Advertisement

மதுரை வீரன் பொம்மி 19

அன்றிரவு தேவேந்திரன் வீட்டுக்கு வரும் போதே கோபத்துடன் தான் வந்தார். ஜனகன் இன்னும் வந்திருக்காத நிலையில், ஹாலில் அவனுக்காக காத்திருந்தார். மேலும் சில நிமிடங்கள் சென்றே அவன் வர, “மதியம் வீட்டு பக்கம் போயிருந்தியா..?”  என்று எடுத்ததும் கேட்டார்.

ஜனகன் போனேன்.. அதுக்கென்ன என்பது போல பார்க்க, “பக்கத்துல இருக்கிற தோப்புக்கு போயிருக்க,  வீட்டுக்கு போகல, ஏன் கலெக்ட்ர் சாருக்கு அப்பா, அம்மா எல்லாம் வேண்டாமா..?” அவர் கேட்க,

“நான் அவங்க வேணாம் சொல்லி ஊரை விட்டு போனதா எனக்கு ஞாபகம் இல்லை..” என்றான் அவன்.

“ஓஹ்.. உன்னை ஊரை விட்டு போக சொன்னதால அவங்களுக்கு நீ வேணாம்ன்னு அர்த்தமா..? சூப்பர்டா.. குட்.. பேச்சுக்கு கூட உன்னால இதை சொல்ல முடியுது இல்லை.. இருந்துட்டு போ, மத்த மூணு மாப்பிள்ளைகளை எதுக்கு தோப்புக்கு வர சொன்ன..?”

“எதுக்கு வர சொன்னேன்னா.. உங்க மாமனார் அவங்க நிலத்துக்கு தண்ணீர் பாய்க்க  போறேன்னு தான் கீழே விழுந்து எழுந்து வந்திருக்கிறார்..”

“அந்த அக்கறை எல்லாம் இருக்கா..? சரி அவங்களை வர சொன்ன ஓகே, என் பொண்ணை ஏண்டா தோப்புக்கு வர சொன்ன..?” தந்தையாய் கேட்க,

“அவ என் உரிமை.. என் இஷ்டம்..?” இவன் முறுக்கினான்.

“அது கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பார்க்கலாம், இனி அவளை எங்கேயும் கூப்பிட கூடாது.. வயசு பொண்ணை கிளப் வரைக்கும் கூட்டிட்டு வர..?”

“என்ன கல்யாணம். ஆஹ்ன்.. பூ வைச்சப்போவே அவ என் பொண்டாட்டி தான், எனக்கு இல்லாத உரிமையா..? கிளப் எவன் அப்பன் வீட்டு சொத்துன்னு இந்த குதி குதிக்கிறீங்க..? வயசு பொண்ணாம், அதான் வயசு பொண்ணுன்னு தெரியுது இல்லை, காலகாலத்துல கல்யாணம் பண்ணி அனுப்பனும்ன்ற பொறுப்பு இல்லாம எனக்கு வந்து கிளாஸ் எடுக்கிறீங்க..?”

“யாருக்குடா பொறுப்பு இல்லை..? இப்போ  நான் ‘ம்ஹ்ம்’  சொன்னா கூட போதும், மாப்பிள்ளைங்க  வரிசை கட்டி  வந்து நிப்பாங்க, அவ்வளவு தூரத்துக்கு ஏன் போகணும், என் தங்கச்சி மகன் எப்போ எப்போன்னு காத்திருக்கான், போன் போதும், காலையில தாலியோட நிப்பான்..”

“நிக்க கால் இருந்தா தானே..? யார் பொண்டாட்டிக்கு யார் தாலியோட வரது..?”

“பொண்டாட்டியா..? நான் எப்போ உனக்கு என் பொண்ணை தாரை வார்த்து கொடுத்தேன்..?”

“நீ என்னய்யா கொடுக்கிறது, தாய்மாமா எனக்கில்லாத உரிமையா..? இப்போ நினைச்சா கூட தூக்கிட்டு போய் அவளுக்கு தாலி கட்டுவேன்..”

“அதெல்லாம் என் பொண்ணு நல்லாவே நடப்பா, யாரும் தூக்க வேணாம்..”

“யோவ்.. அக்கா புருஷன்னு பார்க்கிறேன்..”

