Advertisement

மதுரை வீரன் பொம்மி 7

“இன்னும் சம்பாதிக்கணும், நிறைய சம்பாதிக்கணும், வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு போகணும், கல்யாணம்ன்னு ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வைக்கும் போது அதுக்கான என்னோட உயரத்தையும் நான் கொஞ்சம் உயர்த்திக்கணும், இதுவரைக்கும் பணம், சொத்து பத்தி எல்லாம் பெருசா ஆசை இல்லை. இனி அப்படி இருக்க முடியாது. என்னை கட்டிக்கிறவ ஆசைப்பட்டதை எடுத்துக்க முடியாம பணம் கணக்கு பார்த்துக்கிட்டிருக்கா. நல்லா இல்லை. எனக்கு நல்லா இல்லை. பிடிக்கலை. என்ன செய்ய..? நம்ம சம்பளம் இவ்வளவு தான், மேல வருமானம்ன்னா.. ஆஹ்ன்..” என்று கீழே விழுந்தான் ஜனகன்.

யோசனைகள் தடைபட்டு போனது. என்ன நடந்தது என்று மூளையை கசக்கி, கண்களை திறக்க அறவே முடியவில்லை. சில நிமிடங்களோ,  மணி நேரங்களோ, நாளோ.. எதுவும் தெரியவில்லை. அடுத்து அவன் கண்களை திறந்த போது முழு இருட்டு.

‘கண்ணை நாம திறந்து தானே வச்சிருக்கோம்.. எஸ் அங்க வெளிச்சம்..’ அவனுக்கு மேலே மிக சிறிய ஓட்டை. ‘என் சுண்டு விரல் அளவு இருக்குமா..?’ ஜனகன் தரையில் படுத்திருந்தவன் அதையே பார்த்தான். கையை தூக்கி தலை முடியை கோதினான். கால்களை தூக்க முனைய, வலி எங்கோ. அடிபட்டிருக்கு..

சுற்றிலும் பார்வையை விட்டான். இது பகலா, நைட்டா.. கண்டுபிடிக்க முடியவில்லை. மிக மிக மெல்லிய வெளிச்சம் மேலே, அப்படின்னா நைட்டா இருக்கும். திரும்ப கண்களை மூடி கொண்டான். மூளைக்கு வேலை கொடுத்தான்.

‘பொம்மியை வீட்ல விட்டு பைக்ல வந்திட்டிருந்தேன், பணம் பத்தி யோசிச்சேன், வருமானத்தை உயர்த்த என்ன வழின்னு நினைக்கிறப்போ தான் கீழே விழுந்த மாதிரி இருக்கு, அப்புறம் எதுவும் ஞாபகம் இல்லை. கண்ணு முழிச்சா இங்க இருக்கோம். நம்மளை யாரோ தூக்கியிருக்காங்க..’

‘உங்களை பத்தி விசாரிக்கிறாங்க மாமா..’ அமுதாவின் குரல். பேங்க்ல அந்த ஆளுங்க பார்வை.. நிலம். கரெக்ட்.. நிலத்து பஞ்சயாத்துல அப்பாவை மடக்க என்னை தூக்கிட்டானுங்க போல..’

‘பசுபதி சித்தப்பா இந்தளவு போவாரா..? ஆச்சரியமா இருக்கே. அவரது வெறும் வாய் சவடால் மட்டும் தானே, பின்னாடி கட்சி இருக்கிற தைரியத்துல தான் குதிப்பார், மத்தபடி அவருக்கு மீறின விஷயம்ன்னா கால்லே விழுந்திடுவார்ன்னு தான் அப்பா சொல்வார், அவர் போய் என்னை கட்டம் கட்டி தூக்கிற அளவு..? வாய்ப்பில்லைன்னு தான் தோணுது. அப்போ இது யாரா இருக்கும்..’ இருமல் வந்தது.

தொண்டை ரொம்ப வறண்டிருக்கு போல.. சுற்றி முற்றி பார்த்தான். சற்று தள்ளி ஏதோ தெரிந்தது. தண்ணீயா இருக்குமா..? வலித்த உடலை முறுக்கி எழுந்து நின்றான். தலை சுற்றியது. ‘என்னடா இது..? நம்ம உடம்புல புதுசா எதோ செய்யுது..’ நின்று நிதானித்து நடந்தான். காலில் தட்டுபட்டது. தண்ணீர் தான்.. மூடிய கழட்டி மூக்குக்கருகில் வைத்து பார்த்து, குடித்தான்.

