Advertisement

மதுரை வீரன் பொம்மி 18

ஜனகன் மீதான தேவேந்திரனின் நெஞ்சை நிமிர்த்தும் கர்வத்தை, ஜனகனுக்கு இவர்கள் அளிக்கவில்லையே..!

என் குடும்பம்.. என் அப்பா, அம்மா..   என் அக்காக்கள், என் மாமா.. இவ்வளவு தான்.. இவர்கள் தான், இவர்களை சுற்றி தான் என் வாழ்க்கையை நான் வாழ்ந்தேன்.

அப்பா, அம்மாவை விட நான்கு அக்காக்கள் தான் அவனை அதிகம் வளர்த்தது என்பதால், இயல்பாகவே எல்லோரின் மீதும் பற்று அதிகம். குடும்ப அமைப்பின் அடி, நுனி தெரிந்து அதிலே ஊறி போனவன். அதனாலே அவன் படிப்பு, வேலை, திருமணம் எல்லாம் இவர்களை முன்னிறுத்தி, இவர்கள் சொல்லி தான்.

எனக்கு இது வேணும், நான் இது செஞ்சுக்கிறேன், எனக்கு அங்க போகணும், இங்க வரணும் என்று தனியே முடிவெடுத்து அவன் ஏதும் செய்ததாக நினைவில் இல்லை. முக்கியமாக தேவேந்திரன். அக்காவின் கணவராக அறிமுகமாகி அவனின் வாழ்க்கையில் அதி முக்கிய இடத்தை பிடித்தவர்.

மிகவும் இடைவெளி விட்டு கடைசியாக பிறந்த மகனிடம் வேலய்யன் அன்பாக நடந்து கொண்டாலும், அந்த தோழமை, வழிநடத்தல் அவனுக்கு கிடைத்தது தேவேந்திரனிடம் தான்.

வீட்டில் அப்பா, அம்மாவுடன் எதை பேசி முடிவெடுத்தாலும், “மாமாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்ப்பா..” என்று தேவேந்திரனிடம் கேட்டு தான் அதை செய்யவே செய்வான்.

ஏன் அவன் பேங்க் வேலையே தேவேந்திரனிடம் கலந்தாலோசித்து அவர் சரி என்ற பின்னே எழுதி தேர்வானது தான்.

“நீ நல்லா படிக்கிற பையன், வேறெதாவது லைன்ல போ. டிகிரி எடுத்து என்ன பண்ண போற, மெடிக்கல் உனக்கு ஈஸியா கிடைக்கும்..” என்று அவன் பள்ளி ஆசிரியர்கள் சொன்ன போதும், ஜனகனுக்கு ஒரு டிகிரி, கவர்மெண்ட் வேலை போதும் என்ற எண்ணம் தான்.

வேலய்யன், ராஜலக்ஷ்மிக்கு மகனின் விருப்பமே முன்னிலை. “உனக்கு எது பிடிக்குதோ அதை செய்ப்பா, நீ சொல்றதுக்கு நாங்க பணம் கட்டுறோம், ஏதா இருந்தாலும் சரி தான். ஆனா அப்பா, அம்மாவா நாங்க சொல்றது ஒன்னு தான்.. உத்தியோகம் புருஷ லட்சணம்.. இதை மட்டும் மனசுல வைச்சு முடிவெடு.. போதும்..” என்றுவிட்டனர்.

ஜனகனுக்கோ பெரிதான லட்சியம், ஆசை  எதுவும் இல்லை. சொந்த மண்ணில், சொந்தங்களோடு எந்தவிதமான கவலையும், பிரஷரும் இல்லாமல் வாழ வேண்டும். அவ்வளவு தான். அதுக்கு என்ன ஒரு டிகிரி, நிலையான வருமானம் இருந்தால் போதாதா..?

