அத்தியாயம் – 8

கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே போல்,’கணவர் அப்படிச் செய்திருப்பாரா?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும்,’செய்திருக்கலாம்’ என்று அவருக்கு விடை கிடைக்க, ‘செய்திருக்க மாட்டாங்க’ என்று இன்றும் மனோகர் அடித்துச் சொல்கிறான். 

அன்றும், பதினாறாம் நாள் காரியங்கள் முடிந்த பின்னர், அவரது பிறந்த வீட்டில், அனைவர் முன்னிலையில் இதையே தான் சொன்னான் மனோகர்.

கட்டிலில் அசைவற்றுப் படுத்துக் கிடந்த கணவரைப் பார்த்து ஓ என்று கதறி அழுது மயக்க நிலைக்குப் போனார் ஜோதி. பள்ளிச்சீருடையில் பாண்டியன் அருகே. படுக்கையில் அமர்ந்து அவரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சினேகா. அம்மாவிற்கு தைரியம் சொல்லத் தெரியாமல், தங்கையைத் தேற்றத் தெரியாமல், நடந்ததை ஜீரணிக்க முடியாமல் கலங்கிப் போனான் மனோகர். காலையில் காப்பி குடித்து விட்டு பாத்ரூம் சென்று வந்தவர், நெஞ்சில் கை வைத்தபடி படுக்கையில் சாய்ந்து விட்டார். நல்ல ஆரோக்கியமான உடல் நிலையில் இருந்த அப்பாவுக்கு எப்படி மாரடைப்பு வந்தது என்று மனோகருக்குப் புரியவில்லை. வேலையில் இருந்தவரை ரெகுலர் மெடிக்கல் செக் அப் செய்து கொண்டவர் அதன் பின் அது தேவையில்லை என்று முடிவு செய்திருந்தது அவனுக்கு தெரியவில்லை. 

ஜோதியின் கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர் அவர்கள் வீட்டில் கூடி விட, அடுத்து என்ன என்ற கேள்வி வர, கூச்சல் குழப்பத்திற்கு நடுவே ஆம்புலன்ஸிற்கு அழைப்பு சென்றது. ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனால் தான் மேலே ஆக வேண்டிய வேலைகள்  சரியாக, சுலபமாக நடக்குமென்று சிலர் ஆலோசனை அளிக்க, அது பிரச்சனையை வளர்த்து விடுமென்று சிலர் கருத்து தெரிவிக்க, குழம்பிப் போன மனோகர் ஷிக்காவை அழைத்து விஷயத்தை சொல்ல, அவர்களின் குடும்ப நண்பர், சாகேத் அங்கிளின் கைப்பேசி இலக்கை ஷிக்கா பகிர்ந்து கொள்ள, மனோகர் அவருக்கு அழைப்பு விடுக்க, அன்று பொழுது சாயும் வரை அவனோடு இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, மறு நாள் பாண்டியனை எரியூட்டும் போது துக்கத்தில் துவண்ட போன மனோகரை அவர் தான் தோளில் சாய்த்துக் கொண்டார்.

பாண்டியனோடு பிறந்தவர்கள் ஒரு தம்பி, தங்கை. தம்பி காமராஜ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். மனைவி ப்ரியா இல்லத்தரசி. அவர்களுக்கு இரண்டு மகன்கள். தங்கை வேணியின் கணவன் கமலக்கண்ணன் சொந்தமாக டிராவல் ஏஜென்ஸி நடத்தி வந்தார். வேணிக்கு ஒரேயொரு மகன். வேணியைப் பொறுத்த வரை காமராஜ் தான் அவரின் சகோதரர். இருவருமே சென்னையில் இருந்ததால் கொடுக்கல் வாங்கல், முறை செய்தல், பண்டிகை நாளில் விருந்தாடல் என்று அவர்களின் உறவு நன்றாக இருந்தது. அதே சமயம் மூத்த சகோதரர் பாண்டியனோடு அவர்கள் இருவருக்கும் இருந்த உறவிற்கு புதிதாக தான் பெயர் வைக்க வேண்டும். அண்ணனின் குணத்தினால் ஒதுங்கி இருக்கிறோமென்று ஜோதியிடம் விளக்கம் கொடுப்பவர்கள் அவர்களுக்குத் தேவை இருக்கும் போது அதே குணங்கெட்ட அண்ணனிடம் தணிந்து போவார்கள். 

