Advertisement

மதுரை வீரம் பொம்மி 12

“இன்னைக்கே கிளம்பணுமா மாமா..?”  ஜனகன் தோளில் சாய்ந்தபடி பொம்மி கேட்க,

“ம்ம்.. போக தான் வேணும், அப்போதான் அவங்க கொடுத்த டைம்க்கு என்னால ரிப்போர்ட் பண்ண முடியும்..?” ஜனகன் பெருமூச்சுடன் சொன்னான்.

மாமன் கையில் கிடைத்ததே இன்னும் கனவு போல இருக்க, திரும்ப காணாமல் போக போகிறான். அவ்வளவு தூரத்துக்கு போய்ட்டு திரும்ப எப்போ வருவானோன்னு தெரியல. கீர்த்தனாவிற்கு அழுகை வரும் போல இருந்தது.

“மாமா..” என்றாள் குரல் கம்ம. ஜனகன் அவளை பார்க்க, “இங்கேயே.. எங்களோட இருக்க முடியாதா..?” அண்ணாந்து ஏக்கமாக கேட்டாள்.

“இருக்க முடிஞ்சா இருக்க மாட்டேனா..? இப்போதைக்கு அந்த வேலை ஒன்னு தான் என்கிட்ட உருப்படியா இருக்கிறதே..? அதையும் விட்டுட்டா..”

“வேற வேலை..” பொம்மி இழுக்க,

“எது என்னோட என்னோட ஒத்தை டிகிரி வைச்சா..?  இந்தளவு சம்பளம் எங்கேயும் வாய்ப்பில்லை..”

“அப்பா சொல்ற மாதிரி தொழில்.. லோன் எடுத்து தான் மாமா..”

கசப்பாக சிரித்தவன், “முதல்ல எந்த தொழிலுக்கும் நம்மகிட்ட கொஞ்சமாவது முன் பணம் வேணும், அங்கேயே ஜீரோ நான், அடுத்து லோன்.. உள்ள இத்தனை ஸ்பேர் பார்ட்ஸ் வைச்சுருக்கிற என்னை தூக்கிட்டு போய் பேங்க்ல வைச்சா கூட எவனும் லோன் தர மாட்டான், அவனுக்கு செக்கியூரிட்டி வேணும், சொத்து வேணும். நான் எங்க போக..? உடனே உன் அப்பாவை சொல்லாத, உங்க தொழில் கூட்டு தொழில், கண்டிப்பா உங்க பெரியப்பாங்க கோவப்படுவாங்க, நமக்கு அப்படி வேண்டாம்,  விடு..” என்றான்.

“அப்போ நீங்க போறது தான் ஒரே வழியா..?” பொம்மி கேட்க, ஜனகன் நேரே உள்ள சுவற்றை வெறித்தான்.

“மாமா..”

“இதுக்கு மேல எதுவும் கேட்காதடி..” ஜனகனுக்குள் அவ்வளவு அழுத்தம்.

“இல்லை மாமா..”

“திரும்ப என் வாயால என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்ல வைக்காத, அசிங்கமா இருக்குடி..” என்றுவிட்டான். தாங்கவே முடியாத இயலாமை.

“எங்க சாமி சொத்தை எங்களால காப்பாத்த முடியல, விட்டுட்டோம். என் அப்பா எனக்காக இன்னொருத்தன் கால்ல விழுந்து, கார்ல  விழுந்து, அவமானப்பட்டு, ஹாஸ்பிடல்ல படுத்து.. யாரோ ஒருத்தர் வந்து என்னை காப்பாத்தி.. நான் வந்தும் இதை எல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாம அவங்க கேட்கிற சொத்தை கொடுத்து.. இப்போ இந்த டிரான்ஸ்பரையும் ஏத்துக்கிட்டு இங்கிருந்து ஓட நினைச்சு.. என் உடம்புல ரத்தம் தானேடி ஓடுது, நான் ஏன் இப்படி இருக்கேன்.. என்னை நினைச்சு எனக்கே நெஞ்சு கொதிக்குது, யாருன்னே தெரியாத ஒருத்தன் என் லைஃபை பந்தாடுறான், என்னால எதுவும் செய்ய முடியல. எப்படி செய்ய முடியும்..? என்கிட்ட தான் பணம், பதவி, அதிகாரம்ன்னு  ஒண்ணும் கிடையாதே.  குடும்பம் மட்டும் பெருசா இருக்கு, நான் எதாவது செய்ய போய் அவங்களை.. ம்ப்ச்.. இப்படியே ஓடிட்டு இருக்க வேண்டியது தான் போல..” முதல் முறையாக அவன் அழுத்தத்தை சொல்லிவிட்டான். பாரம் அவனை மீறி வெளியே வந்திருந்தது.

