அத்தியாயம் – 7

மதியம் இரண்டு மணி போல் ஆகியிருந்தாலும் வெய்யில் தணிந்தபாடில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு தான் வேலைக்குக் கிளம்பிச் சென்றிருந்தான் மனோகர். வீட்டின் உள்ளேயிருந்து சின்ன, முகத்திற்கு மட்டும் காற்று கொடுக்கும் மின்விசிறையக் கொண்டு வந்து கேஷ் கௌண்டரில் வைத்திருந்தார் ஜோதி. என்னவோ இன்றைக்கு அவருக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அதுவும் மதிய உணவு அருந்திய பின் சிறிது ஓய்வு கொடு என்று உடல் கெஞ்சியது. அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால், கண்ணாடிக் கதவிற்கு திரையை இழுத்து போட்டு விட்டு, வேகமாக மதிய உணவை முடித்துக் கொண்டு, திரையை விலக்கி விட்டு மீண்டும் கடையில் அமர்ந்து விட்டார். 

கடையை நேரத்திற்கு திறந்து, மூடி வியாபாரம் செய்து கிட்டதட்ட மூன்று வாரங்கள் போலாகியிருந்தது. சில நாள்களாக வீட்டிலிருந்து வேலை பார்த்த சினேகா இன்றைக்கு தான் அலுவலகம் சென்றிருக்கிறாள். மருத்துவமனையிலிருந்து மந்தீப் வந்து இரண்டு வாரங்கள் போலாகியிருந்தாலும் பழைய சுறுசுறுப்பு அவனிடமில்லை. சோர்வாக தான் இருந்தான். உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் யாராவது அவனைத் தூக்கி வைத்திருக்க வேண்டியிருந்தது. உடல் நிலை தேறி பேரன் நல்லபடியாக இருக்க வேண்டுமென்று சில நொடிகளுக்கு கண்களை மூடி  கடவுளிடம் பிரார்த்தனைச் செய்தவர் கண்களைத் திறந்து போது கடையின் வாசலில், கையில் பெரிய மூட்டையோடு அவளுடைய சகோதரனின் இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கினாள் ஷிக்கா. சில நிமிடங்களுக்கு அவனோடு தீவிரமாக பேசி விட்டு அவனை அனுப்பி வைத்து விட்டு கடையினுள் நுழைந்தாள்.

மாமியாரைக் கண்டு கொள்ளாமல் கையிலிருந்த மூட்டையை கௌண்டர் மீது வைத்து விட்டு விடுவிடுயென்று வீட்டினுள் சென்றாள். மதிய உணவு உண்ண தான் என்று கண்டு கொண்டவர், ‘ஏன் இவ இத்தனை லேட்டா இங்கே வந்து சாப்பிடறா..அவங்க அம்மா வீட்லே சாப்டிட்டு வர வேண்டியது தானே.’ என்று ஆதங்கம், கோபம் இரண்டும் வந்தது. எதையும் அவளிடம் காட்ட அவரால் முடியாது. அப்படியே காட்டினாலும் அதற்கு மதிப்பு கிடையாது என்பதால் அவரது நிலையை நோந்தபடி அமர்ந்திருந்தார். 

அவருடைய கணவர் உயிரோடு இருந்திருந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று நினைத்து பார்த்தவருக்கு, இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவே இருக்கும் சிறு நிம்மதி கூட அவர் உயிரோடு இருந்திருந்தால் கிடைத்திருக்காதென்று தான் தோன்றியது. குடும்பத்தின் மீது அவருடைய கணவருக்கு பாசமிருந்ததாலும் அதையும் மீறி கணவர் அவர் மீது கொண்டிருந்த பாசம், நம்பிக்கை, பெருமைக்கு என்ன பெயர் கொடுப்பதென்று குழம்பியிருக்கிறார் ஜோதி. பல சமயங்களில் ‘பைத்தியக்காரத்தனம்’ என்று எண்ணியிருக்கிறார். 

மனைவி மீது காதல் இருந்திருந்தாலும் கடைசி வரை அதைக் காட்டியதில்லை. அப்படியே அவர் காட்டியிருந்தாலும் மனைவியாக ஜோதி அதை உணர்ந்ததில்லை. இத்துணைக்கும் பரிசம் போட்டு சில வருடங்கள் கழித்து தான் அவர்கள் திருமணம் நடந்தது. அந்த இடைப்பட்ட வேளையில் ஜோதியைப் பெண் கேட்டு பல வரன்கள் வர, வீட்டினர் ஆர்வம் காட்டினாலும் ஜோதி ஆர்வம் காட்டவில்லை. வீடு தேடி வந்த வரன்களை மறுத்து விட்டார். அதற்கு காரணம் அவ்வப்போது வீட்டிற்கு வந்து தகராறு செய்த பாண்டியன் மீதிருந்த பயம்தானென்று ஜோதியின் குடும்பத்தினர் நினைக்க, காதலாக இருக்கலாமென்று யாருமே நினைக்கவேயில்லை. பாண்டியனைத் தவிர வேறொருவருடன் அவரது வாழ்க்கையை நினைத்துப் பார்க்க அவரால் இயலவில்லை.

