Advertisement

மதுரை வீரன் பொம்மி 10

வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் கிளம்பிவிட, குடும்பத்தினர் மட்டும் மீதம் நின்றனர். ஜனகன் பார்வை கண்ணீர் சிந்தும் அக்கா மேல் பதிந்தது. என்னால் தான் இந்த பேச்சா..?

தேவேந்திரனுக்கு அந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது. யாரிடம் பேச, என்ன பேச என்று திணறி போக, கையில் இருக்கும் போன் வேறு விடாமல் கூவி கொண்டிருந்தது. அவரின் பெரிய மகள்.

நிமிர்ந்து பார்க்க மனைவி கண்ணீர். எல்லாற்றையும் விட அக்கண்ணீர் அவரை அதிகம் பாதிக்க, “பானு..” என்றார்.

பானுமதி சட்டென  முந்தானையால் முகம் துடைத்து கொண்டு, “அதிதி..”
என்று மகளுக்கு கொடுத்தார். அவள் உடனே வந்து நிக்க, “நாங்க கிளம்புறோம்மா, பார்த்துக்கோங்க..”  என்று  அம்மாவிடம் சொன்னவர்  மகளுடன் தம்பி அருகில் வந்தார்.

“சாப்பிடுடா.. நாம பசியில சாகுறதால எதுவும்  மாறிடாது.. புரியுதுதானே..” என்றவர், கணவர் காருக்கு சென்றார். தேவேந்திரன் மூச்சை இழுத்து விட்டவர், எல்லோருக்கும் பொதுவாக தலையசைத்து மனைவி, மகளுடன் கிளம்பிவிட்டார்.

யாருக்கும் அவர்களை நிறுத்த கூட முடியவில்லை. முதலில் நிறுத்தி என்னவென்று பேச..? மகன் தனியாக நிற்க, சொந்தங்கள் எல்லாம் தள்ளி போவது போல ராஜலக்ஷ்மி கண்ணுக்கு தெரிய, கட்டுப்படுத்த முடியாமல் கேவல் வெடித்தது. ஜனகன் அமைதியாக மேலேறிவிட்டான்.

“ம்மா.. தம்பி சாப்பிடாம போறான், அவனை முதல்ல கவனிங்கன்னா ஓயாம அழுவாச்சி..” இரண்டாம் மகள் சாந்தி தான் அம்மாவை கண்டித்தாள்.

ராஜலக்ஷ்மி உணர்ந்து மேலேற போக, “முட்டி வலி வைச்சுட்டு நீங்க எங்க போறீங்க..? நான் போய் கூட்டிட்டு வரேன், சாப்பாடு எடுத்து வைங்க..” என்றவள் தம்பி அறைக்கு வந்தாள்.

ஜனகன் கட்டிலில் சாய்ந்திருந்தவன் அக்கா வரவும், “வா’க்கா..” என்று நிமிர்ந்து அமர்ந்து அக்காவை தன் பக்கத்தில் அமர வைத்து கொண்டான்.

“சாப்பிட வா ஜனா, இதை எல்லாம்  அப்பறம் பார்க்கலாம்..” என்றார்.

“போலாம்க்கா..” என்றவன் அமைதியாக இருக்க,

“அக்காங்க மேல கஷ்டப்பட்டுக்காதய்யா.. சொத்து கை விட்டு போனா அந்த வீட்ல அவங்களால குடித்தனம் பண்ண முடியாது, எனக்கு தான் மாமனார், மாமியார் யாரும் கிடையாது, சொத்து போனாலும் மாமா கேட்டுக்க மாட்டார், கடைசி இரண்டு பேருக்கும் அப்படி இல்லைப்பு..” என,

“க்கா.. இதெல்லாம் எனக்கு தெரியாதா..?” என்றான் தம்பி.

“உனக்கு தெரிஞ்சு தான்ய்யா உன் சொத்தையே நீ கொடுக்கிற, அவளுங்களும் அதே பாசத்தை உன் மேல காட்டணும்ன்னு புருஷன் வீட்ல சண்டை கட்டிட்டு வந்துட்டா அதுவும் உனக்கு பாரம் தானேய்யா..”

“க்கா.. என் அக்காங்க குடும்பம் எனக்கு பாரம் இல்லை, ஆனா அவங்க குடும்பமா வாழுறது தான் எங்களுக்கு நிம்மதி, சொத்தை பார்த்து குடும்பத்தை கலைக்க கூடாது..” என்றவன், “நான் இல்லாத இந்த நாலு நாளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க இல்லை..” என்று மெல்ல ஆரம்பித்தான்.

