கடந்த சில வருடங்களாக அதாவது குடும்பத்தின் இளைய தலைமுறையினர் திருமணப் பந்தத்தில் இணை ஆரம்பித்ததிலிருந்து அவர் என்ன மாதிரி உணர்கிறாரென்று விஜயாவால் பிரித்துச் சொல்ல முடியவில்லை. பல வருடங்களாக அவருடைய மண வாழ்க்கையைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி வைத்திருந்தவருக்கு மீண்டும் அந்த நாள்கள் நினைவிற்கு வர ஆரம்பித்தன. அக்காவின் மூன்று மகள்கள், அண்ணாவின் மூத்த மகன், ஷண்முகத்தை விட வயதில் இளையவன் என்று அவர்கள் வீட்டில் நான்கு திருமணங்கள் முடிந்து விட்டன. ஷண்முகமும் அண்ணனின் இளைய மகனும் தான் இப்போது பாக்கி. ஒவ்வொரு திருமணத்தின் போதும் ‘ஷண்முகம் கல்யாணம் தான் அடுத்தது.’ என்று உறவினர்கள் சொன்ன போது எந்தப் பாதிப்புமின்றி அதை மகன் கடந்திருந்தாலும் விஜயாவால் அப்படி இருக்க முடியவில்லை.
அவரது திருமண வாழ்க்கையின் மிச்சம், மீதி, வரம், பரிசு, அவருடைய சாமி அவரின் மகன் ஷண்முகவேல் தானென்றாலும் சில சமயங்களில் ஏன் அவருக்கு அப்படியொரு திருமணம் நண்டந்ததென்ற கேள்வி வந்து விஜயாவை மனஉளைச்சலில் தள்ளி விடும்.ஆரம்பக் காலத்தில், விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருந்த போது விஜயாவின் மனமும் உடலும் வெகுவாகப் பாதிப்படைந்தது. மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரை, பெற்றோர், உடன்பிறப்புகளின் உதவியோடு தான் அந்தக் கடுமையான நாள்களைக் கடந்து வந்திருந்தார். பசியில் அழுத ஷண்முகத்திற்கு பாலூட்ட கூடாதென்று தகராறு செய்த மனத்தைக் கட்டுப்படுத்த தெரியாமல் அவன் பக்கத்தில் அமர்ந்து அவரும் அழுது இருக்கிறார். இப்போது அதே மனமானது ஒரே மகனது எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொண்டு வேறு விதத்தில் தகராறு செய்ய ஆரம்பித்திருந்தது.
திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று மகனை வற்புறுத்தியதில்லை. சொல்லப் போனால் அவனுக்குத் திருமணம் முடிக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவேயில்லை. அக்காவும் அண்ணனும் கொண்டு வந்த வரன்கள் சிலவற்றை பற்றி அவனிடம் தெரிவித்த போது,’நீங்க பார்த்து முடிவு செய்யுங்க ம்மா..எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை..உங்களுக்கு அவளைப் பிடிக்கணும்..அவளுக்கு நம்மளைப் பிடிக்கணும்..அப்படி ஏதாவது வரன் இருந்தா எனக்கு சம்மதம்.’ என்று அவனது கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தான் ஷண்முகம்.
அவர்களாகவே வந்த சில வரன்கள் அவருடைய கணவரின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, இறந்து விட்டாரென்று ஒரே பொய்யில் அந்த விசாரணையை விஜயாமுடித்திருக்கலாம். விஜயா அப்படிப்பட்டவர் இல்லை. அவரை உயிரோடு சாகடித்தவர் இன்னமும் உயிரோடு இருப்பதால் அவரைப் பற்றிய உண்மையைப் பெண் வீட்டாரிடம் சொல்லி விட்டார். எந்தக் கறையை ஏற்றுக் கொள்ள முடியாமல் விஜயா விலகி வந்தாரோ, பிறப்பிலிருந்து பெற்ற தகப்பனிடமிருந்து விலகியிருந்தாலும் அதே கறை மகன் மீது ஈஷிக் கொண்டது. கணவரை விவாகரத்து செய்தது, மகனிற்கும் தந்தைக்கு தொடர்பு இல்லாதது என்ற நியாயங்களுக்கு அங்கே மதிப்பு இல்லாமல் போய் விட்டது.
