அவளுள் எழுகின்ற கேள்விகளுக்கு யாரிடமிருந்து விடை கிடைக்கூடுமென்று யோசித்து யோசித்து வசந்தியின் மனது பெரும் அழுத்தத்திற்கு உள்ளானது. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஊரே சந்தோஷமான மனநிலையில் சுற்றிக் கொண்டிருக்க தனியாக வீட்டினுள் முடங்கி இருந்தாள் வசந்தி. மாமியார், மாமனார் இருவரிடமும் பேசி பல நாள்களானது. புது மாப்பிள்ளை என்று மகனின் புது தோற்றத்தை வர்ணித்த மாமியாரின் கூந்தலைப் பிடித்து இழுத்து,’ஏன் அப்படிச் சொன்னீங்க?’ என்று கேட்க வேகம் எழ,,’இது நானா?’ என்று பயந்து போன வசந்தி,’என்ன ஆகுது நமக்கு? ஏன் இவங்க புதுசா தெரியறாங்க? முப்பத்தாறு வயசாகுது..தலை நரைக்க ஆரம்பிச்சிடுச்சு..கட்டின மனைவி நான் உயிரோட இருக்கும் போது புது மாப்பிள்ளைன்னு எப்படி தோணும்?…
‘கண்டபடி பேசாதீங்கண்ணு’ ஏன் அவங்க அம்மாவை கண்டிக்கலை..இவங்களுக்கும் அந்த மாதிரி எண்ணமிருக்குதா? அப்போ நான்? என்னைப் பற்றி இவங்க யோசிக்கலையா? வேலைக்குப் போக வேணாம், சொந்த வியாபாரம் செய்யக் கூடாது..வீட்டோட இருந்தா போதும்..நான் சம்பாதிக்கறது நம்ம இரண்டு பேருக்கும் போதும்..இப்படி என் சம்மந்தப்பட்ட எல்லாத்தையும் இவங்களோட முடிவுக்கு தானே விட்டேன்..கல்யாணம் ஆன பிறகு கணவன் சொல்றதை தான் கேட்கணும்..அவன் தான் கடைசிவரை கூட வரப் போறான் நானோ, அப்பாவோ இல்லைன்னு ஒவ்வொருமுறையும் அம்மா என்னோட வாயை அடைச்ச போது அமைதியாப் போனேனே..முப்பத்தி நாலு வயசுலே தனியா நிக்கப் போறேனா? அம்மா என்னை வீட்டு உள்ளே சேர்த்துப்பாங்களா? சேர்த்துக்கலைன்னா எங்கே போவேன்? ’ என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடி விடை கிடைக்காமல் அந்த சூழ்நிலையின் அழுத்தத்தில் அவளைத் தொலைத்துக் கொண்டிருந்தாள் வசந்தி.
வசந்தியின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சீதாவிற்கு மகன் அவனின் திருமணத்தை விரைவாக முடித்துக் கொண்டால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. மணி எட்டாகியும் வசந்தியைக் காணவில்லை. படுக்கையறை கதவு சாத்தியிருந்தது. “இன்னும் எழுந்திரிக்கலை போல..இப்போயெல்லாம் மெதுவா தான் வேலை செய்யறா..சீக்கிரமா அவளை முடிச்சு விட்டா நல்லா இருக்கும்.” என்று அவருடைய கணவனிடம் சொல்ல,
அதற்கு,”அவங்கப்பா இன்னும் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டி இருக்கு..சீக்கிரம் கொடுத்திடறேன்னு அவன்கிட்டே சொல்லியிருக்கார்..அதை வசூல் செய்திட்டு விவாகரத்து வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்.” என்றார்.
“அந்தப் பணம் எப்போ வந்து எப்போ இவளைத் தூரத்தி விட்டு எப்போ அவனுக்குக் கல்யாணம் செய்யறது..ஜாதகத்தைக் கூட கையாலே வாங்க மாட்டேங்கறாங்க..விவாகரத்து ஆனதும் பேசலாம் எல்லோரும் ஒரே போல சொல்றாங்க..மாப்பிள்ளையோட சொந்தங்கறதுனாலே மைசூர்க்காரங்க மட்டும் ஜாதகப் பொருத்தம் பார்த்து ஒத்து போகுதுன்னு ராதிகாகிட்டே சொல்லியிருக்காங்க..அவங்க மனசை மாத்திக்கறத்துக்கு முன்னாடி முடிவெடுங்கண்ணு ராதிகா தினமும் புலம்பிட்டு இருக்கா.” என்றார் சீதா.
