Advertisement

“என்னை பார்க்க வந்திட்டிருக்க பொம்மியை பாதி வழியில வீட்டுக்கு கூப்பிடுறது கூட அதிகம் தான் மாமா, அதை நீங்க செய்யலை..” ஜனா கேட்டுவைத்தான்.

“அது.. அது தான் இந்த சம்மந்தம் வேணாம்ன்னு முடிவாக போகுதே, எதுக்கு அங்க வரணும்ன்னு தான்..” இரண்டாம் அண்ணா சொல்ல,

“சொந்த தாத்தா, பாட்டி வீட்டுக்கு வரதுக்கு  இதை எல்லாம் ஏன் இழுக்குறீங்க, ஏன் அங்க வந்தா நான் அவ கழுத்துல தாலி கட்டிடுவேன்னா..”

“எங்களை மீறி கட்டிடுவியா நீ..?” பெரியவர் ஆவேசமாக கேட்க,

“உங்களை மீறி நான் ஏன் செய்ய போறேன், உங்க சம்மதம் இல்லாம இந்த சம்மந்தம் இல்லன்னு தான் உங்க முன்னாடி நின்னு பேசிட்டிருக்கேன்..”

“நீ பேசலை, சண்டை போடுற..? எங்களை டென்ஷன் பண்ற..?”

“எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க..? போய் நிம்மதியா தூங்க வேண்டியது தானே..?” ஜனா தோள் குலுக்கினான்.

“எங்களை தூங்க அனுப்பிட்டு நீ என்ன பண்ணலாம்ன்னு இருக்க..?” பெரியவர் கடுப்பாக கேட்க,

“என் அக்கா கையால ஒரு வாய் கஞ்சி, அக்கா மககிட்ட இரண்டு வார்த்தை..” ஜனா சாவகாசமாக சொன்னவன், வீட்டுக்குள் சென்றுவிட,

“தேவா என்னடா இது..?” தம்பி மேல் பாய்ந்தார் அண்ணன். “அங்க ஊர் கூடி இந்த சம்மந்தம் முடிஞ்சு  போச்சுன்னு சொல்லிட்டு வந்தா இவன் பின்னாடியே வந்து நிக்கிறான், நீயும் அவனை கூட்டிட்டு வர, என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும், எங்களை பார்த்தா முட்டாளா தெரியுதா..” என்று கத்த, தேவேந்திரன் நொந்து போனார்.

‘அப்போவே வீட்டுக்குள்ள போடான்னு சொன்னா கேட்காம இவங்க பிபியை ஏத்திவிட்டுட்டு போறான், இவங்க குதிக்கிறாங்க.. என்னங்கடா உங்களோட பெரிய இம்சையா இருக்கு..’

“தேவா உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கோம், எங்க பேச்சை மீறி நீ உன் மச்சானை கூட்டிட்டு வரேன்னா அப்போ உனக்கு நாங்க யாரு, எங்க முடிவுல உனக்கு உடன்பாடு இல்லயா..? எங்களை மீறி பொண்ணு கல்யாணத்தை செய்ய பார்க்கிறயா..?” இரண்டாம் அண்ணா கேட்க,

தேவேந்திரன் நிதானமாக அண்ணன்களை பார்த்தவர், “உங்களை மீறி நான் எப்போவும் எதுவும் செஞ்சதில்லை, இனி செய்யவும் மாட்டேன். உங்ககிட்ட சொல்லிட்டு.. ம்ஹூம்.. கேட்டுட்டு செய்றது தான் என் பழக்கம், என் கல்யாணமும் உங்களை கேட்டு, நீங்க பண்ணி வைச்சது தான். அதை இப்போ நீங்க வேற மாதிரி நாலு பேர் முன்னாடி சொல்லி காட்டிட்டாலும், தம்பியா நான் என்னைக்கும் உங்களை எங்கேயும் விட்டு கொடுத்ததில்லை, விட்டு கொடுக்கவும் மாட்டேன்..”

