Advertisement

ம்ம்ம்.. விதி எதற்காக அவர்களை விரட்டியதோ இதோ அந்த நாள். ஒருவாரம் முடிந்து இன்று பத்திர பதிவு தினம். எல்லாம் பத்திர பதிவு அலுவலகத்திற்கு கிளம்பினர். முதலில் தீனதயாளன் பத்திர பதிவு. பசுபதியும் உடன்பிறப்புகளோடு வந்திருக்க, வேலய்யனும் பிள்ளைகளோடு நின்றார்.

எல்லாம் கையெழுத்து போட்டு,  சுத்த கிரயம் கொடுக்க வேண்டும் தீனதயாளன் கட்டுப்பாடு. பசுபதி முதலில் அவனுக்கென்ன எழுந்திருந்ததை ரத்து செய்து, தீனதயாளனிடம் பணம் வாங்கி கொண்டான். “உங்களுக்கும் பேசட்டுமா பெரியப்பா..?” என்று வேலய்யனிடம் கேட்க, அவ்வளவு தான். ஆடி தீர்த்துவிட்டார் மனிதர். அவனை அடிக்காத குறை தான்.

“நம்ம தாத்தன் கொடுத்த கோவில் சொத்து அனாமத்தா எவனுக்கோ போகுதே, என்னால எதுவும் செய்ய முடியலன்னு செத்து போய் நிக்கிறேன், பணம் வேணுமான்னு கேட்கிற பணம், பொணத்தை திங்கிற உனக்கு பணம் தானே எல்லாம், போ அந்த பாவப்பட்ட பணத்தை நீயே எடுத்துட்டு போ, எவ்வளவு பொழைக்கிறியோ பொழை..” என்று கத்திவிட்டார் மனிதர். கண்களில் துடைக்க துடைக்க கண்ணீர் வேறு.

ஜனகன் அப்பாவை தனியே  பிடித்து வந்தவன், துண்டால் அவர் கண்களோடு முகத்தையும் துடைத்துவிட்டான். அதில் இன்னும் பலவீனமாகி போனார் தந்தை. மகன் தோளில் முகம் மறைத்து குமுறி குமுறி அழுகை. ஜனகன் அப்பாவின் கண்ணீரை தாங்க முடியா கோழையாக, வலுவிழக்க ஆரம்பித்தான்.

என்னால் தானே அப்பா தோற்றார்..? ரத்தமென கண்கள் சிவக்க, உடல் தள்ளாடியது. இன்னமும் திட உணவு எடுக்காத உடல் என்னெவன தாங்கும். வீட்டினர் எவ்வளவு சொல்லியும், கெஞ்சியும், மிரட்டியும் இரும்பாகவே நின்றவனுக்கு இப்போது தகரமாக மாறி போன உணர்வு. உடைந்து விடுவேன் எனும் நிலையில், “ப்பா..” என்று பானுமதி வந்து அவனை காப்பாற்றினார்.

“தண்ணீர் குடிங்கப்பா..” என்று நிற்க, வேலய்யன் சுதாரித்து முகம் துடைத்து நிமிர்ந்தவர் மகளிடம் தண்ணீர் வாங்கி பேருக்கு குடித்து, மகனுக்கும் கொடுத்தார். பாரமாக கனத்த உடலை கார் மேல் சாய்ந்து சமாளித்த ஜனகன், முழு பாட்டில் தண்ணீரையும் குடித்தான்.

“இன்னும் வேணுமா ஜனா..” பானுமதி தம்பி முகம் பார்த்தவர், வேகமாக சென்று அவனுக்காக எடுத்து வந்த ஜுஸை கொடுத்தார். அதையும் ஜனகன் காலி செய்ய, “உள்ள கூப்பிடுறாங்க..” என்று ஆள் வந்துவிட்டார்.

பத்திர பதிவு ஆரம்பமானது. தீனதயாளன் பினாமி பெயரில் தான் நிலம் ரெஜிஸ்டர் ஆனது. தர்ஷன் மட்டும் வந்திருந்தவன் காரிலே இருந்தான். வேலய்யன் கட்டுப்படுத்த முடியா கண்ணீருடன் கையெழுத்து போட, ஜனகன் வெறுமையாக போட்டான். மற்றவர்களிடமும் கையெழுத்து வாங்கி, வெற்றிகரமாக  நிலம் தீனதயாளனுக்கு போனது.