“இல்லன்னா என்னடா பண்ணுவ..? நானும் ஏதோ மச்சான்னு பார்த்து பொறுத்து போனா ரொம்ப தான் ஓவரா பண்ற..? நான் மனசு வைச்சா தான் என் பொண்ணு உனக்கு.. மறந்திடாத.. வந்துட்டான், கலெக்டர்ன்னா பயந்திடுவோம் நினைப்பு போல..”

“கலெக்டருக்கு நீ பயந்தா எனக்கென்ன பயப்படலைன்னா எனெக்கென்ன..? இந்த ஜனாக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும் பார்த்துக்கோ..” அவருக்கு மேல் இவன் பேசினான்.

“சொல்றாங்க பதிலு.. சும்மா எதுக்கு பேச்சு..? என் பொண்ணை இனி அங்க இங்க கூப்பிடாத. அவ்வளவு தான்..”

“அவ உன் பொண்ணா இருந்தா தானே..?” ஜனகன் அவரை ஒரு மாதிரி பார்த்தான். எதுக்கு இப்படி பார்க்கிறான்..? என்ன பண்ணியிருக்கான் தெரியலையே..? தேவேந்திரன் புருவம் சுருக்க, அவரின் போன் ஒலித்தது. வேலய்யன்.

அங்கு வேலய்யன் வீட்டில் ராஜலக்ஷ்மி கணவரிடம், “ஏங்க.. தம்பி தான் ஊருக்கு வந்துட்டான் இல்லை, சட்டு புட்டுன்னு அவனுக்கும், பொம்மிக்கும் கல்யாணம் வைச்சிடலாம் இல்லை..” என்று கேட்டு கொண்டிருந்தார்.

“அவன் தான் நம்மகிட்ட இன்னும் இணக்கம் ஆகலையே ராஜி, ஒத்துப்பானா தெரியலையே..?” என்றார் தந்தை  யோசனையாய்.

“அதெல்லாம் ஒத்துப்பான்..” என்ற ராஜலக்ஷ்மி, “இன்னைக்கு மதியம் ஜனா நம்ம தோப்புக்கு வந்திருந்தான்..” என்றார்.

“இங்கவா.. எப்போ ராஜி..? எனக்கு தெரியலையே, தோப்புக்கு மட்டுமா, வீட்டுக்கு வரலையா. என்ன திடீர்ன்னு தோப்பு பக்கம்..  எதாவது பிரச்சனையா..?” வேலய்யன் வேகமாக கேட்க,

“சின்ன மாப்பிள்ளைங்களை வர சொல்லி ஏதோ பேசி அனுப்பியிருக்கான், அநேகமா நீங்க தண்ணீர் பாய்ச்ச போனதை பத்தி தான் இருக்கும், இரண்டு பேர் முகமும் சரியில்லை, இரண்டாவது மாப்பிள்ளை தான் ஏதோ பேசிட்டிருந்தார், அவங்களை பேசி அனுப்பிட்டு வீட்டுக்கு ஹோட்டல்ல இருந்து அசைவம் வேற வந்துச்சு.. கொறிச்சிட்டு தான் போனாங்க..” என்றார் முழுவதுமாய்.

“அதான் என்கிட்ட பேசும் போதும் அப்படி இருந்தாங்களா..?” வேலய்யன் தாடையை தடவ,

“அவங்களுக்கு பின்னாலே பொம்மியையும் தோப்புக்கு வர சொல்லியிருக்கான் உங்க மகன். பொம்மியும் என்கிட்ட இப்படி மாமா வந்திருக்கார், பேசிட்டு வந்திடுறேன்னு சொல்லிட்டு போறா, போகாதன்னு சொல்ல கூட அவ நிக்கலை, எனக்கு என்னன்னா நம்மளை நம்பி மாப்பிள்ளை பேத்தியை இங்க அனுப்பியிருக்கார், இவன் இஷ்டத்துக்கு அவளை தோப்புக்கு  வர சொன்னா என்ன அர்த்தம்..? மாப்பிள்ளைக்கு எப்படியும் சுத்தி இருக்கிற கேமரா வைச்சு தெரிஞ்சிடும், என்ன நினைப்பார் சொல்லுங்க..” என்று  ராஜலக்ஷ்மி கேட்க,

“நீ சொல்றது சரி தான் ராஜி.. பொம்மி என்னதான் அவனுக்கு பேசி வைச்ச பொண்ணுன்னாலும் இது சரி வராது.. நீ சொன்ன மாதிரி சட்டு புட்டுன்னு கல்யாண பேச்சை ஆரம்பிச்சிட வேண்டியது தான்..” என்றவர் மனைவியிடம் நாள் பார்க்க சொல்லி கலந்தாலோசித்து முதலில் பெரிய மகளுக்கு அழைத்தார்.