“உங்களுக்கு என் பொண்ணை ஜனகனுக்கு கொடுக்க வேண்டாம்ன்னா, வேண்டாம். ஆனா அதே நேரம் என் பொண்ணு விருப்பத்தை மீறியும் நான் அவளுக்கு கல்யாணம் பண்ண மாட்டேன், நம்ம வீட்ல இது தான் வழக்கம். அதையே என் பொண்ணு விஷயத்துலயும் பாலோ பண்ணுங்க, போதும்..”

“அப்பறம் ஜனா நம்ம வீட்டுக்கும், கீர்த்தி அவங்க வீட்டுக்கும் போறதுக்கு  நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், அது ரொம்ப தப்பு, அவனுக்கு என் பிள்ளைங்க மேல இருக்கிற தாய்மாமா உரிமை பத்தி நான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. எனக்கு என் மாமனார் வீடும் முக்கியம், நமக்குள்ள இன்னமும் கசப்பை வளர்த்துகிறதுல எனக்கு உடன்பாடு இல்லை..”

“சம்மந்தம் பண்ற இடத்துல எல்லாம் நாம இப்படி இல்லையே, இங்க, ஜனா வீட்ல மட்டும் நாம ஏன் இப்படி நடந்துக்கணும்..? இப்படியே கொஞ்ச நாளைக்கு விடுவோம், அப்பறம் கதையை அப்பறம் பார்ப்போம்.. இப்போ வீட்டுக்குள்ள வாங்க, பால் குடிச்சுட்டு போலாம்..” என்றழைக்க,

“எங்களுக்கு வேண்டாம், நாங்க தூங்க போறோம்..” என்று அண்ணன்கள் விறைத்து கொண்டு சென்றனர். தம்பியின் பேச்சு அண்ணன்களுக்கு பிடிக்கவில்லை. புரிந்தது. என்ன செய்ய முடியும்..? சில விஷயங்களை பேசாமலும் இருக்க கூடாதே..?

தேவேந்திரன் அவர்கள் வீட்டுக்குள் செல்வதை பார்த்து தன் வீட்டுக்குள் வந்தார். பானு தம்பிக்கு நீராகாரம்  எடுத்து வந்து கொடுத்தவர், “உங்களுக்கு பால் கொண்டு வரேன்..” என்று கிச்சனுள் போனார்.

ஜனகன் நீராகாரத்தை  இரு நொடி பார்த்தவன், பின் பெருமூச்சுடன் ஒரு சிப் குடித்தான். தொண்டையில் குளிர்ச்சியாக, சூடாக, கசப்பாக, இனிப்பாக ஏதோ போல அரித்து கொண்டு சென்றது.

தேவேந்திரன் புரிந்து அவன் தோள் தட்டியவர், “எப்படியும் உனக்கு ஒரு வாரம் லீவ் இருக்கு, என்ன செய்ய போற..?” என்று பேச்சு கொடுத்தார்.

ஜனகன் கவனம் அங்கு செல்ல, ஆமா என்ன பண்ண போறேன்.. என்ற கேள்வி. “தெரியல..” என்றவனுக்கு, அப்போது தான் அந்த விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. சட்டென ஒரு கோவம், இயலாமை.

“எங்கேயாவது போலாமா..? நானும், நீயும். நமக்கு ஒரு பிரேக் கிடைச்சது போல இருக்கும்..”

“போலாம், நானும் பொம்மியும் ஹனிமூன் போக மூணாறுல சூட் ரூம்  எடுத்திருந்தேன், அங்க நாம இரண்டு பேரும் சோடி போட்டு போலாம்..”

“ஏய் ச்சீ.. டேய்..”

“என்ன..? நானே கடுப்புல இருக்கேன், ஆமா எங்க உங்க பொண்ணு, நல்ல தூக்கமா..?”

“டேய் அவ ரூம்ல இருக்கா, நீ வந்தது தெரியல..” பானுமதி பால் எடுத்து வந்தவர் சொன்னார்.

