Advertisement

அன்று ஏதோ ஒரு ஹோட்டல் வைத்திருப்பவன் தானே நீ என்று தேவேந்திரன் மேல் தீனதயாளன், தர்ஷன் காட்டிய அலட்சியம், ஆணவத்தின் பதில் இன்று அவர்களுக்கு கிடைத்திருந்தது.

காலம் மாறியது.. காட்சிகள் மாறின.. மனிதர்களும் மாறினர்..

பல வருடங்களாக போட்டியே இல்லாமல் தானே தொழில் சங்கத்தின் தலைவன் என்று சீட்டில் அமர்ந்திருந்த தீனதயாளன் இன்று சீட்டை விட்டு இறக்கப்பட்டார். அதே சீட்டில் இன்று தேவேந்திரன் அமர்ந்தார். அமர வைக்கபட்டார்.

கடைசி நொடி வரை அவருக்கு இப்படி ஒன்று தன் பின்னால் நடக்கிறது என்றே தெரியாமல் தலைவர் சீட்டில் அவர்.

எப்போதும் போல் ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்தில் தீனதயாளன் அடுத்த தலைவராக தன் மகனை அறிமுகம் செய்து வைக்க, அங்கு ஆரம்பித்தது ஜனகனின் ஆட்டம். பாண்டியின் விளையாட்டு. பணம், பிஸ்னஸ், கான்டெக்ட்ஸ் எது வேண்டுமோ அது உனக்கு. ஆனால் தலைவர் இடம் மட்டும் தேவேந்திரனுக்கு. உள்கட்ட பேச்சு வார்த்தையின் முடிவு இன்று கூட்டத்தில் வெளிப்பட்டிருந்தது.

“தர்ஷன் தம்பி சின்ன பையன், அவரை விட பெரியவங்க இங்க பல பேர் இருக்கோம். எங்களுக்கு தெரியாதது தர்ஷன் தம்பிக்கு தெரிய வாய்ப்பில்லை..” என்று ஒவ்வொருவராக ஆரம்பித்த பேச்சில், “ஏன் நம்ம தேவேந்திரன்  சாரே இருக்கார்.. குறைஞ்ச டைம்ல பல மடங்கு மேல வந்திருக்கார், அவருக்கு கொடுத்தா என்ன தப்பு..” என்று அவரை உள்ளிழுத்து விட்டனர்.

தேவேந்திரனனும், அவரின் அண்ணன்களும் இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சி அடைந்து மறுத்து பேச போக, பரத் அவர்களை அடக்கினான். “சித்தப்பா தலைவரா வந்தா என்ன..?” என்று கேட்டான். பெரியவர்கள் நடப்பது புரியாமல் திகைத்தனர்.

கூட்டத்தின் ஆட்களில் பகுதி பகுதியாக பிரிந்தனர். ஒரு சாரார்  தீனதயாளனுக்கு சப்போர்ட் செய்ய, மற்றொரு சாரார் தேவேந்திரனுக்கு குரல் கொடுக்க, இடையில் ஒரு சாரார் நின்றனர்.

தீனதயாளன் இந்த பேச்சையே விரும்பாத ஒவ்வாமையுடன், “எதுக்கு வாக்குவாதம்..? இப்போவே எலெக்ஷன் வைச்சு முடிவெடுத்து விடுவோம்..” என்றார். அவரின் மேல் அவர்கொண்டுள்ள அதிகப்படியான நம்பிக்கை அது. இன்று முளைத்த தேவேந்திரனை எனக்கு சமமாக வைத்து பேசுவதா என்ற அகங்காரமும் அவரை நிதானமாக இருக்க விடவில்லை.

சங்கத்தின் ஆட்களும் உடனே சரி என்றுவிட்டனர். தேவேந்திரன் உறுதியாக மறுக்க போக பாண்டி, பரத் அவரை விடவில்லை. “உங்களுக்கு, ஜனகனுக்கு நடந்ததை மறக்க வேண்டாம் சித்தப்பா.. இந்த பவர் தானே அவங்களை அப்படி ஆட வைச்சது.. இன்னைக்கு அதே பவர் நம்மகிட்ட வரும் போது ஏன் வேண்டாம் சொல்லணும்..?” என்று பரத் அவரை அந்த நிகழ்விற்கு இழுத்து சென்றுவிட, இங்கு வோட்டிங் ஆரம்பமானது.

