Advertisement

மதுரை வீரன் பொம்மி 9

ஜனகனின் மொத்த குடும்பமும் அவனுக்காக கேட் வாசலிலே காத்திருக்க, கார் வந்து நின்றது. வீட்டு பெண்கள் ஜனகன் பிறந்த நேரம் அவனை பார்க்க  எவ்வளவு ஆவல் கொண்டனரோ அதே ஆவல், பரிதவிப்புடன் காரில் இருந்து இறங்கியவனை பார்த்தனர்.

ராஜலக்ஷ்மிக்கு கண்ணீர் மாலை. “ம்மா..” என்று மகன் அவர் கையை பிடித்து அணைத்து கொள்ள, “ராசா.. அப்பு..” என்ற கேவலுடன் அம்மாவும் மகனை வருடி தழுவி கொண்டார்.

நான்கு நாட்களிலே வெகுவாக தளர்ந்திருந்தார் அவனின் அம்மா. வெள்ளி முடிகள் அவரின் முதுமையை சொன்னதோ இல்லையோ பலம் இல்லா உடல் நன்றாகவே சொன்னது. அரை உயிர் என்பதை அவனின் அம்மாவில் கண்ட  மகனின் தொண்டை குழி ஏறி இறங்கியது.

“ராஜி.. மகனை வீட்டுக்குள்ள கூப்பிடுமா..” வேலய்யன் கண்ணீரை துண்டில் ஒற்றி சொன்னார்.

பானுமதி குடும்பம் பாதி வழியில் வந்து, திரும்ப வீடு சென்று வந்து கொண்டிருக்க, மற்ற அக்காக்கள் அவனை நலம் விசாரித்து கண்ணீர் விட்டு, அவனுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்தனர்.

“ஏய்யா அப்பு குளிச்சிடுறியா..?” ராஜலக்ஷ்மி கேட்க, அவரின் எண்ணத்தை புரிந்து சரி என்று விட்டான். வெளியவே காய்ந்திருந்த சூடு தண்ணீரை நடுங்கும் கைகளால் அவர் விளாவ, “ம்மா.. நீங்க விடுங்க, க்கா..” என்று இரண்டாம் அக்கா சாந்தியை அழைத்து கொண்டான்.

அவர் செய்ய, ராஜலக்ஷ்மி மகனின் தலைக்கு தண்ணீர் ஊற்றினார். அவனுக்கு இது மறுபிறப்போ இல்லையோ, குடும்பத்தினருக்கு  இது அவனின் மறுபிறப்பு தான்.

ஜனகன் ஈர உடையுடன் வெளி படிக்கட்டு வழியே அவனின் அறைக்கு சென்றான்.  வீட்டு மாப்பிள்ளைகள் தீவிரமாக பேசி கொண்டிருந்தது கண்ணில் பட்டது. இவன் உடை மாற்றி சில நொடி கட்டிலில் அமர்ந்தான். மெல்ல அதில் சாய்ந்தான். கண்களை மூட, வெளியே அழைக்கும் சத்தம். மூச்சை இழுத்துவிட்டு வர, வேலய்யன்.

“சொல்லுங்கப்பா..” மேலேறி வந்திருந்த  தந்தையை கேள்வியாக பார்த்தான்.

“அது இப்போ பேச வேண்டிய சூழ்நிலை இல்லை தான்ய்யா, நேரம் இல்லை, என்னை தப்பா நினைக்காத..” தயங்கி வந்த விஷயத்தை சொல்ல,  ஜனகன் அமைதியாக கேட்டான்.

“இது தான் தம்பி.. எனக்கு.. என்னை மன்னிச்சுடு..”

“ப்பா..”

“இல்லைப்பு.. நான் உனக்கு அநியாயம் பண்றேன்னு தெரிஞ்சும் கையாலாகாத அப்பனா”

“ப்பா.. ஏன் இப்படி..? நீங்க சொல்றதுல எனக்கு முழு சம்மதம், செய்ங்க, பார்த்துக்கலாம்..” என்றான் கை பிடித்து. மகனின் சம்மதத்தில் அவருக்கு மகிழ்ச்சி வரவில்லை. இன்னும் வருத்தம் கொண்டார். ஆனாலும் அவருக்கு வேறு வழி இல்லை. தளர்ந்த நடையுடன் கீழிறங்க, ஜனகன் அப்பாவை பார்த்தே இருந்தான். அவன் பார்வைகள் சொல்லும் சங்கதி அவன் மனதுக்கு மட்டுமே தெரியும்.