“ஏன் கூப்பிட மாட்டிங்களா அவளை..? உங்க வீட்டு எம்டன்களை பசியிலும் பேசு பேசுன்னு பேசி சமாளிச்சுட்டு வந்திருக்கேன், இவளுக்கு தூக்கம்.. தூங்கட்டும், நான் கிளம்புறேன்..” என்று எழுந்தவன் கிளாஸை கீழே வைக்க, முழுதும் காலியாகி இருந்தது.

“பொறு ஜனா, உன்னை பார்க்க அவ பெரியப்பாங்கிட்ட எவ்வளவு கெஞ்சினா தெரியுமா..?” பானுமதி சொல்லி மகள் அறைக்கு போன் செய்தார். ஜனகன் எழுந்து நின்றிருந்தவன்,  பொம்மி வரும் வழியை பார்த்தான்.

சில நொடியில் கதவு திறக்கும் சத்தமும், தொடர்ந்த கொலுசின் ஓசையும் அவள் வேகத்தை சொல்ல, லேசான மூச்சு வாங்கலுடன் ஜனகன் முன் வந்து நின்றாள் பெண். “மாமா..” என்ற கண்ணில் வைரமாய் கண்ணீர் துளி அவனை தேடிய தேடலை சொன்னது.

அவளையே பார்த்திருந்தவனுக்கு  திடீர் தொண்டை இறுக்கம். திருமணத்திற்கு தயாரான பெண்ணின் கைகளின் மருதாணி சிவப்பு இவன் உள்ளதை கீறியது. முகம் பளிச்சென, காதுகளில் ஜிமிக்கி  அசைந்தாட, கைகளில் கூடியிருந்த வளையல்களின் எண்ணிக்கை இவன் இழப்பை சொன்னது.

“எப்படி இருக்கீங்க மாமா..? உங்களுக்கு ஒன்னும் இல்லையே..” அவனை மேலிருந்து கீழ் பார்த்து கேட்டாள்  பொம்மி.

“எனக்கு என்ன நல்லா.. ரொம்ப நல்லா இருக்கேன்..” சொன்னவனின் குரலிலே அவ்வளவு கடுப்பு. பெண்ணிற்கு அதெல்லாம் எங்கு புரிந்தது. இன்னும் மாமன் தன் முன் நிற்பதை நம்ப முடியாமல் பார்த்து நின்றிருந்தாள்.

வீட்டு பெரியவர்கள் தன்னை நிச்சயம் மாமாவை பார்க்க விட மாட்டார்கள், எங்கு எப்படி அவரை பார்க்க என்று தவித்து கொண்டிருந்தவளுக்கு,  அவள் மாமனே  எதிர்பாரா விதமாக அவள் கண் முன் வந்து நிற்க  எப்படி இருக்குமாம்..? அவ்வளவு மகிழ்ச்சி, துளி கண்ணீர் என்று அவனையே பார்த்திருந்தாள்.

“அவகிட்ட ஏண்டா உன் கடுப்பை காட்டுற..?” பானுமதி தம்பியை பேச,

“அவகிட்ட மட்டும் தான் காட்ட முடியும்..? காட்டுவேன், உங்களுக்கு என்ன..?” என்றான் தம்பி மிஞ்சி.

“ஜனா..”

“க்கா.. நீயும் எதுவும் சொல்லிடாத, நான் கிளம்புறேன்..” என்று வெளியே நடக்க,

அதுக்குள்ளவா.. “மாமா..” பொம்மி அழைத்து அவன் பின்னே சென்றாள்.

பானுமதி மகளை தடுக்க போக, “விடு பானு அவங்க பேசட்டும்.. என்ன முடிவோ அவங்களே எடுக்கட்டும்..” என்றுவிட்டார் தேவேந்திரன்.

ஜனகன் வேக நடையுடன் வெளியே செல்ல போக, “மாமா..” என்று நடையே ஓட்டமாக மாறி அவன் கை பிடித்திருந்தாள் பெண்.