பாண்டியனுக்கும் அவர்கள் மீது பாசமென்று சொல்ல முடியாது. வெறுப்பு என்றும் அதை வரையறுக்க முடியாது. பிள்ளைகளின் பள்ளி விடுமுறையின் போது எல் டி ஸியில் குடும்பத்தை தம்பி, தங்கை வீட்டிற்கு பாண்டியன் அழைத்துச் சென்றதுண்டு. அதே போல் ஜோதியின் சொந்த ஊருக்கும் சென்றிருக்கிறார்கள். ஜோதியின் அண்ணன் செல்வக்குமார், தம்பி செந்தில் நாதன் இருவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ஜோதியின் அண்ணனோடு ஒரிரு வார்த்தை பேசும் பாண்டியன் ஜோதியின் தம்பியோடு அறவே பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள மாட்டார்.

திருமணத்திற்காக ஜோதி காத்துக் கொண்டிருந்த போது பாண்டியனுக்கும் செந்தில்நாதனுக்கும் இடையே பல மோதல்கள் நடந்திருக்கின்றன. ‘அரசாங்க வேலை என்ன…நீ அரசனாவே ஆனாலும் எங்கக்காவைக் கட்டிக் கொடுக்க மாட்டேன்.’ என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லியிருக்கிறார் செந்தில் நாதன். மத்திய அரசில் கிளர்க் வேலை கிடைத்து, ஜோதியைத் திருமணம் செய்த பின்,’இப்போ நான் தில்லிக்கு ராஜா டா..அது எங்கே இருக்குன்னு தெரியுமா?’ என்று அதிகம் படித்திராத, சொந்த ஊரில் வியாபாரம் செய்து கொண்டிருந்த ஜோதியின் குடும்பத்தினரைக் குத்தல் பேச்சு பேசியிருக்கிறார் பாண்டியன். 

வருடங்கள் பல கடந்த பின்னரும் பழசை வைத்து புது உரசல்கள் உதித்துக் கொண்டு தான் இருந்தன. எதற்காக தனது குடும்பத்தினர் பேச்சு வாங்க வேண்டுமென்று பிறந்த வீடு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார் ஜோதி. அண்ணன், தம்பியின் திருமணம், அவர்களின் குழந்தை பிறப்பு, பெற்றோரின் இறப்பு என்று பெரிய நிகழ்வுகளைத் தவிர சாதாரணமாக பிறந்து வீட்டிற்குச் சென்று சீராடியதில்லை. ஜோதி மீது பாசமிருந்ததால் சகோதரர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவர்கள் கடமையை மட்டும் செய்து சகோதரியை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.

பாண்டியனின் திடீர் மறைவு இரண்டு பக்க உறவினர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது பிடிவாதம் அவரை இங்கேயே பிடித்து வைத்திருக்குமென்று அவரைத் தெரிந்த அனைவரும் நினைத்திருக்க இத்தனை துரிதமாக இந்த பூமியை விட்டு செல்வார் என்று யாருமே நினைக்கவில்லை. செய்தியைக் கேட்டு பாண்டியனின் இளைய சகோதரர் காமராஜ் பதறியடித்துக் கொண்டு தில்லிக்கு வந்தார். தங்கை வேணி வரவில்லை. கைப்பேசியில் துக்கம் விசாரித்ததோடு சரி. அதுவரை ஒருமுறை கூட தில்லிக்கு வந்திராத ஜோதியின் சகோதரர்கள் இருவரும் முதல்முறையாக சகோதரியின் வீட்டிற்கு வந்தனர். மூன்று நாள்கள் மூவரும் உடன் இருக்க, துக்கத்தில் இருந்த மூவரும் கொஞ்சம் தெம்பாக உணர்ந்தனர். நான்காவது நாள், மனோகரைத் தனியாக அழைத்து சென்ற காமராஜ்,

