Advertisement

மகன் மறைவில் ராஜலக்ஷ்மியின் மருத்துவமனை வாசம் மேலும் ஒரு வாரம் கூடி போனது. மருந்துகளால் அவரை சமாளித்து வீட்டிற்கு அனுப்பி வைக்க, கீர்த்தனா அங்கிருந்தாள். உடன் அவளின் தங்கை அதிதி. பெரியப்பாக்கள் மறுக்க மறுக்க அவர்களின் கோவத்தை சம்பாதித்து, கிட்டத்தட்ட அவர்களை எதிர்த்து தான் வந்திருந்தாள்.

வேலய்யன் தம்பதிக்கு அவர்களை பார்க்கவும் அவ்வளவு ஆசுவாசம் தான். ஆனால் தேவேந்திரன் அண்ணாக்களை நினைத்து அவர்களை திரும்ப போக சொல்ல, “நாங்க ஏன் போகணும்..? இது எங்க பாட்டி வீடு..” என்று அதிதி சட்டம் பேசி ரூம் பிடித்து கொண்டாள்.

கீர்த்தனா வாய் மொழியால் பதில் சொல்லாமல், இது அவள் வீடு என்று பொறுப்பை கையில் எடுத்து காட்டினாள். சமையலோடு, பெரியவர்களை கூடவே இருந்து முழு நேரமும் பார்த்து கொள்ள அப்பாவிடம் கேட்டு ஆள் வைத்தவள், அவளின் ஒரு வருட கல்லூரி படிப்பிற்கு அங்கிருந்தே சென்றாள்.

அதிதி பாதி நாட்கள் இங்கே, பாதி நாட்கள் அப்பா வீட்டில் என்று கடத்தினாள். வயதான பெற்றவர்கள் பெண் பிள்ளைகளுடன் தனியே இருப்பதில் மன வருத்தம் கொண்ட சாந்தி கணவரிடம் பேசி அவர்கள் ஜாகையை அம்மா வீட்டிற்கு மாற்றி கொண்டார். அவரின் குழந்தைகளும் இங்கிருந்தே பள்ளிக்கு செல்ல முடியும் என்பதால் சுதாகரும் ஏற்று கொண்டார்.

பெற்றவர்கள் தனிமை என்பது வீட்டளவில் இல்லாமல் போனாலும் மனதளவில் மகனின் வெற்றிடத்தை அவர்களால் நிரப்ப முடியவில்லை. ஒரு நாள் இல்லை ஒரு நாள் மகன் திரும்ப அவர்களிடம் நிச்சயம் வருவான் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் எப்போது வருவான் என்ற ஏக்கமே அவர்களின் வேதனைக்கு காரணம்.

பிறந்ததில் இருந்து அவனை பிரிந்தது இல்லை. புதிதான பிரிவு என்பதோடு அவன் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதும் மனதை அரித்தது. எப்படி இருக்கிறானோ..? என்ன செய்கிறானோ..? என்று அனுதினமும் அவனின் சிந்தனை தான்.

தேவேந்திரன் விடாமல் மகனை தேடி கொண்டு தான் இருக்கிறார் என்று தெரியும். ஆனால் அவரிடம் முன் போல பேச முடியவில்லை. கேட்கமுடியவில்லை. ஆம் மாற்றம் என்பது அவரிடமும் தான். அதுவும் அதிகமே.

தனிப்பட்ட முறையில் அவர் மாறிப்போனார். அதே சமயம் வளர்ந்தும் போனார். பணத்தில், பலத்தில், அதிகாரத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தும் விட்டிருந்தார்.

கண்டிப்பாக, ஆளுமையாக, அண்ணன்களே அவரை கேட்டும் செய்யும் அளவு தொழிலில் வளர்ந்து விட்டிருந்தவர், உள்ளுக்குள் தன்னை குறுக்கியும்  கொண்டு விட்டிருந்தார். எந்தளவு என்றால் மாமியார் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க மறுக்கும் அளவு.