பானுமதி கார் வர, கீழிறங்கி வந்தான். தம்பியை பார்த்ததும் அக்காவின்  கண்ணீர் உற்பத்தியாக ஜனகன் அக்காவை தோளோடு அணைத்து கொண்டவன், தன் கை பிடித்திருந்த அதிதி தலையை வருடி விட்டான்.

தேவேந்திரனின் அண்ணன்களும் உடன் வந்திருந்தவர்கள் இவனிடம் நலம் விசாரிக்க,  “கீர்த்தி எங்க..?” என்று தேவேந்திரன் வந்தார்.

“அவ அங்க வீட்ல..” பானு சொல்ல,

“ஏன் கூட்டிட்டு வர வேண்டியது தானே..” தேவேந்திரன் கேட்க,

“ஏன் தேவா..? இருக்கட்டும்..” என்றார் பெரிய அண்ணா.

“எல்லாம் வாங்க சாப்பிடலாம்..” வேலய்யன் அழைக்க,

“வேண்டாம்..” என்று மறுத்துவிட்டனர் வந்தவர்கள். அப்போது தான் நன்றாக பார்க்க, நான்கு அக்கா வீட்டினர் பெரியவர்களும்  அங்கு இருப்பது புரிந்தது.

“நீ முதல்ல சாப்பிடு வா ஜனா..” தேவேந்திரன் அவன் கை பிடித்து உள்ளே அழைத்து செல்ல போக,

“சம்மந்தி என் மகன் ஏதேதோ சொல்றான், கொடுத்த சொத்தை திரும்ப கேட்கிறீங்களாமே..?” என்று ஆரம்பித்தார் கடைசி மாப்பிள்ளையின் அப்பா.

“அது கொஞ்சம் இங்க வேற பிரச்சனை சம்மந்தி, அதுக்கு பதில் நாம வேற சொத்து கொடுக்க..”

“அது சரிப்பட்டு வராதுங்க, அந்த சொத்து மதிப்பு மத்த சொத்துக்கு வராது..” என்றார் மூன்றாம் மாப்பிள்ளையின் அப்பா.

வேலய்யன் அதுக்கு பதில் சொல்ல வர, “ப்பா..” என்று அவரை நிறுத்திய ஜனகன்,  வெளியே கூடியிருந்த அனைவரிடமும்,  “நாம பேசலாம்.. அதுக்கு முன்ன வீட்ல எல்லாம் சாப்பிடாம இருக்காங்க.. சாப்பிட்டு வரவும் பேசலாம், நீங்க உட்காருங்க, க்கா எல்லோருக்கும் காபி கொடு..” என்றவன், சேர்களை எடுத்து போட்டான்.

“ஜனா.. நீ முதல்ல சாப்பிட வா, இதை எல்லாம் அவங்க பார்த்துப்பாங்க..” தேவேந்திரன் சொல்ல,

“மாமா.. எனக்கு பொம்மியை பார்க்கணும், அவளை வர சொல்லுங்க..” என்றான் இவன்.

“டேய் நான் என்ன சொல்லிட்டிருக்கேன்.. நீ  நாலு நாளா சாப்பிடாம இருக்கிறது வீட்ல தெரிஞ்சா அவ்வளவு தான்..”

“மாமா ட்ரைவரோட வரது வேண்டாம், நீங்களே போய் கூட்டிட்டு வந்துடுங்க போங்க..”

“ஜனா எனக்கு பைத்தியம் பிடிக்க வைக்காத.. சாப்பிடுடா..”

“பொம்மி வரவும் நான் சாப்பிட்டுகிறேன், நீங்க போங்க..”

“ஜனா.. நான் அத்தைகிட்ட போய் சொல்றேன், அவங்களுக்கு தெரியாததுனால தான் என்னை ஏய்க்கிற..”

“மாமா..” என்று அவர் கை பிடித்து கொண்டான்.  “புரிஞ்சுக்கோ மாமா, என்னால முடியல,  சாப்பாடை பார்த்தா கை நடுங்குது, அவ்வளவு பசிக்குது, வலி உள்ள சுருட்டி எடுக்குது. ஆனாலும் முடியல, ஏதோ ஒவ்வாததை பார்த்தது போல, எனக்கு தெரியல, என்னை விடு, எப்படியும் சாப்பிட்டு தான் தூங்குவேன், இல்லைன்னா காலையில எழ முடியாதுன்னு எனக்கே தெரியுது.. விடு மாமா..” என்றான் இயலாமையுடன் தலையை கோதி.