அடுத்து தமாதிக்காமல், வேலய்யன் முன்பே வாங்கி வைத்திருந்த டோக்கன் படி அடுத்த பதிவாக கோவிலுக்கென மூன்று ஏக்கரை ரெஜிஸ்டர் செய்தார். முன் கண்ணீர் இப்போது குறைந்து போனது. நிறைவுடன், ஆத்ம திருப்தியுடன் குடும்பமே கையெழுத்து இட்டனர். அவர்களின் பொறுப்பை தவற விட்டு, எப்படியோ மீட்டு விட்ட ஆசுவாசம்.

“செய்வன திருந்த செய்..” ஜனகன் மனதில் நின்ற வார்த்தைகள்.

வரிசையாக டோக்கன் வாங்கி வைத்திருக்க, மூன்றாவது பத்திர பதிவு மகள்களுக்கு நடந்தது. ஜனகனுக்கான சொத்து இரண்டு அக்காக்கள் பேருக்கு சென்றது. உறவுகளுக்கு அந்த வருத்தம், உறுத்தல் இருக்க, ஜனகனுக்கோ எல்லாம் நல்ல படியே முடிந்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே. காலையில் ஆரம்பித்தது பின் மதிய வேளையில் முடிவுக்கு வந்தது.

குடும்பமாக வெளியே வர, எதிரில் தர்ஷன். ஜனாவை நக்கலாக பார்த்து சிரித்தவன். “பணம் வேணாம் சொல்லிட்ட போல, அதான் என் சார்பா வேற கிப்ட்..” என்று நீட்டினான்.

ஜனா அந்த காகித உறையை  கண்கள் சுருங்க வாங்க, அவனுக்கான டிரான்ஸ்பர் லெட்டர். இந்தியாவின் எங்கோ ஒரு கடை கோடியில் பேர் தெரியா இடத்தில் தூக்கி அடித்திருந்தனர்.

அதுவும் இன்னும் மூன்று நாட்களில் அங்கிருக்க வேண்டும். வேண்டுமென்றே தாமதித்து கொடுக்கிறான். இன்றைய இரவே கிளம்பினால் தான் அங்கு சென்று சேர முடியும். குடும்பத்தினர் அதிர்ந்து போயினர். தேவேந்திரனுக்கு அவ்வளவு கோவம்.

“என் சட்டையவா பிடிக்கிற..? கிப்ட் போதுமா.. எனக்கு போதலையே, பார்த்துகிறேன்..” தர்ஷன் மொத்த குடும்பத்தையும் பார்த்து ஒரு மாதிரி சொல்லி சென்றான்.  ஜனகன் அவன் பார்வையை ஆராய வீட்டினர் புலம்பி கரைந்தனர்.

“நேரம் ஆச்சு எல்லாம் முதல்ல சாப்பிட போலாம்..” ஜனகன் அந்த உறையை பேக்கெட்டில் வைத்து கொண்டவன், ‘என்கிட்ட கொடுக்கிறதுக்காக அவனே வாங்கிட்டு வந்திருக்கான், பெரிய இளவசரன்னு பேர்..’ என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

“ஜனா என்னப்பா இது..? அவ்வளவு தூரத்துக்கு நீ எப்படி போவ..?” என்று சாந்தி கேட்க,

“எப்படின்னா..? போய் தான் ஆகணும்..” என்றான் தம்பியோ சாதாரணமாக. போக முடிவெடுத்துவிட்டானா..? வீட்டினர் அவனை அதிர்ச்சியாக பார்த்தனர். வேலய்யன் மகனை மறுத்து பேச வர, “ப்பா.. இது அப்பறம் பார்ப்போம், முதல்ல எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க, அம்மா காத்திருக்காங்க..” என்று எல்லோரையும் அனுப்பி வைத்தான். தேவேந்திரனும் மனைவியை மாமனாருடன் அனுப்பி வைத்துவிட்டார்.

இவர்கள் இருவர் மட்டும் தேவேந்திரன் உணவகத்திற்கு சென்றனர். தேவேந்திரன் பழக்கம் போல இவனிடம் போராட, அவன் எப்போதும் போல கஞ்சி தான். அவரும் அவரின் வழக்கம் போல் அதில் பழ வகைகள்,  பாதம், பிஸ்தா, பேரிச்சம்பழம் என்று கலந்து கட்டி கஞ்சி தயாரித்து கொடுக்க வைத்தார். அதனால் மட்டுமே இவன் தாங்குகிறான்.