தன் வீடு, மாமியார் வீடு என்றெல்லாம் அவருக்கு இல்லை. எல்லாம் ஒரே வீடு. அவரின் வீடு என்றிருந்தவர் இன்று அந்த வீட்டில் விருந்தினராக வந்து செல்கிறார். சில வருடங்களுக்கு முன், ஒரு நாள் இரவில் இந்த வீட்டின் உரிமையாளன் ஸ்டேஷனோடு சென்றதில் அவரின் மாற்றம் ஆரம்பித்தது.

தன் உடமைகளை எடுக்க கூட அவன் வீடு வரவில்லை. மாட்டேன் என்றான். “நான் ஏன் அந்த வீட்டுக்கு வரணும்.. ஊரை விட்டு போறவனுக்கு வீடு ஒன்னு கிடையவே கிடையாது..” என்று அர்த்த ராத்திரியில் கத்தினான்.

அன்றிருந்த மனநிலையில் இவர்களுக்கு அவன் போனால் போதும் என்பது மட்டுமே. அவனின் காயத்தின் அளவு புரியவில்லை. அதனாலே “பரவாயில்லை.. நாங்க எடுத்திட்டு வந்து தரோம்..” என்று சில நிமிடங்களில் பைல், உடை, பணம் அடங்கிய பையை அவனிடம் கொடுத்தார் தேவேந்திரன்.

“எத்தனை நாள் ஆசை உனக்கு இது..?” என்று மாமனிடம் கேட்டான்.

“ஜனா..”

“உன்னை இப்படி நான் போக விட்டுடுவேனா, என்னை நீ துரத்துற இல்லை..” அவன் கடைசியாக கேட்ட வார்த்தைகள் இன்றும்  அவரின் தொண்டை குழியில் சிக்கி பலமாக இறுக்கியது.  தேவேந்திரன் ஒரு கையால் தொண்டையை தடவி கொண்டார்.

அவன் கேட்டது சரி தானே, என்னை அவன் விட்டிருப்பானா..? உயிரே போயிருந்தாலும் விட்டிருக்க மாட்டான்.. நான் ஏன் அவனை விட்டேன்..? உள்ளுக்குள் அதே கேள்வி தான் தினமும். ஆனால் பதில் தான் இல்லை.

அவனுக்கு இருந்த தைரியம், தன்னம்பிக்கை எங்களிடம் இல்லையா..? நாங்கள் கோழையாகி அவனை தண்டித்து விட்டோமா..? காலம் கடந்த வருத்தம்.

என்ன பெரிய பணம், பதவி, அதிகாரம்..? தனிமனுஷனோட தன்னம்பிக்கை சாகாத வரை அவன் சாக மாட்டான் தானே..? அப்பறம் நாங்க ஏன் அவனை போக சொன்னோம்..? அதுவும் யாரோ ஒருத்தன் மிரட்டலுக்கு பயந்தா..? அவருக்கே இப்போதெல்லாம் தாங்கமுடியவில்லை.

இதோ சில வருஷத்துல வளர்ந்துட்டோமே..? அன்னைக்கு எந்த தீனதயாளனை பார்க்க கேட் வாசல்ல காத்து கிடந்தோமோ இன்னைக்கு அதே தீனதயாளன் கேட் எங்களுக்காக எந்நேரமும் திறந்திருக்கே..? இதுக்காக பார்த்தா அவனை அந்த அர்த்த ராத்திரியில குடும்பமா சேர்ந்து அனுப்பி வைச்சோம்..?

தூரத்தில் இருந்து மிரட்டிய பணம், அதிகாரம் எல்லாம் இன்று அவரை கையிலேந்தி தாங்குகிறது. மூன்று ஹோட்டல் வைத்து உள்ளூரில் நான்கு பேர் அடையாளம் காட்டும் அளவு வசதியான வாழ்க்கை என்பது மாறி இன்று தமிழகத்தை கடந்து பல ஹோட்டல், பள்ளி, கல்லூரி என்று பல அடிகள் முன் சென்றுவிட்டனர். செல்ல வைத்தார் தேவேந்திரன்.