அவருடைய கணவர் சொன்னபடி, புகுந்த வீட்டினர் அறிவுரையை ஏற்று மகனிற்காக கணவரோடு சேர்ந்து வாழ்ந்திருந்தால் ஷண்முகத்திற்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்குமோ என்ற எண்ணம் சமீபக் காலமாக விஜயாவின் மனத்தில் தோன்ற ஆரம்பித்திருந்தது. அதை மற்றவரிடமிருந்து மறைக்க அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார் விஜயா. அடுத்தவரின் மனத்தில் மறைந்திருப்பதை கண்டுபிடிக்க அவருடைய மகனிற்குப் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருப்பதை விஜயா அறிந்திருந்தால் அவரது வீண் முயற்சிகளை கைவிட்டு மகனிடம் மனம் திறந்து பேசியிருப்பார். மகனின் மனத்தில் இருப்பதையும் தெரிந்து கொண்டிருப்பார். அம்மாவிற்கும் மகனிற்கும் இடையே அப்படியொரு உறவு இதுவரை ஏற்படவில்லை.
ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வரை விடுதி வாசம் தான் ஷண்முகவேலிற்கு. விடுமுறை நாள்களில் வீடு வருபவனுக்கு நேரம் ஒதுக்க விஜயாவிற்கு தான் நேரமிருக்காது. அந்த நேரத்தில் அவர் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டுக் குழந்தைகளும் விடுமுறையில் இருந்ததால் வேலைப் பளு அதிகமாக இருக்கும் அவருக்கு. அந்தச் சூழ்நிலையில் அவரால் எப்படி மகனுடன் நேரத்தைக் கழித்திருக்க முடியும்? பத்தாம் வகுப்பிற்கு பின் விடுமுறையில் ஷண்முகவேல் வீட்டிற்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது. மற்றப் பிள்ளைகளுடன் சுற்றுலா செல்வது, விளையாட்டு பயிற்சி, கோடை விடுமுறை வகுப்புகள் என்று அவனுக்கான உலகத்தை ஏற்படுத்திக் கொண்டான் ஷண்முகவேல்.
கணவரை விவகாரத்து செய்த போது கணிசமான தொகை ஜீவனாம்சமாக கிடைத்திருந்ததால் ஷண்முகதத்தின் படிப்பிற்கு, பயிற்சி வகுப்புகளுக்குத் தாராளமாக செலவழித்தார் விஜயா. அக்கா, அண்ணன் குடும்பத்தோடு இருந்ததால் தனிப்பட்டசெலவுகள் எதுவும் அவருக்கு இருக்கவில்லை. உடன்பிறந்தவர்கள் இருவரும் அவரைப் பாரமாக நினைக்கவில்லை என்றாலும் அவரை பெரிதாக தாங்கவுமில்லை. கணவன் வேண்டாமென்று அவர் முடிவெடுத்த பின்னர் அதை மாற்ற அவர்கள் இருவரும் பெரும் முயற்சி செய்தனர். அதுவும் கணவர் வீட்டினர் கெஞ்சிய போதும் விஜயா மனம் இரங்காத்தால் அவரது குடும்பத்தினரே அவருக்குப் பகையாகிப் போயினர். கடைசியில் விஜயாவின் அப்பா தான் விஜயாவிற்கு துணையாக நின்று விவாகரத்து வாங்கிக் கொடுத்தார். ஆசை ஆசையாக அவருடைய கடைக்குட்டிக்குக் கல்யாணம் செய்து கொடுத்து, அந்த வாழ்க்கை பாழ் போனதில் வந்த குற்றவுணர்வைப் போக்க அவர் செய்த பிராயச்சித்தம்.