பேச்சின்றி உணவு முடிய, படக்கென்று கதவு திறந்து பொம்மி உள்ளே வந்தாள். அரக்க பறக்க வந்திருப்பது நன்கு தெரிந்தது. விஷயம் தெரிந்துவிட்டது போல. மாமனை நேரே பார்த்தே வந்தாள் பெண். “என்ன கண்ணு..?” என்று தேவேந்திரன் கேட்க,

“மாமா வனவாசம் போக போறதா சொன்னாங்க, அதான் அவருக்காக ஷாப்பிங்க போக  வந்தேன்ப்பா..” என்றாள் பெண்.

ஜனகன் முறைக்க, பொம்மி மாமன் பக்கத்தில் உள்ள சேரில் அமர்ந்தவள், “மலையும் மலை சார்ந்த இடமும் கேள்விப்பட்டேன் மாமா, குளிர்ல நீங்க விறைச்சுட கூடாது இல்லை, அதான் பாதுகாப்புக்கு தேவையானது எல்லாம் வாங்கிடலாம்ன்னு..” என,

“என்னடி நக்கலா..?” மாமன் பல்லை கடித்தான்.

“எனக்கு நக்கல்ன்னு தெரியுது, நீங்க இருக்கிறதுக்கு என்ன பேர் மாமா..? ஏதோ அவ்வளவு தூரத்துக்கு போய் தான் ஆகணும்ன்னு சொன்னீங்களாம்..? அப்படியென்ன உங்களுக்கு அந்த வேலையே வேணும்ன்னு.. நீங்க பேசாம கிளம்பி போயிட்டா நாங்க எல்லாம் என்ன பண்ணன்னு சொல்லுங்க..” பொம்மியும் கேட்டாள்.

தேவேந்திரன் மகள் பேச்சை ஆரம்பிக்கவும் பிடித்து கொண்டார். “கீர்த்தி கேட்கிறது சரி தான், இந்த வேலை உனக்கு வேணுமா ஜனா, அவசரத்துக்கு கூட போய்ட்டு வர முடியாத ஊர்ல போட்டு வச்சிருக்காங்க..” என்றார் தேவேந்திரன்.

“இந்த வேலையே தான் வேணும்ன்னு இல்லை.. நாம உனக்கு வேற பார்ப்போம்,  க்கும்.. தனியா தொழில் போல கூட ஏதாவது..” ஜனகன் அவரை அழுத்தமாக பார்க்க, “இல்லைடா.. லோன் போட்டு, சின்ன அளவுல, வேலை வருமானம்ன்றதோட நம்ம குடும்பத்தையும் பார்க்கணும் இல்லை. நாளைக்கு உனக்கு கல்யாணம் காட்சின்னா, பார்க்காதடா.. எல்லாம் யோசிக்கணும் இல்லை..”

“என்ன யோசிக்கணும் எனக்கு உங்க பொண்ணை கொடுக்கிறதா வேண்டாமான்னா..?” ஜனகன் பட்டென்று வெடித்தான்.

“ஜனா..”

“பேசாதீங்க.. யாரும் பேசாதீங்க.. எனக்கு மட்டும் உங்களை எல்லாம் விட்டு அவ்வளவு தூரத்துக்கு போகணும்னு ஆசையா என்ன..? என் தலையெழுத்து அவ்வளவு கேவலமா போயிட்டிருக்கு, என்ன பண்ண சொல்றீங்க..? இருக்கிற வேலையை விட்டு, சொத்தும் போய் வயசான அப்பா, அம்மாவை வைச்சுட்டு நான் என்ன பண்ணனும்ன்னு எதிர்பார்க்கிறீங்க..?”

“இப்போதைக்கு என் நிலைமை குடியிருக்கிற வீடும், அரை ஏக்கர் நிலமும் தான், இருக்க இருக்க இன்னும் கீழே போவேனான்னு கூட  எனக்கு தெரியல, இதுல வேலையையும் விடுன்னா.. உங்களுக்கு என் கூட இருக்கிறது அவ்வளவு கஷ்டமா இருந்தா  போங்க, தூரமா தள்ளி போயிடுங்க, என்னை அது இதுன்னு சாகடிக்காதீங்க..” தொண்டை கிழிய அவன் இவ்வளவு நேரம் போராட்டம், கோவம், இயலாமை சிதறி கொண்டு வந்தது.

