Advertisement

அத்தியாயம் – 12-1

சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத் தகவல் மட்டும் கொடுக்கிறான் மகன் என்று உணர்ந்த போது உடலில் பாரம் ஏறிப் போன உணர்வு ஜோதிக்கு. சினேகாவின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்கிப் போனார். தூரத்தில் இருந்தாலும் கணவர் போன பின் துணையாக இருக்கும் சகோதரர்களிடம் எப்படி இதைச் சொல்வது என்று பெரும் கவலையானது. அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்,

“சாகேத் அங்கிள் கொஞ்ச நேரத்திலே வீட்டுக்கு வருவார்..உங்ககிட்டே எல்லாத்தையும் பேசின பிறகு தான் ஷிக்கா வீட்லே பேச முடியும்னு சொல்லிட்டார்..அவங்க வீட்லே அவளுக்கு என்ன மாதிரி மாப்பிள்ளை பார்க்கறாங்க..கல்யாணம் எப்படி நடக்கணும்னு எதிர்பார்க்கறாங்கண்ணு அவருக்குத் தெரியும்..உங்களுக்கு ஏதாவது எதிர்பார்ப்பு இருந்தா சொல்லுங்கம்மா..அதையும் செய்திடலாம்..எல்லாத்தையும் இன்னைக்கே பேசி முடிச்சிட்டணும்மா.” என்று அவனது திருமணத்தைப் பற்றி ஆசையாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த மகனின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் அமைதியாகிப் போனார் ஜோதி.

வெகு நேரம் அமைதியாக இருந்தவர், இறுதியில்,“எனக்கு ஒரேயொரு கோரிக்கை தான் டா இருக்கு.” என்றார்.

“என்ன? சீக்கிரம் சொல்லுங்க..சாகேத் அங்கிள் வந்திடுவார்.” என்று அவசரப்படுத்தினான் மனோகர்.

“நம்ம முறைப்படி தாலி கட்டி கல்யாணம் நடக்கணும்.” என்றார் ஜோதி.

“அவ்வளவு தானே..ரெஜிஸ்டர் மரேஜ் முடிஞ்சதும் ஒரு முகூர்த்த நாள்லே சிம்பிலா கோவில்லே வைச்சுக்கலாம்.” என்றான்.

அதோடு வாயை மூடிக் கொண்டு விட்டார் ஜோதி. மருமகளை நேரில் சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை மனோகரும் ஷிக்காவை வீட்டுக்கு அழைத்து வரட்டுமா என்று கேட்கவில்லை, அழைத்து வரப் போவதாக சொல்லவில்லை. ஜோதியைப் பொறுத்தவரை தாலி கட்டும் சடங்கு தான் கல்யாணம். அது இல்லாமல் வேறு எந்த முறையில் திருமணம் நடந்தாலும், அதவாது பஞ்சாபி முறையில் திருமணம் நடந்தால் அவரால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதென்பதால் தான் அந்தக் கோரிக்கையை வைத்தார். ஜோதிக்கு தெரியவில்லை மனோகர், ஷிக்கா இருவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணம் பதிவுத் திருமணமாகதான் இருக்க முடியுமென்று.

அம்மா, அண்ணன் இருவரின் உரையாடலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த சினேகாவின் மனத்தில் ஆயிரம் கேள்விகள். அவளைப் பொறுத்தவரை அம்மாவின் கோரிக்கை அபத்தமாக தெரிந்தது.’தாலி கட்டினா தான் கல்யாணமா..கை குலுக்கி இல்லை கட்டி பிடிச்சு இல்லைன்னா முத்தம் கொடுத்து,’welcome to my life, partner’ நு காதலிக்கற இரண்டு பேரும் லைஃப் பார்ட்னர் ஆக முடியாதா? ஆண், பெண்ணுக்கு இடையே இருக்கற அந்தப் பிரித்தியேகமான உணர்வு தானே அந்த உறவுக்கு அடிப்படை..தாலி, மோதிரம், மெட்டின்னு கழட்டிப் போடக் கூடிய பொருள்கள்  அடிப்படை ஆக முடியாதே..மனோகரோட பதிவுத் திருமணம் முடிஞ்சதும் அவனுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிவிக்க ஒரு வரவேற்பு நிகழ்ச்சி போதுமே..எதுக்கு அம்மாக்கு தாலி தேவைப்படுது? தாலி கட்டிக்கலைன்னா ஷிக்காவை ஏத்துக்க மாட்டாங்களா?’ என்று திருமணத்தைப் பற்றிய அவளுள் எழுந்த கேள்விகளை வெளியிட்டு ஜோதியைக் கலவரப்படுத்தாமல் அதை மனதோடு வைத்துக் கொண்டாள் சினேகா. 

