்டாட்டியா என்னால தான் அவர் டென்ஷன் ஆக..”

“மாமா.. இந்த கேலி கிண்டல் எல்லாம் வேணாம், கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லுங்க..”

“ஒழுங்கா பதில் சொல்லணுமா..? என்னடி பேச்செல்லாம் ரொம்ப மரியாதையா இருக்கு..”

“நீங்க என்னமோ வயசுல பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து பேசுற மாதிரி என்னை கேட்கிறீங்க..”

“மேடம் என்ன சொல்ல வரீங்க..? நான் யாரை அப்படி பேசினனாம்..?”

“அதுவே தெரியல.. அந்தளவு என் அப்பான்னா உங்களுக்கு தொக்கா போயிடுச்சு இல்லை..”

“அவர் உனக்கு அப்பா ஆகிறதுக்கு முன்னாடியே எனக்கு மாமாடி.. எங்க கதையை நாங்க பார்த்துகிறோம், நீங்க போய் உங்க கல்யாண வேலையை பாருங்க..”

“ஏன் நீங்க பார்க்க மாட்டிங்களா..? நாள் குறிக்க கூட வீட்டுக்கு வரல. ஏற்கனவே பெரியப்பாங்களுக்கு என்மேல கோவம், இதுல மாப்பிள்ளை நீங்க வந்து அவங்ககிட்ட பேசாம நாள் குறிச்சா.. அன்னைக்கு அவங்க யார் முகமும் சரியில்லை, அப்படியென்ன உங்களுக்கு வர கூடாதுன்னு..? ஏன் கலெக்டர் சார் எங்க வீட்ல எல்லாம் கால் வைக்க மாட்டாரா..? பொண்ணு மட்டும் தான் வேணுமா..?” அவள் பொரிந்துவிட்டாள்.

“ஆமா நான் வர மாட்டேன், எனக்கு பொண்ணு மட்டும் தான் வேணும், இப்போ என்னாங்கிற நீ..?” அவன் அந்த பக்கம் எகிறினான்.

“ஏன் வரலை..? காரணம் சொல்லுங்க..”

“வரலை.. வர மாட்டேன். நான் கேட்டு தான் உன் அப்பா உன்னை எனக்கு கட்டி தருவாரா..? முன்னாடி நான் சம்மதம் சொல்லியா என்னை ஊரை விட்டு அனுப்பிச்சார்..? இல்லையில்லை..? இப்போ மட்டும் என்ன..?”

“அதுவும் இதுவும் ஒன்னா மாமா..”

“எனக்கு ஒன்னு தான்.. எந்த உரிமையில என்னை அன்னைக்கு ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டு அனுப்பி வைச்சாரோ, அதே உரிமையில இன்னைக்கு அவர் பொண்ணை எனக்கு கட்டி கொடுக்க சொல்லு..”

“மாமா..”

“நான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தா உனக்கும், உன் அப்பாவுக்கும் பொறுக்காதா.. இத்தனை நாள் நல்லா தானேடி பேசிட்டிருந்த, இப்போ என்ன..?” என்று காய்ந்தான் மாமன்.

“என் அப்பாவை எதுக்கு இழுக்கிறீங்க..? நீங்க என்ன செஞ்சாலும் கொஞ்சிட்டே இருக்க என்னால முடியாது மாமா..?”

“நீ கொஞ்சி கிழிக்கவே வேணாம்.. வைடி போனை..”

“அப்பாகிட்ட பேசுங்க மாமா..”

“கீர்த்தனா.. திரும்ப என்னை சொல்ல வைக்காத, நானும் நீயும் வேற கிடையாது. அதே நேரம் அவருக்கும் எனக்கும் இடையில யாரும்.. யாரும் கிடையாது.. அது என் அப்பா, அம்மா, அக்கா, நீ..  யாரா இருந்தாலும் சரி..”

எதிர்பக்கம் சில நொடி பேச்சே இல்லை. சீறலான மூச்சை தொடர்ந்து, “எப்போ இருந்து நான் உங்களுக்கு கீர்த்தனா மாமா..?” என்று கேட்டாள்.

“உங்களுக்கும் எனக்கும் கல்யாணமே நடக்க போகுது. ஆனா இன்னும் நீங்க என்னை பொம்மி சொல்லி கூப்பிடல.. இனியாவது கூப்பிடுற ஐடியா இருக்கா.. இல்லை..?”

“எனக்கு வேலையிருக்கு..”

“சோ இல்லை.. அப்போ எதுக்கு இந்த கல்யாணம்..”

“நேர்ல வந்தேன்னு வை..  ரொம்ப பேசுற நீ..? என்னடி பிரச்சனை உனக்கு..?”

“உங்களுக்கு தான் பிரச்சனை மாமா.. நீங்க தான் மாமா பழசையே சுமந்துட்டு எங்களை படுத்திட்டு இருக்கீங்க, எங்களை விடுங்க.. தாத்தா, பாட்டி.. அவங்க அப்படி என்ன பண்ணிட்டாங்கன்னு இன்னும் அவங்களை பார்க்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சிட்டு இருக்கீங்க, அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு  நீங்க பாதுகாப்பா நல்லா இருக்கணும்ன்னு தானே அனுப்பி வைச்சாங்க. ஆனா நீங்க.. ச்சு.. ஒத்தை மகனுக்கு கல்யாணம், ஆனா அந்த மகன் அவங்களோட இல்லை. நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு.. எல்லாரையும் நல்லா வைச்சு செய்றீங்க மாமா..”