மூத்த பிள்ளைகள் இருவரும் தாயின் ஜாடை, நிறத்தைக் கொண்டு அவதரித்திருக்க, கடைசி பிள்ளை விஜயா அப்படியே தகப்பனின் ஜாடை, நிறம். சிறு வயதிலிருந்தே பல கேலி, கிண்டல்களுக்கு ஆளான விஜயா, கழிவிரக்கத்தின் காரணமாக சகஜமாக யாருடனும் பழக, பேச முயலவில்லை. கல்யாண வயதை அடைந்த பின் ஆரம்பித்த மாப்பிள்ளை வேட்டை அவரது பின் இருபதுகளில் கூட முடியவில்லை. விஜயாவின் நிறத்தினால் அவருக்கு வரன் தகையவில்லை. கறுப்புஎன்று முகத்திற்கு நேராக மறுத்தனர் சிலர். நிறத்தை ஈடு செய்ய முகத்திற்கு நேராக பணத்தைக் கேட்டனர் பலர். கல்யாணம் ஆகாமல் கன்னியாகவே இருக்கப் போகிறோமென்று விஜயா அவரது மனத்தை சமாதானம் செய்து கொண்ட போது தான் கந்தவேலின் வரன் வந்தது.
அந்த நேரத்தில் தான் பல வருடங்களாக குழந்தை இல்லாமல் பல சிகிச்சைகளை மேற்கொண்டிருந்த விஜயாவின் அக்கா மகாலக்ஷ்மி கருவுற்றார். இரட்டைப் பிள்ளைகள். பெரும் மகிழ்ச்சியில் இருந்தது அவர்கள் குடும்பம். இரு மகள்களுக்கு இடையே மாட்டிக் கொண்டிருந்த மகனிற்கு நல்லது செய்ய முடியாமல் தவித்து கொண்டிருந்த விஜயாவின் பெற்றோர் அதற்கு மேல் காத்திருக்க முடியாதென்று அவர்களின் ஒரே மகன் பழனிக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். விஜயாவைக் கந்தவேலிற்கு மணமுடிக்க வீட்டினர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்க அதனால் பெரிதாக கந்தவேல், அவரின் குடும்பம் பற்றி விசாரிக்கவில்லை. அப்படியே விசாரித்திருந்தாலும் பல வருடங்களாக வரன்களைக் கொண்டு வந்த அதே கல்யாணத் தரகர் மூலம் இந்த வரனும் வந்திருந்ததால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
விஜயாவைக் கந்தவேல் பெண் பார்த்த ஒரு மாதத்திற்குள் நிச்சயம், கல்யாணம் இரண்டும் முடிந்து, அடுத்த மாதம் ஷண்முகவேல் உதித்திருந்தான். அண்ணனின் திருமணம், அக்காவின் இரட்டைப் பெண்களின் பிறப்பு, அவரது கர்ப்பக் காலம் என்று திருமணத்திற்குப் பின் விஜயாவின் நாள்கள் படுவேகமாக, சந்தோஷமாகச் சென்றன. சரியாக கல்யாணம் முடிந்த பத்தாவது மாதம், அப்படியே கணவர் கந்தவேலை உரித்து வைத்திருந்த மகனைப் பார்த்து பேரானந்தம் அடைந்தார் விஜயா. கந்தவேல் அப்படியே அவருடைய அப்பா ஷண்முகவேலின் ஜாடை. எனவே கணவர் ஜாடையில் பிறந்திருந்த பேரனுக்கு அவரின் பெயரைச் சூட்டி ஆனந்தமடைந்தார் விஜயாவின் மாமியார். மாமனாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விஜயாவிற்கு கிட்டவில்லை. திருமணம் நிச்சயமாவதற்கு சில மாதங்கள் முன்னர் தான் தவறியிருந்தார். ஒரு வேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் நடந்த அனர்த்தங்களைத் தவிர்த்திருக்கலாமோ என்னவோ.
