Advertisement

வெளியே பேச்சு வார்த்தை ஆரம்பமானது. கோவில் நிலம், பசுபதி செய்தது, இப்போது தீனதயாளன் உள்ளே வந்திருப்பது வரை எல்லாம் சொன்ன வேலய்யன்,

“அந்தாளுக்கு மூணு ஏக்கரை கொடுக்கிறேன் சொல்லிட்டு வந்துட்டேன், இப்போ கோவிலுக்கு கொடுக்க நிலம் வேணும். கிழக்கால இருக்கிறது போனா, வடக்கு மெயின் ரோடு. மேற்கால, தெற்கால பொண்ணுங்களுக்கு கொடுத்திருக்கேன். அதுல மூணு ஏக்கர் பிரிச்சு கோவிலுக்கு கொடுக்கலாம்ன்னு..”

“அது முடியாது சம்மந்தி..” உடனே மறுப்பு வந்தது.

“அவசரப்படாதீங்க.. எனக்கு தெரியும் அந்த நிலத்தோட மதிப்பு அதிகம்ன்னு, அதுக்கு சமமா மதிப்பு வர சொத்தா கொடுக்கிறேன்..”

“எந்த சொத்து..?”

“இங்க இருக்கிற அஞ்சு ஏக்கருல அந்த மதிப்புக்கு ஏத்தது போல..”

“அது உங்க மகனுக்குன்னு..” ஜனகனை பார்த்தனர்.

“எனக்குன்னு எல்லாம் இன்னும் எதுவும் எழுதலை, அப்பா கொடுக்கட்டும்..” என்றான் இவன்.

“மூணு ஏக்கர் யாருது வரும்..?” தேவேந்திரன் அண்ணா கேட்டார்.

“அது அளந்து பார்த்து தான் சொல்லணும்..” என்றான் ஜனகன்.

“அந்த மூணு ஏக்கர்ல என் தம்பிக்கு கொடுத்தது வந்தா பிரச்னையில்லை, எடுத்துக்கோங்க, திருப்பி வேற சொத்து தர வேண்டாம்..” என்றார் தேவேந்திரன் அண்ணா. ஜனகன் அவரை புருவம் சுருக்கி பார்க்க, தேவேந்திரனுக்கு அண்ணன் பேச்சில் அளவில்லா சந்தேகம்.

“உங்களுக்கு என்னங்க, இதை விட்டா சொத்தா இல்லை, எங்க நிலைமை அப்படியா..?” என்றார் மூன்றாம் சம்மந்தி.

“கோவிலை சுத்தி மூணு ஏக்கர்ன்னா, கடைசி இரண்டு மாப்பிள்ளைங்க சொத்து இவங்க கேட்கிற மூணு ஏக்கருக்குள்ள வரும்..” பசுபதி சொல்ல,

“நீ பேசாத.. உன்னால தான் இவ்வளவு பிரச்சனையும்..” வேலய்யன் அவன் மேல் பாய்ந்தார்.

“இல்லன்னா மட்டும்.. உனக்கு இன்னும் புரியல, தீனதயாளன் கட்சிக்காரன்னு  என்கிட்ட கேட்டதுனால நான் அட்லீஸ்ட் ஓசியில போற சொத்துக்கு காசாவது தேத்தனும்ன்னு பார்த்தேன், இப்போ நீ சும்மா தான் விட்டுட்டு வர போற..” என்றான் அவன்.

“அது என்னவோ அது நாங்க பார்த்துகிறோம்.. நீ உன் வேலையை பாரு..” என்றுவிட்டார் வேலய்யன்.

“எங்க சொத்துக்குள்ள வந்தா அஞ்சு ஏக்கர்ல  எங்களுக்கு உறுதியா கொடுப்பீங்க தானே..?” மூன்றாம் சம்மந்தி கேட்க,

“கண்டிப்பா கொடுத்துடுவோம்..” என்றார் வேலய்யன் உறுதியாக. அவர்கள் தங்களுக்குள் சாதக, பாதங்களை அலசி ஆராய்ந்தவர்கள், “ஒரு வாரத்துக்குள்ள தீனதயாளனுக்கு கொடுக்கிறதா சொல்லிட்டு வந்திருக்கீங்க, கையோட எங்களுக்கும் பண்ணிடுங்க..” என்றனர்.

“அப்பறம் நான் வந்தது, நின்னு போன உறுதியை பத்தி பேச..” என்று ஆரம்பித்தார் பசுபதி. ஜனகன் அவரை கூர்மையாக பார்க்க, “இந்த நிலம் பஞ்சாயத்துல தான் நாங்க உறுதியை உடைக்க வேண்டியதா போச்சு, உங்களுக்கும் குறிச்ச முகூர்த்தம் நின்னு போச்சு, நாம ஏன் திரும்ப என் தங்கச்சி மக அமுதாக்கு..”

