Advertisement

“மூணு நாள் ஆகி போச்சே, என் மகன் என்ன நிலைமையில இருக்கானோ..? என்ன பண்ணாங்களோ..? நாங்க யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்ன்னு எங்களை இப்படி வதைக்கிறாங்க, சாமி நிலத்தை கேட்டது குத்தம்ன்னா எங்களை இல்லை கொல்லணும், என் மகன் என்ன செஞ்சான்னு அவனை பிடிச்சி வைச்சிருக்காங்க, அவனை விட்டுட சொல்லுங்க மாப்பிள்ளை..” ராஜலக்ஷ்மி நெஞ்சில் அடித்து கொண்டு கதறினார்.

“அத்தை.. அவன் நல்லபடியா வந்திடுவான், நீங்க அமைதியாகுங்க..”

“முடியலையே மாப்பிள்ளை, என் நெஞ்சு கிடந்து அடிச்சுக்குதே, ஐயோ என் ராசா.. இந்நேரம் அவனுக்கு நலங்கு வைச்சு புது மாப்பிள்ளையா ஜோலிச்சிருப்பானே என் அய்யா, என் அப்பு  எங்க எப்படி இருக்கான் தெரியலையே..” என்று  சரிய போக,

“ம்மா..” என்று மகள் சாந்தி பிடித்து கொண்டாள்.

“தண்ணீர்.. தண்ணீர் கொடுங்க..” என்று தேவேந்திரன் கத்த, மருத்துவமனையில் இருந்து ஓடி வந்திருந்தவர்களிடம் தண்ணீர் எங்கு இருக்கும்..? இரண்டாம் மாப்பிள்ளை சுதாகர் பக்கத்து கடையில் வாங்கி கொண்டு வர ஓடினார். மனைவி நிலை பார்த்து வேலய்யன் இன்னும் வீழ்ந்து போனார்.

அந்நேரம் கேட் திறக்க, கார் வெளியே வந்தது. தர்ஷனை பார்த்த வேலய்யன் உடலில் வலு எங்கிருந்து வந்ததோ, தேவேந்திரனை உதறி  கார் முன் சென்றுவிட்டார். கார் கிரீச்சிட்டு அவரை இடித்து தான் நின்றது. எல்லாம் பதறி அவரை தூக்க, “இந்த ஸ்பீடுக்கு எல்லாம் நீ சாக மாட்ட, ஒழுங்கா எழுந்து ஓடிடு..” தர்ஷன் காரில் இருந்து இறங்கி வந்தான்.

வேலய்யன் காலில் கசிந்த ரத்தத்தை கண்டு கொள்ளாமல் இழுத்து பிடித்த கால்களுடன் தர்ஷன் அருகில் சென்றவர், “ஏய்யா தம்பி.. என் மகனை விட்டுடுங்க, என்னை கொல்லுங்க, என்ன வேணா பண்ணுங்க, அவனை விட்டிடுங்க..” என்று கை கூப்பி கெஞ்சினார்.

“தானா சாக போற கிழவன் உன்னை நாங்க கொல்லணுமா..? வேற வேலை இல்லை பாரு எங்களுக்கு..” என்றான் தர்ஷன் நக்கலாக.

தேவேந்திரன் கொதித்துவிட்டவர், “டேய் மரியாதையா பேசு..” என்று அதட்ட,

“என் கேட்ல பிச்சைகாரங்களா வந்து நிற்கிற உங்ககிட்ட நான் மரியாதையா பேசணுமா..? இடத்தை காலி பண்ணுங்கடா..” என்றான் அவன் ஆணவமாக.

“ஐயோ தம்பி அப்படி சொல்லாத, என் மகனை விட்டுடுங்கய்யா.. நாங்க போயிடுறோம்..” ராஜலக்ஷ்மி அவன் முன் வந்து கெஞ்சினார்.

“ஏய் செக்கியூரிட்டி இது தான் நீ வேலை பார்க்கிற லட்சணமா..? முதல்ல உன்ன தூக்கிறேன் இரு, யார் யார்  நம்ம கேட் முன்ன நிற்கணும்ன்னு கூட உனக்கு தெரியாதா..?” அங்கு தர்ஷன் பாய்ந்தான். தேவேந்திரனுக்கு இவன் கழுத்தை திருகும் ஆத்திரம்.