“எப்படியும் நிலம் இருக்கு, சொந்த வீடு இருக்கு, அக்காக்களுக்கும்  கல்யாணம் முடிச்சாச்சு, நான் தலையெடுத்து தான் என் வீட்டுக்கு செய்யணும்ன்னு எதுவும் இல்லை, அப்பறம் ஏன் அது, இதுன்னு தலையை போட்டு உடைச்சுக்கணும், எனக்கு இது போதும் மாமா..” என்று தேவேந்திரனிடம் அமர்ந்து மிக தெளிவாக பேசி, அவரும் இதற்கு சரியென்று சொல்லி படித்தது தான் டிகிரியும், வங்கி பணியும்.

அப்போது தேவேந்திரனுக்கும் மனதில் வேறு ஆசை இருந்ததால் ஜனகன் முடிவுக்கு சந்தோஷமாகவே சம்மதித்தார். ஜனகனை போல அவருக்கும் பணம், சொத்து மேல் பெரிதான ஈடுபாடு இல்லை.

இன்னும் பணம் சம்பாதிக்கணும், சொத்து சேர்க்கணும் என்று ஓட மாட்டார். இருக்கிறதே என் பிள்ளைகளுக்கு போதும் என்று அண்ணாக்கள் ஆரம்பித்த ஹோட்டல் தொழிலிலே அவரும் பங்கெடுத்து கொண்டார்.

“நஷ்டம் வராமல், மூன்று குடும்பத்திற்கும் போதுமான வருமானம் வந்தால் போதும். மேலேறி போறோமோ இல்லையோ கீழிறங்கி போயிட கூடாது.. மிதமாகவே செல்வோம்..” என்ற அண்ணன்களின் பாலிசி இவருக்கும் பிடித்துப்போக, மூவருக்குள் இணக்கமான உறவே.

அதனாலே தேவேந்திரன் தன் மகள் கீர்த்தனாவை ஜனகனுக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று உறுதியாக நின்ற போது அண்ணன்களால் மறுக்க முடியவில்லை. தம்பி தங்கள் சொல் பேச்சு கேட்டு நல்ல முறையில் நடந்து கொள்ளும் போது நாங்கள் ஒரேடியாக எதிர்த்தால் நன்றாக இருக்காது என்று விட்டுவிட்டனர்.

சொல்லி பார்த்து உன்னிஷ்டம் என்றுவிட்டதோடு முன்னின்று அந்த திருமணத்தை எடுத்து நடத்தவும் தயாராக இருந்தனர். ஆனால் இடையில் எல்லாவற்றையும் கலைத்து போடுவது போல வந்தவர் தான் தீனதயாளன். அந்த மூன்று ஏக்கர் நிலம்.

அவரின் சுயலாபத்துக்காக ஒரு குடும்பத்தையே சிதைக்கிறோம் என்ற உறுத்தல் சிறிதும் இல்லாமல் நிலத்தையும் வாங்கி கொண்டு, ஜனகனையும் ஊரைவிட்டு போக சொன்னவர்.

“நீ சொன்னா நான் போயிடுவேனா..? முதல்ல  நீ யார் எனக்கு..? என்னை போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு..? என் மண் இது.. இந்த ஊர்க்காரன் நான்.. போக மாட்டேன்..” என்ற ஜனகனின் உறுதி, தைரியம், நம்பிக்கை எல்லாம் அவன் குடும்பம் அவனுடன் நில்லாததில்  உடைந்து தூள் தூளாகி போனது.

“என்னை நான் பார்த்துகிறேன்.. உங்களை அவன் தொடாதபடி எல்லாம் செஞ்சுட்டேன், என்னை போக மட்டும் சொல்லாதீங்க..?” என்று அவன் கெஞ்சவே செய்த நேரம் இவனை யாரும் நம்பவில்லை தானே..?

அந்த தீனதயாளன் மிரட்டலுக்கு பயந்து என்னை இரவோடு இரவாக ஊரை விட்டு அனுப்பி வைத்தவர்களுக்கு இன்று என்னிடம் கேள்வி கேட்க மட்டும் எப்படி உரிமை வந்ததாம்..? கழுத்துவரைக்கும் கோவம் என்பார்களே அப்படித்தான் ஜனகன் இருந்தான்.