“காரியமெல்லாம் செய்யணும்..அது சென்னைலே என் வீட்லே முடியாது..செல்வம் மாமாகிட்டே  பேசிட்டேன்..’எங்க வீட்லே இடத்துக்கும் வேலை ஆளுங்களுக்கும் பஞ்சமில்லை நல்லபடியா செய்திடலாம்னு’ சொல்லிட்டாங்க..நம்ம பங்காளிங்களுக்கும் அது தான் வசதியா இருக்கும்..பத்தாவது நாள்லேர்ந்து சடங்கை ஆரம்பிக்கலாம்..இரண்டு நாள் முன்னே ஊருக்குப் போகணும்..பதினாறை முடிச்சிட்டு அடுத்த நாள் கிளம்பிடலாம்..இங்கேயிருந்து நேரே மதுரைக்கு போயிடுங்க..உன் பெரியமாமா ஏர்போர்ட்லேர்ந்து அழைச்சிட்டுப் போயிடுவார்..நானும் உன் சித்தியும் நேரா ஊருக்கு வந்திடறோம்.” என்றார்.

மனோகருக்கு சடங்கைப் பற்றியெல்லாம் தெரியவில்லை. தாத்தா இறந்த போது குழந்தையாக இருந்ததால் அதைப் பற்றி நியாபகமில்லை. பாட்டி தவறிய போது சென்னையில், சித்தப்பாவின் வீட்டில் தான் அனைத்தும் நடந்ததாக நியாபகம். ஒரு வாரம் போல் பள்ளிக்கூடத்திற்கு லீவ் போட்டிருந்தான். இப்போது அவனுடைய சித்தப்பா இப்படியொரு திட்டத்துடன் வர, மாமா வீடாக இருந்தாலும் அதிகப் போக்குவரத்து இல்லாததால் அவனுக்கு தயக்கம் ஏற்பட்டது. அதை வெளியிடாமல் ,”சித்தப்பா, சினேகாக்கு அவ்வளவு நாள் லீவ் கிடைக்காது.” என்றான்.

அதற்கு,“பெத்த மக இருக்கணும்..அவ இல்லாமச் சடங்கு செய்ய முடியாது.” என்றார் காமராஜ்.

“பிள்ஸ் டூ..அதான்.” என்றான் மனோகர்.

“என்ன டா பெரிய படிப்பு…ஆங்கில இலக்கியம் படிக்கப் போறவளுக்கு பத்து நாள் லீவ் போட்டிட்டு வரமுடியாதா?” என்று காமராஜ் குரலை உயர்த்த, அதைக் கேட்டு ஜோதியும் ஜோதியின் சகோதரர்களும் அங்கே வர, ஆண்கள் மூவரும் அவர்களின் திட்டத்தை ஜோதியிடம் தெரிவித்தனர். இனி இவர்களை அணுசரித்து தான் போகவேண்டுமென்ற உண்மை ஜோதிக்கு உரைக்க, குழந்தைகளின் வருங்காலத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அந்தத் திட்டத்திற்குத் தலையாட்டியவருக்குத் தெரியவில்லை பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாரென்று.

சினேகாவின் பள்ளிக்கூடத்திற்கு நேரடியாக சென்று அனுமதி பெற்று வந்தார் ஜோதி. வங்கி சேமிப்பு கணக்கில் இருந்த பணத்தை எல்லாம் திரட்டி எடுத்துக் கொண்டு, மகள், மகனோடு கணவரின் காரியங்களை செய்ய பிறந்த வீட்டிற்குச் சென்றார். சகோதரர்கள் இருவரும் ஜோதிக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் துணையாக இருந்து அனைத்தையும் நல்லபடியாக செய்து முடிக்க உதவி செய்தனர். காமராஜும் அவருடைய மனைவி ப்ரியாவும் பட்டும் படாமலும்  தான் நடந்து கொண்டனர். பதினாறாம் நாளன்று குடும்பத்துடன் வந்தார் பாண்டியனின் தங்கை வேணி. இரத்த சம்மந்த உறவினர்களுக்கு அன்றோடு தீட்டு கழிந்ததால் வெளியூரிலிந்து கூட சிலர் வந்து கை நனைத்து விட்டுப் போயினர்.

