Advertisement

மதுரை வீரன் பொம்மி 13

வெகு சில நிமிடங்களில் நடந்துவிட்ட சம்பவத்தில் யாருக்கும் திக்கு புரியவில்லை. எதிரே பார்க்காமல் நிகழ்ந்துவிட்டது. நிகழ்த்தி விட்டிருந்தான் ஜனகன்.

அந்த சுற்று வட்டாரத்திலே எல்லா வகையிலும் பலம் மிக்க, அதிகாரத்தின் தலைமையாய் விளங்கும் தீனதயாளனின் மகனை போலீஸ் ஸ்டேஷன் வாசலிலே வைத்து ஒருவன் அடித்துவிட்டான் என்பது எல்லோருக்கும் அளவில்லா பதட்டத்தை கொடுத்தது.

போலீஸ் ஒரு புறம் கத்தி கொண்டிருக்க, மறு புறம் அடிபட்டிருந்த தர்ஷனை ஹாஸ்பிடல் அழைத்து செல்லும் பரபரப்பு. இதில் விஷயம் வேறு வெளியே  கசிய ஆரம்பித்துவிட்டது.

திமிறி கொண்டிருந்த ஜனகனை விடாமல் பிடித்து வைத்திருந்த தேவேந்திரனுக்கு தலை சுற்றியது. “என்னடா பண்ணிட்ட..?” என்று ஜனகனை குமுறலோடு கேட்டார்.

ஜனகன் கோவமூச்சுடன் அவரை பார்க்க, “நிலத்துக்கே நம்மளை வைச்சு செஞ்சுட்டாங்க, நீ அவன் மகன் மேலேயே கை வச்சிருக்க, என்ன பண்ண போறாணுங்களோ..” என்று புலம்பிய அவரிடம் அப்பட்டமான பயம். ஆம் பயமே தான். அனுபவ பட்டுவிட்டார்.

சிறிது நேரம் முன்பு வரை ஸ்டேஷனில் குற்றவாளியாக அல்லவா நின்றிருந்தார். கண் கூடாக தீனதயாளனின் பவரை பார்த்திருந்தார். குற்றமே செய்யாமல் குற்றவாளியாக நின்று வந்தவரின் வேதனை இப்போது ஜனகனின் செயலால் அச்சமாக உருமாறியிருந்தது.

தன்னை விட, ஜனகனை விட அவர்களின் குடும்பம்..  அது தான் அவரின் உடலை நடுங்க வைத்தது. மிக முக்கிய அரசியல் கட்சியின் தலைவராச்சே தீனதயாளன். அரசியல், கட்சி என்ற பேரில் பல ஆயிர கணக்கான தொண்டர்கள் அவன் கை வசம். என் தலைவன் மகனையோ அடிச்சன்னு எல்லோரும் சேர்ந்து அவர்கள் வீட்டினரை சூறையாடிவிட்டால்.. செய்ய மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..? பல முறை செய்தும் இருக்கிறன்றனரே.

கடவுளே என்ன பண்ணுவேன்..? தேவேந்திரன் தலை பிடித்து கொண்டார். அவரின் அண்ணாவிற்கோ அதற்கு மேல். “அப்போவே சொன்னேனே வந்துடுடா நாம  வீட்டுக்கு போயிடலாம்ன்னு, என் பேச்சை கேட்டியா..? இப்போ பாரு இவன் செஞ்ச வைச்ச வேலைக்கு நாம எல்லாம் சிக்கி சின்னா பின்னமாக போறோம். நம்ம குடும்பம், தொழில் எல்லாம் என்னாகிறது..? என்னென்ன செய்ய காத்திருக்கானுங்களோ.. ஈஷ்வரா..” அவர் தலையில் அடித்து கொண்டு அரற்றினார்.