அவர்கள் குடும்பத்தின் அஸ்திவாரம் என்பது மிகவும் உறுதியானது. ஏன் மேல் கட்டிடம் எழுப்ப கூடாது என்று அவரை சிந்திக்க வைத்தார் தீனதயாளன். அவரின் ஹோட்டலில் வேலை செய்யும் ஆளை வைத்து அவரையே ஸ்டேஷனில் குற்றவாளியாக நிற்க வைத்ததை மறந்திட முடியுமா..?

மறந்தும் இருப்பார் அன்றே ஜனகனை ஊரை விட்டு அனுப்பாமல் இருந்திருந்தால். அது தான் இல்லையே..? ஒரு மூன்று ஏக்கர் நிலத்துக்காக எத்தனை பேர் வாழ்க்கை மாறி போனது. அன்றய சூழ்நிலை எதையும் யோசிக்க விடவில்லை.

“அவனை கட்டாயப்படுத்தி அனுப்பி வைச்சுட்டோம், அதுக்காக இத்தனை வருஷம் எங்களை தண்டிக்கிறானே..” ஜனாவை தேடும் அளவு அவன் மேல் கோவமும் உண்டு.

வங்கியில் குறிப்பிட்டிருந்த நாளில் ரிப்போர்ட் செய்ய முடியாத தாமதத்தை ஈடு கட்ட மெடிக்கல் சர்டிபிகேட் வரை தயார் செய்து அனுப்பி வைத்திருந்தார். ஆனால் அவன்..? “ராஸ்கல்.. என்னைக்காவது என் கையில் கிடைக்காமலா போய்விடுவ..?” அவனின் வேர் நாங்க தானே. வருவான்.. கட்டாயம் வருவான். அன்றைக்கு என்னிடம் வாங்குவான்.. அந்த நாளுக்காக அவரின் காத்திருப்பை  போல அவரின் மகளும் காத்திருக்கிறாள். ஆனால் அவனை அடிக்க இல்லை அணைக்க..!

ஆம்.. அவளின் மாமா வேண்டும். மாமா என்றால் தாய் மாமாவாக இல்லாமல் அவளின் எல்லாமுமாக அவன் வேண்டும். பொம்மி.. பொம்மை.. பொம்மா.. என்ற அவனின் அழைப்பு வேண்டும்.

“என்கூட வந்துடுறியா..? நான் தனியா போக மாட்டேன்..” என்று அவளை கேட்டானே..? அந்த வார்த்தை.. அவளுக்கான அவனின் ஏக்கம்.. எல்லாம் திரும்ப வேண்டும். இன்னும் அதிகமே வேண்டும். கொடுப்பானா..? சந்தேகமே..

இன்றயை அவனின் மனநிலை என்னவென்று தெரியாத வரை எதுவும் சாத்தியமில்லை. தெரியவேண்டும் என்றால் அவன் கண் முன் வர வேண்டும். வருவானா..? என்று கடந்து செல்லும் கோவிலை பார்த்து மனதுக்குள் வேண்டி திரும்பியவள் முன் அவளின் மாமா ஜனகன்.

கீர்த்தனாவிற்கு அவளின் கண்களையே நம்ப முடியவில்லை. இமை சிமிட்டி திரும்பி பார்க்க அவனே தான். மாமா.. என்ற வார்த்தை தொண்டையிலே நிற்க, அப்பாவின் கையை வேகமாக தட்டினாள். அவரிடம் இருந்து அசைவே இல்லை என்பதில் மகள் பார்க்க அவரின் இமைக்கா பார்வையும் நான் அவனை கண்டுவிட்டேன் என்றது. காரும்  நின்றிருந்தது. சாலையில் கூட்டமும் சேர்ந்திருந்தது.

அப்பா, மகள் இருவரும் வேகமாக கூட்டத்தை தள்ளி அவன் முன்னே சென்று நிற்க,  ஜனகன் அவர்களை பார்க்க வேண்டுமே. அவன் தான் படு பிசியாக இருக்கிறானே. ஒற்றை கையால் அப்பா, மகள் இருவரையும் ஒதுக்கிவிட்டவன், எதிரில் இருந்தவனை பந்தாடி கொண்டிருந்தான்.