அதுவும் இப்போது தேவேந்திரன் “இனி நான் உன்னோட தான் தங்க போறேன்” என்றதில் உச்சிக்கே அந்த கோவம் ஏறிவிட்டது. அப்போதும் அவர் “எங்க என்னை வீட்டை விட்டு போக சொல்லு பார்ப்போம்..” என்று சவால் விட, அவனால் முடியவில்லை. முடியாது. அது போலான வார்த்தைகள் அவனிடம் இருந்து வாய்ப்பே இல்லை.

ஏனெனில் அடிப்படையிலே அவன்  ‘குடும்பத்திற்கானவன்..!’ பேமிலி பெர்சன்..

அந்த ஒரு காரணத்தினால் தான் தீனதயாளன் அடிக்க அடிக்க வாங்கியது. சொத்துக்களை அக்காளுக்கு கொடுத்தது. ஊரை விட்டு போனதும், இப்போது திரும்ப ஊருக்குள் வந்ததும்..!

அவன் போய் எப்படி மாமாவை வீட்டை விட்டு போக சொல்லுவான்..? முகம் திருப்பி நிற்க, தன் மீதான மாமாவின் கர்வம் அவனை சிலிர்த்தெழ செய்தது. “இதோ இப்படி உன்னை மாதிரி நானும் அந்த தீனதயாளன் முன்னாடி ‘என் ஊரை விட்டு போக நான் மாட்டேன்டா, உன்னால என்ன பு*ங்க முடியுமோ பு*ங்கிக்கோ’ன்னு நெஞ்சை நிமிர்த்த விடாம பண்ணிட்டு  இங்க என்ன வந்து சத்தம்..?” மாமனிடம் பாய்ச்சலாக கேட்டான்.

தேவேந்திரனுக்கு அவன் வார்த்தைகள் வலி தான். இதே மறக்க முடியாத வலியை அவனுக்கும் இவர்கள் கொடுத்திருக்கின்றனரே..!

“தப்பு தாண்டா.. வேணும்ன்னா மன்னிப்பு கேட்கவா..?” என, ஜனகனுக்கு உடல் மொத்தமும் சூடாகி போனது.

“ப்பா.. என்ன இது..?” என்று மகள் அப்பா கை பிடித்து மாமனை முறைக்க,

“உன் அப்பா மன்னிப்பை வைச்சு நான் ஒன்னும் கிழிக்க போறதில்லை.. அவரை கூட்டிட்டு கிளம்பு..” என்றான் ஜனகன்.

“அதான் அப்பா இங்கேயே தங்க போறேன் சொல்லிட்டார் இல்லை, அவர் இங்க தான் இருப்பார்..” மகளும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.

 “அவர் மட்டும் எதுக்கு நீயும் இங்கேயே தங்கிடேன்..” பல்லை கடித்து ஜனகன் சொல்ல,

“நான் ஏன் இங்க தங்கணும், இது என் வீடு..”

“இது கவர்மெண்ட் கோர்ட்டஸ்டி..”

“நீங்க என் மாமா தானே..”

“இப்போ என்னடி சொல்ல வர நீ..?”

“என் அப்பா இங்க தான் இருப்பார்.. நாங்க எல்லோரும் வந்து வந்து போவோம்..”

“எனக்கு தெரியும் நீங்க இப்படி தான் என் உயிரை வாங்குவீங்கன்னு, அதுக்கு தான் இந்த பக்கமே வர மாட்டேன் சொன்னேன். கேட்டீங்களா என் பேச்சை..?” என்று பாண்டியை கொலைவெறியுடன் பார்த்தான்.

‘இது என்ன குடும்ப சண்டையில என்னை பலி கொடுத்துடுவாங்க போல..’ உஷாரான பாண்டி, ஊஊ.. என்று ஊதி கொண்டே மெல்ல நகர்ந்தான்.