போலீஸ் வேறு இவர்களிடம் வந்து கத்தினர். “தீனதயாளன் சார் மகனையே அடிக்கிற அளவு சண்டியராடா நீ..? உன்னை தானே அவங்க தூக்கி போய் வச்சிருந்தது..? அப்படியும் அடங்காம அவர் மகன் மேல பாய்ஞ்சு வைச்சிருக்க. வராங்க இரு உன் மாப்பிள்ளைங்க.. உன்னை அக்கு அக்கா பிரிக்க போறானுங்க..” என,

ஜனகன் கையை கெட்டியாக பற்றி கொண்டார் தேவேந்திரன். விரல்களில் வெளிப்படையான நடுக்கமே. “ம்ப்ச்.. இப்போ என்ன..?” என்று மாமனை அதட்டினான் ஜனகன்.

“இப்போ என்னவா..? இளரத்தத்துக்கு இன்னும் வாங்கினா தான் புத்தி வரும் போல, கொடுப்பாங்க இங்கேயே இரு, நகர கூடாது..” என்று போலீஸ் செல்ல, தேவேந்திரன் அண்ணா யார் யாருக்கோ  அழைத்து பேசி கொண்டிருந்தார்.

சிக்கி விட்டோம், தப்பிக்க என்ன வழி என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார் மனிதர். ஜனகன் காருக்கு சென்று தண்ணீர் பாட்டில் எடுத்து வந்து மாமாக்கு கொடுத்தான். “ரொம்ப முக்கியம்.. ஏண்டா இப்படி பண்ண..?” தேவேந்திரன் கோவமாக கேட்டார்.

“குடிங்க முதல்ல.. நானும் குடிக்கணும்..” குரல் உயர்ந்து வர, தேவேந்திரன் தலையில் அடித்து கொண்டபடி குடித்து அவனுக்கு கொடுத்தார்.

“எனக்கு பசிக்குது, சாப்பாடு வேணும்..” என்றான் ஜனகன் அடுத்து. தேவேந்திரனுக்கு நெஞ்சு வலியே வந்துவிடும் போலானது. இவனால் அந்த அர்த்த ராத்திரியே அலண்டு போய் இருக்க, இவன் சோறு கேட்கிறான்.

அவரால் சட்டென்று எதுவும் சொல்லிடவும் முடியவில்லை. கிட்டத்தட்ட இரு வாரமே ஆகிவிட்டது அவன் திட உணவு உண்டு. முதல் முறையாக அவனே வாய் திறந்து கேட்கிறான். அக்கம் பக்கம் பார்த்தவர், “இப்போ எங்கடா போறது..? போலீஸ் கண்டிப்பா நம்மளை  இங்கிருந்து நகர விட மாட்டாங்க..” என்றார்.

“வீட்டுக்கு போன் பண்ணி சுதாகர் மாமாவை எடுத்துட்டு வர சொல்லுங்க.. எனக்கு அம்மா சாப்பாடு தான் வேணும்..” என்றான் ஜனகன்.

“வீட்டுக்கா..? டேய்.. நாம எங்க இருக்கோம், என்ன செஞ்சு வைச்சிருக்கோம்ன்னு கண்ணை திறந்து பாருடா கொஞ்சம்..”

“நீங்க போனை கொடுங்க..” என்று தானே எடுத்து பேசி வைத்தான்.

தேவேந்திரன் அண்ணா பரபரப்பாக இவர்களிடம் வந்தவர், “அண்ணாச்சியை லைன்ல பிடிக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன் தேவா, அவர் வந்தா நமக்கு ரொம்ப நல்லது..” என,

“அவரே லைனுக்கு வருவார், வெய்ட் பண்ணுங்க..” என்றான் ஜனகன்.

“எப்படி சொல்ற..? எதாவது வில்லங்கத்தை இழுத்து வச்சிருக்கியா நீ..?” என்று சந்தேகமாக கேட்க, இவனிடம் பதிலில்லை.

தேவேந்திரன்  அண்ணா கை பிடித்து கொண்டவர், “ண்ணா.. சாரிண்ணா.. எங்களால  உங்களுக்கு நிறைய சிரமம்..” என்று வருத்தத்துடன்  மன்னிப்பு கேட்டார்.

“விடுடா.. நீ என்ன பண்ணுவ..” என்று அவர் ஜனகனை முறைத்து சொன்னார்.

“நீ.. நீ கிளம்பிடுண்ணா, இங்க வேண்டாம், நாங்க பார்த்துகிறோம்..” தேவேந்திரன் சொல்ல,

“நீ என்னோட வரதுன்னா சொல்லு போவோம்..” என்றார் அவர்.