இத்தனை நாட்கள் எதுவும் நடவாதது போல எல்லாம் எடுத்து செய்த மாமனா இது..? பொம்மி வேதனை கொண்டாள்.

வீட்டினர் அனைவரும் கலங்கி நின்ற போதும் இவன் மட்டும் தான் தைரியமாய்  இருந்தான்.  ஜனகனே தைரியமாய் இருக்கான், சாதாரணமா இருக்கான், நாமக்கென்ன..? பார்த்துக்கலாம், விடுங்க.. குடும்பத்தினர் தைரியம் இவனாகி நின்றான்.

ஆனால் உள்ளபடி இவனுள் இவன் குமுறி கொண்டு தான் இருக்கிறான். என்னால எதுவும் செய்ய முடியலையேன்னு கொதித்து கொண்டு தான் இருக்கிறான்.

கலங்குகிறான், கோவமும் கொள்கிறான், இயலாமையால் தவிக்கவும் செய்கிறான்.

பொம்மிக்கு மாமனை இப்படி பார்க்கவும் அழுகை வெடித்துவிட்டது. சத்தமே இல்லாமல் அவன் தோளில் கண்ணீரை மறைத்தாள்.

“அழுகாதடி..” ஜனகன் அதட்டினான்.

“ம்ம்..” பொம்மி தலையை ஆட்ட,

“ஒரு விதத்துல யோசிச்சு பார்த்தா நான் இங்கிருந்து போறது தான் நல்லது. அந்த தர்ஷன் பார்வை ஒன்னும் சரியில்லை, அவன் திரும்ப எதாவது செஞ்சா நான் பொறுப்பேனான்னு எனக்கே தெரியல.. எப்போ வேணாலும் என் கண்ட்ரோல் வெடிச்சுடும், அதுக்குள்ள நான் இங்கிருந்து போயிடணும், போயிடுறேன்..” என்றான் தீவிரமாக.

நொடியில்  சிவந்து சீறி நின்ற கண்களும், நரம்புகளின் துடிப்பும் அவன் சொல்வதில் இருந்த உண்மையை காட்ட, பொம்மி கொஞ்சம் மிரண்டு தான் போனாள்.

“மாமா..” என்ற பெண்ணின் சில்லிட்ட விரலை உணர்ந்து, நிதானித்தவன் அவள் உச்சியை வருடிவிட்டான்.

“யார்கிட்டேயும் நான் பேசினதை சொல்லிடாத, நான் சாதாரணமா இருந்தா தான் அவங்க நல்லா இருப்பாங்க. முக்கியமா அப்பா, அம்மா. அவங்களை பார்த்து நான்ங்கிறது மாறி, இனி என்னை பார்த்து தான் அவங்க. இந்த வயசுல என்னை வைச்சுக்கிட்டு அவங்க பாடு போதும். பேரன், பேத்தின்னு நிம்மதியா இருந்திருப்பாங்க,  நான் ஏன் அவங்களுக்குன்னு தெரியல..”

” என்ன பேச்சு இது மாமா, போதும், உங்களால எதுவும் இல்லை, அந்த தீனதயாளன் பண்றதுக்கு நீங்க ஏன் உங்களை நொந்துக்கிறீங்க, விடுங்க..” அவள் முகத்தை துடைத்தாள். தான் அழுக, அழுக அவனும் கட்டுப்பாட்டை இழக்கிறான் என்று புரிந்து போனது.

