Advertisement

மதுரை வீரன் பொம்மி 17

‘இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படி ‘ஹ்க்கும்’ கொட்டிட்டே இருக்க போறாராம்..? மாமாவை பார்த்தா இப்போதைக்கு என்னை விடுற மாதிரி தெரியல..’ பொம்மி புலம்பி வாட்ச் பார்த்தாள்.

அந்த நொடிக்கே அவள் மாமனிடமிருந்து ‘ஹ்க்கும்’ சத்தம் வந்துவிட்டது.

“டைம் கூட பார்க்க கூடாதா மாமா..?” பெண் கேட்டேவிட்டாள்.

“இத்தனை வருஷம் டைம் பார்த்திட்டு இருந்திருப்ப தானே..?” என்றான் அவன்.

“அதுக்காக இப்போ பார்க்க கூடாதுன்னா எப்படி மாமா..? உங்ககிட்ட இருந்து தகவல் வந்த உடனே கிளம்பி வந்துட்டேன். ஸ்கூல், ஹோட்டல் எல்லாம் போகணும்..” என்றாள்.

“இன்னைக்கு ஒரு நாள் போகலேன்னா ஒன்னும் ஆகிடாது..” ஜனகன் போன் எடுத்து யாருக்கோ மெசேஜ் செய்ய ஆரம்பித்தான்.

“நீங்க மட்டும் உங்க வேலையை பார்த்துட்டு என்னை மட்டும் உங்களை பார்த்துட்டிருக்க சொல்றீங்க..” பொம்மி உர்ரென்று கேட்க,

ஜனகன் பார்வை டக்கென்று உயர்ந்து அவள் மேல் பட்டத்துடன், “என்னை பார்த்துட்டு இருக்கிறது மேடத்துக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கா..?” என்று கேட்டான்.

“இங்க வைச்சு உங்களை பார்க்கிறது கஷ்டமா தான் இருக்கு மாமா..” என்றாள் அவள்.

“எங்க வைச்சு பார்த்தாலும் இதே மூஞ்சு தான்.. பாருடி..” என்றான்.

“அப்படியென்ன நான் உங்களை பார்த்தே ஆகணும்ன்னு கூப்பிட்டு வைச்சு காமெடி பண்ணிட்டு இருக்கீங்க..?”

காமெடியா.. இவளை.. “ஏய் எழுந்து நில்லடி..” என்றான்.

“இது அடுத்த பனிஷ்மென்ட்டா..? எழுந்து நின்னா மட்டும் போதுமா..? இல்லை கை ஏதும் கட்டவா மாமா..?” கேலியாக கேட்டாள்.

“முதல்ல எழுந்து நில்லு அப்பறம் சொல்றேன்..” என்றவன் பொம்மி எழுந்து நிற்கவும், அவளை நோக்கி வந்தான்.

‘கிட்ட வரார்..’ கண்களை விரித்தவளை இடித்து உரசி சேருக்கும், டேபிளுக்கு இடையில் அவளை பார்த்தபடி டேபிளில் சாய்ந்து நின்றுவிட்டான். நெருக்கமே. மிக நெருக்கமே.

பெண் திகைத்து நிற்க,  அந்த நெருக்கம் அவனை பாதிக்காதது போல்  மொபைல் பார்க்க ஆரம்பித்தவனின் கால்கள் என்னமோ  பொம்மியின் புடவையை உரசி கொண்டிருந்தது.

“மா.. மாமா..” பொம்மி மெல்ல அழைக்க,

“சொல்லு..” என்றான் மொபைலில் பார்வை வைத்தபடி.

“நீங்க.. நீங்க கொஞ்சம் தள்ளி..”

“ஆஹ்ன்..”

“இல்லை  நானே தள்ளி..”

“நகர கூடாது..”

“இது உங்க ஆபிஸ் ரூம் மாமா..”

“அப்போ வா ஹாலுக்கு போலாம்..”

“மாட்டேன்..”

ஜனகன் நிமிர்ந்து அவளை ஒரு மாதிரி பார்த்தான். “என்ன மாமா..” அவன் பார்வையில் பெண் கேட்டாள்.

“என்னோட ஊரை விட்டு தான் வர மாட்டன்னு பார்த்தா ஹாலுக்கும் வர மாட்டியா..? அப்போ எங்க தான் என்னோட வரலாம்ன்னு இருக்க..?” கோவத்தை அடக்கி கேட்க,

பொம்மி பதில் இல்லாமல் முகம் திருப்பினாள். “என்னை பாருடி..” மாமாவின் அதட்டலில் அவனை பார்த்தாள்.

“பதில் சொல்ல அவ்வளவு கஷ்டமா இருக்கா..”

