Advertisement

மதுரை வீரன் பொம்மி 15

ஜனகனின் பேச்சும், பார்வையும் அதில் ஒளிந்துள்ள அவன் கோவமும் எதிரில் இருப்பவர்களுக்கு புரியாமல் இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு பிறகான அவன் வருகை அத்துனை மகிழ்ச்சியாக இருக்க போவதில்லை என்பதை அவன் செயலே காட்டி கொடுத்தது. நிச்சயம் ஒரு போராட்டம் அவர்களுக்குள் நடக்கும்.

இதை அப்பாவும், மகளும் புரிந்து கொண்டது போல போனில் உள்ள சிவனேஷ்வரனும் புரிந்து கொண்டு தான் இருந்தான். அதனாலே, “அவங்க பாவம் ஜனா..” என்றான்.

“யார் பாவம்.. இவங்களா..?” கண்களில் சட்டென ஒரு அக்னி பற்றி கொண்டது.

“நிச்சயமா.. உன்னோட கஷ்டத்துக்கு எந்த விதத்திலும் அவங்க கஷ்டம் குறைஞ்சது இல்லை..” சிவனேஷ்வரன் அழுத்தமாக சொன்னான்.

“என்னை நம்பாம போனவங்க கஷ்டப்படுறதால எனக்கென்ன ண்ணா..? அவங்க ஊரை விட்டு துரத்திவிட்ட ஜனா இனி இல்லை.. அவ்வளவு தான்.. வைக்கிறேன்..” போனை கட் செய்து தேவேந்திரனிடம் தூக்கி போட, “டேய்..” என்று பிடித்தார் அவர்.

ஜனகனின் அண்ணா என்ற அழைப்பிலே அவன் மனநிலை புரிந்து கொண்டான் சிவனேஷ்வரன்.

“பாண்டி சார்.. இந்த கூட்டத்தை கிளம்ப சொல்லுங்க..” என்றான் ஜனா அப்பா, மகளை கை காட்டி.

“நாங்க இரண்டு பேர் உனக்கு கூட்டம்ன்னா, சுத்தி நிக்கிறவங்க எல்லாம் உன் மாமன், மச்சானா..?” தேவேந்திரனுக்கும்  அவன் போனில் பேசியதில் கோவம் வந்துவிட்டது.

ஜனா அவரை கண்டு கொள்ளாமல், பாண்டி பிடித்து வைத்திருந்த இருவர்  பக்கம் சென்றான். “ஏய் யார்ரா நீ.. எங்களை இந்த அடி அடிச்சுட்டு இருக்க..” அவன் வலி தாங்காமல் கத்த,

“ஏன் யார்ன்னு சொல்லி அடிச்சா தான் அடி வாங்குவியா..? இல்லன்னா வாங்க மாட்டியா..” ஜனா போலீரென்று அவன் கன்னத்தில் ஒன்று வைத்தான்.

அவன் அலறி, “எதுக்குன்னு தெரியாம அரை மணி நேரமா அடி வாங்கிட்டு இருக்கோம் சார்..” என்று அழுகையுடன் சொல்ல,

“நானும் தான் உங்களை எதுக்கு அடிக்கிறேன்னு தெரியாம அரை மணி நேரமா அடிச்சுட்டு இருக்கேன். பாரு கை, கால் எல்லாம் சலுக்குது, எருமை மாடு மாதிரி வளர்ந்திருகீங்க, ஒழுங்கா அடுத்த முறை வெய்ட் குறைச்சு வைக்கிறீங்க, இல்லை..” என்று விரல் நீட்டி மிரட்ட, அஹாஹா.. என்று பாண்டிக்கு ஒரே சிரிப்பு.

அடி வாங்குபவர்கள், தேவேந்திரன் மூவரும் சேர்ந்து பாண்டியை முறைக்க, “சார்.. பாருங்க..” என்று ஜனாவிடம் சொல்லி வைத்தான்.

“எங்க பாண்டி சாரையே முறைக்கிறீங்களா..?” என்று திரும்ப அறை வைக்க,

“சார் அவரும் தான் முறைச்சார் எங்களை மட்டும் அடிக்கிறீங்க..” அவன் நொந்து போய் சொன்னான்.