“தண்ணீர் குடிங்க..” என்று எடுத்து கொடுக்க,

“எனக்கெதுக்கு..? நானா அழுது சட்டையை நனைச்சு வைச்சிருக்கேன்..” பாட்டில் மூடி திறந்து அவளுக்கு கொடுத்தான். பொம்மி மறுக்காமல் குடித்து அவனுக்கும் குடிக்க கொடுத்தாள்.

“டூ மினிட்ஸ் மாமா..” கீர்த்தனா முகம் கழுவ ஓய்வறை சென்றாள். ச்சு.. ஜனகன் நெற்றியில் குத்தி கொண்டான். ‘சின்ன பொண்ணுகிட்ட போய் என்னென்ன பேசி வைச்சிருக்கேன்.. மாமாகிட்டேயே வாய் திறக்காம இருந்துட்டு இவகிட்ட போய்..’ தன்னை தானே குட்டி கொண்டான்.

‘இந்த மாமா இன்னும் என்ன பண்றார்..?’ ஸ்க்ரீனை விளக்கி வெளியே பார்க்க, தேவேந்திரன் பரபரப்புடன் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தார். அவரின் இரண்டாம் அண்ணனும் வந்துவிட்டிருக்க, ஜனகனுக்கு ஏதோ சரியில்லாமல் பட்டது.

“என்ன மாமா..?” பொம்மியும் பார்த்து கேட்க,

“தெரியலடி.. நீ இரு, பார்த்திட்டு வரேன்..” ஜனகன் அவனின் மாமாவிடம் சென்றான்.

“ஜனா.. நீ..” அப்போது தான் அவர்கள் அங்கிருப்பதே அவருக்கு நினைவிற்கு வந்தது. “ஜனா நீ ஒன்னு பண்ணு, கீர்த்தியை கொண்டு போய் வீட்ல  விட்டுட்டு நீ கிளம்பு..” என்றார் தேவேந்திரன்.

“நான் பொம்மியை வீட்ல விட்டுடுறேன், நீங்க ஏன் டென்ஷனா இருக்கீங்க..? என்ன ஆச்சு..?” ஜனகன் கேட்க,

“அது.. அது எப்போவும் போல தான் ஜனா, இன்ஸ்பெக்ஷன் வராங்க, ஹோட்டல்ல நடக்கிறது தான். நீ முதல்ல கீர்த்தியை கூட்டிட்டு இங்கிருந்து கிளம்பு..”

“வழக்கமா நடக்கிறது தான்னா உங்களுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்..? இங்க மட்டுமா இல்லை உங்க மத்த பிரான்ச்லையுமா..?”

“ஜனா.. நீ கிளம்புன்னு சொல்றேன் இல்லை, கிளம்பேன்டா..” அண்ணன்கள் பார்வை இவன் மேல் பட அவனை நொடியும் அங்கிருக்க விடவில்லை. மகளை அழைத்தவர், “பைக் வேண்டாம், இந்த கார் சாவி, கிளம்புங்க சீக்கிரம்..”  என்று அனுப்பி வைத்துவிட்டார்.

ஜனகன் புருவம் சுருங்க பொம்மியை வீட்டில் விட, “உள்ள வாங்க மாமா..?” என்று பெண் அழைத்தாள்.

“இல்லை.. நீ போ..” என்றவன், என்ன நினைத்தானோ “வரேன்” என்று வீட்டிற்குள் சென்றான்.

பானுமதி அம்மா வீட்டிலிருந்து வந்துவிட்டிருந்தவர், தம்பியை பார்க்கவும், குடிக்க கொடுத்தார். “தோசை இரண்டு ஊத்தவா, சாப்பிடுறியா ஜனா, ரொம்ப இளைச்சு போறடா..” அக்கா கவலையாக சொல்ல, இவனுக்கோ எண்ணம் இங்கில்லவே இல்லை.

“மாமா போன் பண்ணாராக்கா..?” என்று கேட்க,

“இல்லைடா.. ஏன்..? நீங்க அங்கிருந்து தானே வரீங்க..?” பானுமதி புரியாமல் கேட்டார்.

கீர்த்தனா அம்மாவிடம், “அங்க ஏதோ பிரச்சனை போலம்மா, அப்பா ரொம்ப டென்சனா இருந்தார், இரண்டு பெரியப்பாவும் கூட அங்க தான் இருக்காங்க..” என்றாள்.