தேவேந்திரனுக்கு எப்படியும் நம்மளை செலக்ட் பண்ண மாட்டாங்க என்ற எண்ணம். விட்டுவிட்டார். ஆனால் அவரே அதிர்ச்சியில் உறையும் வகையில் அவர் தான் வென்றிருந்தார். தீனதயாளன், தர்ஷன் இருவரும் மேடையிலே சிலையாகிவிட்டனர்.

அவர்கள் அறிந்த முதல் தோல்வி இது. ‘என் இடம்.. நான் தான் ராஜா’ என்று சகல அதிகாரத்துடன் ஆட்டிப்படைத்தவர்களிடம் இருந்து சில நிமிடங்களில்  அந்த அதிகாரம் பறிக்கப்பட்டு, அவர்களை பத்தோடு பதினொன்றாக நிற்க வைத்துவிட்டான் ஜனகன்.

அவர்கள் அந்த தோல்வியில் கீழிறங்க, இவன் தன் மாமாவின் வெற்றியை கொண்டாட மேடை ஏறினான். ஜனகனுக்கு அமர சேர் காட்டினர். அவன் “எலெக்ஷ்னா..?” என்று பொதுவாக கேட்டான்.

“ஆமா சார் எங்க சங்கத்துக்கான அடுத்த தலைவர் எலெக்ஷன் இப்போ தான் முடிஞ்சது.. தேவேந்திரன் சார் தான் அடுத்த தலைவர்..” என்றார் அவர்.

“ஓஹ்.. வாழ்த்துக்கள் சார்..” ஜனகன் அவருக்கு கை கொடுக்க, தேவேந்திரனுக்கு அவனின் இந்த பார்மாலிட்டி அறவே பிடிக்கவில்லை. ‘மாமா’ என்று பாய்ந்து கட்டி கொள்ளும் ஜனா தான் அவருக்கு வேண்டும். இப்படி சார் என்று கை நீட்டுபவனின் வாழ்த்து யாருக்கு வேண்டுமாம்..?

காது கேளாதவர் போலும் இருக்க முடியாதபடி நேரே கை நீட்டி நிற்பவன் கையை வலுக்கட்டாயத்தின் பேரில் குலுக்கி “நன்றி  சார்..” என்றார். அவரின் முகத்தில் மகிழ்ச்சி போல் எதுவும் இல்லை. முன்னர் திணறல் என்றால், இப்போது ஜனாவின் இடைவெளியில் சுணக்கம் தான்.

தேவேந்திரனின் அண்ணன்களோ மேடையில் நின்ற ஜனகனையே பார்த்திருந்தனர். இன்று தானே அவனை திரும்ப பார்க்கின்றனர். அதுவும் சாதரணமாக இல்லாமல், எல்லோரும் எழுந்து நிற்கும் மரியாதையுடன்

 பதவி கொடுத்த தோரணையில் நிமிர்ந்து நிற்பவனை கொஞ்சம் திணறி தான் பார்த்தனர்.

அதிலும் பெரிய அண்ணனுக்கு சொல்லவே வேண்டாம். அன்று ஜனகனை ஊரை விட்டே அனுப்புவதில் முதல் குறியாய் இருந்தது இவர் தான். தன் குடும்பம், தன் தம்பியின் நல்வாழ்வு என்று ஜனகனை ஈசியாக வெளியே அனுப்பியவருக்கு, இன்றய அவன் அவதாரம் வாயை கட்டிபோட்டுவிட்டது.

ஜனகன் பார்வை அவர்கள் மேல் நொடி பதிந்து விலக, தேவேந்திரனின் வெற்றியை கொண்டாடும் வகையில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கப்பட்டது. ஜனகனுக்கும் சேர்த்து. அவன் மறுத்துவிட, தேவேந்திரன் முகம் சுருங்கி போனது.

“இந்த ஸ்வீட் எல்லாம் வாங்கி கொடுத்ததே அவர் தான்.. உன் சித்தப்பாக்கு என்னமோ ஓவர் பீலிங் தான்..” பாண்டி கீழே பரத்திடம் முனக,  பக்கத்தில் நின்ற கீர்த்தனாவிற்கு எதோ புரிவது போல.