“யாருன்னு தெரியாதவர் மேல எல்லாம் நான் கை வைக்கிறதில்லைடா..” ஜனா சொல்ல,

“அப்போ எங்களை மட்டும் உங்களுக்கு தெரியுமா..?” அவன் கேட்டான்.

“அரை மணி நேரமா தெரியும்.. அவரை இப்போ அஞ்சு நிமிஷமா தானே பார்க்கிறேன், என்ன இருந்தாலும் நீங்க சீனியர் இல்லை.. உங்க மேல பாசம் ஜாஸ்திடா..” ஜனா இருவரையும்  தோளோடு கட்டிகொண்டு சொல்ல,

“அப்போ அவங்க மேல இருக்கிற பாசம் கூட என் மேல இல்லைன்னு சொல்றியா..?” தேவேந்திரன் கத்தினார்.

“ஐய்யயோ.. யாருயா நீ.. அவர் பாசம் என்னன்னு அடி வாங்குற எங்களுக்கு தான் தெரியும், நீ கம்முன்னு இருயா..” என்று அடி  வாங்கும் ஆசாமி தேவேந்திரனை கத்திவிட, திரும்ப ஒரு குத்து அவன் வாயிற்கு.

“ஸ்ஸ்ஸ்.. இப்போ என்ன சார்..?” அவன் வலியில் கேட்க,

“என் பக்கத்துல இருந்துட்டு குரல் உசத்துற..? தப்பில்லை..” ஜனா கையை முறுக்கி நாக்கை கடிக்க,

“தப்பு தான்.. தப்பு தான்.. எங்களை வுட்டுடுங்க..” அவர்கள் கையெடுத்தே கும்பிட்டுவிட்டனர்.

“ச்சு.. பாண்டி சார் விட்டுடலாம்.. என்ன இருந்தாலும் எங்க ஊர்க்காரங்க..” ஜனா அவர்கள் கழுத்தோடு வளைக்க போக, திரும்பவுமா என்று அவர்கள் ஓடியே போனார்கள்.

“பாண்டி சார் பஞ்சாயத்து முடிஞ்ச்.. நாம கிளம்பலாமா..?” ஜனா கைகளை தூக்கி சோம்பல் முறித்து நகர,

“ஜனா..” என்று அவன் முன் நின்றார் தேவேந்திரன்.

பாண்டி கூட்டத்தை கலைத்துவிட்டதுடன், நடுரோட்டில் சாவியோடு  நிறுத்து வைத்திருந்த தேவேந்திரன் காரையும் ஓரம் நிறுத்தினான்.

ஜனகனோ தன் முன் நின்றிருந்தவரை  சுத்தி கொண்டு போக, எட்டி அவன் கை பிடித்தார் தேவேந்திரன். ஜனகன் முகம் கோவத்தில் சிவக்க, “ப்பா..” என்று பொம்மி மறுப்பாக தலையசைத்தாள்.

அதில் ஜனகன் அவளை பார்க்க, பொம்மி அவனை வாஞ்சனையாக பார்த்து நின்றாள். இன்னுமே ஜனகனுக்கு சுர்ரென்று ஏற, “என்னடி..” என்றான் அதட்டலாக.

“மாமா.. நீங்க என்னை பேசுங்க.. ஆனா இங்க இல்லை.. நம்ம வீட்ல..” பொம்மி மிகவும் தீர்க்கமாக சொன்னாள்.

‘வளர்ந்துட்டா..’ ஜனகன் மனம் உடனே சொன்னது.

“வீட்லயா..? வீடுன்னு ஒன்னு இருக்கா என்ன..?” அவன் அளவில்லா நக்கலாக கேட்க,

“இருக்கு.. உங்க அப்பா, அம்மா இருக்கிற இடம் தான் வீடு, உங்க வீடு.. அது உங்களுக்காக தான் வாசல் பார்த்திருக்கு..” பொம்மி தெளிவாக சொன்னாள். அப்பா, அம்மான்னு சொல்லி என்னை வீக் பண்ண பார்க்கிறா.. ஜனகன் அவளை முறைக்க, தேவேந்திரனுக்கோ அவன் கோலமே தாங்க முடியாததாக இருந்தது.

“என்ன ஜனா இது..? ஏன் இப்படி..?” என்று வேதனையாக கேட்டார்.