“இதுவே உனக்கு அப்படி தோணுதா..? நல்லதுடி.. அன்னைக்கு நான்.. ம்ப்ச்.. என்னோட கஷ்டம் புரியாதவகிட்ட நான் எதுக்கு பேசணும்..? ஆமா நான் இப்படி தான்.. உனக்கு வேற ஆப்ஷன் இல்லை. அவங்களுக்கும் வேற ஆப்ஷன் இல்லை. போ.. போய் துணி எடு, உனக்கே வாங்கி குவிக்காத, என் மாமனார்கிட்ட சொல்லி எனக்கும் ஒரு பத்து செட் பார்மல் டிரஸ் வாங்கி வை. சைஸ் தெரியும் இல்லை, தெரியாதன்னா வந்து உன் கையால அளவெடுத்துட்டு போ..” என்றான்.

கீர்த்தனாவின் கோவம் “மாமா..” என்ற அவளின் அழைப்பில் தெரிய,

“உன்னைவிட இங்க  நான் அதிகமா கொதிச்சுட்டு இருக்கேன்.. பேசாம வைச்சுட்டு போயிடு.. எவ்வளவு பேசிட்ட.. ம்ம்ஹ்ம்.. பார்த்துகிறேன்..” என்றவன் வைத்துவிட்டான்.

‘என்ன பேசிட்டேன்.. அவர் செய்றதை தானே கேட்டேன்.. போகட்டும்.. முதல்ல கல்யாணம் முடியட்டும், அப்பறம் நானும் அவரை பார்த்துகிறேன்..’ பெண் அதோடு அவனுக்கு அழைப்பதை விட்டுவிட்டாள். அவனும் அவளை அழைக்கவில்லை.

‘இத்தனை வருஷம் இவங்க எல்லாம் இல்லாம நான் மட்டும் எப்படி தனியா இருந்திருப்பேன்..? கொஞ்ச நாளைக்கு இவங்களால முடியாதாமா..?’ வீட்டின் ஆபிஸ் அறையில் இருந்தவன் எழுந்து வெளியே வந்து நின்றான். இருள் சூழ்ந்திருந்தது. அப்போது தான் இரவு உணவு முடித்து அமர்ந்தான். கீர்த்தனா பேசியதில் மூளை சூடாகிவிட்டது. அங்கும் இங்கும் தோட்டத்திலே நடந்தான்.

அவனும், பாண்டியும் மட்டும் தான் வீட்டில். தேவேந்திரன் தன் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார். திருமண வேலைகள் பார்க்க வேண்டுமே. இவனுக்கும், அவருக்கும் பேச்சு ஆரம்பித்த அடுத்த நாள் காலையிலே வேலய்யன் தம்பதி நாள் குறிக்க வந்துவிட்டனர். உடன் பங்காளிகள், மூன்று மகள் குடும்பம்.

பானுமதி போன் செய்து கணவனை அழைக்க, “மாமா சொல்லிட்டு தான் கிளம்பினார்.. கேட்டுக்குள் வந்துட்டேன்..” என்று வைத்தவர், காரை நிறுத்தி நேரே அண்ணன்கள் வீடு தான் சென்றார். அவருக்கு முன் அங்கு வேலய்யனும், வீட்டின் முக்கிய ஆண்களும் இருந்தனர். முறையாக மூத்தவர்களிடம் பேச வந்த பாங்கில் அண்ணன்கள் முகத்தில் திருப்தி. இரு அண்ணன்களும் தங்கள் குடும்பத்துடன் தம்பி வீடு வந்தனர்.

எல்லாம் அங்கு சேர்ந்திருக்க, முக்கியமானவன் இல்லை. ஜனகன் வரவில்லை. “முன்னமே பேசி வைச்சதுன்னாலும் இத்தனை வருஷம் ஆச்சே. மாப்பிள்ளை நேர்ல வந்தா தானே நல்லா இருக்கும்..” மூத்தவர் சபையில் வைத்தே கேட்டுவிட்டார்.

“தம்பிக்கு கொஞ்சம் வேலை.. நாம பேசிடலாம்..” வேலய்யன் சங்கடத்துடன் சொல்ல,

“மச்சான் சொல்லி தான் நாங்க இங்க வந்ததே.. உங்களுக்கு அவர்கிட்ட பேசணும்ன்னா வீடியோ கால் போலாம்..”  சுதாகர் கேட்டார்.

உள்ளூர்ல இருந்துகிட்டு வீடியோ காலா..? அண்ணன்கள் தம்பி முகம் பார்த்தனர். அவர் எங்கோ பார்த்து நின்றிருந்தார். தம்பியை தனியே அழைத்து கேட்டனர்.

“நாள் குறிச்சிடுங்க ண்ணா..” என்றுவிட்டார்.

“மாப்பிள்ளை வராமலா..?”

“பரவாயில்லை ண்ணா..” என்ற தம்பியை அதிருப்தியுடன் பார்த்து சென்றனர் அண்ணாக்கள்.

தேவேந்திரனுக்கு அவன் வர மாட்டான் என்று அண்ணன்களிடம் சொல்ல முடியவில்லை. அவருக்கும், அவனுக்கும் நடப்பது இது. என்னவென்று சொல்வது..?

‘நான் வர மாட்டேன்.. எனக்கு பொண்ணை கொடுங்க..’ என்று பிடிவாதம் பிடித்து நிக்கிறான்.  அவனை பார்த்து வீடு தேடி வந்த மாமியார் வீட்டு ஆட்களை திருப்பி அனுப்ப முடியுமா..? அதுவும் இரண்டாவது முறை திருமண நாள் குறிக்க வந்து வெறுங்கையாக போக சொல்வது  கௌரவம் ஆகாது. இக்கட்டு தான். ஆனாலும் புரிந்தே சிக்கி கொண்டார்.

Advertisement