பதிவுத் திருமணத்திற்கு இரு தரப்பினரும் ஆஜராகியிருந்தனர். ஷிக்காவின் பெற்றோர், அண்ணன், உறவினர்கள், சாகேத் அங்கிள் என்று அவள் சைடிலிருந்து ஃபுல் அட்டெண்டன்ஸ். மனோகர் தரப்பில் மனோகரையும் சேர்த்து இவர்கள் மூவர் மட்டும் தான். கோவிலில் நடந்த திருமணத்தில் ஷிக்கா வீட்டினர் யாரும் பங்கு பெறவில்லை. எப்போதும் போல் சாகேத் அங்கிள். இந்தப் புறம் ஜோதியின் அண்ணன் செல்வக்குமார். சின்னதாக ஹோமம் வளர்த்து, மாங்கல்ய தாரணம் நடந்தது. திருமணச் சடங்கைப் பற்றிய ஷிக்காவின் அனைத்துக் கேள்விகளுக்கும் பெரும்பாலும் மனோகர் பதில் அளிக்க, சில சமயங்களில் அவள் நேரடியாக சினேகாவைக் கேட்க, சினேகாவும் சினேகிதமாக ஷிக்காவிற்கு பதில் அளித்தாள்.

மாமியார், மருமகள் இருவருக்கும் அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளியை எப்படி அகற்றுவது என்று அன்றும் புரியவில்லை. இன்றும் புரியவில்லை. அவர்கள் இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டாலும் அதில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று இருவருக்கும் புரிந்தாலும் அதைச் சரி செய்ய முயற்சி எடுக்கவில்லை. இத்துணைக்கும் ஷிக்காவின் பிரசவக் காலத்தில் அவளுடன் பெரும்பாலும் இருந்தது ஜோதி தான். இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்து கைக்குழந்தை மாண்ட்டியைப் பார்த்துக் கொண்டதும் ஜோதி தான். 

இப்போதும் மனோகர் குடும்பத்தில் ஏதாவது ஒன்று என்றால் அவரும் சினேகாவும் தான் முதலில் தரிசனம் கொடுப்பார்கள். அபயக் கரம் நீட்டுவார்கள். அதை உணர்ந்திருந்தாலும் இதுவரை வார்த்தை, செய்கையில் ஷிக்கா உணர்த்தியதேயில்லை. அவளுடைய குடும்பத்தினரைச் சமாதானம் செய்வது அவர்களுடன் சுமூகமான உறவைப் பராமரிப்பது என்று அவளது முயற்சிகள், முடிவுகள் அனைத்தும் ஒருதலைப்பட்சமாக தான் இருந்தன. மாண்ட்டி பிறந்த போது அவள் எடுத்த பெரிய முடிவு வரை அனைத்துமே அவள் குடும்பத்தினரை மனத்தில் வைத்து எடுத்தது தான். 

ஷிக்காவின் முடிவில் நொறுங்கிப் போன ஜோதி,’என்ன டா இது..அவன் உன் பிள்ளை டா..என்னோட பேரன் டா.’ என்று ஆட்சேபனை தெரிவிக்க,’இதை ஏற்கனவே, எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நாங்க எடுத்த முடிவு ம்மா..மாத்த முடியாது’ என்று சொல்ல,’ஏன் டா என்கிட்டே சொல்லலை?’ என்று ஜோதி கொதித்துப் போக, பதில் கொடுக்காமல் மனோகர் வெளியேற, அம்மா, மகனுக்கு இடையே பேச்சு வார்த்தை, போக்குவரத்து நின்று போனது. பத்து நாள்கள் போல் பொறுத்துப் பார்த்த சினேகா,

“மாண்ட்டி அவங்களோட பிள்ளை..முடிவெடுக்க அவங்களுக்கு தான் உரிமை இருக்கு..அதிலே நீங்க தலையிட முடியாது..அவன் எப்படி இருந்தாலும் உங்க பேரனும் தான்….இப்படிக் கோவிச்சிட்டு அவனைப் பார்க்க வராம இருக்கறது தப்பு ம்மா..என்னைப் பார்த்ததும் என் பின்னாடி நீங்க இருக்கீங்களான்னு தேடறான் ம்மா’ என்று சினேகா சொல்ல, 

பேரன் பிறந்ததிலிருந்து மிஞ்சிப் போனால் நான்கைந்து நாள்கள் அவனைப் பார்க்காமல் இருந்திருகிறார். அதுவும் ஷிக்காவின் குடும்பத்தினரோடு வெளியூருக்குப் பயணம் செய்திருந்ததால்  தான். இப்படி உள்ளூரில் இருந்து கொண்டு இது போல் தொடர்ந்து பேரனைப் பார்க்காமல், மகன் வீட்டிற்குப் போகாமல் இருந்ததே இல்லை. ஜோதிக்கும் அவரது வீட்டில் இருப்பு கொள்ளவில்லை, எனவே, “நிஜமாவா சொல்ற டீ?” என்று கேட்க,