“என்ன ஏன் இப்படி..? பர்ஸ்ட் ஆப் ஆல் நான் எப்படி இருந்தா உங்களுக்கு என்ன..?” ஜனகன் அவரை அந்நியமாக பார்க்க,

“என்னடா பார்வை இது.. யாரோ போல பேச்சு வேற.. ஒழுங்கா வா, நம்ம வீட்டுக்கு போலாம்..” அவர் அவனை கையோடு அழைத்து செல்ல பரபரக்க, அவனோ “நம்ம வீடா..?” என்று சிரித்தான்.

“வீடுன்னா கஷ்டத்துலயும், நஷ்டத்திலயும் கூடவே இருப்பாங்களே அதுவா..? அப்போ நான் பிறந்ததிலிருந்து இருந்தது வீடு இல்லை போல. ஏன்னா  ஒரு பிரச்சனைன்னு வரும் போது எல்லோருமா சேர்ந்து துரத்தி என்னை விட்டுட்டாங்க சார்..”  என்றான் அவரிடமே.

தேவேந்திரன் வருத்தத்துடன் கண்களை மூடி திறந்தவர், “அதுக்காக இப்போ வரைக்கும் நான் வெந்துட்டு இருக்கேன்டா..” என்றார்.

ஜனகன் அவரை நேரே பார்த்தான். ஏதோ சொல்ல போகிறான். இப்போதே நெஞ்சின் மேல் கை சென்றது. “என் அப்பாக்கு அடுத்த இடம் உனக்கு தான், என் லைப்ல என்னை விட உனக்கு தான் அதிக உரிமை கொடுத்திருந்தேன். அந்த உரிமையை என்னை ஊரைவிட்டு அனுப்பினதுல நீ காட்டியிருக்க வேண்டாம்.. நீயா முடிவெடுத்து என்னை அனுப்பி வைச்சுட்ட, அதோட என்கிட்ட உனக்கான எல்லாம் முடிஞ்சு போச்சு.. இட்ஸ் ஓவர்.. பினிஷ்ட்..” தீவிரமாக சொன்னவன், பொம்மியை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.

அவளோ நிதானமாக, “உங்க மாமாகிட்ட நீங்க சொன்ன ஓவர் எனக்கு செல்லாது மாமா.. எனக்கும், உங்களுக்கும் நடந்த உறுதி இன்னும் அப்படியே தான் இருக்கு, என் மாமா மேல எனக்கிருக்கிற உரிமை எப்போவும் மாறாது, மாறவும் நான் விட மாட்டேன்..” மெல்லிய சிரிப்புடன் தான் சொன்னாள். ஆனால் அந்த தீவிரம். அவளின் மாமனுக்கு மேல் இருந்தது.

ஜனகன் அவளை அப்படியா என்று புருவம் தூக்கி பார்த்தவன், பாண்டி எடுத்து வந்த காரில் ஏறி சென்றுவிட்டான்.

“வாங்கப்பா..” என்று மகள் அவரை கை பிடித்து காருக்கு கூட்டி வந்தாள். ட்ரைவிங் சீட்டில் தான் அமர்ந்து, பக்கத்தில் அமர வைத்த அப்பாவிற்கு தண்ணீர் கொடுத்தாள்.

“என்னை இப்படி பேசிட்டானே கண்ணு..?” அவர் தண்ணீரை வாங்காமல் கேட்டார். அவ்வளவு தான். அதுவரை அரும்பாடுபட்டு அடக்கி வைத்திருந்த பொம்மியின் கண்ணீர் வெடித்து கொண்டு சிதறிவிட்டது. கைகளில் முகம் மூடி அப்படி ஒரு அழுகை.

“கண்ணு.. என்ன இது..? உன் மாமா பேசினத்துக்கு அழுறியா. அவன் கிடக்கான், கொஞ்ச நாளைக்கு இப்படி தான் விறைச்சிட்டு திரிவான், அப்பறம் நம்மகிட்ட வந்துடுவான், நான் வர வைச்சிடுவேன், அப்படி எப்படி அவனை விட்டுடுவேன், நீ அழாத கண்ணு..” தேவேந்திரன் மகள் அழுகையில் அவளை தேற்ற, மகளோ மறுப்பாக முகம் துடைத்து நிமிர்ந்தாள்.