“டேய்.. ஜனா..” என்று தேவேந்திரன் திரும்ப அவன் முன் சென்று நிற்க,

“யோவ் யாருயா நீ.. தள்ளு..” என்று பாண்டி அவரை கை பிடித்திழுத்தான்.

“நீ.. நீ அன்னைக்கு..” தேவேந்திரன் அவனை அடையாளம் கன்டு திக்கி ஜனகனை பார்த்தவர், வாயில் கை வைத்தார். அடுத்த நொடி ஆவேசமும் கொண்டவர், “டேய் என்னடா ரவுடியா வந்து நிக்கிற..?” என்று ஜனகன் கை பிடித்து கத்தினார்.

“ஆங்.. பின்ன ஜில்லா கலெக்ட்ராவா வருவாங்க..” என்று எகத்தாளம் பேசினான் அவன். பரட்டை தலை, கிழிந்த ஜீன்ஸ், முகம் முழுக்க தாடி போதாதற்கு கையில், கழுத்தில் ஏதோ செயின்கள் வேறு.

“பார்க்க ரவுடி மாதிரி இருக்கான், அவன் முன்னாடி பொண்ணை கூட்டிட்டு போய் நிக்கிற, தள்ளி வாப்பா..” என்று பின்னால் ஒரு குரல் தேவேந்திரனுக்கு.

“எவண்டா அது..” என்ற ஜனகனின் கர்ஜனையில் கூட்டம் பின் வாங்க, என்ன கோலம் இது..? என்று தேவேந்திரன் கடுப்பானார்.

அவரின் மகளோ, “என்ன மாமா இவ்வளவு பெருசாயிட்ட..” என்று மிரட்சியுடன் கேட்டு வைத்தாள். இங்கிருந்து சென்றதற்கும் இப்போதுக்கும் உடல் கட்டே மாறி போயிருந்தது.

‘இவளுக்கு இவ கவலை..’ மனது முணுமுணுக்க, “அதை பத்தி உனக்கென்ன..?”  என்று அவனின் வாய் கேட்டது.

‘எனக்கென்னவா..? எனக்கு இல்லாம வேற யாருக்காம்..?’ அவள் முறைத்தாள்.

“பாண்டி சார்.. இவங்களை கிளியர் பண்ணி விடுங்க, எனக்கு சண்டை போட டிஸ்டர்பன்ஸா இருக்கு..”  ஜனகன் சொல்ல, தேவேந்திரன் பொறுமை பறந்து போனது.

“இரு உன்னை வரேன்..” என்று வேகமாக போன் எடுத்து சிவனேஷ்வரனுக்கு அழைத்தவர், “சார்.. என்ன சார் அவனை இப்படி பண்ணிட்டீங்க..?” என்று கேட்டார்.

என்ன பண்ணிட்டேன்..? சிவனேஷ்வரனுக்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் இருந்தவனிடம் விஷயம் வாங்கிவிட்டவன், “நீங்க போனை அவன்கிட்ட கொடுங்க சார்..” என்றான்.

இங்கு ஜனா  ஒருவன் நெஞ்சில் ஏறி  மிதித்து கொண்டிருக்க, “இந்தா உன் முதலாளி பேசு..” என்று விறைப்பாய் போன் கொடுத்தார்.

“அங்க என்னடா பண்ணிட்டிருக்க..? அவர் நான் தான் உன்னை ஏதோ பண்ணிட்டேன்னு என்னை கேட்கிறார்..?” அந்த பக்கம் சிவனேஷ்வரன் கத்த,

“கேட்டா பதில் சொல்லுங்க..” என்றான் இவன் சாதாரணமாக.

“நேர்ல வந்தேன் வை..”

“வரும் போது பார்த்துக்கலாம்.. இப்போ வைங்க.. எனக்கு இவன் குறுக்கை உடைக்கிற வேலை இருக்கு..”

“டேய்.. அவரை டென்ஷன் பண்ணாத..”

“அப்படி தான் பண்ணுவேன், இன்னும் பண்ணுவேன்.. நான் இங்க வந்ததே அதுக்காக தானே..?” என்று அப்பா, மகள் இருவரையும் பார்த்து சொன்னான்.

Advertisement