Advertisement

மதுரை வீரன் பொம்மி 14

அந்த வீட்டின் காலை பொழுது எப்போதும் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, வேலய்யன், “ராஜி..” என்று மனைவியை அழைத்தார் .

“அம்மா உள்ள இருக்காங்க.. சொல்லுங்கப்பா..” என்று இரண்டாம் மகள் சாந்தி வர,

“காய்கறி வாங்கிட்டு வந்தேன்மா..” என்று பையை கொடுத்தார்.

“தாத்தா.. மீன் எங்க..?” என்று பேர பிள்ளைகள் ஓடி வந்தனர்.

“நான் போறதுக்குள்ள கடையே எடுத்துட்டாங்க..” தாத்தா சொல்ல,

“கிடைக்கலையா..?” அதிதி முகம் சுருக்கியவள், “நாளைக்கு இன்னும் சீக்கிரமே போங்க தாத்தா, எப்படி கிடைக்காம போகுதுன்னு பார்க்கிறேன்..” என்றவள், தாத்தாக்கு சேர் எடுத்து போட்டாள்.

கணவருக்கு கஞ்சியுடன்  வந்த ராஜலக்ஷ்மி, “இன்னும் கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க, பள்ளி கூடத்துக்கு நேரம் ஆகலையா.. ஓடுங்க..” என்று பேர பிள்ளைகளை அனுப்பி வைத்தவர், “நீங்க கஞ்சி குடிச்சிட்டு கொஞ்ச நேரம் படுங்க..” என்று கணவருக்கு சொல்லிசென்றார்.

வேலய்யன் கஞ்சியை குடித்தவர் பின் இருக்கும்  தோட்டத்திற்கு சென்றார். அவர்களுக்கென மிச்சம் இருக்கும் அரை ஏக்கர் நிலம். அதிலே ஒரு பக்கம் தக்காளி, மறுபக்கம் மல்லி செடி வைத்திருந்தார். அதற்கு தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தவர், பக்கத்திலே இருக்கும் மகள்கள் நிலத்திற்கும் தண்ணீர் பாய்ச்ச போக, “தாத்தா..” என்று சரியாக வந்து நின்றாள் பேத்தி.

“வந்துட்டியா..? எப்படி தான் பார்க்கிறியோ..” வேலய்யன் சலித்து கொள்ள,

“இதை தான் செய்ய போறீங்கன்னு தெரியும், இதை வேற நின்னு பார்ப்பானேன்..” என்றவள் தானே சென்று மோட்டாரை நிறுத்தி வந்தாள்.

“கொஞ்ச நேரம் ஓடட்டும் பொம்மி.. மரம் தண்ணீர் இல்லாம காய கூடாதுமா, காப்பு காய்க்காது..”  வேலய்யன் சொல்ல,

“அதை தோட்டத்துக்கு சொந்தகாரங்க பார்த்துக்கட்டும், நீங்க அந்த பக்கமே பார்க்காம வாங்க போலாம்..” என்றாள் கீர்த்தனா.

“இதெல்லாம் நான் வைச்ச தென்னம்பிள்ளைங்ககம்மா.. பட்டு போறதை என்னால பார்க்க முடியாது..” அவர் வருத்தத்துடன் சொல்ல,

“எப்படியும் நான் கிளம்பி போனதுக்கு அப்பறம் வந்து தண்ணீர் பாய்ச்ச தான் போறீங்க, அப்பறம் என்ன பீலிங்..?” பேத்தி ஆதங்கமாக கேட்டாள்.

ஆதங்கம் என்பது மட்டுமில்லை கோவமும் தான். அவளால் சில விஷயங்களை ஏற்க முடியவில்லை. மாற்றவும் முடியவில்லை. இந்த வயதில் இவர் இத்தனை ஏக்கருக்கும் தண்ணீர் பாய்ச்ச இவரின் பெண் பிள்ளைகள் ஒய்யாரமாக தோப்பை குத்தகைக்கு விட்டு பணம் எடுத்து செல்கின்றனர்.