“அதெல்லாம் எனக்கும் தெரியும்..இன்னைக்கு வெங்கடேஷ் வந்ததும் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.” என்று அந்த உரையாடலை முடித்தவர்,”என்ன இன்னும் உன் மருமக ரூமை விட்டு வெளியே வரலை..காப்பியும் காலை டிஃபனும் நீதான்னு நினைச்சேன் இப்போ மதியச் சமையலும் உன் தலைலே தான் போல.. உனக்கு சப்பாத்தி சரியா செய்ய வராது..எவ்வளவு லேட்டா எழுந்தாலும் அவளையே செய்யச் சொல்லு..சாஃப்டா செய்வா வசந்தி.” என்று வீட்டை விட்டு விரட்டியடிக்க போகும் மருமகளின் உழைப்பை உறிஞ்சிக் கொள்ள வெட்கபபடவில்லை.
“இப்போதானே எட்டு மணி ஆகுது..அதுக்குள்ளே மதியச் சாப்பாட்டுக்கு என்ன அவசரம்..முதல்லே டிஃபன் கடையை முடிப்போம்..அவ மூஞ்சிலே முழிக்காம இருந்தாலே நல்லதுன்னு நினைக்கறேன்..அவளுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு..கொஞ்ச நாளா அவளோட நடவடிக்கை சரியில்லை..வாயைத் திறக்கறதில்லை..வீட்லே இருக்காளான்னு தெரியலை..பிரச்சனை பெரிசா வெடிக்கறத்துக்கு முன்னாடி சுமூகமா முடிச்சுக்கிட்டா நல்லாயிருக்கும்னு நான் சொன்னதை எங்கே அவன் கேட்டான்..’அவளை அத்து விடறத்துக்கு முன்னாடி அவளுக்கு செலவு செய்ததை வசூல் செய்யாம விட நான் என்ன கேனையான்னு கேட்கறான்.’ என்றார்.
“அவன் சொல்றதும் சரி தானே..குழந்தை வேணும்னு லட்சக் கணக்கிலே அவன் தானே செலவு செய்தான்..அவங்க அப்பா ஒரு பைசா கூட தரலை..சின்னவளுக்கு வெளிநாட்லே பிரசவம் பார்க்கற அளவுக்கு வசதி இருக்கற போது, இவளோட சிகிச்சைக்கு ஏதாச்சும் கொடுத்திருக்கணுமில்லே..பேரனோட ஸ்கூல் அட்மிஷனுக்கு இவர் தான் லட்சக் கணக்கிலே டொனேஷன் கொடுத்திருக்கார்..அப்போ அந்த இரண்டு மாப்பிள்ளைகளும் புத்திசாலிங்க, என் மகன் முட்டாளங்கற மாதிரி தானே ஆகிப் போச்சு..அதான் செலவு செய்த மொத்த பணத்தையும் செட்டில் செய்யுங்க இல்லைன்னா உங்க மகளை அழைச்சிட்டுப் போங்கண்ணு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டான்..அப்புறம் தானே அந்த ஆளுக்கு உரைச்சுது..அப்படியெல்லாம் எதுவும் முடிவு செய்திடாதீங்க பணத்துக்கு ஏற்பாடு செய்யறேன் சொன்னார்..பணத்தை வாங்கிட்டு அவர் பொண்ணோட குடித்தனம் செய்யணும்னு இவனுக்கு என்ன தலையெழுத்து..பணம் வசூல் ஆகட்டும் அப்புறம் விவாகரத்து தான்..குழந்தை இல்லைங்கற ஒரு காரணம் போதும்னு வக்கீல் சொல்லியிருக்கார்..இன்னைக்கு அவன் வந்ததும் திரும்ப ஒருமுறை வக்கீல் கிட்டேயும் வசந்தியோட அப்பாகிட்டேயும் பேசச் சொல்றேன்.” என்றார்.
அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருந்தான் வெங்கடேஷ். இரவின் தனிமையில் வசந்தியின் தலையில் பலவிதமான எண்ணங்கள் கண்டபடி உலா வந்ததால் வசந்தியின் மனதும் உடலும் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தது. சமையல் வேலை, சாதாரண வீட்டு வேலை கூட அவளுக்கு சிரமமாக இருந்தது. எந்நேரமும் கை, கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. நேற்றிரவு சுவரைப் பிடித்துக் கொண்டு தான் பாத்ரூமிற்கு சென்று வந்தாள். அவளது உடல் நிலையைப் பற்றி யாரிடம் தெரிவிப்பது என்று குழப்பமாக இருந்தது. லோக்கலாக இருந்தாலும் ஒரு நாளும் அவள் மீது அக்கறை காட்டியதில்லை ஜெயந்தி. அப்படியே எப்போதாவது உடல் நலக்குறைவைப் பற்றி பேச நேர்ந்தால்,’நீ என்ன சின்ன பாப்பாவா இப்படி சின்ன விஷயத்துக்கெல்லாம் அம்மாவைத் தொந்தரவு செய்யற..இதுக்கு தான் ஒரு குழந்தை இருக்கணும்னு சொல்றது..அது கை, காலை உடைச்சிட்டு வந்தா உன்னோட கை, கால் உடைஞ்சிருந்தாலும் பெரிசு படுத்த மாட்ட.’ என்று அவளை மேலும் வேதனைக்கு உள்ளாக்குவாள்.
இது போன்ற சூழ் நிலையில் வெங்கடேஷை அழைப்பது தான் அவளது வழக்கம். அவள் கண்களுக்கு அவன் புதிதாக தெரிந்ததிலிருந்து அவன் வீட்டில் இருக்கும் போது கூட அவனுடன் பேசத் தயக்கமாக இருந்தது. ‘ஆமாம்..புது மாப்பிள்ளை தான்..அம்மா சொன்னது சரிதான்.’ என்று அவன் சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. எப்படி இந்தச் சூழ் நிலையைக் கையாள்வது என்று யோசித்து, சிந்துவின் பிரசவத்திற்குப் பிறகு அப்பாவோடு இது விஷயமாக பேச வேண்டும் அதுவரை யாரிடமும் இதைப் பற்றி பேசக் கூடாதென்று நேற்றிரவு தான் முடிவு செய்திருந்தாள்.
சீதாவும் அவருடைய கணவரும் உரையாடிக் கொண்டிருந்த போது படுக்கையில் தான் படுத்திருந்தாள் வசந்தி. அன்று காலையில் வழக்கம் போல் படுக்கையிலிருந்து எழ அவள் முயன்ற போது அவளுடைய உடல் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. கொஞ்சம் கூட அசைக்க உடலில் தெம்பு இருக்கவில்லை. உதவிக்கு அழைக்க வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை, அவளால் கண்களை கூட திறக்க முடியவில்லை. ‘என்னது இது? நம்ம உடம்புக்கு என்ன ஆச்சு?” என்று அச்சத்தில் கண்களில் கண்ணீரோடு அப்படியே படுத்திருந்தாள். எட்டு மணி போல் பாத்ரூம் போக அவசரம் ஏற்பட, பிரயத்தனம் செய்து கண்களைத் திறந்து, ஒருபுறமாக உடம்பைத் திருப்பி எழ முயற்சி செய்தும் அவளால் முடியவில்லை. சில நொடிகள் கழித்து ஓ வென்று அவள் அழ, மிக லேசாக அந்த அழுகை டைனிங் டேபிளில் அமர்ந்து டிஃபனுக்கு தயார் செய்து கோண்டிருந்த சீதாவை சென்றடைந்தது.
அதைக் கேட்டவுடன் காலையிலிருந்து கண்ணில் படாத மருமகள் அவருள் கலவரத்தை ஏற்படுத்த, மகனின் அறைக்கு சென்று சாத்தியிருந்த கதவைத் திறந்து பார்க்க, வசந்தி இருந்த நிலையைப் பார்த்துப் பயத்தில் மயக்கம் போடாத குறை தான்.
இதுவரை அனுபவித்தது போதுமென்று படுக்கையை நாசம் செய்து வசந்தியின் உடலும் மனதும் சத்தம் செய்யாமல் அபயக்குரல் எழுப்பியிருந்தது.
*******************
கதையைத் தொடர்ந்து கொடுக்கணும்னு சின்னதோ பெரிசோ தினமும் பதிவு கொடுக்கலாம்னு நினைக்கறேன். இன்னைக்கு இவ்வளவு தான் எழுத முடிஞ்சது.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.Stay blessed.