அப்பாவும் மகளும் அவனை புரிந்து வருத்தம் கொண்டனர்  “சரி பொறுமையா இருடா.. நாங்க இப்போ அதை பேசியிருக்க கூடாது, விடு..” தேவேந்திரன் சொன்னவர், வெளியே அவரின் பெரிய அண்ணனை பார்க்கவும், “வந்துடுறேன்..” என்று அவரிடம் சென்றார். அவர் உள்ளே வந்து எதுவும் பேசிவிட்டால் ஜனாவை கட்டுப்படுத்த முடியாதே.

பொம்மி மெல்ல மாமன் கை மேல் ஒற்றை விரல் கொண்டு தொட போக, மாமனோ ஆவேசமாக தட்டிவிட்டான். “சா.. சாரி மாமா..” பொம்மி கண்களை சுருக்கி திரும்ப விரலால் அவன் கையை தொட போக, அவனோ திரும்ப தட்டி விட்டான்.

“எங்க நீங்க எங்களை எல்லாம் விட்டு ரொம்ப தள்ளி போயிடுவீங்களோன்ற பயத்துல,  கோவத்துல தான் அப்படி பேசிட்டேன் மாமா, என்னால எதையும் யோசிக்க முடியல, உண்மையிலே ரொம்ப சாரி..” பொம்மி வருத்தமாக சொன்னவள், விடாமல் தன் சுண்டு விரலால் அவன் சுண்டு விரல் கோர்த்தாள்.

ஜனகன் அமைதியாக இருக்க, “மாமா..  அதான் சாரி சொல்றேனே, பேசுங்க ப்ளீஸ்..” பெண் அவன் முகம் பார்த்து கேட்க, பார்க்கவில்லை அவன்.

“மாமா.. நீங்க அந்த வேலை, அது ஓகே, நான் எதுவும் சொல்லலை, இப்போ நீங்க சொன்னதுக்கு அப்பறம் எனக்கு புரியுது, ஆனாலும் மனசு கஷ்டமா இருக்கு, ஏன் மாமா நமக்கு இப்படின்னு இருக்கு..” பெண்ணுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

“ம்ப்ச்.. இப்போ என்ன..? நீ இப்படி.. க்கும்.. என்னை இன்னும் ஹார்டா பீல் பண்ண வைக்காத..” அவள் சுண்டு விரலுக்கு இவன் அழுத்தமாக ஆதரவு கொடுத்தான். அவனும் வருந்துகிறான் என்று புரிந்து கொண்ட பெண், கண்களை சிமிட்டி,

“சரி பரவாயில்லை விடுங்க.. கல்யாணம் முடியவும் நமக்கு ஹனிமூன் செலவு மிச்சம்ன்னு நினைச்சுகிறேன் மாமா..” என்றாள்.

“ஏய்.. உன்னை..” ஜனகன் அதிர்ந்து உதட்டோரம் துடித்த சிரிப்பை அடக்கி கொண்டவன், அவளை சுண்டு விரலை நெறித்தான்.

“வர முகூர்த்தத்துல கல்யாணம் முடிச்சு என் கூடவே வந்துடுறியாடி..” ஜனகன் ஏக்கமாக கேட்டுவிட,

“மாமா நீங்களா இது..?  எனக்கு டபுள் ஓகே..” என்றாள் உடனே.

“ம்ம்.. அப்பா, அம்மாவையும் நம்மளோட கூட்டிட்டு போயிடனும்.. இனி அவங்களுக்கு இங்க என்ன இருக்கு..? நிலம் இருந்தாலாவது எதாவது செஞ்சுட்டு இருப்பாங்க.. குடும்பம் நடத்த பணம் பிரச்சனையில்லன்னாலும், தனியா இருக்கிறது வேண்டாம், நாம எங்கேயோ அவங்களும் அங்கே தான், வேற வழி இல்லை.. நாம ஒரு குடும்பமா நல்ல தான் இருக்கும் இல்லை..” அவள் கைகள் கோர்த்து வருங்காலத்தை பேசி கொண்டிருந்தவனை பொம்மி ஆச்சரியமாக பார்த்திருந்தாள்.