அழுகைக்கு மாறாக அவளின்  முகத்தில் மகிழ்ச்சி. இன்னும் கூட நன்றாக கத்தி வாய் விட்டு அழ வேண்டும் என்ற ஆசையை அடக்கி கொண்டாள். ஆம் ஆசை தான். அழ ஆசை. இரட்டிப்பு மகிழ்ச்சி அல்லவா. சில வருடங்களாக அவள் தொலைத்து தேடிய இரண்டும் ஒரே நாளில் கிடைத்தால்..?

மாமாவை பார்த்தது அவளை  கோபுரத்தின் உச்சியில் நிற்க வைத்தது என்றால் அதில் கிரீடம் வைத்தது அப்பாவின் ‘கண்ணு’ என்ற அழைப்பு. அஹ்ஹா. சிறு விஷயம் தான். ஆனால் இழந்தவர்களுக்கு தான் தெரியும் சிறு அழைப்பின் ஏக்கம். அப்பாவின் கண்ணு என்ற அழைப்பு அவளுக்கு அப்படியான ஒன்று தான்.

ஜனகன் கிளம்பிய நாளில் இருந்து மெல்ல மெல்ல தொலைந்து போக ஆரம்பித்த அப்பாவை இன்று தான் பழைய படி பார்க்கிறாள். ஜனகனின் வருகை தந்த மகிழ்ச்சியோடு இதுவும் சேர்ந்து கொள்ள, தனியே அதை கையாள முடியாமல் அவர் கை பிடித்து தோள் சாய்ந்து கொண்டாள்.

தேவேந்திரன் மகள் தலை தடவியவர், தொண்டையை செருமி கொண்டார். அதில் தன்னை மீட்ட மகள், “தண்ணீர் குடிங்கப்பா..” என்று குடிக்க வைத்தாள். தேவேந்திரன் முகம் தெளியாமல் இருக்க, “ப்பா.. நான் ஒன்னு சொல்லவா..?” மகள் அவர் கை பிடித்து கேட்டாள்.

அவர்  கேள்வியாக பார்க்க, “மாமா உங்களை கேட்டதுல வருத்தம் தான்ப்பா, ஆனா அவர் கேட்டது சரி தானே..?” என்றாள். தேவேந்திரனுக்கு கோவம் வந்துவிட்டது.

“ப்பா.. ப்ளீஸ்.. கோவத்தை விட்டா தான் நான் உங்களுக்கு சொல்றது புரியும், மாமா லைப்ல தாத்தாவை விட நீங்க தான் அதிகம் இருந்திருக்கீங்க, உங்களுக்கே இது தெரியும், அப்படி இருக்கும் போது நீங்க அவருக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எதிர்பார்க்கிறது தப்பில்லை, அதோட அன்னைக்கு.. க்கும்.. அன்னைக்கு நீங்க அவரை போக சொன்னப்போ.. மாமா.. மாமா உங்களை அதை சொல்ல நீ யார்ன்னு கேட்டிருந்தா..”

“கேட்டுடுவானா அவன்..?” தேவேந்திரன் சட்டென கத்தினார்.

“ப்பா.. ப்ளீஸ்.. அவர் கேட்க மாட்டார் தான், ஆனா அவர் கேட்டிருந்தா யோசிச்சு பாருங்க, நாம எல்லாம் போக சொன்னப்போ அவர் போயிட்டார், நம்ம எல்லார் மேல அவருக்கு இருந்த பாசம்,  மரியாதை தானே அவரை  நமக்காகன்னு சொந்த மண்ணை விட்டு போக வைச்சது..”

“அதென்ன கண்ணு ‘இருந்த’ பாசம்ன்னு சொல்ற..? இப்போவும், எப்போவும் நாம தான் அவனுக்கு பாசம், பாயசம் எல்லாம்..”

“சரிப்பா.. அப்படி தான், ஆனா நாமும் அவரை உடனே நெருக்கி பிடிக்க வேண்டாம்ப்பா, பார்ப்போம்..”

“என்னத்தை பார்க்கிறது அவன் இப்படி ரவுடியா”

“ப்பா..” மகள் இடையிட்டாள். “மாமா கண்டிப்பா இது கிடையாது..” மிக உறுதியாக சொன்னாள்.

Advertisement