“இல்லைண்ணா.. நீங்க கிளம்புங்க..” தேவேந்திரன் சொல்ல,

“அப்போ பேசாத.. இந்த சூழ்நிலையில உன்னை விட்டு நான் போறதா இல்லை, பார்த்துக்கலாம் விடுடா..” என்றவரின் போன் வர, “நம்ம ஆடிட்டர் தான், அவர்கிட்டேயும் உதவி கேட்டிருந்தேன், அதுக்கு தான் கூப்பிடுறார், பேசிட்டு வரேன்..” என்று தள்ளி சென்றார்.

“ஏன் மாமா ஒருவேளை எனக்கும் அண்ணா இருந்திருந்தா உங்களை போல தான் நானும் இருந்திருப்போனா..” ஜனகன் கேட்க, தேவேந்திரனுக்கு பொத்து கொண்டு வந்தது.

“டேய்.. என்ன நடந்திட்டிருக்கு, நீ என்ன பேசிட்டிருக்க..? இதெல்லாம் இப்போ ரொம்ப முக்கியமாடா..?” என்று கத்தினார்.

“இல்லாதவங்களுக்கு முக்கியம் தான் மாமா..” என்றான் ஜனகன்.

“அவ்வளவு ஏங்குறவன் உங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லி தம்பிக்கு ஏற்பாடு பண்ண வேண்டியது தானே..” தேவேந்திரன் ஆத்திரத்தில் கேட்க,

“என்னோட பனிரெண்டு வயசுலே கேட்க நினைச்சேன் மாமா.. என்னை பெத்துட்டே என் அம்மாக்கு சீக்கு உடம்பு ஆகிப்போச்சு. தம்பியை எப்படி கேட்கிறதுன்னு தான் விட்டுட்டேன்..?” தோள் குலுக்கினான்.

“எனக்கு ஒன்னு மட்டும் தெரிஞ்சு போச்சுடா.. அவங்க உன்னை கொல்றாங்களோ இல்லையோ நானே உன்னை கொல்ல போறேன்..”

“நல்லது தான் மாமா, யாரோ கையால சாகுறதுக்கு உங்க கையால சாகுறது எவ்வளுவோ மேல்..”

“வாயை மூடுடா..” தேவேந்திரன் அதட்டலிட்டார்.

“இன்னும் வராம இந்த மாமா என்ன பண்றார்..?” ஜனகனோ சாப்பாடு வரும் வழி பார்த்தான்.

வண்டியில் உணவு எடுத்து வந்த சுதாகரோடு வேலய்யனும் வந்துவிட்டார். “ஸ்ஸ்.. அப்பா ஏன் வந்தார்..? நான் தான் யாரும் வேண்டாம் சொன்னேன் இல்லை..” ஜனகன் நெற்றியை நீவினான்.

“நீங்க ஏன் மாமா வந்தீங்க..?” தேவேந்திரன் ஆயாசமாக கேட்க,

“உங்களை விட்டுட்டாங்களா மாப்பிள்ளை..” அவர் இவர் கை பிடித்து மகிழ்ந்தார்.

“இப்போ தான் விட்டாங்க மாமா..” தேவேந்திரன் நொந்து போய் சொன்னார்.

ஸ்டேஷன் வெளியே மெல்ல மெல்ல கூடும் கூட்டத்தை பார்த்த வேலய்யன்,  “ஏன் இவ்வளவு கூட்டம் மாப்பிள்ளை..? ஏதாவது கட்சி பிரச்சனையா..?” என்று கேட்க,

“இங்க எப்படி சாப்பிடுவ மச்சான்..?” சுதாகர் பையை எடுத்து வந்தார்.

“வேலை முடிஞ்சதுன்னா வீட்டுக்கு போயிடலாமா ஜனா..” தந்தை ஆட்களின் பார்வை தங்கள் மேலே இருப்பதில் கேட்க,

“இன்னும் கொஞ்ச வேலை இருக்குப்பா..” என்றான் மகன்.