“வேலைக்கு ஆள் வைங்க சித்தி..” என்று அவளும் ஒவ்வொரு முறையும் சொல்லி கொண்டு தான் இருக்கிறாள். ஆனால் கடைசி இரண்டு பெண்களும் அதை கேட்பதாய் இல்லை.

“ஆள் கிடைக்கலை  பொம்மி, நாங்க என்ன செய்யட்டும்..?” இருவரும் ஒன்று போல சொல்வர்.

“அவ்வளவு தானே.. இதோ ஆள்..” என்று அவளே வைத்தால் அதற்கும் பணம் தர மாட்டார்கள். இந்த மாசம் இந்த செலவு, அந்த மாசம் அந்த செலவு.. என்று கை விரிக்க, வேலய்யன் ஆட்களையே நிறுத்த சொல்லிவிட்டார். கீர்த்தனா தான் விடாமல் “செய்யட்டும், நாம கொடுத்துக்கலாம்..” என்று வைத்திருக்கிறாள்.

இல்லை என்றால் மொத்த சொத்துக்கும் வேலய்யனே தண்ணீர் பாய்ச்ச நேரிடும். அவர் உடல் என்னவாவது..? இப்போதே சில நேரம் வயதின் காரணமாக சோர்ந்து விடுகிறார். சத்தான உணவு, அளவான நடமாட்டம் என்று அவரை பேணி காத்து வருகின்றனர்.

தன் மீதான குடும்பத்தினர் அக்கறை, கவலை வேலய்யனுக்குமே புரியாமல் இல்லை. அவரே  முன்பை விட பல மடங்கு சிரத்தை எடுத்து தன் உடலை பாதுகாத்து கொள்கிறார் தான். ஆனாலும் தோட்டம், மரங்களை பார்க்கும் நேரம் அவரின் உள்ளம் தவிப்பதை அவரால் தடுக்க முடிவதில்லை. இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார். சரியாக அந்நேரம் பேர பிள்ளைகளோ, மனைவியோ, மகள்களோ, மாப்பிள்ளைகளோ அவரை கட்டுப்படுத்தி விடுவர். இன்று போல..

“வாங்க போலாம்.. ஆளுங்க வந்ததுக்கு அப்பறம் இதை எல்லாம் பார்த்துக்கோங்க, தனியா தோட்டம் எல்லாம் வர வேணாம் தாத்தா..” அவர் கை பிடித்து வரப்பில் நடந்தாள் கீர்த்தனா.

“விட மாட்ட..” வேலய்யன் அவளுடன் நடந்தவர், “இன்னைக்கு எங்க போகணும்மா..?” என்று கேட்டார்.

“அப்பா வந்து சொல்வார் தாத்தா.. நான் சாப்பிட்டு கிளம்பினா சரியா இருக்கும்..”

“நீங்க கேட்டிருந்ததுக்கு இன்னைக்கு தான் ஏதோ அனுமதி கொடுப்பாங்கன்னு மாப்பிள்ளை சொல்லிட்டிருந்தார்..”

“ஆமா தாத்தா.. நம்ம பக்கம் எல்லா சரியா இருக்கு, கிடைச்சுடும்..”

“அது கிடைச்சுட்டா இன்னும் தான் உங்களுக்கு வேலை கூடும் இல்லை.. இப்போவே ஏழு நாளும் ஓட்டம் தான்..”

“என்ன பண்ண தாத்தா..? நமக்கு என்ன தேவையோ அதுக்கு ஓடி தானே ஆகணும்..”

“உண்மைமா.. எதுவும் இல்லாம நாங்க அனுபவிக்கிறதே போதும், உங்க யாருக்கும் இந்த தலையெழுத்து வேண்டாம்..”

“இந்த ஓட்டம் நம்ம எல்லோருக்கும் சேர்த்து தான் தாத்தா.. பார்த்துக்கலாம் விடுங்க..”  பேத்தி வீட்டிற்குள் நுழைந்தபடி சொல்ல, தேவேந்திரன் கார் வந்து நின்றது.