ஜனகன் மைக் வாங்கி, “உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க தான் இப்போ வந்தேன். ஆனா மிஸ்டர் தேவேந்திரன் வெற்றி கொண்டாட்டத்தை  நான் தடை செய்ய விரும்பலை.. இன்னொரு நாள் வரேன்.. ஒன்ஸ் அகைன் வாழ்த்துக்கள் மிஸ்டர் தேவேந்திரன்..” என்று சொல்லி கீழிறங்கினான்.

சங்கத்து ஆட்கள் ஒவ்வொருவராக வந்து ஜனகனிடம் பேச, அவன் பின் வந்து தள்ளி நின்ற தேவேந்திரனுக்கு அவன் மிஸ்டரில், இந்த இடைவெளியில் கோவமே. ‘இவனை விஷ் பண்ண சொல்லி நான் கேட்டேனா..?’ என்று பொறுமி  கொண்டார் மனிதர்.

“நீங்க இப்படி உம்ம்ன்னு முகத்தை வச்சிருக்கவா நாங்க இவ்வளவு பாடுபட்டு உங்களை தலைவர் ஆக்கியிருக்கோம்..” கீர்த்தனாவுடன் வந்த பாண்டி அவரிடம் கேட்க,

“எனக்கு அப்போவே சந்தேகம் தான்.. இதெல்லாம் உங்க வேலை தானா..?” என்று வெளியே செல்லும் தீனதயாளன், தர்ஷனை பார்த்து கேட்டார்.

“ஆமா.. ஏன் உங்களுக்கு பிடிக்கலையா..?” பாண்டி கேட்க,

“இவன் என்கிட்ட இருந்து இப்படி தள்ளி நிற்கிறது தான் எனக்கு பிடிக்கலை. மத்தபடி இதுல எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை..” என்றார்.

“உங்களுக்கு விருப்பம் இல்லன்னா என்ன.. உங்க மருமகனுக்கு அவர் மாமா இப்படி இருக்கிறது தான் விருப்பமாம்..” என்றான் பாண்டி சிரிப்புடன்.

ஜனகன் அவர்களிடம் வந்தவன், “என்ன சொல்றார் தலைவர் சார்..?” என்று பாண்டியிடம் கேட்டான்.

“என்கிட்ட கேட்காம அவன்கிட்ட கேட்கிற.. க்கும்.. கேட்கிறீங்க..” தேவேந்திரன் நேரே ஜனாவிடம் கேட்க,

“உங்ககிட்ட நேரா கேட்கிற அளவு நமக்குள்ள எதுவும் இல்லையே சார்..” ஜனகன் தோள் குலுக்கினான்.

அதில் தேவேந்திரன் முகம் சுருங்க, கீர்த்தனா மாமனை கோவமாக பார்த்தாள். பரத்துடன் தேவேந்திரன் அண்ணன்கள் அங்கு வர, “ஹலோ பெரிய சார்.. ஹலோ மிடில் சார்..” என்றான் ஜனகன். அவர்கள் இவன் விளிப்பில் தடுமாறி, “ஹ.. ஹலோ சார்..” என்றனர்.

ரொம்ப பண்றான்.. தேவேந்திரன் கொதித்து போக, பொக்கே  வந்தது. “உங்களுக்கு தான்.. தலைவர் ஆனதுக்கு..?” என்று தேவேந்திரனிடம் நீட்டினான் ஜனகன். அவர் பல்லை கடித்து வாங்கி கொள்ள, ஜனகன் அங்கிருந்து கிளம்பினான்.

இவர்கள் மேலும் சில நிமிடங்கள் அங்கிருந்துவிட்டு கிளப்’பை விட்டு வெளியே வந்தனர். பெரியவர்களும், பரத்தும் ஹோட்டல் செல்ல தனியே கிளம்ப, கீர்த்தனா காரில் தேவேந்திரன் ஏறிக்கொண்டவர், பாண்டியையும் தன்னுடன் கூப்பிட்டு கொண்டார்.

“உங்க சார் எங்கிருக்காரு கேளு பாண்டி..” என்றார் தேவேந்திரன். டியூட்டி முடிந்து வீட்டில் தான் என்று கேட்டு சொல்ல, மகளிடம் அவன் வீட்டுக்கு போக சொன்னார்.

அப்பாவின் கோவம் புரிந்த மகள் காரை ஜனகன் வீட்டின் முன் நிறுத்த, வெளி ஹாலில் இவர்களை அமர சொன்னார்கள். “முடியாது.. நான் அவன் மாமன்.. வீட்டுக்குள்ள போவேன்..” தேவேந்திரன் கத்தியேவிட்டார்.