பானுமதி எடுத்து பொதுவாக நலம் விசாரித்து முடிய, வேலய்யன் திருமண பேச்சை ஆரம்பித்தார். “இந்த மாசம் நாள் நல்லா இருக்கு, முன்னமே பூ வைச்சாச்சு. நேரா கல்யாணத்துக்கு போயிடலாம்.. என்ன சொல்றம்மா.. உனக்கு சம்மதம் தானே..? தம்பிக்கு உன் பொண்ணை கொடுப்ப தானே..?” என்று கேட்க,

“ப்பா.. இதென்ன கேள்வி..? இந்த பேச்சை ஆரம்பிச்சதே உங்க மாப்பிள்ளை தான்.. என்னோட கவலை எல்லாம் ஜனா என்ன சொல்லுவான்னு தான்.. வந்து இத்தனை நாள் ஆகியும் நம்மகிட்ட கோவமா தானே இருக்கான்..” என்றார்.

“அவன் கோவம் அது ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும் பானு.. அதை பார்த்தா இவங்களுக்கு வயசு ஏறிட்டே போகுதே, பொம்மிக்கு பின்னால அதிதியும்  இருக்கா, அவளையும் பார்க்கணும் இல்லை..” ராஜலக்ஷ்மி சொல்ல,

“நீங்க சொல்றது சரி தான்ம்மா.. கீர்த்திக்கு முடிச்சா தான் அதிதிக்கு சரியா இருக்கும், அவளும் இப்போ மாஸ்டர் முடிக்க போறாளே..” அன்னையாய் இத்தனை நாள் கவலையை சொன்னார்.

“எல்லாம் யோசிச்சு தான் சொல்றோம் பானு.. நீ சரி சொல்லு, நாங்க இப்போவே மாப்பிள்ளைகிட்ட பேசிடுறோம்..” என்றனர்.

பானுமதிக்கு இதில் மறுத்து பேசவும் என்ன இருக்கு, நீண்ட வருட காத்திருப்பு தானே. சரி என்றுவிட, தேவேந்திரனுக்கு அழைத்தனர். ஜனகன் புருவம் ஏற்றி இறக்கியவன், ரூமுக்கு செல்லாமல் அங்கேயே அமர்ந்துவிட, அவனை பார்த்தபடி எடுத்தார்.

“வலி பரவாயில்லையா மாமா..” தேவேந்திரன் நலம் விசாரிக்க,

“பரவாயில்லை மாப்பிள்ளை. நான் கூப்பிட்டது கல்யாண விஷயம் பேச தான்..” என்றார் அவர்.

கல்யாண விஷயமா..? இப்போ தானே அதை பத்தி பேசினோம், இவன் இங்கே தானே இருக்கான், அப்பறம் எப்படி..? தேவேந்திரன் புருவம் சுருக்கி ஜனகனை பார்க்க, அவன் “பேசுங்க..” என்றான் சிரிப்புடன்.

“உங்களுக்கு இப்போவும் என் மகனுக்கு பொம்மியை கொடுக்க விருப்பம்ன்னா நாம மேற்கொண்டு பேசலாம் மாப்பிள்ளை..” வேலய்யன் அந்த பக்கம் கேட்க,

“யோசிச்சு சொல்லவா மாமா..?” என்றார் தேவேந்திரன்.

“மாப்பிள்ளை..” வேலய்யன அதிர, பதற வேண்டியவனோ கூலாக தான் அமர்ந்திருந்தான்.

“என்ன ஆச்சு மாப்பிள்ளை..? தம்பி மேல ஏதும் கோவமா இருக்கீங்களா..?” வேலய்யன் வருத்தத்துடன் கேட்க,

“எனக்கு என்ன கோவம் மாமா..? உங்க மகன் இப்போ கலெக்டர் வேற..? பெரிய இடத்துல பொண்ணு ஏதும் எதிர்ப்பார்த்தா..?” என்று நிறுத்த,

“என்ன மாப்பிள்ளை இது..? ஜனா அப்படி நினைக்கிறவன் இல்லை..” வேலய்யன் வேகமாக சொன்னார்.

“நீங்க சொல்றீங்க,  உங்க புள்ள எப்படின்னு நமக்கு தெரியாதே..?” என்றார் தேவேந்திரன்.