“சச்சி ம்மா (பிராமிஸ்) என்கூட என் பாய்ஃபிரண்டையா அழைச்சிட்டுப் போறேன்..மாண்ட்டியோட பாட்டியை தானே கூட்டிட்டுப் போறேன்..அப்போ உங்களைத் தானே தேடறான்னு அர்த்தம்.” என்று சினேகா பதில் கொடுக்க,

‘பாய்ஃபிரண்ட்’ என்ற கேட்டது மாண்ட்டியின் பாட்டிக்கு மாரடைப்பு வராத குறை தான். விளையாட்டிற்காக சினேகா சொன்னதை ஸீரியஸா எடுத்துக் கொண்ட ஜோதி, “என்ன டீ திடீர்னு  பாய்ஃபிரண்டுன்னு சொல்ற?” என்று விசாரிக்க,

“ஐயோ அம்மா சும்மா ஒரு பேச்சுக்கு, உதாரணத்துக்கு சொன்னேன்.” என்று சினேகா விளக்கம் கொடுக்க,

“நீ ஒரு பேச்சுக்கு உதாரணத்துக்கு சொல்லியிருக்கலாம்..நான் ஸீரியஸா சொல்றேன் அவன் நம்ம ஊர் பையனா இருந்தா எனக்குப் பிரச்சனையில்லை.” என்று மகளின் காதலுக்கு கண்டிஷனோடு முன் அனுமதி அளிக்க,

“நான் உதாரணத்துக்கு தான் சொன்னேன்..சொல்லப் போனா உதாரணத்துக்கு கூட சொல்ல முடியாது..ஆனா மனோகர் போல சில பேர் இருக்கறதுனாலே தான் உதாரணத்துக்கு எடுத்துக்கிட்டேன்..இங்கே இருக்கற உங்க ஊர் பையனெல்லாம் கர்ல்ஃபிரண்ட் வைச்சுக்க மாட்டான்..வைச்சுக்க முடியாது…அவன் அம்மா தான் டியுயல் ரோல் செய்வாங்க..கோவில்லேர்ந்து பார்க்க வரை அம்மா, பையன் ஜோடியா தான் போவாங்க, வருவாங்க..

கண்ட பொண்ணுங்க கண்ணுலே பையன் பட்டு அவனைக் கொத்திட்டுப் போகாம கண்ணுக்குள்ளே வைச்சுக் காப்பாத்தி, கல்யாண வயசு வந்தவுடனே அவனுக்குப் பிடிக்குதோ இல்லையோ அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணு கைலே அவனைப் பிடிச்சுக் கொடுத்து, அவங்க பொறுப்பை அவ தலைலே கட்டி, எல்லாத்திலேயும் புருஷனை தான் முன்னிருத்தனும்னு அட்வைஸ் கொடுத்து அவளோடு தேவைகளை அவளே பின்னுக்கு தள்ளி வைக்கற மாதிரி ப்ரேயின் வாஷ் செய்திடுவாங்க..அவளும் காலப் போக்கிலே அவங்களோட அடுத்த வர்ஷனா மாறிடுவா.” என்று தீர்மானமாக சொன்ன சினேகா அறிந்திருக்கவில்லை அவளது கருத்திற்கு நேர்மாறாக, ஓர் அசாதாரண சூழ்நிலையில், தலைக்குப் பூ, பசிக்குத் தவலை வடை என்று அவளது தேவைகளை முன் நிறுத்தி அவளைத் தருமசங்கடமான நிலைக்கு ஓர் அம்மா, மகன் ஜோடி தள்ளப் போகிறார்களென்று.

***************

தனியா ஃபளாஷ்பேக் எழுத வரலை. இரண்டு பத்தி நிகழ்வை சொல்லுது அடுத்த இரண்டு பத்தி கடந்த காலத்தை பேசுது. இத்தனை கதை எழுதின பின்னும் இந்த மாதிரி ஒரு நரேஷன் எப்படி வந்ததுன்னு எனக்கும் புரியலை.. இந்தப் பதிவோட ஒரளவுக்கு பின்னணி, கடந்த காலம் எல்லாம் சொல்லியாச்சுன்னு நினைக்கறேன். அடுத்த பதிவுலேர்ந்து கதை நிகழ் காலத்திற்கு வந்திடணும். போலீஸ்ஸும் வந்திடுவார்ன்னு நினைக்கறேன்.

Advertisement