“கொஞ்ச நஞ்சமா.. இந்த ஜென்மத்துக்கு போதும்ன்ற அளவு பட்டுட்டோம் தம்பி..” சாந்தி இப்போதும் கலங்கிய கண்களை துடைத்து கொண்டார்.

“ம்ம்..” அக்கா கை பிடித்து கொண்டவன், “அப்பாவுக்கு அடிபட்டிருக்கு போலக்கா..” என்று கேட்க,

“ஆமாடா.. அந்த பையன்.. ஆஹ்.. அடி, அதுவா..” சாந்தி சொல்ல ஆரம்பித்து விட்டவர், சுதாரித்து கொண்டார்.

“என்னக்கா.. எந்த பையன்..?” ஜனகன் கூர்மையாக கேட்டான். வீட்டில் இவரிடம் மட்டுமே அவனால் விஷயத்தை வாங்க முடியும். சாந்தி தம்பி கேள்வியில் திகைத்து முழித்தார்.

வேலய்யன் மிகவும் கண்டிப்புடன் சொல்லியிருந்த விஷயமே எதையும் ஜனகனிடம் சொல்ல கூடாது என்பது தான். ‘முக்கியமா உனக்கு தான் சாந்தி’ என்றே சொல்லியிருக்க, தம்பியோ சரியாக அவரிடம் தான் கேட்கிறான்.

“அது.. ஆஹ்ன் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச போகும் போது..”

“க்கா..”

“தம்பி நீ எப்போவும் என்னையே மாட்டிவிடுறடா..”

“அப்பா ஹாஸ்ப்பிடல்ல இருந்தாராக்கா..?”

“இல்லையே..”

“க்கா..”

“அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை தொலைச்சிடுவார் தம்பி..”

“க்கா..”

“சொல்றேன்டா.. விடாகண்டன்..” என்று நொந்து போனவர், இதுவரை நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல்  தம்பியிடம் சொல்லிவிட்டார்.

“நீ இல்லாத நாலு நாளும் அப்பா, அம்மா பாடை கண்ணுல பார்க்க முடியல தம்பி, சாப்பாடே அவங்க வயிறார சாப்பிடல, அம்மா உன்னை நினைச்சு ஒரே அழுகைன்னா, அப்பா உன்னை தேடி இரவும், பகலும் அலைஞ்சுட்டே இருந்திட்டார். அந்த தீனதயாளனோட அத்தனை இடத்துக்கும் போய் கேட் வாசல்லே காத்து கிடந்து தான் அந்த தர்ஷனை பார்க்க முடிஞ்சது..”

“ஆனா அந்த பையன் ரொம்ப மோசம், அப்பா அவன் கால்லே விழ போயும் மனசு இறங்கலையே. திமிரா பேசி, மிரட்டுனதுல அப்பா பயந்து மயக்கமாகி, பெரிய மாமா ஹாஸ்ப்பிடல் தூக்கிட்டு வந்திட்டார். மறுநாள் அப்பாக்கு முழிப்பு வரவும் அவரை பிடிக்கவே முடியல. நேரா அந்த ஆபிஸ் கேட்ல போய்  நின்னுட்டார். நாங்களும் பின்னாடியே ஓடினோம்..”

“ஹாஸ்ப்பிடல்ல படுத்துட்டு வந்த கையோட கேட் முன்னால நாள் முழுக்க வெயில்லே சோறு தண்ணி இல்லாம காத்து கிடந்தது தான் மிச்சம்.  உள்ளேயே விடாம, அந்த பையன் கார் வெளியே வர அப்பா சட்டுன்னு  காருக்கு குறுக்கால போயிட்டார், எங்களுக்கு உசுரே போயிடுச்சு, அதுக்கும் அந்த பையன், கிழவா இதுக்கு எல்லாம் நீ சாக மாட்ட, ஓடி போயிடுனு எவ்வளவு  திமிரா பேசினான் தெரியுமா..?”

“அப்போவும் அப்பா அவன்கிட்ட கெஞ்சினா உன் எலும்பை எண்ணிடுறேன், உசுரை உருவிடுறேன் சொன்னான் பாரு அப்பாக்கு வந்ததே கோவம், என்னடா சொன்னன்னு பாய்ஞ்சு அவன் சட்டையை பிடிச்சுட்டார், அம்மாவும் அவனை  விடாதீங்கன்னு முந்தானையை விரிஞ்சு கட்டிட்டு நின்னுட்டாங்க..”