“நான் கிளம்புறேன்..” ஜனா காருக்கு வந்துவிட, கீர்த்தனாவிற்கு போன் வந்தது.

“மாமா.. அப்பா, உங்ககிட்ட பேசணுமாம்..?” என்று வேகமாக வந்து கொடுத்தாள்.

“ஜனா.. நீ கொஞ்சம் அங்க வீட்ல, அவங்களோட இரு..” என்றார் தேவேந்திரன்.  ஜனா மறுத்து பேச வர, “எனக்காக செய் ஜனா..” வார்த்தைகளில் அவன் அடக்கிவிட்டார். நிச்சயம் திரும்ப ஹோட்டலுக்கு வருவான் என்று அவருக்கு தான் தெரியுமே.

ம்ப்ச்.. ஜனா போனை சீட்டில்  தூக்கி போட்டு  காருக்குள்ளே அமர்ந்து கொண்டான். மெல்ல மெல்ல அந்த மூன்று வீடுகளிலும் பரபரப்பு தொற்றி கொண்டது. ஆட்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்தனர். எல்லார் கையிலும் போன். யார் யாரிடம் பேசுகின்றனர் என்று தெரியாத அளவு பதற்றம். ஜனகன் காருக்குள் இருந்து இதை எல்லாம் பார்த்து கொண்டே இருந்தான்.

மாலை மங்கி இருளும் சூழ ஆரம்பித்தது. பானுமதி தம்பியிடம் வந்தவர், “ஜனா.. மாமா போன் பண்ணியிருந்தார், நீ ஊருக்கு கிளம்புவியாம், அங்க அம்மா உனக்கு எல்லாம் எடுத்து வச்சிட்டாங்க. பிளைட், அங்கிருந்து ட்ரெயின்க்கு மாமா புக் பண்ணிட்டாராம், வா.. சாப்பிட்டு கிளம்பு, நேரம் ஆச்சு..” என, அவ்வளவு நேரம் தேவேந்திரன் சொன்னதுக்காக அங்கேயே இருந்தவன், மூச்சை இழுத்துவிட்டான்.

பொம்மி இவனுக்காக தோசை எடுத்து வைக்க, “காபி கொடு..” என்றமர்ந்தான்.

“சாப்பிடுற நேரத்துல காபி எதுக்கு..? இன்னமும் நீ சாப்பிடாம இருந்து என்ன சாதிக்க போற..? ஊர்ல போயும் வயித்தை காய வைக்க தான் போறியா, அப்படியென்னடா அடம் உனக்கு..? யார் மேல இருக்கிற கோவத்தை சாப்பாட்டுல காட்டுற..? ஒழுங்கா எங்களை எல்லாம் நினைச்சு பார்த்து சாப்பிட்டு கிளம்பு.. கீர்த்தி தோசையை எடுத்து வை அவனுக்கு..? எத்தனை நாள் கெஞ்சிட்டு இருக்கிறது, அவ்வளுவும் பிடிவாதம்..” பானுமதி கத்தியேவிட்டார்.

கீர்த்தி மாமாவை பார்க்க, “காபி கொடுக்கிறதுன்னா கொடு, இல்லன்னா நான் கிளம்புறேன்..” என்றான் அவன்.

“நான் இவ்வளவு சொல்றேன் திரும்ப காபி கேட்கிற, கொடுக்க முடியாதுடா, ஒழுங்கா சாப்பிடு..” அக்கா கோபம் கொள்ள, தம்பியோ பதில் இல்லாமல் வாசலுக்கு நடந்துவிட்டான்.

“மாமா.. மாமா இருங்க, காபியே கொடுக்கிறேன்..” பொம்மி பின்னால் வர, ஜனகன் காரை எடுத்து கிளம்பி விட்டிருந்தான்.

அச்சோ எங்க போறானோ தெரியலையே..? பானுமதி தலையில் அடித்து கொண்டவர், அம்மாவிற்கு போன் செய்து தம்பி வரவும் தகவல் கொடுக்க சொன்னார். நிமிடங்கள் கடக்க போனே இல்லை. அவன் வந்தால் தானே ராஜலக்ஷ்மி சொல்வதற்கு.

Advertisement