கந்தவேல் மாநிறம் தான். நிறத்தை ஈடு செய்ய வாட்ட சாட்டமாக நல்ல ஆகிருதி கொண்டிருந்தார். புறத் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வரதட்சணை இல்லாமல் நடந்த திருமணமென்பதால் விஜயாவின் மனத்தில் நேர்மையான நல்ல மனிதராக பதிர்ந்திருந்தார் கந்தவேல். தான் பட்ட வேதனையை தன்னுடைய மகவு படக் கூடாது, தன்னுடைய நிறத்தில் குழந்தை பிறக்கக் கூடாது, அதுவும் பெண் குழந்தை வேண்டவே வேண்டாமென்று கர்ப்பக் காலம் முழுவதும் கடவுளிடம் விஜயா வேண்டிக் கொண்டது பலித்து, ஆண் குழந்தை அதுவும் அவனுடைய அப்பாவைப் போல் இருந்த ஷண்முகவேல் அவன் அப்பாவிற்கு சேர வேண்டிய அன்பையும் சேர்த்து அபகரித்துக் கொண்டான்.
இரண்டு வருடங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு நாளும் ஒரு பொழுதும்மனைவி விஜயாவை கந்தவேல் அதட்டிப் பேசியதில்லை, கோபப்பட்டதில்லை. எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருப்பது அவரது சுபாவமென்று விஜயா நினைத்திருக்க, அது விட்டேத்திதனமென்று அவருக்குப் புரியவேயில்லை. ஆசை வார்த்தைகள், செய்கைகள் எதுவுமில்லை என்றாலும் கணவன், மனைவிக்கு இடையே நடக்க வேண்டியது சரியாக நடந்ததால் எதோ சரியில்லை என்ற உள்ளுணர்வைக் கண்டு கொள்ளவில்லை விஜயா.
கந்தவேலிற்கும் விஜயாவிற்கும் ஒரே வயது. மாதக் கணக்கில் தான் வித்தியாசம். ‘பெண்ணுக்கு வயசு ஜாஸ்தி’ என்ற மாமியாரின் கருத்தைப் பொருட்படுத்தாமல் தன்னை மணந்து கொண்ட கணவன் மீது விஜயாவிற்கு பிரியம், நன்றி இரண்டும் அளவில்லாமல் இருந்தது. அவ்வப்போது அவரது தோற்றத்தை குத்திக் காட்டிய மாமியாரைப் புறக்கணிக்க கற்றுக் கொண்டிருந்தார் விஜயா. அந்த நேரங்களில் தன்னைப் பிடித்து தான் கல்யாணம் செய்து கொண்டாரா? என்று கணவனிடம் கேட்க நினைத்ததைக் கேட்கவில்லை. அது மாமியாரின் எண்ணம் மட்டும் தான் என்று நினைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அப்படியே அந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும் உண்மை தெரிந்த பின் என்ன செய்திருப்பார்? என்ற கேள்விக்கு இன்றுவரை அவருக்கு விடை கிடைக்கவில்லை.
வேறொரு பெண்ணைக் காதலித்து, அந்த பெண்ணிற்கு வேறொருவருடன் திருமணம் முடிந்ததால் இனி யாரை மணந்து கொண்டால் என்ன என்ற மனநிலையில் தான்தன்னைக் கணவர் மணந்து கொண்டார் என்ற விவரம் ஷண்முகவேல் பிறந்த சில மாதங்கள் கழித்து தான் விஜயாவிற்குத் தெரிய வந்தது. ‘எப்படி வேறொரு பெண்ணை மனசுலே வைச்சிட்டு என்னோட வாழ்ந்தீங்க?’ என்ற கேள்விக்கு,’அப்போ நான் நானா இல்லை..இப்போ தான் நானா இருக்கேன்..நான் செய்தது தப்பு தான்..இப்போ நமக்கிடையே ஷண்முகம் இருக்கான்..அதனாலே நாம இப்படியே இருக்கலாம்..நமக்குள்ளே எதுவும் மாறாது..அவளுக்கும் ஆட்சேபணை இல்லை..அவங்க வீட்டு ஆளுங்களும் பின்னாடி எந்தப் பிரச்சனையும் செய்ய மாட்டோம்னு வாக்குறுதி கொடுத்திருக்காங்க.’ என்று விதவையாகி இருந்த முன்னால் காதலிக்கு வாழ்க்கை கொடுக்க தயாரானதற்கான விளக்கத்தை கொடுத்தார் கந்தவேல். விட்டேத்திதனத்திற்கு விளக்கம் கிடைத்தவுடன் நொறுங்கிப் போனார் விஜயா. தனக்கு அப்படியொரு வாழ்க்கை வேண்டாமென்ற முடிவிற்கு வர பல மனப்போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் அந்த முடிவில் உறுதியாக இருந்தார்.
