Advertisement

இத்தனை நாட்கள் அவனை கட்டுப்படுத்தி வைத்திருந்ததே அவன் குடும்பம் தான். இப்போது அதற்கும் வழி பார்த்துவிட்டான். பார்க்க வைத்தான் தர்ஷன்.  பல மணி நேரம் அவனை, அவன் மாமனையும் ஸ்டேஷன் உள்ளே, வெளியே என்று நிற்க வைத்தானே.. அந்த நேரம், அந்த  சில மணி நேரங்கள் தான் தனக்கான நேரமாக அமைத்து கொண்டான். யோசித்தான். நிறைய யோசித்தான். பல கோணங்களில் நின்று பார்த்து முடிவெடுத்தான். ஓரிரு நிமிடம் தான் போனில். அடித்தும் விட்டான் தர்ஷனை.

தீனதயாளன் கொதித்து போய் அமர்ந்திருக்க, ஜனகனோ திடமாக நின்றிருந்தான். “ஏய்யா.. நானும் வரேன், உன்னை உள்ள அனுப்பிட்டு நான் வெளியே இருக்க மாட்டேன்..” வேலய்யன் மகனிடம் சொல்ல, மகனோ சம்மதிக்கவே இல்லை. நிச்சயம் உள்ளே அவனுக்கான வைத்தியம் நடக்கும் என்று தெரியுமே..!

“மாமா.. நான் போறேன், நீங்க இருங்க..” தேவேந்திரன் மருமகனுக்கு மேல் பிடிவாதம் பிடித்து ஜனகனுடன் உள்ளே சென்றார். தீனதயாளன் இவன் உள்ளே வர வரவே அடிக்க பாய்ந்து வந்தார். மகன் நிலைமை அவரை நிதானமாக இருக்க விடவில்லை.

“சார்..” என்று தேவேந்திரன் ஜனகனை மறைத்து நிற்க,

“யோவ் தள்ளி போயிடு.. எவன்னு எல்லாம் பார்க்க மாட்டேன்..” தீனதயாளன் மிரட்டலாக சொல்ல, ஜனகன் மாமாவை தள்ளி நிறுத்தி தான் முன்  நின்றான்.

“என் மகன் மேலயா கை வைச்சிருக்க..? உன்னை கொளுத்திடுறேன்..” என்று தீனதயாளன் வெறியுடன் அறைந்த அறையில் ஜனகனின் உதடு கிழிந்து ரத்தம் சொட்டியது. தேவேந்திரன் அவர்களுக்கு இடையில் செல்ல போக, போலீஸ் அவரை பிடித்து கொண்டனர். பக்கத்தில் இருந்த லத்தியை எடுத்து ஜனகனை அடித்து தீர்த்துவிட்டார்.

கைகளை பின்னால் கட்டி கொண்டு சத்தமே இல்லாமல் அடி வாங்குபவனை  கொல்ல தீனதயாளனுக்கு கைகள் பரபரத்தது. “எலெக்ஷ்ன் மட்டும் இல்லைன்னா உன்னை இங்கேயே தர்ஸ் ஆக்கிடுவேன்..” என்று ஆத்திரத்துடன் மிரட்ட, ஆட்கள் சிலர் வேகமாக உள்ளே வந்தனர்.

தீனதயாளன் அவர்களை புருவங்கள் சுருங்க பார்க்க, “என்ன சார் பண்ணி வச்சிருக்கீங்க..?” என்றனர். “கொஞ்சம் வாங்க..” என்று அவரை தள்ளி அழைத்து சென்றவர்கள், ஏதோ சொல்ல தீனதயாளன் திரும்பி ஜனகனை ஆத்திரத்துடன் பார்த்தார்.

“இதுவரைக்கும் நீங்க என்னென்ன செஞ்சிங்களோ எல்லாத்தையும்  ஆதாரத்தோட அனுப்பி வைச்சிருக்கான். கோவில் சொத்தை நீங்க எழுதி வாங்கினது மட்டும் வெளியே தெரிஞ்சா கண்டிப்பா வர எலெக்ஷன்ல நமக்கு வம்பு தான், கட்சி மூத்த ஆளுங்க எல்லாம் உங்களை கொஞ்ச நாள் அமைதியா இருக்க சொல்றாங்க..” என்றனர்.

“எப்போடா செஞ்ச இதெல்லாம்..?” தீனதயாளன் கோவமாக ஜனகனிடம் கேட்க,

“அவ்வளவு சீக்கிரம் நீங்க எங்களை விட மாட்டீங்கன்னு தோணிச்சு, முதல்ல இருந்து எல்லா ஆதாரத்தையும் சேர்த்து வைக்க ஆரம்பிச்சுட்டேன். இப்போதைக்கு உங்க கட்சி ஆளுங்களுக்கு மட்டும் தான் அனுப்பினேன், எதிர்க்கட்சி ஆளுங்களுக்கு அனுப்புறதும், அனுப்பாம இருக்கிறதும் உங்க கையில தான் இருக்கு..” என்றான் அவன் தெளிவாக.