“சரி, சரிப்பா.. கார்ல சாப்பிட்டுக்கிறியா..”  என்ற வேலய்யன் மகனுக்கு தண்ணீர் பாட்டில் எடுத்து கொடுத்தவர், தானே அவனுக்கு பரிமாறவும் செய்தார்.

இத்தனை நாட்கள் மகன் சாப்பிடமால் இருந்ததில் பரிதவித்து கொண்டிருந்த பெற்றவர்களுக்கு அவனே உணவு கேட்கவும் அளவில்லா மகிழ்ச்சி. சாந்தி உதவியுடன் நிமிடங்களில் மகனுக்கு சூடான உணவு செய்து கொடுத்தப்பனுப்பி விட்டார் ராஜலக்ஷ்மி.

ஜனகன் கையில் சூடான இட்லி, தோசை சட்னியுடன் மணக்க, ஆழ்ந்து சுவாசித்தான். அப்பா பக்கத்திலே  நிற்க, இட்லியை வலிக்குமோ என்று கிள்ளி வாயில் வைத்தான். தொண்டையில் சூடாக வலிக்க இறங்கி, வயிற்றில் சில்லென்று விழுந்தது. ஒரு நொடி கண் மூடி திறந்தான்.

விஷயம் பரவி கூடி விட்டிருந்த ஆட்களோ அவன் சாப்பிடுவதில் கொதித்து போவது அவர்கள் முகத்திலே தெரிந்தது. போலீஸ் அவர்களை எல்லாம் ஒரு எல்லை கோட்டுக்குள்  நிறுத்தி வைத்திருக்க, தீனதயாளனுக்காக காத்திருந்தனர்.

“சட்னி தொட்டுக்கோய்யா.. அம்மா உனக்கு பிடிச்சது செஞ்சு கொடுத்திருக்கா, நீ சாப்பாடு கேட்டன்னு சொன்னது ஒன்னு தான் அவளை கையிலே பிடிக்க முடியல. கிழவிக்கு வயசு மறந்து போய் ஒரே ஓட்டம் தான்.. இந்நேரத்துக்கு சைவம் தானே  சாப்பிட முடியும்ன்னு  அங்கலாய்ப்பு வேற, இப்போவும் நாட்டு கோழி முட்டை தோசை ஊத்தி கொடுத்திருக்கா, சாப்பிடுய்யா..” என்று மேலும் வைக்க, ஜனா அடைத்த தொண்டைக்கு  தண்ணீர் குடித்தான்.

“போதும்ப்பு.. தண்ணீர் குடிச்சா எவ்வளவுன்னு சாப்பிடுறது, சாப்பிடு..” வேலய்யன் பாட்டிலை வாங்கி கொண்டார். ஜனா அடுத்த இரண்டு வாய் அளவாக உள்ள போக, அடுத்தடுத்து வேகம் தான். மிக வேகம் தான். வேலய்யன் மகன் பசியில் சலிக்காமல் தட்டு காலியாகும் முன்னே வைக்க, அவனும் சாப்பிட்டு கொண்டே இருந்தான்.

ராஜலக்ஷ்மி ஐவருக்கு என்று கொடுத்துவிட்ட உணவை இவன் ஒருத்தனே காலி செய்து கொண்டிருந்தான். அதிலும் ஜனகனுக்கென்று மிக அதிகமே தான் வைத்திருந்தார். “மச்சான் அது இவங்களுக்கும் சேர்த்து..” என்று சுதாகர் சொல்ல வர, தேவேந்திரன் அவர் கை பிடித்து தடுத்துவிட்டார்.

“போதும்ப்பா..” என்று ஜனா நிறுத்தி கை கழுவ செல்ல, இங்கு உணவும் காலியாகி இருந்தது.

“இந்த ராஜி இன்னும் கொஞ்சம் கொடுத்திவிட்டிருக்கணும்.. தப்பு பண்ணிட்டா..” வேலய்யன் மனைவியை திட்டி பையை பேக் செய்ய, இரு மாப்பிள்ளைகளும் முகம் பார்த்து கொண்டனர்.