“நீங்க கேட்ட கேள்வியே தப்புன்றப்போ நான் ஏன் பதில் சொல்லணும் மாமா..?”

“என்னோட ஏன் வரலைன்னு கேட்டது தப்பான கேள்வின்னா, நான் கூப்பிட்ட ஆள் தான் தப்பு போல..” என்றுவிட்டான் அவன்.

பொம்மி மூக்கு விடைக்க, “அப்போ ஏன் ஏன்னை கூப்பிட்டீங்க..? சரியான ஆளை கூப்பிட்டு உங்களை மேலிருந்து கீழ வரைக்கும் பார்க்க சொல்ல வேண்டியது தானே..” என்றாள் அவள் பட்டாசாய்.

மேலிருந்து கீழ பார்க்கணுமா..? ஜனகன் அவளை இப்போது மேலிருந்து கீழ் பார்க்க ஆரம்பித்துவிட்டான்.

“மாமா..” பெண்ணின் கோவக்குரலில்,

“என்னடி சத்தம் ஜாஸ்தியா இருக்கு..? உனக்கும், உன் அப்பனுக்கும் என் முன்னாடி பேச ரைட்ஸே கிடையாது.. பார்த்துக்கோ..” என்றான்.

“இது என்ன கலெக்டர் உத்தரவா..?”

“உங்க முகரைக்கு கலெக்ட்ர் வந்து தான் உத்தரவு போடணுமா..?”

“அப்போ நீங்க கலெக்ட்ர் கிடையாதா..”

“வாயை குறைடி..”

“நீங்க குறைச்சா என்னது தானே குறைஞ்சிடும்..”

“ஓஹ்.. அப்போ  நம்ம இரண்டு பேர் வாய்க்கும் கனெக்ஷன் இருக்குன்ற..” ஒரு மார்க்கமாக பார்த்து கேட்டான்.

“என் கழுத்துல தாலி கட்டிட்டா எல்லாத்துக்குமே கனெக்ஷன் இருக்கு..”   அவள் பல மார்க்கமாக பதில் சொன்னாள்.

“இது அக்மார்க் அடல்ட் பேச்சுடி..” ஜனகன் சிரிப்பை உதட்டுக்குள் அடக்கி சொல்ல,

“இருக்கட்டும் நாம அடல்ட் தானே..” என்றாள் அவள் சாதரணமாக.

“ரொம்பவே வளர்ந்திட்டடி..” என்றவனின் போன் ஒலிக்க, எடுத்து பேசினான். பொம்மி மெல்ல கால்களை பின்னிழுக்க, ஜனகன் பார்வை அவள் மேல் அழுத்தமாக படிந்தது.

“ப்ளீஸ் மாமா..” பெண் வாய் அசைத்து கேட்க, இவன் நிமிர்ந்து நின்றுவிட்டான். பொம்மிக்கு மூச்சடைத்து போனது. சாய்ந்திருந்த போதாவது சிறு இடைவெளி இருந்தது. இப்போது அதுவும் இல்லை. மாமன் நெஞ்சில் முகம் உரசும் அளவு நெருக்கம்.

பொம்மி அண்ணாந்து அவனை பார்க்க, அவன் பார்வையும் இவள் மேலே. இருவருக்கும் முதல் அணைப்பு நினைவிற்கு வர, உடலும் மனமும் சூடானது. ஜனகன் அவளை ஒருவித எதிர்பார்ப்புடன் பார்த்து நின்றிருக்க, பெண்ணிற்கு கைகள் பரபரத்தது. இடைப்பட்ட பிரிவின் ஏக்கம் அவளை உந்த, கைகளை இறுக்க மூடி கொண்டாள்.

ஜனகன் பார்வை அவள் இறுக்கப்பட்ட கைகளில் பதிந்து கோவத்திற்கு சென்றது. ‘என்னை கட்டிப்பிடிக்க கூடாதுன்னு அப்படி என்ன கண்ட்ரோல்..’ அந்த பக்கம் பேசி வைத்த நொடி, அவனின் கைகள் அவள் இடைய இழுத்து தன்னோடு மோத வைத்தது.

அவன் அதிரடியை எதிர்பார்க்காமல் அவனை கட்டி கொண்ட பெண், அதன் பின் விலகவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பை விட இப்போது இன்னும் பொருந்தி, மிக பாந்தமாக அவனுள் அடங்கிவிட, ஜனகன் கண்களை மூடி அவள் ஸ்பரிசத்தில் திளைத்தான். பொம்மி அவன் இதய துடிப்பில், உடல் வெம்மையில் கரைந்து போனாள்.