“உன்னை உயிரோட விட்டா தானே அனுப்புவ..?” அவர் கத்த,

“அது பிரச்சனையில்லை.. போயிடும், டெக்னலாஜி வளர்ந்திடுச்சு தலைவரே..” என்றான்.

“என் மகனை.. இந்த தீனதயாளன் மகனை சாதாரண மிடில் கிளாஸ் நீ நாலு பேர் பார்க்க போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல வைச்சு அடிப்ப,  உன்னை அப்படியே விட சொல்றீயா..? வரது வரட்டும் பார்த்துகிறேன்..”

“தலைவரே.. கொஞ்சம் பொறுமையா இருங்க, எலெக்ஷன் முடியட்டும்..”

“அந்த நிலம் ஏன் வாங்கினீங்கன்னு எனக்கு தெரியும் தலைவரே..” ஜனகன் குரல் அழுத்தமாக வந்தது.

“என்ன.. என்ன தெரியும் உனக்கு..?”

“என்னவோ அது தெரியும்..”

“இப்போ என்ன சொல்ல வர நீ..? என்னால உன்னை விட முடியாது..”

“விடாதீங்க.. என்னை மட்டும்..” என்றான்.

“ஓஹ்.. உன் குடும்பத்துக்கிட்ட போக கூடாது சொல்ற, அப்போ கட்டாயம் போகணுமே..”

“நானும் போக வேண்டிய இடத்துக்கு போவேன்..”

“கொன்னுடுறேன் உன்னை..” அவன் கழுத்தை நெறிக்க போக, ஆட்கள் பிடித்துவிட்டனர்.

“தலைவரே ஏன் இவ்வளவு கோவம்..? நிதானத்துக்கு வாங்க, நம்ம லட்சியம் பெருசு, இந்த எலெக்ஷ்ன்ல நாம ஜெயிச்சுட்டா உங்க ரேஞ்ச் என்னன்னு யோசிச்சு பாருங்க, அப்போ இவன் எல்லாம் நமக்கு சுண்டக்காய்.. ஒரே நசுக்கு தான், ஆளே தெரியாம போயிடுவான், அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க..”

“யோவ்.. உங்களுக்கு எங்கய்யா நோகுது, அடி வாங்கி படுத்திருக்கிறது என் மகன், ரத்தம் கொதிக்குதுய்யா எனக்கு..”

“தலைவரே நம்ம அண்ணாச்சி வரார்..” ஒருவன் சொல்ல, தீனதயாளன் கட்சியின் மிக முக்கிய மூத்த உறுப்பினரான அண்ணாச்சி என்பவர் வந்தார். தேவேந்திரன் அண்ணா அவருடன் வந்தவர் ஜனா நிலையை பார்த்து பதறிவிட்டார்.

“என்ன சார் இப்படி அடிச்சு வைச்சிருக்கீங்க..?” என்று கோவமாக கேட்க,

“நான் பேசுறேன் இருங்க..” என்றார் வந்தவர். தீனதயாளன் அவரிடமும் குதிக்க, “எல்லாம் உன் மகனால் தான், அதான் நீ கேட்ட சொத்தை அவங்க கொடுத்துட்டாங்க இல்லை, விட வேண்டியது தானே.. ஏன் தேவையில்லாம இவங்களை சீண்டணும்..?” அண்ணாச்சி கேட்டார்.

தீனதயாளன் பதில்லாமல் நிற்க, “பக்காவா எல்லாம் எடுத்து வச்சிருக்கான்,  வெளியே வந்துச்சு கொஞ்ச நாளைக்கு நீயும் உன் மகனும் தான் டிவில வலம் வருவீங்க, பார்த்துக்கோங்க..” என்றார்.

“அதுக்காக என் மகனை அடிச்சவனை..”

“திரும்ப திரும்ப அதையே சொல்லாத, உன் மகனை முதல்ல அடிச்சது சிவனேஷ்வரன் தான். அவரை தொட முடியாம இவங்ககிட்ட உங்க செல்வாக்கை காட்டுவீங்களா..? போதும் இதோட எல்லாம் நிறுத்திப்போம். எல்லாம்  அவங்கவங்க வேலையை பாருங்க..” என்றார் அவர் கண்டிப்புடன்.

“முடியாது அண்ணாச்சி..”

“நாங்க எல்லாம் சேர்ந்து தான் உன்னை கட்சி தலைவர் ஆக்கியிருக்கோம், உன் ஒருத்தனால மொத்த கட்சிக்கும் அவப்பெயர் வரதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை.. பார்த்துக்கோ..”