“நீங்க கிளம்புங்க சித்தப்பா..” என்றான் ஜனகன்.

“இல்லை ஜனா.. நான் சொல்றதை கேளு..”

“முடிஞ்சு போனதை நான் திரும்பி பார்க்கிறதில்லை..”

“அப்போ என்ன பண்ண போற..? இதோ உன் மாமா அவரோட மகளை தங்கச்சி பையனுக்கு கொடுக்கிறதா பேச்சு அடிபடுது..”

“நான் உன்கிட்ட வந்து சொன்னேனா..?” தேவேந்திரன் பாய்ந்தார்.

“நீங்க சொன்னா என்ன..? உங்க அண்ணன்ங்க சொன்னா என்ன..? எல்லாம் ஒன்னு தானே..? ஏன் நீங்க உங்க அண்ணன்களை மீறியா பொண்ணு கல்யாணத்தை பண்ணுவீங்க..?” அவனின் வார்த்தை ஜாலத்தில் தேவேந்திரன் திகைத்து அண்ணன்களை பார்த்தார்.

“என் தங்கச்சி பொண்ணு முடிஞ்சு போனதுன்னா, உன் அக்கா மகளும் முடிஞ்சு போனது தானே..? அங்க மட்டும் நீ போய் நிக்க போறியா என்ன..?”

ஜனகன் அவரின் அருகில் வந்தவன், “என் அக்கா மகளை இந்த செகண்ட் வரை நான் வேணா சொல்லலை, சொல்லவும் மாட்டேன், எப்படி முடிஞ்சு போனதாகும், தள்ளி தான் போயிருக்கு..” என்றான்.

“இல்லை ஜனா.. அது சரி வராது, உன்னை சுத்தி இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது நாங்க எப்படி எங்க பொண்ணை உனக்கு கொடுக்கிறது..?” தேவேந்திரன் அண்ணா கேட்டார்.

“சம்மந்தி அவங்க கேட்கிற நிலத்தை நாம கொடுத்துட்டா எல்லாம் பிரச்சனையும் முடிஞ்சு போயிடும்..” வேலய்யன் பதறி சொல்ல,

“பிரச்சனை மட்டுமா முடியும் உங்க மகனும் தான், இருக்கிற கொஞ்ச சொத்தும் கொடுக்க போறீங்க, அப்புறம் உங்ககிட்ட என்ன இருக்குன்னு பொண்ணை கொடுக்க..? உடனே பேங்க் வேலைன்னு சொல்லாதீங்க, அதுல எவ்வளவு  வருமானம் கொட்டும்ன்னு எங்களுக்கும் தெரியும். இப்போவே உங்களுக்கு வயசு வந்திடுச்சு, ஹாஸ்ப்பிடல் செலவு, குடும்பம் நடத்த, உங்க நாலு பொண்ணுங்களுக்கு கடைசி வரைக்கும் சீர் செனத்தின்னு.. ஆகாது, எதுக்கு எங்க பொண்ணு வந்து இங்க அடிச்சுக்கோ, பிடிச்சுக்கோன்னு கஷ்டப்படணும்..”

“தம்பி.. அப்படி சொல்லாதீங்க.. என் மகன் வாழ்க்கையை பாருங்க..” ராஜலக்ஷ்மி வெளியே வந்து கெஞ்சலாக கேட்க,

“மகன் வாழ்க்கை மேல உங்களுக்கு இருக்கிற அக்கறை, மக பெத்த பொண்ணு வாழ்க்கை மேல இல்லைங்கிறது எங்களுக்கு  ஆச்சரியமா இருக்கு..” என்றுவிட்டார் தேவேந்திரனின் இரண்டாம் அண்ணா.

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல என்று அவர்கள் திணற, “இப்போ என்ன சொல்ல வரீங்க..?” ஜனா அழுத்தமாக கேட்டான்.

“எங்க பொண்ணை இங்க கொடுத்தா சுகப்பட மாட்டான்னு நினைக்கிறோம்..”

“ண்ணா.. என் பொண்ணு வாழ்க்கையை பத்தி முடிவெடுக்கிற உரிமை எனக்கும் கொஞ்சம் இருக்கு..” தேவேந்திரன் பொறுக்க முடியாமல் பேச வர,

“ஏன் பொண்ணை கொடுத்து உன் சொத்தையும் கொடுத்து மச்சானை தூக்கி விட போறேங்கிறயா..?” இரண்டாம் அண்ணா கேட்டு வைத்தார். எப்படி பேசினாலும் வாய் அடைக்கும் வித்தை தெரிந்த அண்ணன்களை தேவேந்திரன் வாயடைத்து போய் பார்த்தார்.

“சரி.. இதை இப்போ பேச வேண்டாம், அப்புறம் பார்ப்போம்..” என்றார்.