இப்போது கண் இன்னும் நன்றாக தெரிந்தது. ஒரு கதவு. மூன்று பக்கமும் சுவர்  அனுமானிக்க முடிந்தது. அந்த கதவு பக்கம் சென்றான். பாத்ரூம். அங்கும் ஒரு சிறிய ஓட்டை. நிமிடம் சென்று வெளியே வந்தான். அப்படியே நின்றான். சில அடிகள் நடந்தான். படுத்தான். திரும்ப பழைய யோசனை.

‘அப்படியென்ன அந்த நிலத்துல இருக்கு..?’ அதை சுற்றி ஓடியது. ‘நல்லவேளை பொம்மி நம்ம கூட இருக்கும் போது என்னை தூக்கல, ம்ஹூம்.. என்னை தனியா தூக்க தான் காத்திருந்திருக்காங்க.. கடவுளே.. எங்க கல்யாணம்..’ அப்போது தான் நினைவிற்கு வர, எழுந்தமர்ந்து கொண்டான்.

‘அப்பா, அம்மா பயந்திருப்பாங்களே, மாமா, அக்கா. பொம்மி என்ன பண்ணுவா..?’ நெற்றி நீவி கொண்டான். நேரம் செல்ல கோவம் வந்தது. ‘பரதேசிங்க.. இப்போ போயா என்னை தூக்குவானுங்க..’ அவ்வளவு திட்டினான்.

நேரம் சென்றது. என்ன நேரம் என்று பார்க்க கூட அவனிடம் எதுவும் இல்லை. அணிந்திருக்கும் உடை மட்டுமே. வாட்ச், மோதிரம், கழுத்து செயின், மொபைல், பர்ஸ், பணம் எடுத்து சென்ற பேக் வரை எதுவும் இல்லை. நிமிடங்கள் கடக்கிறதா, மணி கடக்கிறதா..? அனுமானிக்க முடியவில்லை.

உதடு வரள, உள்ளுக்குள் இழுத்தான். வாய்க்குள்ளும் வறண்ட உணர்வு. வயிறு சுருட்டி பிடிப்பது போல ஏதோ செய்தது. கண்கள் திரும்ப மங்கியது. படுத்திருக்கும் போதே தலை எங்கோ செல்வது போல. என்ன இது..? “பசி.. பசிக்குது எனக்கு..” அந்த தண்ணீர் பாட்டில் தவிர எதுவும் இல்லை. எழுந்து சென்று குடிக்க பிடிக்கவில்லை. இருக்கட்டும்.. விட்டுவிட்டான்.

எவ்வளவு நேரமோ திரும்ப கண் விழித்தான். மயக்கமா, தூக்கமா..? அவனுக்கே தெரியவில்லை. உடலை உதறி எழுந்து நின்றான். ம்ஹூம்.. கால்கள் தள்ளாடியது. எட்டி சுவற்றை பிடித்தான். அப்போது தான் அவன் உடல் முழுதும் வேர்வையில் நினைத்திருந்ததை பார்த்தான். சில்லென்ற அறையில் திடீர் வெப்பம்.

ஓய்வறை சென்று வந்தான். தண்ணீர் பாட்டில் எடுத்து குடித்தான். பாதி காலி இப்போதே. சட்டையை கழட்டி வீசி சுவற்றில் சாய்ந்தமர்ந்தான். வீட்டினர் நினைவு. வயிறு இப்போது இன்னும் சுருட்டி, வலியை அதிகமாக கொடுத்தது. பிடித்த உணவு கேட்கும் முன் கையில். ம்மா.. வறண்டிருந்த தொண்டை வலித்தது. அப்பா, அக்காக்கள், மாமா.

பொம்மி.. அவளின் முகத்தை, அவளை நினைத்து எவ்வளவு நேரமோ, திரும்ப கண் விழிக்க, குளிர். சுருட்டிய வயிற்றின் வழி தொண்டை கசந்து வாமிட் வருவது போல. ஆனால் வரவில்லை. வலித்த தலை வெடித்தது. உடல் அவன் பேச்சை கேட்காமல் ஆட்டம் காட்ட, மணமும், மூளையும் அவன் கட்டுப்பாட்டில். சுற்றி எதாவது சத்தம் கேட்கிறதா என்று உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தது.

கண்களை மூடினான். இப்போது தூக்கம் போலவோ, மயக்கம் போலவோ ஒன்றும் இல்லை. வயிற்றின் கூப்பாடு மட்டுமே. பசி உனக்கு புதுசு தான், இப்போ என்ன..? தாங்க மாட்டியா..? வயிற்றை மூளை அதட்டியது. தண்ணீ தான் இருக்கு இல்லை, சமாளிக்கலாம்.. யார்ன்னு பார்க்கலாம்.. உடல் தொந்தரவை விரட்டி அமர்ந்திருந்தான். நிதானமாக, விழிப்பாக, இறுக்கமாக. கோவமாக.