“சரி.. நீங்க கிளம்புங்கப்பா..” ஜனா சொல்ல,

“நீங்க வரவும் போறோம்ய்யா..” என்றார் வேலய்யன். எந்நேரமும் தீனதயாளன் இங்கு வந்துவிடுவார் என்பதை திடீர் பரபரப்பு சொன்னது. முதலில் தர்ஷனை சென்று மருத்துவமனையில் பார்த்து தான் இங்கு வருவதாக தகவல்.

அவனை பார்த்தால்  கண்டிப்பாக  தீனதயாளன் கொலை வெறியாகிடுவான் என்பது தேவேந்திரனுக்கு நன்றாகவே புரிந்தது. “ஆள் வரார்..” தேவேந்திரன் அண்ணா பதட்டத்துடன் வந்தார். கார்கள் அணிவகுக்க தீனதயாளன் வந்து இறங்கினார். அவர் பார்வை அச்சடித்து ஜனகன் மேலே.

“இவர் ஏன் இந்த நேரத்துக்கு இங்க வரார்..? என்ன பிரச்சனை மாப்பிள்ளை..” வேலய்யன் கொஞ்சம் பயத்துடனே கேட்க,

“இப்போ கேளுங்க.. உங்க மகன் அவர் மகனை அடிச்சு மூஞ்சு முகரை எல்லாம் பேத்து வச்சிருக்கான்..” தேவேந்திரன் அண்ணா அடிக்குரலில் சொன்னார்.

“என்ன..?” வேலய்யன் மகனை அதிர்ந்து போய் பார்த்தார்.

அவனோ “பார்த்துக்கலாம் விடுங்கப்பா..” என்றான்.

“ஏய்யா.. என்ன ராசா இப்படி பண்ணிட்ட..?”

“உள்ள வா..” என்று போலீஸ் வந்தனர். எல்லாம் நடக்க, “ம்ஹூம்.. நீங்க இரண்டு பேர் மட்டும் தான்..” என்று அப்பா, மகனை கை காட்டினார்.

“அப்பா வர மாட்டார்..” ஜனகன் அழுத்தமாக சொல்ல,

“ஒழுங்கா அமைதியா போ, இல்ல இங்கேயே உன்னை சிதைச்சிடுவாங்க..” போலீஸ் மிரட்டினார்.

“அப்பா ஸ்டேஷன் உள்ள வர மாட்டார்ன்னா வர மாட்டார் தான்..” ஜனகன் உறுதி அவன் முகத்தில் தெரிந்தது.

“டேய்.. என்ன..? பொளந்திடுவோம்..”

“ஆஹ்..” ஜனகன் அலட்சியமாக முகம் திருப்பினான்.

“அடி ராஸ்கல் யாருகிட்ட உன் வேலையை காட்டுற..?” போலீஸ் அவனை அடிக்க போக, மின்னலாய் தள்ளி  நின்றான். காற்றில் வீசி சென்ற அவர் கையை பார்த்து இன்னும் ஆங்காரம் கொள்ள, சுற்றி இருந்தவர்களோ  “டேய்..” என்று கத்தினர்.

‘என்னங்கடா..’ என்ற பார்வை மட்டுமே ஜனகனிடம்.

‘இது தான்.. இப்படி தான்.. இவ்வளவு தான்..’ என்று துணிந்து முடிவெடுத்துட்ட பின் என்ன தான் நடந்துவிடும் என்ற அலட்சியம் தானே வந்துவிடும் போல.

பயந்து, அழுது, ஓடியது எல்லாம் இப்படி ஒரு இடத்தில் நின்று விட கூடாது என்பதற்காக தானே..? ஆனாலும் நாங்க துரத்துவோம்.. நீ ஓடு என்றால்.. முடியவில்லை அவனால். நின்றுவிட்டான். ஓடினா தானே துரத்துவீங்க..? மூச்சு முட்டுகிறது.  ஓடி மூச்சு வாங்கி சாகிறதுக்கு நின்று சாவது மேல் என்று முடிவெடுத்துவிட்டான்.

கடைசியில் என்ன பெரிதாக நடந்துவிடும்..? அவன் உயிர்.. எடுத்துகிறதுன்னா எடுத்துக்கோ.. என்ற நிலைக்கு வந்து தான் அவன் தர்ஷன் மேல் கை வைத்ததே..!

Advertisement