‘நானே இவர்கிட்ட பொண்ணு கேட்கணுமாம்..’ ஜனகன் அவரை புரிந்து கொள்ள,

“எங்க புள்ளைக்கு நாங்க உத்ரவாதம் கொடுக்கிறோம் மாப்பிள்ளை.. நீங்க சரி சொன்னா நாள் பார்த்திடலாம்.. யோசிச்சுட்டே சொல்லுங்க..” ராஜலக்ஷ்மி உறுதியாக சொல்லி வைத்துவிட, ஜனகன் போன் எடுத்து சுதாகருக்கு அழைத்தான்.

“மாமா.. எனக்காக ஒன்னு செய்வீங்களா..? என் பெரிய அக்கா வீட்டுக்கு பொண்ணு கேட்டு போங்க.. நம்ம குடும்பத்தில எல்லோரையும் கூப்பிட்டுக்கோங்க..” என்றான்.

தேவேந்திரன் அவனை முறைக்க, “பொண்ணு பார்க்கிறதுல  இருந்து கல்யாணம் முடியற வரை நீங்க தான் மாமா என் சார்பா  எல்லாம் எடுத்து செய்யணும், எனக்கு இப்போதைக்கு நீங்க தான் இருக்கீங்க..” என்று பேசி வைக்க,

“அப்போ நான் யாருடா..?” தேவேந்திரன் பொங்கினார்.

“நான் உனக்கு செய்ய மாட்டேனா, என்னமோ இப்போ எல்லாம் அங்க தான் ஓவர் கனெக்ஷன்..?”

“இப்போ இல்லை.. நீங்க என்னை ஊரை விட்டு துரத்தின நாள்ல இருந்து அவர் எனக்கு செஞ்சுகிட்டு இருக்கார்..”

தேவேந்திரன் அதிர்ந்து போனார்.

“அப்போ நீ.. நீ அவரோட பேசிட்டு தான் இருந்திருக்க..?”

“ஆமா.. வருஷா வருஷம் நீங்க எல்லாம் திருப்பதி வந்தது கூட நான் உங்களை பார்க்க தான்..”

சுதாகர் ஏதோ வேண்டுதல், குடும்பத்துடன் செல்ல வேண்டும், என் குடும்பம் நீங்க எல்லாம் தானே..? என்று பேசி கூட்டி சென்றது இவனுக்காகவா..?

“உன்னை அனுப்பிட்டேன்ற ஒரே காரணுத்துக்காக நான் உனக்கு ஒன்னுமில்லாம போயிட்டேனா..?” தேவேந்திரன்  அழுத்தமாக கேட்க,

“என்னை நம்புங்கன்னு கேட்டும் நம்பாம அனுப்பினது பத்தி பேசுங்க..” என்றான் இவன் அதே அழுத்தத்துடன்.

“உன்னை நம்பி நான் என்ன பண்ணியிருக்கணும்ன்னு எதிர்பார்க்கிற..? இங்கேயே இருந்து எந்நேரமும் என்ன நடக்கும்ன்ற பயத்தோட.. நம்ம எல்லோரோட வாழ்க்கையையும் போராட்டமா போறதையவா..?”

“என்னை அனுப்பிட்டு மட்டும் நீங்க எல்லாம் சந்தோஷமாவா இருந்தீங்க..? இல்லையில்லை..”

“எல்லாம் நிம்மதியா இருந்தோம்டா..”

“இது தான்.. இந்த பேச்சு தான்.. அப்போ நான் இருந்தா நீங்க எல்லாம் நிம்மதியா இருக்க மாட்டீங்களா, அன்னைக்கும்  ‘நாங்க எல்லாம் நல்லா இருக்கணும் நினைச்சா நீ போய் தான் ஆகணும்..’ சொன்ன, இன்னைக்கும் நிம்மதியா இருந்தோம் சொல்ற, என்னை பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நீ என்ன சொன்னாலும் கேட்டுட்டு உன் பின்னாடியே வந்திட்டிருப்பன்னா..”

“நீ எதுக்குடா என் பின்னாடி வரணும்ன்னு, தனியா சந்தோஷமா இருன்னு தான் சொல்றோம்..”

“அது தான் பண்ணிட்டிருக்கேன், நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்..”

“அவ்வளவு தூரத்துக்கு போயாச்சு..”

“அனுப்பி வைச்சதே நீங்க தான்..”

Advertisement