பசியில் அவன் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்த தேவேந்திரனுக்கு நெஞ்சு பிசைந்தது. “டாக்டரை பார்த்திடுவோமா ஜனா..?”

“சாப்பிட முடியலைன்னா பார்க்கத்தான் வேணும் மாமா.. இப்போ போய் நீ பொம்மியை கூட்டிட்டு வா..” என்றான்.

தேவேந்திரன் அப்போதே டாக்டர் அப்பாயின்மென்ட் போட்டு கொண்டே காருக்கு செல்ல, “தேவா.. எங்க போற..? இரு பேசணும்..” என்றுவிட்டார் அண்ணா.

“வந்திடுறேன் ண்ணா..” தேவேந்திரன் சொன்னதை அவர் காதிலே போட்டு கொள்ளவில்லை.

ராஜலக்ஷ்மி, வேலய்யன் மகனை சாப்பிட கையோட அழைத்து செல்ல, “ஈவினிங் மாமாவோட சாப்பிட்டு தான் வந்தேன், நீங்க சாப்பிடுங்க..” என்று பானுமதியை பரிமாற வைத்து அவர்களை வயிறார சாப்பிட வைத்தான். அவர்களுக்கான மாத்திரைகளை போட வைத்து அப்பாவுடன் வெளியே வந்தான்.

சித்தப்பா வந்தவர், எடுத்ததும் அண்ணனிடம் கோவமாக, “வேலாண்ணா.. நீ பண்றது கொஞ்சமும் சரியில்லை, பையனை பார்க்க வேண்டாமா..? அப்படியென்ன கோவில் நிலம் உனக்கு..? சாமிக்கு தேவையானதை சாமியே பார்த்துக்கட்டும்,  நீ நம்ம புள்ளையை பாரு..” என்றார்.

வேலய்யன் மகன் முகத்தை பார்க்க முடியாமல் கலங்கினார். கோவில், சாமியை மீறும் மனவலிமை அவருக்கு இல்லை. மகன் புரிந்து கொண்டவன், “பார்த்துக்கலாம் விடுங்க சித்தப்பா..” என்று அவரை அமைதிப்படுத்தியவன். இருவரிடமும் சில   சந்தேகங்களை  கேட்டு தெளிவு படுத்தி கொண்டிருக்க, பசுபதி கார் வந்தது.

“இவன் எதுக்கு வரான்..?” என்று வேலய்யன் கோவப்பட,

“ப்பா.. விடுங்க..” என்றுவிட்டான் ஜனகன்.

“சம்மந்தி..” என்று குரல் வந்துவிட்டது வேலய்யனுக்கு.

மகன் காணாமல் போய் இன்று தான் கிடைத்திருக்கிறான். அவன் அருகில் நிம்மதியாய் அமர்ந்து கை கூட பிடிக்க விடாமல், வாட்டும் சொந்தங்களை ராஜலக்ஷ்மி உள்ளிருந்து கசப்புடனே பார்த்தார். “அப்படியா ஓடி போயிடுவோம்ன்னு பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்க..” என்று மகள்களிடம் கோவப்படவும் செய்தார்.

சாப்பிடாத மகனின் முகம் அவருக்கா தெரியாது, புரியாது. அம்மாவை போல அக்காக்களிடம் பசியாறிய தம்பியின் பசி முகம் அவர்களுக்கும் புரியாமல் இல்லையே..?

“எத்தனை நாளா சாப்பிடலன்னு தெரியல..” பானுமதி சொல்ல,

“மாப்பிள்ளைகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்ன்னா கூட்டமே கூடி நிக்குது, சொத்து முக்கியமா தெரிஞ்ச யாருக்கும் என் மகனை கண்ணுக்கு தெரியல, அது சரி என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை தானே, இவங்க எல்லாம் ஏன் அவனை பத்தி கவலை பட போறாங்க..?” ராஜலக்ஷ்மி புலம்ப,

“அப்போ நாங்க யாரும்மா..?” கடைசி மகள் கேட்டாள். “தம்பிய பத்தி எங்களுக்கும் கவலை இருக்கு, அதுக்காக கொடுத்த சொத்தை திரும்ப கேட்டா எங்க வீட்ல எல்லாம் விடுவாங்களா..? அப்புறம் அந்த வீட்ல எங்க நிலைமை எல்லாம் என்னன்னு யோசிச்சு பார்த்தியா..?” அவள் கண்களை துடைத்து கொண்டு கேட்க, ராஜலக்ஷ்மிக்கு மகள் சொல்வதில் உள்ள நியாயம் புரிய, மகள் கை பிடித்து கொண்டார்.

Advertisement