ஊசி மேல் தவமிருந்து கிடைத்த திருமண வாழ்க்கை வேறொருத்திக்கு செய்த அநீதியின் விளைவு என்று தெரிந்த போது விஜாயாவால் அவரது மணவாழ்க்கையைத் தொடர முடியவில்லை. எந்தக் காரணங்களுக்காக கந்தவேலின் காதல் மறுக்கப்பட்டதோ அதே காரணங்கள் அப்படியே மாறாமல் இருந்தாலும் திருமணம் முடிந்த சில மாதங்களில் விதவையாகியிருந்தவளை மறுமணம் செய்ய கந்தவேலை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாதென்பதால் கந்தவேலின் திருமணத்தைக் கூட ஒப்புக் கொள்ளத் தயாராக இருந்தனர் அந்தப் பெண் வீட்டினர்.
கந்தவேலின் தற்போதைய வேதனைக்கும் அந்தப் பெண்ணின் நல்வாழ்விற்கும் தடையாக இருப்பதுவிஜயா மட்டும் தான் என்பது போல் பேச்சு பரவ, விஜயாவின் மனது உடைந்து போனது, நிம்மதி பறிப் போனது. ’நம்ம குடும்பத்திலே இரண்டு பொண்டாட்டி சகஜம் தான்..உன்னோட மாமனாருக்கு அப்பா, அவரோட அப்பான்னு எல்லோரும் முருகப் பக்தர்கள் மட்டுமில்லை இரண்டு பெண்டாட்டிக்காரங்க..உன் மாமனார் மட்டும் தான் ஒரு வைராக்கியமா ஒரு பொண்டாட்டியோட வாழ்ந்திட்டு போனார்..கந்தவேலும் அப்படி இருக்கணும்னு நினைச்சு தான் அந்தப் பெண்ணைக் காதலிச்சான்..அவ வீட்லே ஒத்துக்கலை..முடிஞ்சவரை இரண்டு பேரும் போராடினாங்க..வேற கல்யாணம் வேணாம்னு இரண்டு பேரும் திடமா இருந்தாங்க அதான் அவனுக்கு அவ்வளவு வயசாகிடுச்சு..ஷண்முகம் அண்ணன் போன பிறகு நானும் போய் பேசிப் பார்த்தேன்..அவங்க யாரும் பிடி கொடுத்து பேசலை அதே சமயம் முடியாதுன்னு மறுக்கவும் இல்லை..சரி அண்ணன் போய் கொஞ்ச நாள் தானே ஆகுது பொறுத்துப் போவோம்னு ஆறப் போட்டோம்..அதுக்குள்ளே அந்தப் பொண்ணுகிட்டே என்னவோ பேசி, மிரட்டி, அவசரமா எதையும் விசாரிக்காம ஓர் ஆளைப் பிடிச்சு கட்டி வைச்சாங்க..அவன் வியாதிக்காரனா போயிட்டான்..அவ வாழ்க்கையே பறிப்போயிடுச்சு..