அவளிடம் பேசாமல் மூச்சை வேக வேகமாக இழுத்து விட்டு கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு ஏமாற்றம். நிர்ணயித்தபடி எல்லாம் நடந்திருந்தால் இன்று இவளுக்கு நான் கணவன். உடமைப்பட்டவன், யாரிடமும் அனுமதி வேண்டி கெஞ்சி கொண்டிருந்திருக்க வேண்டாம்.. என் விதி இப்படி மூன்றாம் மனிதனாக இவளை பார்க்கவே போராட்டம்.. ச்சு

“என்ன மாமா வந்ததும் கிளம்புறீங்க..” பெண் தவிப்புடன் கேட்டாள்.

“இருந்து என்ன பண்ண சொல்ற..?”

“என்ன பண்ணன்னா.. கொஞ்ச நேரம் இருங்க மாமா..” பொம்மி அவன் முன் வந்து நின்றாள். அவனின் முகத்தையே ஆர்வமாக பார்த்தாள்.

“இப்படி பார்க்காதடி.. தள்ளி போ..”

“ம்ஹூம்..” உடனே மறுத்தாள்.

“பொம்மி.. அட்லீஸ்ட் கொஞ்சம் தள்ளியாவது நில்லு..” அவன் குரல் கரகரத்தது.

“இன்னும் கிட்ட வேணும்ன்னா வரேன் மாமா.. தள்ளி எல்லாம் முடியாது, இந்த நாலு நாளும் உங்களை தேடி எவ்வளவு பயம் தெரியுமா..?” இப்போதும் அவளுக்கு தொண்டை அடைத்தது.

“எதுக்கு பயம் ஒரேடியா போய்டுவே..”  மீதி வார்த்தைகள் ஜனகனின் தொண்டை குழியோடு நின்று போனது.

“பொம்மி..” அவன் குரல் கிசுகிசுப்பாக அவனுக்கே கேட்கவில்லை.

பெண் அவன் நெஞ்சில் முகம் புதைத்து மாமனின் இடையோடு கட்டி கொண்டல்லவா நின்றிருந்தாள்.

ஜனகனின் கன்னம் அவளின் உச்சியை தொட, அவனின் இதய துடிப்பு அவளின் காதில் ஒலிக்க, இடையில் இரு கைகளையும் வளைத்து, அவனுள் மிகவும் பாந்தமாக அடங்கியிருந்தவளை அதிர்ந்து பார்த்தான்.

“என்னடி பண்ற..? தள்ளி போ..” குரலே வெளியே வராமல் ஒரு அதட்டல்.

பொம்மியோ அவன் நெஞ்சிலே தலையை மறுப்பாக ஆட்ட, இவனுக்கு ஆட்டம் கண்டது.

அவளை தொட்டு விலக்கிவிட முடியா புது அவஸ்தை.. நான் காணாம போனாப்போ என் அக்கா மகளும் காணாம போயிட்டாளா..?

நிமிடம் நீடித்த அணைப்பில் அவளின் மூச்சு காற்று சூடாக அவன் நெஞ்சில் தீ வைக்க, ம்ஹூம்.. இதுக்கு மேல முடியாது..

“பொம்மி.. அக்கா வர சத்தம் கேட்குதுடி..” என, அவள் பட்டென விலகி நின்றாள்.

“மாமா..” இவன் தேவேந்திரனுக்கு குரல் கொடுத்துவிட,

“மாமா..” பொம்மி அவனை அடிக்குரலில் அழைத்தாள்.

“படிக்கிற பொண்ணு என்னடி பண்ணிட்டிருக்க நீ..?” என்று அவனும் அடிக்குரலில் கடிய,

“நீங்க இங்க இருந்திருந்தா நான் இந்நேரம் உங்க பொண்டாட்டியா உங்க ரூம்ல இருந்திருப்பேன்..” பொம்மி சொல்ல,

“அது தான் நடக்கலையே.. கடுப்பை கிளப்பாம உள்ள போடி..” என்றவன், தேவேந்திரன் வரவும் அவருடன் கிளம்பிவிட்டான்.

Advertisement