“அவங்களை உள்ள விடுங்க..” என்ற ஜனாவின் குரலை தொடர்ந்து உள்ளே சென்ற தேவேந்திரன்,  “என்னடா இது.. என்ன இது..?” என்று  தன் கையில் இருந்த பொக்கேவை அவன் முன்னிருந்த டீபாய் மேல் தூக்கி போட்டார்.

“நான் உனக்கு பண்ணது தப்புன்னா ஏன்யா இப்படி பண்ண’ன்னு என் சட்டையை  பிடிச்சு சண்டை போடுடா,  அதை விட்டு யாரோ போல பேசுற  வைக்கிற. என்னடா நினைச்சிட்டிருக்க உன் மனசுல..” என்று நடுஹாலில் நின்று கத்த,

‘தப்பு’ன்னாவா.. ஜனகன் உடல் விறைக்க, “நான் ஏன்யா  உன்கிட்ட சண்டை போடணும், போட மாட்டேன், அப்படி நான் உரிமையா உன் சட்டையை பிடிக்க நீ எனக்கு யாரும் இல்லை..” என்று அவருக்கு மேல் இவன் கர்ஜித்தான்.

அவன் குரல் உயர்த்தலில், “மாமா.. அப்பாகிட்ட இப்படி பேசாதீங்க..”  என்று கீர்த்தனா இடையிட்டு தீர்க்கமாக சொல்ல,

எனக்கும் அவருக்கும் நடுவுல இவ யாரு..?

“நான் அப்படி தான் சத்தமா பேசுவேன், இப்போ என்னாங்கிற நீ..?” என்று அவளிடம் பாய,

“டேய்.. ஏதா இருந்தாலும் என்கிட்ட பேசு, என் மககிட்ட போன தொலைச்சிடுவேன் உன்னை..” என்று தேவேந்திரன் அவனை மிரட்டினார்.

அவகிட்ட நான் போக கூடாதா..? அதை சொல்ல இவர் யாராம்..? உள்ளுக்குள் எரிந்தது இவனுக்கு.

“என்ன அப்பாவும், மகளும் சேர்ந்து ஆட்டம் காட்டுறீங்களா என்கிட்ட..? முதல்ல உங்க இரண்டு பேருக்கும் என்ன  ரைட்ஸ் இருக்குன்னு என்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க..? நமக்குள்ள ஒன்னும் கிடையாது..”

“நீ சொல்லிட்டா நமக்குள்ள ஒன்னும் இல்லாம போயிடுமா..? அதெப்படி நான் விடுவேன்னு நீ நினைக்கிற..? ஏதோ நாம அப்போ தப்பு பண்ணிட்டோமேன்னு கொஞ்சம் பொறுத்து போனா ரொம்ப ஓவரா போற..? ஏன் உன்னை கேட்க யாரும் இல்லன்னு நினைச்சிட்டியா..?”

“ஆமா யாரும் இல்லை தான்.. என்னை போ’ன்னு துரத்திவிட்ட யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது.. கேட்கவும் கூடாது..”

“நீ என்னடா சொல்றது..? நான் கேட்பேன்டா.. என்ன நாலு வருஷத்துல துளிர் விட்டு போச்சா..? பெத்த அப்பா, அம்மா தவிச்சு போய் ஓடி வந்தா முகத்தை திருப்பிக்கிட்டா போற..? இனி எப்படி போறேன்னு நானும் பார்க்கிறேன்டா.. கண்ணு.. நீ வீட்டுக்கு கிளம்பு.. அப்பா இனி இங்க தான் இருக்க போறேன்.. இவனோட தான் தங்க போறேன்..” என்றுவிட்டார். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை ஜனகன் உட்பட.

“நான் உன்னை இங்க தங்க விடணுமே..”

“எங்க என்னை வீட்டை விட்டு போக சொல்லி தான் பாரு..” என்று சட்டமாய் சோபாவில் அமர்ந்து கொண்டார். ஜனகன் ஏறி இறங்கிய மூச்சுடன் முகம் திருப்பி கொள்ள,

“எனக்கு தெரியும்.. நீ சொல்ல மாட்டடா, உயிரே போனாலும் சொல்ல மாட்ட. ஏன்னா நீ நாங்க இல்லைடா..” தேவேந்திரன் கர்வத்துடன் நெஞ்சை நிமிர்த்தினார்.

Advertisement