“ஏன் அப்பறம் தேவா..? எப்போவும் இதே பதில் தான், அதுக்கு பசுபதி அவர் தங்கை பொண்ணை தர ரெடியா இருக்காரே, ஜனாவை கட்டிக்க சொல்லு..” என்றனர்.

ஜனகன் வாய் துறுதுறுத்தது. தேவேந்திரனுக்காக கட்டுப்படுத்தி கொண்டவன், “அந்த பேச்சுக்கு இடமில்லை..” என்றான்.

“அது உன் இஷ்டம், நாங்க வந்தது எங்க பொண்ணை இங்க கொடுக்க மாட்டோம்ன்னு சொல்லத்தான்..”

“தம்பி அப்படி சொல்லாதீங்க, என் மகனுக்கு இப்போ கல்யாணம் பண்ணலைன்னா இருபத்தி ஒன்பது வயசு ஆகிடும், கொஞ்சம் மனசு வைங்க..” ராஜலக்ஷ்மி மகனுக்காக வேண்டி நின்றார்.

“முன்னமே உங்க மகனுக்காகன்னு நீங்க கேட்டு தான் படிச்சுக்கிட்டு இருக்கிற எங்க வீட்டு புள்ளையை உங்களுக்கு கொடுக்க சம்மதிச்சோம், ஒரு மாசத்துக்குள்ள உறுதி பண்ணி, பத்திரிக்கை வரை அடிச்சோம், கடைசில உங்க வீட்டு பிரச்சனையில எங்க வீட்டு பொண்ணு கல்யாணம் நின்னு போச்சு, ஊருக்குள்ள இதனால எவ்வளவு பேச்சு தெரியுமா..? ஏற்பாடு பண்ண கல்யாணம் நின்னு போனா அந்த பொண்ணு நிலைமை என்னன்னு கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தீங்களா..? இப்போவும் உங்க மகன், அவன் வாழ்க்கைன்னு தான் நிக்கிறீங்க.. இப்படிப்பட்ட குடும்பத்துல தான் என் தம்பி பொண்ணை கொடுக்க நிக்கிறான், உங்க மேல அவன்  வைச்ச பாசத்துல நீங்க கொஞ்சம் வைச்சிருந்தா கூட இவ்வளவு பிரச்சனையை வைச்சுக்கிட்டு திரும்ப இப்படி கேட்டு நிக்க மாட்டீங்க..?” தேவேந்திரன் அண்ணா கத்திவிட்டார்.

“ண்ணா.. இது அவங்களுக்கும் நடந்த அநியாயம் தான், புரிஞ்சுக்கோங்க..” தேவேந்திரன் பேச,

“நீ வாயே திறக்காத, உன் மச்சான்  மேல நீ வைச்ச பாசத்தை காட்ட எங்க வீட்டு பொண்ணு தான் கிடைச்சாளா..? நல்லா படிச்சு, வளமான எதிர்காலம் உள்ள பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்து, பெரிய சுமையை அவ தோள்ல தூக்கி வைக்க துடிக்கிற..? அப்பனாடா நீ எல்லாம்..?” அண்ணா தம்பி மேல் பாய்ந்தார்.

அவர் கேட்பதில் உள்ள அத்தனை நியாயமும் ஜனகன் உள்ளத்தை குத்தினாலும், இதில் தன் தவறு எங்குள்ளது என்று எனக்கு இதெல்லாம் நடக்கிறது..? வலிக்க தலை திருப்பி எங்கோ பார்த்தான்.

“ண்ணா.. ப்ளீஸ்.. இப்போ இந்த பேச்சே வேண்டாம், நாம போலாம்..” தேவேந்திரனுக்கு இதற்கு மேல் இதை வளர்க்க விரும்பவில்லை.

“தேவா.. நாங்க பண்ண தப்பு என்ன தெரியுமா..? இருபது வருஷத்துக்கு முன்னாடி நீ நம்ம அந்தஸ்துக்கு சமம் இல்லாத இடத்துல கை நீட்டும் போது உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சது, அதையே எங்க வீட்டு பொண்ணு விஷயத்துலயும் செய்ய நினைக்காத, உனக்கு கொடுத்த வாய்ப்பு முடிஞ்சு போச்சு, இனி இது பத்தி நீ எப்போவும் பேச கூடாது.. உனக்கு மட்டுமில்லை இது, இங்க இருக்கிற எல்லோருக்கும் தான்.. பின்னாடியே வந்து சேருங்க..” என்று தம்பியுடன் கிளம்பிவிட்டார்.

பானுமதி இத்தனை வருடம் கழித்து கேட்டுகொண்ட வார்த்தையில் கீழே குனிந்து கண்ணீரை சிந்தினார்.  வந்திருந்த மற்ற சொந்தங்களும் மெல்ல இடத்தை காலி செய்தனர்.

Advertisement