“வாங்க மாப்பிள்ளை..” வேலய்யன் வரவேற்க,

“வரேன் மாமா..” என்றவர், “கிளம்பலையா..?” என்று மகளிடம் கேட்டார்.

“இதோப்பா..” என்ற மகள் எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டு அதற்கேற்ப தயாராக  செல்ல, தேவேந்திரன் மாமனாருடன் அமர்ந்தார். ராஜலக்ஷ்மி மருமகன் வரவை அறிந்து வந்தவர், “மாப்பிள்ளை.. காபி..” என்று எப்போதும் போல கேட்டார்.

“இல்லைத்தை.. எல்லாம் ஆச்சு..” என்று அவரும் எப்போதும் போல ஒரு பதிலை தந்தார். பெரியவர்கள் முகம் அதில் வழக்கம் போல வாடியது.

அதிதி கல்லூரி செல்ல அவசரமாக ஓடி வந்தவள் அப்பாவை பார்த்ததும் அப்படியே பம்மினாள். தேவேந்திரன் நேரம் பார்த்து மகளை கண்டிப்புடன் பார்க்க, “சாரிப்பா..” என்றாள் மகள்.

“நாளைக்கும் இதே சாரி உன் வாயில இருந்து வந்தது இனி காலேஜ் கிடையாது, நம்ம ஹோட்டல்ல நிறைய வேலை இருக்கு.. பார்த்துக்கோ..” என்றுவிட்டார்.

அதிதிக்கு  கண்கள் கலங்கிவிட, “சாரிப்பா..” என்று திரும்ப சொன்னவள், மூவரிடமும் விடைபெற்று கல்லூரி பேருந்து நிற்கும் இடம் சென்றாள்.

“மாப்பிள்ளை.. சின்ன பொண்ணு..” ராஜலக்ஷ்மி பேத்தியின் கண்ணீரில் அவளுக்காக பேச வர,

“தினமும் அவ இப்படி தான் பண்றான்னு எனக்கு தெரியும் அத்தை.. அதோட காலேஜே  முடிக்க போறா, இன்னும் என்ன சின்ன பொண்ணு..? நீங்க அவளை விட்டு இன்னைக்கு செக் அப்க்கு போற வழியை பாருங்க, பானு பத்து மணி போல வருவா, சாக்கு போக்கு சொல்லாம போய்ட்டு வந்துடுங்க..” என்றவர், சாந்தி வரவும் அவரிடம் சுதாகர் பற்றி கேட்டார்.

“பசங்களை ஸ்கூல்ல விட போயிருக்கார் மாமா.. உங்ககிட்ட இந்த பைல் கொடுக்க சொன்னார்..” என்று கொடுத்தார்.

தேவேந்திரன் வாங்கி பார்த்தவர், “அவரை மதியம் போல ஹோட்டலுக்கு வர சொல்லு சாந்தி.. இது என்னன்னு பார்த்து முடிச்சிடலாம்..”  என்றவருக்கு போன் வர, அவரின் பெரிய அண்ணன்.

“சொல்லுங்கண்ணா..” என்று அழைப்பை ஏற்றவர், அந்த பக்கம் கேட்டதிற்கு “நீங்க பணம் எதுவும் கொடுக்காதீங்க, ம்ஹூம்.. நான் பார்த்துகிறேன், பரத்தை நேரா ஆபிஸ் வர சொல்லிட்டு, நீங்க இன்னைக்கு ஹோட்டல் போங்க..” என்று வைத்தார்.

“போலாம்ப்பா..” என்று மகள் புடவையில் தயாராகி வர, ராஜலக்ஷ்மி பேத்தியை நிறுத்தி தலைக்கு பூ வைத்துவிட்டார். அப்பாவும் மகளும் விடைபெற்று கிளம்பினர்.

“ம்மா, ப்பா.. சாப்பிட வாங்க..” சாந்தி அழைக்க,

“வரோம்மா..” என்றவர்கள் தேவேந்திரன் காரையே பார்த்திருந்தனர்.