அவனுக்கு நேரெதிரே அங்கு தேவேந்திரன். இரவோடு இரவாக சென்னை வந்து சேர்ந்திருந்தார். உடன் அவரின் நண்பர்.  வேலய்யனை ஒரு நாள் மருத்துவமனையில் இருக்க சொல்லியிருக்க, உடன் அவரின் இரண்டு மாப்பிள்ளைகள். மற்றவர்கள் வீட்டுக்கு சென்றாக வேண்டிய நிலை.

கணவன் எங்கேயோ கிளம்பி சென்றதில் பானுமதிக்கு அச்சத்தோடு குழப்பமும். எங்கு சென்றார்..? ஏன் சென்றார்..? இன்னும் என் தம்பியின் நிலை என்ன என்னவோ..? என்று அவருக்கு போன் செய்து கொண்டே இருந்தார்.

தேவேந்திரனுக்கோ தொடர்ந்து மூன்றாம் நாளாய் அலைவதில் அவ்வளவு உடல் அசதி. உணவு பேருக்கு மட்டுமே செல்கிறது. வயிறார உண்ண முடியவில்லை. தொண்டையில் சிக்கி கொண்டான் ஜனா. முடியாது என்று போராடி தோற்றும் அவரால் ஓரிடத்தில் அமர முடியவில்லை.

மூளை அதன் சக்தியை மீறி வேலை செய்து கொண்டிருந்தது. அதன் வழி கிடைத்த நம்பிக்கை ஒளி தான் இப்போது பார்க்க செல்லும் மனிதர். எப்படியாவது அவரை பிடித்து விட வேண்டும். எங்களின் நிலையை சொல்லி, ஜனாவை கண்ணில் பார்த்துவிட வேண்டும். இப்போதைக்கு வேறு எதுவும் வேண்டாம். அந்த பையலை என் கையால் தழுவி கொண்டால் போதும்.

மரத்து போகும் கையை உதறி ஸ்டியரிங்கை அழுத்தமாக பிடித்து அந்த கட்டிடத்தின் முன் விடியற்காலையில் நின்றுவிட்டார். “இங்க தான் ஆபிஸ்ப்பா.. அவங்க வர பத்துக்கு மேல ஆகும் போல..” உடன் வந்த நண்பர் சொன்னவர், பக்கத்தில் உள்ள டீக்கடையில் இருந்து டீ வாங்கி வந்து கொடுத்தார்.

தேவேந்திரனின் அத்தனை வலி, அசதியை அந்த டீ உதறி தள்ளி அவரை கொஞ்சம் தெளிவாக நிற்க வைத்தது. அதன் பிறகே முகம் கழுவி நேரம் பார்த்தவர் அவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா..? வீடு எங்கு என்று விசாரித்து சென்று விடலாம்.  உடனடி முடிவெடுத்து நண்பரை விசாரிக்க சொன்னார்.

“அவரோட மாமனார் வீட்டு அட்ரஸ் தான் கிடைச்சிருக்கு, அவர் வீடு தெரியல..” என்றார் அவர். தேவேந்திரன் கிடைத்த விலாசத்தை இறுக்கமாக பற்றி கொண்டு கார் எடுத்தார். கேட்டில் நிற்கும் செக்கியூரிட்டியோ உள்ளே விட மறுத்தான்.

“யாரு, என்ன விஷயம்ன்னு சொல்லுங்க, நான் கேட்டு சொல்றேன்..” என்று கேட்டை மூடி போய்விட்டான். தேவேந்திரனுக்கு அடுத்து என்ன என்னவென்று புரியாத நிலை.  பானுமதி போன். கட்டுப்படுத்தவே முடியவில்லை அவரால்.  போன் எடுத்தவர், “பானு.. நான் எங்கேயும் போய் தொலைஞ்சிட மாட்டேன், இன்னொரு முறை போன் வந்தது அவ்வளவு தான்..” என்று கடுமையாக எச்சரிக்க,

“ஏங்க.. ஏங்க வைச்சுடாதீங்க, இங்க வேறொரு பிரச்சனை. உங்க தங்கச்சி, அண்ணாங்க எல்லாம் ஏதேதோ சொல்றாங்க, குறிச்ச முகூர்த்தத்துல கீர்த்திக்கு உங்க தங்கச்சி பையனை கட்டிவைக்க கேட்கிறாங்க, நீங்க வாங்க..” பானுமதி அழுகையுடன் வேகமாக சொல்ல, தேவேந்திரன் தலை பிடித்து விட்டார்.