வேலய்யன், ராஜலக்ஷ்மி, சாந்தி விடாமல் அவனிடம் கெஞ்சி கொண்டிருந்தனர். தேவேந்திரன் அவர்களை அடக்க முடியாமல் திணற, “சொல்லிட்டே இருக்கேன் கிளம்புங்கடான்னு, போக மாட்டிங்களா..? அவ்வளவு பாசமா மகன் மேல, அவன் எலும்பை எண்ண சொன்னா தான் போவீங்களா..?” தர்ஷன் போன் எடுத்து திமிராக கேட்க,

“தம்பி என் மகன் மேல மட்டும் கை வச்சிராதீங்க..” என்றார் ராஜலக்ஷ்மி குரல் உயர்த்தி.

“என்ன சத்தம் பெருசா வருதே..? அவனை மொத்தமா நொறுக்கி போட்டுருவேன், உசுரை உருவி..”

“ஏய்..” வேலய்யன் அவன் மேல்  பாய்ந்துவிட்டார்.

“என் மகன் உசுரை பத்தி பேசுறான், அவனை விடாதீங்க..” ராஜலக்ஷ்மி முந்தானைய இழுத்து சொருகினார்.

“பார்த்தியா மகன் உசிரை பத்தி பேசவும் கிழவன், கிழவிக்கு வீரத்தை..? என் மேல கை வைக்கிற அளவுக்கு தெம்பு வந்துடுச்சு, இது தப்பாச்சே..” தர்ஷன் அவனின் கார்ட்ஸை பார்க்க, அவர்கள் தேவேந்திரன், சாந்தி, சுதாகரனை பிடித்தனர். அந்த இடம் அமைதியில் அச்சுறுத்தியது.

தேவேந்திரன் திமிரும் சத்தம் மட்டுமே கேட்க, வேலய்யன் அஞ்சாமல் நெஞ்சு ஏறி இறங்க தர்ஷன் சட்டையை பிடித்திருக்க, ராஜலக்ஷ்மி குறையாத கோபத்துடன் நின்றிருந்தார். தன் கம்பெனி முன் இத்தனை ஆட்கள் பார்க்க, தன் சட்டையை கிழவன் ஒருவன் பிடிப்பதா..? தர்ஷனுக்கு வெறியேறியது.

“என் பக்கத்தில நிக்க தகுதியில்லாத கிழவன்  நீ என் சட்டையைவா பிடிக்கிற..? நீ இன்னைக்கு உசுரோட வீடு போய் சேர்யான்னு பாரு.. உன்னை..”  பிடித்த வேலய்யனை உதறி, தள்ளாடி நின்ற மனிதரை உதைக்க காலை தூக்கினான். அவ்வளவு தான் தெரியும்.  “ஆஆஆ..” என்று அலறி கேட்டில் போய் விழுந்திருந்தான் தர்ஷன்.

கண்கள் சுத்தமாக மழுங்கி போனது. கை, கால்கள் அவனுக்கு சிறிதும் ஒத்துழைக்கவில்லை. சுற்றிய தலையை பிடித்து ஆட்டி நிமிர்ந்து பார்க்க, வாட்டசாட்டமாய் நின்றிருந்தான் ‘சிவனேஷ்வரன்’.

“யார்றா நீ..? என் மேல கை வைக்கிற..?” தர்ஷன் ஆத்திரமாய் கத்தி எழ,

“கை எங்க வைச்சான், காலால் தானே உதைச்சான்..” சந்தேகம் கேட்டு வந்து நின்றான் ‘பிரபகாரன்’.

“என்னை அடிச்சதும் இல்லாம எகத்தாளம் பேசுறீங்களா..? உங்களை..” என்று பாய போக, மூக்கு உடைந்தது.

கையை உதறி கொண்ட பிரபாகரன், “என்னடா ரவுடி நீ..? அவன் என்கிட்ட வர வரைக்கும் சும்மா நிக்கிற..?” என்று சிவனேஷ்வரனை காய்ந்தான்.

“அவன் என்கிட்ட வருவான் நினைச்சேன்..” சிவனேஷ்வரன் தோள் குலுக்க,

“நம்பிட்டேன்.. நான் வர மாட்டேன் சொன்னதுக்கு பழி வாங்குற..?” கடுப்பாக கேட்டான்.

பிடி விலகிய தேவேந்திரனுக்கு இவர்களை பார்த்ததும் தான் உயிரே வந்தது. “சார்.. நான் தேவேந்திரன்..” என்று முன் வந்து சொல்ல,

‘சாரா.. இவனா..? ரவுடிக்கு மரியாதையை பாரு..’ பிரபாகரன் வாய்க்குள் மென்று தின்றான்.