“என்னடி உனக்கு ஓகே தானே..?” கேட்டவனுக்கு அப்போது தான் அவள் படிப்பு நினைவிற்கு வந்தது. “இன்னும் உன்னோட ஒரு வருஷ படிப்பு இருக்கு இல்லை..” ஏமாற்றம் கொண்டவன், “நான் தான் சொல்றேன்னா நீயும் ஆஹ்ன்னு கேட்டிட்டு இருக்க, சொல்ல மாட்டியா..?” அவளை கடிந்தான்.

“நீங்க என்கூட வந்துடுறியா கேட்டதுல நான் பிளாட் ஆயிட்டேன் மாமா, அதான் எனக்கும் மறந்திடுச்சு..” என்றாள் கண்களை சுருக்கி.

“நம்பிட்டேன்.. கேடிடி நீ..” என்றவனுக்கு இன்னமும் ஏமாற்றம் அடங்கவில்லை. சில நொடி கனவு என்றாலும் முழுதும் திளைத்துவிட்டான்.

“இப்போ என்ன மாமா ஒரு வருஷம் தானே, வேகமா முடிஞ்சு போயிடும், அப்பறம் இதெல்லாம் நடக்க போகுது தானே..” என்றாள் பெண் சமாதானமாக.

“ம்ம்..” ஜனகன் மூச்சை இழுத்துவிட,

“அன்னைக்கு போல உங்களை கட்டிக்கவா மாமா..?” பெண் அருகில் வந்து கிசுகிசுப்பாக கேட்டாள்.

ஜனகனுக்கு உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், வெளியே முறைக்க, “எனக்காக இல்லை.. நீங்க அப்செட்டா இருக்கீங்கன்னு தான்..” பெண் தோள் குலுக்கியவள், “அந்த பக்கம் கேமரா இருக்காது மாமா..” என்றாள் ரகசியமாக.

ஜனகனுக்கு அப்படி ஒரு சிரிப்பு. மறைத்து, “எனக்கு ஒரு அப்செட்டும் இல்லை, நீ கிளம்பு முதல்ல..” என்றான்.

“ரொம்பதான்.. இப்போ என்ன மாமா நான் ஒத்துகிறேன். நான் தான் அப்செட்டா இருக்கேன், எனக்கு ஆறுதல் சொல்லுங்க..”

“கட்டி பிடிச்சா தான் ஆறுதல் கிடைக்குமா உனக்கு..?”

“ஆமா மாமா உங்க நெஞ்சுல சாய்ஞ்சுக்கும் போது ஒரு மாதிரி வார்ம்’மா நல்லா இருக்கு, கூட உங்க ஹார்ட் பீட் ஏதோ என் பேர் சொல்லியே துடிக்கிற மாதிரி.. உண்மை மாமா.. நான் கேட்டேன்..”

“கேட்கும் கேட்கும்.. பொல்லாத ஆறுதல் எல்லாம் கேட்கிற நீ..?”

“கட்டி பிடிக்கிறதுக்கேவா.. ஏன் மாமா இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருக்கீங்களே ஒருவேளை நம்ம கல்யாணம் முடிச்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க..?”

“ஏண்டி நடக்காததை ஞாபகப்படுத்தி என்னை டென்சன் பண்ணனுமா இப்போ..? போதும் நீ பேசினது கிளம்பு போ..”

“அச்சோ இப்போ நான் வெளியே போனா பெரியப்பா அவ்வளவு தான்..”

“ஏன் என்ன பண்ணிடுவார்..?” ஜனகன் கோவமாக கேட்க,

“என்னை என்ன பண்ணுவார், அவருக்கு தான் பிபி எகிறும், அவர் பாவம், அவருக்காக நாம இங்கேயே இருப்போம் மாமா..” என்றாள் பெண் இமை சிமிட்டி.

“உனக்கு சேட்டை கூடி போச்சுடி..” அவளை தோளோடு அணைத்து கொண்டான். பொம்மியும் அவன் அணைப்பை தவற விடாமல் தோள் சாய்ந்து கொண்டாள். இருவருக்குள்ளும் இருக்கும் வருத்தமும், ஏமாற்றமும் அந்த அணைப்பில் ஆறுதல் கண்டது. ஏக்கமும் கூடியது.

Advertisement