தீனதயாளன் சில நிமிடங்கள் அமைதியானவர், “சரி.. நிறுத்திக்கிறேன், ஆனா இந்த பையன் இனி இந்த ஊர்ல இருக்க கூடாது..”

“வாய்ப்பில்லை.. என் ஊரை விட்டு நான் போக மாட்டேன்..” ஜனகன் உறுதியாக சொன்னான்.

“ஜனா.. அவசரப்படாத..” தேவேந்திரன் இடையிட்டார்.

“அண்ணாச்சி இவர் என் குடும்பத்துக்கிட்ட போகாம இருக்க தான் அந்த ஆதாரம் எல்லாம். மத்தபடி இவரால எனக்கு வரதை நான் பேஸ் பண்ணிப்பேன், அதுக்காக ஊரை விட்டு எல்லாம் நான் போக மாட்டேன்..” ஜனகன் முடிவாக சொல்ல,

“என்ன சார் இது.. பேசுங்க.. நல்ல முடிவா எடுங்க, எல்லா முறையும் நாங்க வந்து நிக்க முடியாது, ஏதோ நம்ம கட்சிக்கு நீங்க நிதி கொடுக்கிறீங்கன்றதுக்காக தான் இதெல்லாம், பேசுங்க..” என்று தேவேந்திரன் அண்ணாவிடம் சொன்னார் அண்ணாச்சி.

“இதோ.. இதோ பேசுறோம் அண்ணாச்சி..” என்றவர்கள் ஜனகனை தள்ளி அழைத்து சென்றனர்.

“மாமா..”

“ஜனா.. நான் பேசிடுறேன், பொறு, எப்படியும் உன் வேலைக்கு நீ இங்கிருந்து கிளம்புற முடிவுல தானே இருக்க, அப்படி நினைச்சு இங்கிருந்து கிளம்பிடு..”

“முடியாது மாமா..”

“ஏய்யா..” என்று வேலய்யன் வந்தவர் மகனை பார்த்து அழுதுவிட்டார்.

“மாமா பேசுங்க.. இப்போ அழுக எல்லாம் நேரமில்லை..” தேவேந்திரன் அண்ணா சொல்ல, ஜனகன் அவரை முறைத்தான்.

வேலய்யன் சூழ்நிலை உணர்ந்து முகம் துடைத்து கொண்டவர், “இவங்க சொல்றதை கேளுப்பு.. நம்மால இவங்களோட காலத்துக்கும் மல்லு கட்ட முடியாது, உனக்கு தெரியாதது இல்லை.. பணம், பதவி, அதிகாரம்ன்னு எல்லாத்துலயும் இவங்க  நம்மளை விட பல அடி மேல இருக்காங்க, இப்போ விட்டாலும் பின்னாடி உன்னை விட மாட்டாங்கய்யா. உன்னையே நம்பிட்டிருக்கிற எங்களை யோசிச்சு பாரு ராசா.. எங்க பிள்ளை எங்க இருந்தாலும் நல்லா இருந்தா போதும்ப்பா, உன் பேங்க்ல சொன்ன இடத்துக்கே போயிடுய்யா.. எங்களுக்காக போப்பு..” மகன் கை பிடித்து கெஞ்சலாக கேட்டார்.

“ப்பா.. உங்களுக்கு புரியலையா..? இவங்க என் மண்ணை விட்டு என்னை துரத்துறானுங்க.. நான் ஏன் போகணும்..? இவங்களுக்கு என்னை கொல்லணும்ன்னா கொன்னுக்க சொல்லுங்க, நான் போக மாட்டேன்..” ஆக்ரோஷமாக கத்தினான் மகன்.

“ஜனா நீ போய் தான் ஆகணும், இந்த விஷயத்துல உன் பேச்சை நாங்க யாரும் கேட்க மாட்டோம்..” தேவேந்திரன் முடிவாக சொல்ல,

“நானும் இந்த விஷயத்துல உங்க பேச்சை கேட்கிறதா இல்லை, போக மாட்டேன்னா போக மாட்டேன் தான்..” மருமகனும் உறுதியாக நின்றான்.

“ஜனா.. எப்போவும் நீயும்,  உன் குடும்பமும் சுயநலமா மட்டும் தான் இருப்பீங்களா..? மச்சான், மச்சான்னு உனக்காக உயிரை விடுற என் தம்பி உயிரை நீ வாங்கணும்ன்னு முடிவு பண்ணிட்டியா..? அப்படியா இவங்க எல்லாரையும் விட உனக்கு உன் மண்ணு பெருசா போச்சு..” தேவேந்திரன் அண்ணா கத்திவிட்டார்.

ஜனகன் முகம் கசங்கி போனது. அவனால் எப்படி சொந்த ஊரை விட்டு போக முடியும், அதுவும் இவர்களின் மிரட்டலின் பேரில். இதற்கு இங்கேயே உயிரை எடுத்து கொண்டால் கூட பரவாயில்லையே..