சிவனேஷ்வரன் உள்ளுக்குள் சிரித்தவன், “சார் எல்லாம் வேணாம், சிவனேஷ்வரன் கூப்பிடுங்க..” என்றான் தேவேந்திரனிடம்.

மூக்கு உடைந்த தர்ஷனுக்கு, சுற்றி நின்ற ஆட்களை பார்த்ததுமே, அந்த இடம்  சிவனேஷ்வரன் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது புரிந்தது.  உடனே போன் எடுத்த அப்பாவிற்கு அழைத்துவிட்டான். “சார் என்ன இப்படி பண்ணிட்டீங்க..? அவர் தான் தீனதயாளன் மகன் தர்ஷன்..” என்றார் உடன் வந்த ஆள்.

சிவனேஷ்வரன் காதில் விழுகாதது போல, “பாண்டி..” என்றான் வேலய்யன், ராஜலக்ஷ்மியை கண் காட்டி. உடனே அந்த பாண்டி என்பவன், வேலய்யன் தம்பதியை கேட்டுக்குள் அழைத்து சென்று, சேரில் அமர வைத்தவன், இருவருக்கும் குடிக்க தண்ணீர் கொடுத்தான்.

தேவேந்திரன், ஜனகனை பற்றி சிவனேஷ்வரனிடம் சொல்லி கொண்டிருந்தார். தர்ஷன் போனை தூக்கி கொண்டு வந்தவன்,  “இங்க தான் இருக்காங்க, பேசுங்க டாடி..” என்று  சிவனேஷ்வரனிடம் கொடுக்க,

“ஹலோ சார்.. எப்படி இருக்கீங்க..?” என்று சாதாரணமாக நலம் விசாரித்தான்.

“எனக்கு இவர் தான் உங்க மகன்னு தெரியல சார், தெரிஞ்சா போய் நம்ம தம்பியை தொடுவேனா..?” என்றான்.

‘பார்த்தாலே தெரியுது இவன் தான் இங்க பாஸ்ன்னு, அப்பட்டமான பொய்யை பாரு..’ பிரபாகரன் நண்பனை ஏற இறங்க பார்த்தான். சிவனேஷ்வரன் அவனை  பார்த்து ஒற்றை கண்ணடிக்க, “சும்மா இர்றா, ஏற்கனவே நம்மளை வேற மாதிரி பார்க்கிறா என் பொண்டாட்டி..” என்றான் கடுப்பாக.

சிவனேஷ்வரன் அவன் கழுத்தோடு வளைத்து கொண்டவன், போனில், “நம்ம தம்பிக்கு இதெல்லாம் பெரிய காயமே இல்லை சார், நாம ஜனகன் பத்தி பேசணுமே..”  என்றான்.

“என்கிட்ட வந்துட்டாங்க சார்.. நான் தலையிடாமல் இருக்க முடியாதே..”

“சார்.. உங்க பஞ்சாயத்து அப்பறம் பார்ப்போம், முதல்ல ஜனகன் வேணும்..”

“இல்லை சார்.. அவன் வரட்டும், அப்பறம் தான் மத்த பேச்சு..”

“சார் ஜனா இப்போ எங்கிருக்கான்னு எனக்கு தெரியாம உங்ககிட்ட பேசிட்டிருக்கலை, அப்புறம் நான் வேற மாதிரி பண்ணினா நீங்க என்மேல கஷ்ட பட்டுக்க கூடாது..”

“உங்களுக்கு தெரியாததா என்னை பத்தி..”

“இவங்ககிட்ட பேசணுமா..? அப்புறம் எதுக்கு பேசாம சின்ன பையனை தூக்கியிருக்கீங்க.. சரி.. நான் கூட்டிட்டு வரேன், பேசலாம்.. நீங்க நம்ம தம்பிகிட்ட பேசுங்க..” என்று போனை தர்ஷன் முகத்துக்கு நேரே தூக்கி போட, ஏய்.. என்று பதறி கேட்ச் பிடித்தான்.

தேவேந்திரன் அவன் முகம் பார்க்க, “இவங்களை பசங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, நாம ஜனாவை கூப்பிட போலாம்..” என்றான் சிவனேஷ்வரன்.

“எங்க.. எங்க இருக்கான்..?” தேவேந்திரன் உயிர் வந்து கேட்க,

“டீப் டெல்லி..” என்றான். இப்போதே இரவை நெருங்கி கொண்டிருந்தது நேரம். விரைவில் ஜனா கைக்கு கிடைத்தால், விடியற்காலை குறித்த முகூர்த்தத்தில்  திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஆட்டம் கண்டது. சோர்ந்து போனார் மனிதர். வீட்டில் பானுமதி என்ன செய்கிறார் தெரியவில்லை.