ஜோதியினுடையது வீட்டினர் பார்த்து நிச்சயம் செய்த பின் அந்த மாப்பிள்ளை மீது வந்த அன்பு, காதல். பாண்டியனும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததற்கு அதுதான் காரணமென்று அவர் தவறாக நினைத்திருந்தது திருமணத்திற்குப் பின் தான் ஜோதிக்குத் தெரிய வந்தது.

‘அரசாங்க வேலை கிடைக்கப் போகுதுன்னு சொன்னதுனாலே தான் பொண்ணை கொடுக்கறதா சொன்னோம்..இப்போ உனக்கு வேலை இல்லை பொண்ணைத் தர முடியாதுன்னு உங்க வீட்லே சொன்னாங்கயில்லே..அவங்க முகத்திலே கரியைப் பூசி, மத்திய அரசுலே வேலைலே சேர்ந்து, உன்னைக் கட்டிக்கிட்டு அவங்க மூக்கை உடைச்சேனா இல்லையா?’ என்று இறுமாப்புடன் பாண்டியன் கேட்டது இப்போதும் ஜோதியின் செவியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

முன் இருபதுகளில் பரிசம் நடக்க, பின் இருபதுகளில் தான் ஜோதியின் திருமணம் நடந்தது. பரிசம் போடும் போது தமிழக அரசு தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேரும் ஆணைக்காக காத்திருந்தார் பாண்டியன். அரசு வேலை என்று கேள்விப்பட்டவுடனேயே ஜோதியின் வீட்டினர் பாண்டியன் வீட்டினரை அணுகி, பரிசும் போட்டு வேலையில் சேர்ந்த பிறகு திருமணம் என்று முடிவு செய்தனர். யாருக்கு தெரியும் அது நடக்க சில வருடங்களாகி விடுமென்று. பாண்டியன் வேலை பார்க்கப் போவது தமிழக அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு அதுவும் தில்லியில் என்று பாண்டியனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பாண்டியன், ஜோதி இருவரும் சொந்தக்காரர்கள். சிறு வயதிலிருந்தே இருவருக்கும் பரிச்சயம் இருந்ததது. பாண்டியனின் பிடிவாதம் குணம் உறவினர்களிடேயே பிரசித்தம். சிலர் அவரைப் பொறுத்துப் போயினர். சிலர், எதுக்கு டா வம்பு என்று அவரிடமிருந்து ஒதுங்கிப் போனர். எத்தனை வருடங்களானாலும் அரசாங்க வேலைக்கு தான் செல்வேன் என்று பிடிவாதமாக இருந்து, கடைசியில், தில்லியில் வேலைக்கு சென்று அதைச் சாதித்தும் காட்டினார். சில சமயங்களில் அவரது வீம்பு சந்தோஷத்தை அளித்திருந்தாலும் பல சமயங்களில் அது நஷ்டத்தையும் துன்பத்தையும் தான் தந்திருக்கிறது. 

சினேகாவை நீச்சல் வீராங்கனை ஆக்கியதும் ஒரு வீம்பிற்காக தான். போட்டியில் ஜெயித்து தகப்பனுக்கு அவள் பெருமை சேர்த்த போது குடும்பமே அளவில்லா அடைந்தது. அதே போல் வீம்பிற்காக மனோகரை பஞ்சாபில் பொறியியல் படிப்பில் சேர்த்து விட்டு, கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் வேலையிலிருந்து விருப்பு ஓய்வு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த கணவரை அப்படியே அடித்து போட வேண்டும் போல் ஜோதிக்கு ஆத்திரம் வந்ததென்னவோ உண்மை தான். கணவனின் வீம்பிற்கு தங்கள் குடும்பமே பலியான பிறகாவது அவருக்குப் புத்தி வருமா? என்று பல இரவுகளை அழுகையில் கழித்திருக்கிறார். அதுவரை அப்பாவின் இந்தக் குணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்பட்டிராத பிள்ளைகள், அம்மாவின் புலம்பல்களைப் புறக்கணித்த பிள்ளைகள், அப்பாவை அப்பாவாக மட்டும் பார்த்தவர்கள், முதல்முறையாக அம்மாவின் கண்கள் வழியாக பார்க்க, இருவருக்கும் எதிர்காலத்தை நினைத்து அச்சம் ஏற்பட்டது. 