நாங்களும் அப்படித் தானே கந்தவேலுக்கு உன்னை அவசரமாக் கட்டி வைச்சோம்..அழகு, அந்தஸ்து எதையும் பார்க்கலை.. அப்படியும் உன் வாழ்க்கை தழைச்சிடுச்சு..அந்தப் பொண்ணுக்கு அழகு அந்தஸ்து இரண்டும் இருந்தும் வாழ்க்கை பட்டுப் போயிடுச்சு..நீ மனசு வைச்சா உங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் தழைக்க வாய்ப்பிருக்கு..அவங்க வீட்லே இப்போ கூட அந்தப் பொண்ணை கையோட அழைச்சிட்டு வந்தா ஆட்சேபணை இல்லை..உனக்கு சொல்லாம கூட இதைச் செய்திருக்கலாம்..ஆனா கந்தவேல் அப்படிப்பட்டவன் இல்லை..நேர்மையானவன்..உன்கிட்டே சொல்லிட்டு தான் செய்யணும்னு எங்ககிட்டே சொல்லிட்டான்.’ என்று கந்தவேலின் சித்தப்பா ஒருவர் பஞ்சாயத்து செய்ய, அழகு, அந்தஸ்த்தோடு மகனின் மனத்திற்கு பிடித்த பெண் மருமகளாக வருவதற்கு அமைதியாக அவரின் சம்மதத்தை தெரிவித்து பெண்ணிற்கு பெண் தான் எதிரி என்று நிரூபித்தார் விஜயாவின் மாமியார்.
எத்தனை பேர் எடுத்து சொல்லியும் கணவரை இன்னொருத்தியுடன் பகிர்ந்து கொள்ள விஜயா தயாராக இல்லை. அவரது மனம் ஒப்பவில்லை. ஷண்முகத்தின் எதிர்காலத்தை நினைத்து அச்சம் ஏற்பட்ட்டாலும் கணவரோடு வாழும் எண்ணம் மட்டும் வரவில்லை. எனவே மண வாழ்க்கையே வேண்டாமென்று விவாகரத்து செய்ய முடிவு எடுத்து விட்டார் விஜயா.தனக்குப் பிடித்தமில்லை என்றாலும் தன்னைப் பிடித்துத் திருமணம் செய்து கொண்ட மனைவி அப்படியொரு முடிவு எடுப்பாரென்று கந்தவேல் எதிர்பார்க்கவில்லை. கடமைக்காக வாழ்ந்து ஒரு குழந்தைக்கு தகப்பனாகியிருந்தாலும் அவருடைய மகன் மீது அவருக்கு எக்கசக்க பாசமிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் கந்தவேலின் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போலானது.
விவாகரத்து வேண்டாமென்று தைரியமாக மறுக்கவும் முடியவில்லை அதே சமயம் விதவையாகியிருந்த முன்னால் காதலியுடனான வாழ்க்கையை வேண்டாமென்று சொல்ல துணிவும் இருக்கவில்லை. அவரது இயலாமைக்கு பலியானது விஜயாவும் ஷண்முகவேலும் தான். கந்தவேல் அவரது காதலில் வெற்றியடைய கல்யாண வாழ்க்கையில் விஜயா தோற்றுப் போக வேண்டியிருந்தது.
‘மகனுக்கு நல்லவாழ்க்கைத் துணையை அமைச்சுக் கொடு ’ என்ற அவரது ஒரேயொரு பிரார்த்தனையைத் தில்லிக்கு வந்த பின்னர், ‘ஏன் சாமி உடுப்பு போடறதில்லை?’ என்ற அவரது கேள்விக்கு,’உடுப்பு போடலைன்னாலும் நான் போலீஸ் தான் ம்மா..இதை உங்களோடவே வைச்சுக்கோங்க.’ என்ற ஷண்முகத்தின் பதிலைக் கேட்டு அவரது வயிற்றில் பயப் பயந்து உருள,’எந்தத் தீங்கும் வராம என் சாமியைப் பாதுகாப்பா வைச்சிரு சாமி.’ என்று மாற்றிக் கொண்டு விட்டார் விஜயா .