“எங்களை எல்லாம் அவனோட ஆளுங்க பிடிச்சுக்கிட்டு, “என் சட்டையவா பிடிச்சன்னு..?” அப்பாவை தள்ளி விட்டு உதைக்கவே போயிட்டான், நல்லவேளை அந்த தம்பிங்க வந்தாங்க. வர வரத்தே அந்த சிவனேஷ்வர் தம்பி இந்த பையனை உதைச்ச உதையில கேட்டுலே போய் விழுந்தான். அப்பாவும் அடங்காம அவன் எகிறி பேசி, அந்த இன்னொரு தம்பி பிரபாகரன்கிட்ட மூக்கை உடைச்சுகிட்டான்..”

“அவனோட ஆளுங்களையும் அடங்கி உட்கார வைச்சுட்டாங்க, அப்புறம் தான் அந்த தீனதயாளனுக்கு போன் பேசி, உன்னை கூட்டிட்டு வர டெல்லி வந்தாங்க. அங்கிருந்து பெரிய மாமா போன் பண்ணி நீ அவரோட தான் இருக்கேன்னு சொன்னதுக்கு அப்பறம் தான் எல்லோருக்கும் நிம்மதி ஆச்சு. அப்போவும் அம்மாவுக்கு உன்னை கண்ணுல பார்த்தா தான் ஆச்சுன்னு அழுகை..”

“பானு அக்கா இருந்திருந்தாலவது அதட்டி உருட்டியாவது சமாளிச்சிருப்பா, அங்க அவளுக்கும் பிரச்சனை, கீர்த்தியை இங்க கூட்டிட்டு வர கூடாதுன்னு வீட்டு பெரியவர் சொல்லிட்டார்ன்னு அவ மட்டும் தான் வந்து வந்து போனா..”

“இதோ இன்னைக்கும் உன்னை பார்க்க கீர்த்தியை கூட்டிட்டு வந்திட்டிருந்தவளை திரும்ப கூப்பிட்டு, கீர்த்தியை வீட்ல விட்டுட்டு இவங்க மட்டும் வராங்க, ஏன் அப்படி பண்ணாங்க இப்போ தானே தெரியுது.. பூ வைச்ச சம்மந்தத்தை எவ்வளவு சுளுவா வெட்டி விடுறாங்க பாரு..  காசு, பணமா அவங்களுக்கு சொந்தம். தாய்மாமா உறவையே அத்துவிட நினைச்சா வுட்டுற முடியுமா..? பார்க்கலாம் தேவேந்திரன் மாமா என்ன செய்றார்ன்னு..” சாந்தி புலம்பி அங்கலாய்த்து கொண்டிருக்க, கீழே ஹார்ன் சத்தம்.

“மாமா கார் மாதிரி இருக்கு.. இப்போ தானே போனாங்க..” சாந்தி வெளியே வந்து பார்க்க, தேவேந்திரன் தான். “தம்பி மாமா உன்னை கீழே வர சொல்றார்..” சாந்தி சொல்ல, ஜனகனுக்கு தான் தெரியுமே அவர் வருவார் என்று. அக்காவுடன் கீழிறங்கி வந்தான்.

“மாமா.. நாங்க கொஞ்சம் வெளியே போய்ட்டு வரோம்..” என்று வேலய்யனிடம் சொல்லி கொண்டிருக்க,

“மாப்பிள்ளை அவன் இன்னும் சாப்பிடலை..?” வேகமாக உள்ளிருந்து வந்தார் ராஜலக்ஷ்மி.

“நான் பார்த்துகிறேன்த்தை..” என்றவர் ஜனகனுடன் கிளம்பினார். காரில் அமைதி. இருவருக்கும் பேச தோன்றவில்லை. நேரே மருத்துவமனை சென்றனர். தேவேந்திரனின் குடும்ப மருத்துவர் என்பதால், இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்தார்.

ஜனகனை பரிசோதித்தவர், “முதல்ல ஜுஸ், கஞ்சி போல நீராகாரத்தை கொடுங்க, அப்பறம் மெல்ல மெல்ல டிபன், ரைஸ்ன்னு கொடுங்க, சரியாகிடும்..” என்றவர், மருந்துகளை கொடுத்தனுப்பினார்.