வேலய்யன் தம்பதி சிவனேஷ்வரன் கை பிடித்து நன்றி சொல்லி அழுக, அவர்களை அணைத்து கொண்டவன், “நாளைக்கு  உங்க மகன் உங்க முன்னாடி இருப்பான், அதுக்குள்ள நீங்க நல்லா சாப்பிட்டு, தூங்கி  உடம்பை தேத்தி வைங்க..” என்று பாண்டியுடன் அவர்களை அனுப்பி வைத்தான்.

தேவேந்திரன் மனைவிக்கு போன் செய்ய,  மொத்த குடும்பமும் அங்கு தான். “ஜனகன் நாளைக்கு வந்திடுவான்..” என்று எல்லோருக்கும் ஸ்பீக்கரில் தகவல் சொன்னார். கண்ணீர் வழிந்த கண்களை மூடி சுவற்றில் சாய்ந்தாள் கீர்த்தனா.

“அவன் வரும் போது வரட்டும், அதுக்குள்ள நம்ம பொண்ணுக்கு, தங்கச்சி மகனோட கல்யாணம் வைச்சுக்கலாம்..” என்றார் அண்ணா.

“இல்லைண்ணா..”

“தேவா மறுத்து பேசாத, இவ்வளவு பிரச்சனை வைச்சுக்கிட்டு அப்படியென்ன உன் மச்சானை நம்ம வீட்டு பொண்ணு தலையில கட்டணும்ன்னு.. இதுக்கு நாங்க யாரும் ஒத்துக்க மாட்டோம்..”

“சரிண்ணா.. என் பொண்ணுக்கு சம்மதம்ன்னா கட்டி வைங்க..” என்று வைத்துவிட்டவர், டெல்லி பறந்தார். விமான நிலையத்தில் இருந்து சில  மணி நேரம். பெரிதான கட்டிடம். தீனதயாளனின் கட்டிடம். லிப்ட் மூலம் ஏழாம் மாடிக்கு சென்றனர்.

“நீங்க இருங்க..” என்று தேவேந்திரனை வெளியே நிறுத்தி,  கார்னரில் உள்ள கதவை திறந்து, அதற்குள் இருந்த சிவப்பு டாட் வைத்த  ஸ்விட்சை போட்டனர். சுவர் நகர்ந்தது. அது சுவரே இல்லை. மெல்ல மெல்ல நகர, நேரெதிரே ஜனகன். கூசிய வெளிச்சத்தில் கண்களை மூடி திறந்தான்.

ஒரு கால் மடக்கி, ஒரு கால் நீட்டி, வெள்ளை பனியனில் அமர்ந்திருந்தவன் பார்வை எல்லோரையும் தீவிரமாக பார்த்தது. இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. பார்வையில் அனல். உடல் இறுக்கத்தில் தசைகள் விரிந்தது.

“பையன் கன் மாதிரி உட்கார்ந்திருக்கான், மூணு நாளா சாப்பாடு இல்லன்னு சொன்ன..” பிரபாகரன் கேட்டான். சிவனேஷ்வரன் பார்வை அவனை ஆராய, ஜனகன் அவன் பார்வையை அதே கூர்மையுடன் எதிர்கொண்டான்.

“தம்பி பார்க்கிறதை பார்த்தா நீ தான் அவனை தூக்கினன்னு நினைச்சிட்டான் போல. தப்பில்லை. ரவுடி தானே நீ..?” பிரபாகரன் கிண்டலாக சொல்ல, ஜனகன் பார்வை பிரபாகரன் மேல் படிந்தது.

“இப்போ உன்னையும் அப்படி தான் பார்க்கிறான், அப்போ நீயும் ரவுடியா என்ன..?”  சிவனேஷ்வரன் கேலியாக கேட்டான்.

“டேய் உன்கூட வந்ததால தான் இப்படி..? இல்லன்னா அய்யா ரேன்ஜ் தெரியும் இல்லை..” பிரபாகரன் கடுப்படிக்க,

“ஜனா..” என்று ஓடி வந்தார் தேவேந்திரன். அவரால் வெளியே பொறுக்க முடியவில்லை.  கீழே அமர்ந்திருந்தவனை பாய்ந்து கட்டிகொண்டார்.

Advertisement