“பாண்டி சார்.. எங்க போறீங்க.. எனக்கு ரூம் காட்டுங்க..” தேவேந்திரன் அவனை நிறுத்தி வைத்தார்.

‘காமிச்சிடுவீங்களா நீங்க..?’ என்று ஜனகன் முறைக்க, ‘காட்டாமா போயிடுவியா நீ..?’ தேவேந்திரன் பார்க்க, “அண்ணாத்தை.. என்னை உங்களாண்ட இட்டுக்கோங்க அண்ணாத்தை.. மாமனும், மருமகனும் என்னை ரவுடியாவே மதிக்க  மாட்டேங்கிறாங்க..” என்று அவன் உள்ளுக்குள் சிவனேஷ்வரனிடம் அலற ஆரம்பித்தான்.

“முதல்ல நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க, அப்பறம் நான் ரூம் காட்டுறதை பார்க்கலாம்..”என்றுவிட்டான் பாண்டி.

“பேசி முடிவுக்கு வர எல்லாம் ஒண்ணுமில்லை.. நான் இவனோட தான் இருப்பேன்..” தேவேந்திரன் உறுதியாக சொல்ல,

“நீங்க கல்யாணம் பண்ணியிருக்கிறது என் அக்காவை, என்னை இல்லை..” ஜனகன் கிண்டலாக சொல்ல,

“உன் அக்காவை நான் கல்யாணம் பண்ணியிருக்கிறது எல்லாம் உனக்கு ஞாபகத்துல இருக்காடா..” தேவேந்திரன் நக்கலாக கேட்டுவைத்தார்.

“எனக்கு ஞாபகத்துல இருக்கிறது இருக்கட்டும், நீங்க முதல்ல என் அக்காகிட்ட போய் சேருங்க, என்னோட தங்குறதுக்கு நாங்க எதுக்கு என் அக்காவை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்.. கிளம்புங்க..” என்றான் அவன்.

“என் பொண்டாட்டிகிட்ட நான் பேசிக்கிறேன்.. நீங்க உங்க வேலையை பாருங்க கலெக்டர் சார்..” என்ற தேவேந்திரன், “கண்ணு.. நீ வீட்டுக்கு கிளம்புமா, துணி எல்லாம் ட்ரைவர்கிட்ட கொடுத்தனுப்பிடு..” என்றார் மகளிடம்.

அவள் சரிப்பா என்று தலையாட்ட, ‘அப்பாவுக்கும், மகளுக்கும் கூறே இல்லை.. இவரை வைச்சு நான் என்ன பண்ணவாம்..?’ கடுப்பாக பார்த்து நின்றான் ஜனகன்.

“மாமா.. அப்பா பத்திரம், பார்த்துக்கோங்க..”  கீர்த்தனா அவனிடம் சொல்ல,

“பேசாம போயிடுடி..” ஜனகன் விரல் நீட்டி மிரட்ட,

“அதெல்லாம் பார்த்துப்பான் கண்ணு.. நீ தாத்தா, பாட்டிகிட்ட சொல்லிடு.. நானும் அவங்களுக்கு போன் பண்றேன்..” தேவேந்திரன் சொல்லி மகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

ஜனகன் அவரை சோபாவில் அமர்ந்து முறைத்திருக்க, அவரோ அவரின் அண்ணன்களுக்கு போன் செய்து “ஆமா..  கலெக்டர் பங்களா தான்.. ஏதோ இருக்கு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. சாப்பாடா..? இங்க சரியில்லைன்னா நம்ம ஹோட்டல்ல வாங்கிக்கிறேன்..” என்று அவனை வெறுப்பேற்றி கொண்டிருந்தார்.

“சார் ரொம்ப சூடா இருந்தா ஏசிக்குள்ள போய் உட்காருங்க..” பாண்டி மெல்ல ஜனகனிடம் சொல்ல, அவன் நகர வேண்டுமே. மாமாவை முறைத்தாவது அங்கு தான் இருப்பான். அதுதான் அவன்.. அவர்கள்..!

Advertisement