“ப்பா.. ப்ளீஸ், என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க.. நான்.. நான் எப்படி போவேன்..” அப்பாவிடம் துயரத்துடன் கேட்டான். வேலய்யன் மகன் கை பிடித்து கதற, தேவேந்திரனோ கலங்கும் கண்களை கட்டுப்படுத்தி, “எப்படி போகன்னா போய் தான் ஆகணும்,  நாங்க எல்லாம் நல்லா இருக்கணும் நினைச்சா நீ போய் தான் ஆகணும்..” என்றார்.

“அப்போ நான் இங்க இருந்தா நீங்க எல்லாம் நல்லா இருக்க மாட்டிங்களா..?” ஜனகன் மாமனை வெறுமையாக பார்த்தான்.

இங்கு சசுதாகர் மூலம் விஷயம் கேள்விப்பட்டு ராஜலக்ஷ்மியும் வந்துவிட்டிருந்தவர் மகன் காயத்தில் ரத்த கண்ணீர் வடித்தார். “உங்களுக்கு ஒரே மகன் இல்லை, அழுறதை விட்டு கொஞ்சம் அவனுக்கு எடுத்து சொல்லுங்க, சுத்தி பார்த்தீங்க இல்லை எத்தனை நூறு பேர்ன்னு, போற போக்குல எவனாவது எதாவது பண்ணிட்டு போயிட்டா அப்பறம் ஐயோன்னா வருமா, அம்மான்னா வருமா..?” அண்ணாச்சி அங்கிருந்து கத்தினார்.

அவரின் மறைமுக மிரட்டலில் ஜனகன் ரத்தம் சூடானது. உடல் விறைக்க முறைத்த அவன் கோவம் குடும்பத்தினருக்கு புரிய, இவனை இங்கே வைக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.  கொஞ்சல், கெஞ்சல், மிரட்டல் எல்லாம் ஓய்ந்து, கடைசியாக எமோஷனலாக அவனை அடித்துவிட்டனர்.

அப்பா, அம்மா தங்கள் மீது சத்தியம் வைத்து கொண்டவர்கள், “நீ கிளம்பலைன்னா நாங்க இல்லை..” என்றனர். ஜனகன் நம்ப முடியாமல் பெற்றவர்களை பார்த்தான்.

“நா.. நான், நீங்களும் என்னை துரத்துறீங்க இல்லை..” என்று கண்கள் சிவக்க கேட்டவன், “இவங்க மிரட்டலை எல்லாம் பார்த்து பயப்படாதீங்கம்மா, நான் சமாளிச்சுப்பேன், என்னை நம்புங்க..” என்று கெஞ்சவே செய்தவன், அவர்களின் அமைதியில் “யோசிச்சுக்கோங்க நான் போயிட்டா திரும்ப உங்ககிட்ட வரவே மாட்டேன்..” என்றான் ஆவேசமாக.

குடும்பத்தினர் அப்போதும் மௌனம் சாதிக்க,  “என்னை நம்ப மாட்டிங்களா..? உங்க யாருக்கும் நான் வேணாமா..” என்று கத்தினான். அவனால் இவர்களை எதிர்க்க முடியவில்லை. கெஞ்ச மட்டுமே முடிந்தது. யாரும் அவனுக்கு இசையைவில்லை.

“சரி.. நீங்களும் என்னோட வாங்க, நாம போலாம்..” என்றான் பெற்றவர்களிடம். அவர்கள் மறுத்துவிட்டனர். “சரியாகும்ய்யா.. நீ எங்ககிட்ட வருவ..” என்றனர்.

“என்னை மட்டும் தனியா போக சொன்னா நான்..” வார்த்தைகள் திக்கி வலித்தது. தேவேந்திரனை அப்படி பார்த்தான். அவனுள் பொம்மி வந்து இன்னும் வலிக்க வைத்தாள். “எல்லோரையும் விட்டு நான் போறதுக்கு இல்லாமலே போயிடுறது மேல் இல்லையா..?” என்றுவிட்டான்.

தேவேந்திரன் அதற்கு மேல் முடியாமல் அவனை கட்டிப்பிடிக்க  ஜனகன் முகம் இறுக அவரை தள்ளி நிறுத்தியவன், “போறேன்.. அதுக்கு முன்னாடி பொம்மிகிட்ட பேசணும்..” என்றவன் போனில் அவளிடம் பேசினான்.

அவள் என்ன சொன்னாளோ எல்லோரையும் விட்டு கிளம்பியே விட்டான். ஆளே காணாமல் போய்விட்டான். வேலை இடத்துக்கும் இவன் போய் சேரவில்லை. வருடங்கள் கடந்தும் வரவும் இல்லை.

Advertisement