மெலிதான வாசனை திரவியத்தின் வாசத்துடன் அவனின் வேர்வை வாசத்தையும் தன்னுள் இழுத்து நிரப்பி கொண்டவளுக்கு தொண்டை அடைத்து கண்கள் கலங்கியது. முகத்தை அவன் நெஞ்சில் லேசாக முட்டினாள். அழ கூடாது அவளுக்கு. ஏன் அழுகை வருது..?

கட்டுப்படுத்த முடியாமல் அவளின் கை நகங்கள் அவன் இடையை அழுத்தி அவனுக்கு காயத்தை கொடுக்க, அவளின் பல்லே அவள் உதட்டை கடித்து அவளுக்கு காயத்தை கொடுத்து கொண்டிருந்தது.

பொம்மியின் காயத்திற்கு ஜனகன் எதிர்வினை ஆற்றாமல் கண் மூடியே இருந்தாலும் அதிரும் இதய துடிப்பு அவன் நிலையை சொன்னது. பொம்மிக்கு அதற்கு மேல் முடியவில்லை. ஏன் கட்டுப்படுத்தணும்..? தேடலின் பின் பொக்கிஷம் கிடைத்தால் கண்ணீர் சிந்த மாட்டோமா..?

காயங்கள், வலிகளின் மருந்து அதுவாக இருப்பதில் என்னவாகிட போகிறது..? அழுதாள்.. அவன் நெஞ்சில் முட்டி முட்டி அழுதாள். இந்த நான்கு வருடங்களில் இவனை தொலைத்துவிட்டு, ‘ஏன் மாமா கூப்பிட்டப்போ அவரோட போகல’ன்னு தனியே மருகி வேதனையில் அழுததிற்கு இந்த கண்ணீர் தேடலின் நிறைவு தானே..?

தனியே பிரிவில் சிந்திய கண்ணீர் துளிகள் இன்று உரியவனிடம் சேர்ந்துவிட, பெற்று கொண்டவனின் ஒற்றை கண்ணீர் துளி அவள் உச்சியை நிறைத்தது. ஜில்லென்ற துளி தன் உச்சியில் இறங்க, இன்னுமே பெண்ணிற்கு அழுகை பொங்கியது. நிமிர்ந்து மாமனை பார்க்க தைரியம் இல்லை. இந்த முகம் நான் எப்போதும் பார்க்கவே வேண்டாம்.

அணைத்தது அணைத்தபடியே இருந்துவிட்டாள். நிமிடங்கள் அவர்களுக்கு நொடிகளாக தான் தெரிந்தது. ஜனகனின் போன் திரும்ப ஒலித்து நிமிடங்கள் நகர்கின்றன என்று சொல்லியது. பொம்மி இறுதியாக அவன் நெஞ்சில் முகத்தை முட்டி நிமிர, ஜனகன் போன் எடுத்தான்.

பொம்மி முந்தானையில் முகம் துடைக்க, ஜனகனின் விரல்கள் அவள் கலைந்த முடியை காதோரம் தள்ளியது. தண்ணீர் எடுத்து பொம்மிக்கு கொடுத்தவன், அவள் குடித்து முடிக்கவும் தானும் குடித்தான். “வரேன்..” என்று அந்த பக்கம் பேசியதற்கு பதில் சொல்லி வைத்தான்.

கீர்த்தனா கிளம்ப தயாராக, “என்னோட வா..” என்றான் அவளிடம். உங்களோடவா..? எங்க..? பொம்மி புரியாமல் பார்க்க,

“நாம இரண்டு பேரும் ஒரு இடத்துக்கு போக போறோம்.. கிளம்பிட்டு வரேன்..” என்று நகர்ந்தவன், திரும்ப இவள் கை பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்றான்.

“மாமா..” அவள் மறுக்க பார்க்க, தெரிந்து தானே கேட்காமல் இழுத்து கொண்டு வந்தது. சமையல் செய்பவர் வர, காபி சொன்னவன், “இங்கேயே இரு.. இல்லை மாட்டேன்னா என்னோட ரூமுக்கு தூக்கிட்டு போய்டுவேன்..” என்றான் மிரட்டலாக. பொம்மி அமைதியாக ஹாலில் அமர்ந்து கொண்டாள்.

ஜனகன் ரூம் சென்று கிளம்பி வர, காபி வந்தது. பொம்மி எடுக்கவில்லை. விருந்தாளி போன்ற காபி அவளுக்கு வேண்டவே வேண்டாம். ஜனகன் முறைக்க, அவள் மறுப்பாக தலையாட்டினாள். இவனும் குடிக்கவில்லை. “வா போலாம்..” என்று கை பிடித்து கூட்டி வந்தான்.