மறுநாள் தில்லிக்குப் புறப்பட திட்டமிட்டிருந்ததால் அந்த ஏற்பாட்டில் இருந்தாள் சினேகா. அவர்களின் சாமான்களைச் சேகரித்து, பேக் செய்து என்று அவர்களுக்காக கொடுக்கப்பட்ட அறையில் அவள் வேலை செய்து கொண்டிருந்த போது, வெளியே கூடத்தில் பேச்சு சத்தம் கேட்க, அறையின் வாயிலுக்குச் சென்றாள்.

வரவேற்பறையில் பெண்கள் யாருமில்லை. ஆண்கள் மட்டும் தான் இருந்தனர். தனியாக இருந்த சோபாவில் அவளுக்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர் அமர்ந்திருக்க அவருக்கு நேரெதிரே இருந்த இன்னொரு சோபாவில் அவளுடைய சித்தப்பா அமர்ந்திருந்தார். சித்தப்பாவின் வலது புறம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேணியின் கணவர் கமலக்கண்ணன் அவரது கைப்பேசியில் பிஸியாக இருக்க, அவரருகே நாற்காலியைப் பற்றியபடி மனோகர் நின்றிருந்தான். மாமாக்கள் இருவரும் வீட்டு வாயிலிருகே நின்றிருந்தனர்.

“நான் பொய் சொல்றேன்னு சொல்றேயா காமராஜ்.” என்று கடுமையானக் குரலில் பேசினார் அந்த நபர்.

அதில் பயந்து போய், தழைந்த குரலில்,“காசியண்னே நான் அப்படிச் சொல்லலை..உங்களைச் சந்தேகப்படலை..திடீர்னு இப்படி ஒரு விஷயம்னு நீங்க சொல்லவும் நம்பமுடியலை..அதான் உண்மையான்னு..” என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டார் காமராஜ்.

அந்த நபர் அவர்களுக்குச் சொந்தம். பாண்டியன், காமராஜிற்கு அண்ணன் முறை. ஜோதியின் சகோதரர்களுக்கும் அவரைத் தெரியும். ஆனால் பழக்கமில்லை. சொந்தக்காரர்கள் என்பதால் பொதுவான இடங்களில், நிகழ்வுகளில், விழாக்களில் சந்திக்கும் போது ஒரு வணக்கத்துடன் கடந்து விடுவார்கள்.  பாண்டியனுடன் நெருக்கமான உறவு இல்லாத போது அவருடைய உறவினர்களோடும் ஒட்டி உறவாட விரும்பவில்லை. 

“என்னாலேயும் தான் பாண்டியன் போயிட்டான்னு நம்பமுடியலை..ஆபிஸ் திறப்பு விழாக்கு நீங்கதாண்ணே சிறப்பு விருந்தினர்..உங்க கையாலே தான் திறக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போனவன் இப்படி ஒரேயடியா போயிடுவான்னு எனக்கு எப்படித் தெரியும்..இப்போ அவன் போயிட்டான்னு நானும் போனது போகட்டும்னு விடமுடியுமா?” என்று கேட்டார் காசி.

அதைக் கேட்டு,’ஆபிஸா?’ என்ன ஆபிஸ்?’ என்று சிந்தனைவயப்பட்டாள் சினேகா.

மனோகரோ திடுக்கிட்டுப் போனான். சொந்த ஊரில் வியாபாரம் செய்ய அப்பா திட்டமிட்டிருந்தது தெரியும். அதற்காக அம்மாவின் பெயரில் இருந்த பணத்தை கேட்டதும் தெரியும். மற்ற விவரங்கள் எதுவும் அவனுக்குத் தெரியாதென்றாலும் அவனுடைய அப்பாவை அவனுக்குத் தெரியும்.  அதுவரை அந்த நபர் சொன்ன விஷயத்தை சித்தப்பா, மாமாக்கள் பார்த்துக் கொள்வார்களென்று எண்ணியிருந்தவன், ‘இவங்க இப்போ என்ன சொல்ல வராங்க?’ என்று அந்த நபர் பேசுவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