ஓய்வுப் பணத்தை வீம்பிற்காக விரயம் செய்து விட்டால் என்ன செய்வது என்று நாளுக்கு நாள் ஜோதிக்கு கிலியானது. ரொக்கமாக கிடைத்த பணத்தின் வரி தொகையைக் குறைப்பதற்காக ஜோதியின் பெயரில் சில லட்சங்களைப் போட்டு வைத்தார் பாண்டியன். அவர் பெயரில் இருந்த மீதியை யார் பேச்சையாவது கேட்டு, எதையாவது செய்து வைக்கும் முன், கணவரிடம் நேரடியாக சொல்லாமல், மகன் மனோகரிடம்,’உன்னோட படிப்புக்காக தான் அப்பா வேலையை விட்டிருக்காங்க..நீ நல்லபடியா படிச்சு நல்ல வேலைலே சேர்றவரை நமக்கு அந்தப் பணம் முக்கியம்..அதனாலே உங்கப்பா அதை விரயம் செய்யாம பார்த்துக்க..எவனுக்காவது கைம்மாத்து கொடுத்து உன்னோட எதிர்காலத்தை அடகு வைச்சிடப் போறார்.’ என்று  கோடிட்டு காட்ட, கணவரின் வங்கிக் கணக்கைக் கண்காணிக்கும் பொறுப்பை மகன் ஏற்றுக் கொள்ள, அடுத்த சில வருடங்கள் ஜோதியின் டென்ஷன் குறைந்தது. 

வேலையை விட்ட மூன்றாவது மாதம் குவார்ட்டஸைக் காலி செய்து கொண்டு சினேகாவின் பள்ளிக்கூடம் இருந்த ஏரியாவில் வாடகைக்குக் குடி போயினர். காலை வேளையில் சினேகா பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் பாண்டியன் வீட்டில் இருந்தாலும் ஒரு நாளும் ஜோதிக்கு வீட்டு வேலையில் எந்த உதவிகள் செய்ததில்லை. மாறாக, சட்டமாக, அவர் வேலைக்கு சென்ற போது டிஃபன், சாப்பாடு எல்லாம் எப்படி அவர் இருக்குமிடம் தேடி வந்ததோ அதே போல் அனைத்தும் நேரத்திற்கு நடக்க வேண்டுமென்று ஜோதியைப் பாடாய்ப்படுத்தினார்.

வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், மூன்று வேளை உணவு, மனோகர் அடிக்கடி வீட்டிற்கு வந்து போன செலவு என்று மாதச் செலவுகள் பாண்டியன் குடும்பத்தை பதம் பார்க்க, பென்ஷன் போதாமல், வைப்பு நிதியிலிருந்து கிடைத்த வட்டியையும் வீட்டிற்கு செலவு செய்ய, சேமிப்பிற்கு சுத்தமாக டாடா காட்ட வேண்டியதானது. செலவுகளைச் சமாளிக்க வேறு வேலை எதுவும் தேடாமல், சினேகாவைப் பள்ளிக் கூடத்திற்கு அழைத்து செல்வது, நீச்சல் குளத்திற்கு அழைத்து செல்வது மற்ற நேரங்களில வீட்டையே சுற்றி வருவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த கணவரைப் பார்த்து ஜோதியின் இரத்தக் கொதிப்பு அதிகரிக்க, மருந்து, மாத்திரை செலவுகளும் மற்றச் செலவுகளோடு சேர்ந்து மாதச் செலவுகள் மேலும் கூடிப் போயின.

அந்த நேரத்தில் தான் அவரது தையல் மிஷினை தூசித் தட்டி, ஜாக்கெட் தைத்துக் கொடுக்கும் வேலையை ஆரம்பித்தார் ஜோதி. திருமணத்திற்காக காத்திருந்த நாள்களில் பொழுதை வீணாக்காமல், தையல், எம்ப்ராய்ட் ரி, க்ரோஷே என்று கை வேலைகள் அனைத்தையும் கற்றுக் கொண்டு சுயமாக சம்பாதிக்கவும் செய்தார். திருமணமாகி தில்லி வந்த பின், அரசாங்க குடியிருப்பில் இது போல் கமர்ஷியல் ஆக்டிவிட்டி செய்யத் தடை இருக்க, நிறைய பேர் அந்தத் தடையை மீறி சொந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும், ஜோதி செய்யவில்லை. யாராவது புகார் செய்து விட்டால் கணவரின்  வேலைக்கே வேட்டு வந்து விடுமென்ற பயத்தில் அவருடைய தொழில் திறமைகளை மூட்டைக் கட்டி வைத்து விட்டார். அதன் பின் குழந்தைகளோடு நேரம் சரியாகிப் போனதால் சொந்தக் காலில் நின்றதெல்லம் மறந்தே போயிருந்தது அவருக்கு.