வெளியே  பாதுகாப்பு காவலர்களுடன் அவனின் கார் தயாராக இருக்க, பொம்மியின் கார் நிற்கும் இடம் சென்று அவளை கார் எடுக்க சொன்னான். “நீங்க..?” பொம்மி கேட்க,

“பின்னாடி வரேன்..” என்றான் அவன்.

“ஒரே இடம்ன்னா என்னோட வாங்க மாமா..” பெண் ஆசையாக கேட்க, ஒரு நொடி அவளை பார்த்தவன், “கிளம்பு..” என்றுவிட்டு அவன் காருக்கு சென்றான்.

‘எங்க போகன்னு தெரியாம எப்படி கிளம்புறது..?’ பொம்மி காரை விட்டு இறங்கி, “மாமா..” என்று கூப்பிட்டுவிட்டாள். ஜனகன் திரும்பி பார்க்க, மற்றவர்கள் பார்வையும் இவள் மேல் ஆச்சரியத்துடன் படிந்தது.

டியூட்டி நேரத்துல.. ஸ்ஸ்ஸ்.. உதட்டை கடித்து ஜனகனை மன்னிப்பாக பார்த்தவள், “எங்க போகணும்ன்னு..” என்று கேட்க,

“*** கிளப்..” என்று அவன் காரில் ஏறிவிட்டான். அங்கவா..? முழித்து நின்ற பொம்மி ஹார்ன் சத்தத்தில் கார் எடுத்தாள். அந்த கிளப் இவர்கள் தொழில் சங்கத்திற்குண்டானது. இப்போது அங்கு மீட்டிங் நடந்து கொண்டிருக்கும் நேரம்..

‘திடீர்ன்னு  மாமா ஏன் அங்க கூட்டிட்டு போறார்..? மீட்டிங்ல ஏதும் பிரச்சனையா..? மாமாக்கு போன் வந்து தானே அங்க போக சொன்னார்..?’ பொம்மி உடனே புளூ டூத்தில் அப்பாவிற்கு அழைத்தாள். அவர் எடுக்கவில்லை.

அடுத்து அவளின் அண்ணா பரத்திற்கு அழைக்க அவனும் எடுக்கவில்லை. பெரியப்பாக்களும் அங்கு தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இவளுடன் பேசுவதில்லை என்பதால் திரும்ப அப்பா, அண்ணாவிற்கே முயன்றாள்.

இடையில் அவளுக்கு வேறொரு புது எண்ணில் இருந்து அழைப்பு வர எடுத்தவுடன், “என்ன பண்ணிட்டிருக்கிற..? ரோடை பார்த்து கார் ஓட்டு..” என்ற ஜனகனின் கண்டிப்பான குரல் கார் முழுதும் ஒலித்தது. முன் கண்ணாடி வழியே பின்னால் பார்க்க, அவன் பார்வை இவள் மேலே.

பொம்மி அடுத்து யாருக்கும் அழைக்கவில்லை. அமைதியாக அந்த கிளப் முன் காரை நிறுத்தி இறங்கினாள். பாண்டி வேகமாக வந்து ஜனகனை வரவேற்க, பொம்மியை பார்த்து “வா..” என்று தலையசைத்து முன்னால் நடந்தான். பாண்டி பொம்மியின் பின் நடக்க, அங்கு தேவேந்திரன் மேடையில் மாலை, மரியாதையுடன் நின்றிருந்தார்.

எதிர்பாரா நேரத்தில் கலெக்டர் திடீரென வரவும் எல்லோரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். தேவேந்திரன் ஏற்கனவே என்ன நடக்கிறது என்று புரியாமல் திணறி நின்றிருந்தவர் ஜனகன், மகளை அங்கு பார்க்கவும் ஆச்சரியம் கொண்டார்.

தீனதயாளன், தர்ஷன் இருவரும் மேடையில் முகம் கருக்க நின்றிருக்க, அச்சங்கத்தின் உறுப்பினர் மைக்கில் ஜனகனை வரவேற்று மேடைக்கு அழைத்தார். ஜனகன் பார்வை மேடையில் இருப்பவர்கள் மேல் பதிய, “சார்.. ப்ளீஸ் கூட்டம் வேண்டாம்..” என்று பாதுகாப்பு அதிகாரி தீனதயாளன், தர்ஷனை கீழிறங்க சொன்னார்.

அவர்கள் மறுக்க முடியாமல் மேடையை விட்டு கீழிறங்க, ஜனகன் மேடையேறினான். அவனுக்கு முன் அவனின் மாமா மேடையில் மாலை, மரியாதையுடன் நின்றிருந்தார்.

Advertisement