“நான் வரேன்.. இப்போ முடியாது..”

“நான் என்னங்க செய்யட்டும், என் தம்பிக்காக பார்த்து மகள் வாழ்க்கையை கெடுக்கிறேன்னு என்னை பேசுறாங்க..”

இங்கு செக்கியூரிட்டி கேட்டை திறந்து உள்ளே கூப்பிட, “பானு.. அவங்க உன்னை கார்னர் பண்றாங்க, பேசு.. நான் வந்திடுறேன்..” என்று வைத்துவிட்ட தேவேந்திரன், வீட்டுற்குள் சென்றார்.

அந்த வீட்டின் மேற்பார்வையாளர், “தம்பி ஊர்ல இல்லையே..” என்றார்.

“நாங்க அவரை பார்த்தே ஆகணும், ஏதாவது வழி சொல்லுங்க, போன் நம்பர்.. போன் நம்பர் கொடுங்களேன் ப்ளீஸ்..” என்றார்.

“நீங்க உங்களை பத்தி டீடையில் கொடுங்க, விஷயம்ன்னு சொல்லுங்க..”  என்று தேவேந்திரன் பற்றி வாங்கி கொண்டவர், “அந்த பக்கம் இருக்கிற ரூம்ல ரிப்ரெஷ் பண்ணிட்டு வாங்க..” என்றார்.

இருவரும் சென்று வர, காலை உணவு பரிமாற பட்டது. வேலை நடக்குமா என்ற சந்தேகத்தில், தேவேந்திரனுக்கு சாப்பிட மனதில்லை. “இல்லை வேண்டாம்..” என்று மறுக்க,

“அட சாப்பிடுங்க தம்பி.. ரொம்ப சோர்வா இருக்கீங்களே..” என்று சாப்பிட வைத்தவர், காபியை கொடுத்தார். இவர்கள் குடித்து முடிக்க, “நீங்க ஊருக்கு கிளம்புங்க.. தம்பி அங்க வருவார்..” என்றார் அவர்.

தேவேந்திரன் முகம் பிரகாசிக்க, “நன்றிங்க.. ரொம்ப நன்றிங்க..” என்று விடைபெற்று கிளம்பியவர், நேரே விமானநிலையம் வந்தார். தெரிந்த ஏஜென்சி மூலம் பல மடங்கு பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர், காரை அங்கேயே விட்டு,  மதுரைக்கு பறந்தார்.

கார் தயாராக இருக்க, வேலய்யனை போன் செய்து விசாரித்தார். “அவர் இங்க ஹாஸ்ப்பிடல்ல இல்லை, அந்த தீனதயாளனை பார்க்க போயிட்டார்..” என்றனர் கடைசி மாப்பிள்ளைகள.

“என்ன..? எதுக்கு விட்டிங்க..? உடம்பு முடியாதவரை கூட உங்களால பார்த்துக்க முடியாதா..?” என்று கத்திவிட்டார் தேவேந்திரன்.

“நாங்க சொன்னோம், அவர் கேட்கல, மகன் பைத்தியம் பிடிச்சிடுச்சு அவருக்கு, நாங்க என்ன செய்ய, எங்களை எதுக்கு பேசுறீங்க..?” என்று அவர்கள் மல்லுக்கு நின்றனர். தேவேந்திரன் போனை வைத்துவிட்டவர், தீனதயாளன் வீடு சென்றார்.  வேலய்யன் இல்லை. ஆபிஸ் பக்கம்  செல்ல, அங்கு தான் இருந்தார்.

கேட்டை பிடித்து “அய்யா, அய்யா..” என்று கெஞ்சி கொண்டிருந்தார். உடன் ராஜலக்ஷ்மியும், அவர்களின் இரண்டாம் மகளும், அவரின் கணவரும். தள்ளாடி நின்ற மனிதரை பார்த்த தேவேந்திரனுக்கு உள்ளம் புண்ணாகிவிட்டது.  “என்ன மாமா பண்றீங்க..?” என்று அவரிடம் செல்ல,

“மாப்பிள்ளை.. வந்துட்டீங்களா..? என் மகனை விட சொல்லுங்க, நான் பண்ணதுக்கு அவனை பிடிச்சு வைச்சிருக்காங்களே, என்னை என்னவாது பண்ணிக்க சொல்லுங்க, என் மகனை மட்டும் விட சொல்லுங்க..” என்று கண்கள் கலங்க இவரின் கையை பிடித்து கெஞ்சினார் மனிதர்.

Advertisement