“வீட்டுக்கு போயிடலாம்.. அத்தைக்கு போன் பண்ணி சொல்றேன்..” என்று தேவேந்திரன் போன் எடுக்க,

“அக்காகிட்ட சொல்லுங்க..” என்றான் ஜனகன்.

“நம்ம வீட்டுக்கா..?” தேவேந்திரன் முழித்தார்.

“இப்போ வேண்டாம் ஜனா, நாளைக்கு..”

“என் அக்கா வீட்டுக்கு என்னை வர கூடாதுன்னு சொல்றீங்களா..?” அவரை அழுத்தமாக பார்த்தான்.

‘அமைதியா இருக்கும் போதே நினைச்சேன் வில்லங்கத்தை கூட்டுவான்னு, என்ன இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கலை.. முதல்ல வயித்துக்கு எதாவது சாப்பிடட்டும்.. அது தான் இப்போ முக்கியம்..’ தேவேந்திரன் பெருமூச்சை விட்டு வேலய்யனுக்கு அழைத்து பேசியவர், காரை அவர் வீட்டிற்கு விட்டார்.

அவரின் இரு அண்ணன்களும் வெளியே நடந்தபடி இன்றயை சம்பவத்தை பற்றி  பேசி கொண்டிருக்க, தேவேந்திரன் கார் வந்து நின்றது. பக்கத்து பக்கத்து வீடு என்பதால் தம்பியுடன் ஜனகனும் இறங்குவதை பார்த்து அதிர்ந்து, கோவம் கொண்டவர்கள்,  “என்ன தேவா இது..?” என்ற சத்தத்துடன் அருகில் வந்தனர்.

ஜனகன் முன் திரும்ப தேவையில்லாத பேச்சுக்கள் வேண்டாம் என்று நினைத்த தேவேந்திரன், “உள்ள போடா நீ..?” என்று அவனிடம் சொல்ல, ஜனகனோ சாவகாசமாக காரில் சாய்ந்து நின்றான்.

“இந்த நேரத்துக்கு ஜனாவை ஏன் இங்க கூட்டிட்டு வந்த..?” பெரிய அண்ணா கேட்க,

“அது..”

“பொம்மியை  பார்க்க வந்தேன்..” என்றான் ஜனகன் நேராக.

“என்ன..? இதெல்லாம் சரியில்லை ஜனா, நாங்க தான் இந்த சம்மந்தம் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டு வந்துட்டோம் இல்லை, அதையும் மீறி இந்த நேரத்துக்கு கீர்த்தியை பார்க்கணும்ன்னு  வந்து நின்னா என்ன அர்த்தம்..?” பெரியவர் கத்தவே செய்தார்.

“அண்ணா.. பொறுமையா இருங்க, பேசலாம்..” தேவேந்திரன் அவரை  தடுக்க பார்க்க,

“சம்மந்தம் வேணாம்னு நீங்க தான் சொன்னீங்க, நான் சொல்லலை..” என்றான் ஜனகனோ.

“நீ.. நீ சொல்லலைன்னா, அது உன் இஷ்டம், எங்களுக்கு வேண்டாம், அவ்வளவு தான்..”

“சரி.. வேண்டாம், அதுக்காக நான் பொம்மியை பார்க்க வர கூடாதுன்னு நீங்க சொல்ல முடியாது மாமா..”

“இதென்ன பேச்சு ஜனா..”

“இது தான் பேச்சு மாமா. இந்த பூ வைச்சது, எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ண நீங்க நாள் குறிச்சது எல்லாம் இப்போ, இந்த ஒரு மாசமா தான். அதுக்கு முன்ன, நான் பிறந்ததுல இருந்தே என் அக்காக்கு நான் தம்பி, என் அக்கா பிள்ளைகளுக்கு நான் தாய்மாமா. என்னை எங்க அக்கா வீட்டுக்கு வர கூடாதுன்னோ, என் அக்கா பிள்ளைகளை நான் பார்க்க கூடாதுன்னோ யாரும் சொல்ல முடியாது, நீங்கன்னு இல்லை, இதோ இவரே கூட சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது..” என்றான் தேவேந்திரனை கை காட்டி அழுத்தமாக.

“அதுக்காக இந்த நேரத்துக்கு வந்து நிக்கிறது எல்லாம் ரொம்ப அதிகம் ஜனா..” பெரியவர் பொருமினார்.

Advertisement