இந்த சில  வருடங்களில் பல மாற்றங்கள். அவர்கள் வீட்டில் இருந்தே முதல் மாற்றம் ஆரம்பித்தது. வீட்டின் மகனை வெளியே அனுப்பி வைத்துவிட்டு பெற்றவர்கள் தனியே நின்றனர்.

பெண் பிள்ளைகள் ஓரிரண்டு நாள் அப்பா, அம்மாவுடன் இருந்துவிட்டு,  அவர்கள் குடும்பத்தை பார்க்க கிளம்பிவிட்டனர். பானுமதியை அங்கேயே தங்க வைக்க தேவேந்திரன் பார்க்க, வேலய்யன் தம்பதி வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டனர்.

தேவேந்திரன் அவர்களுடன் யாரை தங்க வைக்க என்று பார்க்க, கீர்த்தனா தான் கிளம்பி  நின்றாள். அவளின் பெரியப்பாக்களின் கடும் எதிர்ப்பில் அங்கு செல்ல தாமதமாக, இங்கு ராஜலக்ஷ்மி மயங்கி விழுந்திருந்தார். மகன் பேங்க் சென்று சேரவில்லை என்ற தகவலால். வங்கியில் இருந்து நேரே ஆள் வந்து விசாரித்து சென்றிருந்தனர்.

மகன் கோவமாக இருக்கிறான், பேசுவான் என்று இவர்கள் காத்திருக்க, அவனோ காணாமல் போயிருந்தான். போன் எடுத்து கணவருக்கு அழைக்க அடி எடுத்து வைத்தவர் கீழே சரிந்திருந்தார். இந்த நாட்களில் வேலய்யனை அக்கறை எடுத்து கவனித்து கொண்டளவு தன்னை கவனித்து கொள்ளவில்லை அவர்.

திடீர் செய்தியில் அவரின் ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறி, எப்போதும் மயங்கி விழுந்தார் என்று தெரியாத அளவு வீட்டின் வெறுமை. வேலய்யன் மதியம் போல வந்தவர் பார்த்து பதறி அக்கம் பக்கம் ஓடி, ஆட்டோ வரவைத்து மருத்துவமனை தூக்கி சென்றார். அமுதா தான் அன்று அவருக்கு உதவியது.

பசுபதி இதற்கும் பார்க்க வருவது போல வந்து, “என் தங்கச்சி பொண்ணை அன்னைக்கு வேணாம் சொன்னீங்க, இன்னைக்கு அவ தான் உங்களுக்கு உதவியிருக்கா..” என்று பேசி சென்றான்.

வேலய்யன் தம்பதிகள் வெளியே அவனை திட்டி அனுப்பினாலும் உள்ளுக்குள் உடைந்து தான் போனார்கள். ‘மகனை அனுப்பியிருக்க கூடாதோ,  இல்லை தாங்களாவது அவனுடன் சென்றிருக்க வேண்டுமோ..?’ என்று கண்ணீரில் கரைந்தனர்.

விஷயம் கேள்விப்பட்ட தேவேந்திரன் அதிர்ந்து போனார். எப்படி முடியும்..? அவனுக்கான வீடு வரை அவன் சென்று சேர்ந்ததை தொடர்ந்து ஆள் வைத்து பார்த்து உறுதி படுத்தி கொண்டாரே. பின் எப்படி காணாமல் போனான்..? அவர் குழம்பி தானே நேரில் சென்று பார்க்க, அவன் அங்கில்லை தான்.

அதற்கு மேல் அவர் தாமதிக்காமல் காவல் துறையை நாடினார். தீனதயாளன், தர்ஷன் மேல்  சந்தேகம். காவல் துறை விசாரித்து அவனே தான் கிளம்பி சென்றிருக்கிறான் என்று உறுதி படுத்தினர். அப்போதும் நம்பாமல் டிடெக்டிவ் வைத்து விசாரித்து அதே பதிலை தான் பெற்றுகொண்டார்.

Advertisement