பிள்ளைகள் இருவரின் மனத்தில் இருந்த அதே கேள்விகள் தான் அங்கே இருந்த பெரியவர்கள் மனத்திலும் இருந்தது. ‘ஆபிஸா? சொந்த வீடு வாங்க வந்திட்டு இப்போ வீடு, நிலம் விற்பனைலே உங்க ஜோதியோட புருஷன் இறங்கப் போறார்ன்னு நமக்கு விஷயத்தை சொன்னவங்க ஆபிஸ் பத்தி எதுவும் சொல்லலையே.’ என்று ஜோதியின் மூத்த சகோதரர் செல்வம் எண்ணிக் கொண்டிருக்க, ‘திறப்பு விழா வரை போயிருச்சா? எந்த இடத்திலே ஆபிஸ் பார்த்திருந்தார்?’ என்று காமராஜுக்கும் கேள்வி வர, ‘ஆள் இல்லைன்னு ஆனப் பிறகு இப்போ என்ன செய்யப் போறார்?’ என்று செந்தில் தொண்டையில் கேள்வி சிக்கிக் கொண்டிருக்க, அந்த உரையாடலை எந்தப் பாதையில் எடுத்துச் செல்வதென்று மூவருக்கும் புரியவில்லை. 

காசி சொன்னதைக் கேட்டவுடன் அவரது கைப்பேசியைப் பேக்கெட்டில் போட்டு விட்டு சுவாரசியமாக மாறியிருந்த உரையாடலைக் கவனிக்க ஆரம்பித்தார் கமலக்கண்ணன்.

“எப்போ தில்லிக்கு போற ப்பா?” என்று மனோகரை விசாரித்து அந்த உரையாடலை அவர் விரும்பிய பாதைக்கு அழைத்துச் சென்றார் காசி.

“நாளைக்குக் கிளம்பறோம்.” என்றான் மனோகர்.

அதற்கு,”நேத்து சாயங்காலம் தான் நான் துபாய்லேர்ந்து வந்தேன்..வீட்டுக்கு வர்றத்துக்குள்ளே விடிஞ்சிடுச்சு..மற்ற வேலைகளைத் தூக்கி போட்டிட்டு பங்காளியோட காரியமாச்சேன்னு புறப்பட்டு வந்தேன்..அப்படியே இந்த விஷயத்தையும் பேசி முடிச்சிடலாம்னு தான்.” என்றார்.

‘இவர் நேத்து துபாய்லே இருந்தாரா?’ என்று அந்த நபரை ஆராய்ந்தான் மனோகர். சாதாரண வேஷ்டி சட்டையில் சாதாரணமானத் தோற்றதில் இருந்தார். காமராஜ் மனத்திலும் அந்தக் கேள்வி தான் இருந்தது. ‘சில வருஷங்களா காசி அண்ணனைப் பற்றி அரசபுரசலாக் கேள்விப்பட்ட விஷயமெல்லாம் உண்மை போல இதிலே நாம தலையிட்டா அவ்வளவு தான்..அண்ணுக்கு காரியம் செய்ய வந்திட்டு நமக்கு காரியம் செய்ய வேண்டி வந்திடும்.’ என்ற முடிவிற்கு வந்து மௌனமானார்.

“நாளைக்கு எப்போ ப்பா?” என்று கேட்டவரின் குரலில் இருந்த பணிவு பொய்யென்று உணரும் அளவிற்கு மனோகருக்கு உலக அனுபவம் இருக்கவில்லை.

“இராத்திரி” என்றான் மனோகர்.

“அப்போ காலைலே ஒரு பத்து மணி போல என்னோட ஆள் வருவான்..அவன் கைலே கொடுத்திடுங்க.” என்றார் காசி.

அதைக் கேட்டு,’என்னத்தைக் கொடுக்கச் சொல்றார் இந்த அங்கிள்?’ என்று காசியை யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சினேகா.

அப்போது பின் கட்டிலிருந்து வந்த செல்வக்குமாரின் மனைவி மீனாட்சி, காசியின் எதிரே இருந்த சின்ன மேஜையில் தண்ணீர் குவளையை வைத்து விட்டு நகர,”தங்கச்சி கொஞ்சம் ஜோதியை அழைச்சிட்டு வா ம்மா..இரண்டு வார்த்தை பேசிட்டுக் கிளம்பறேன்.” என்றார்.

அந்த இரண்டு வார்த்தைகள் ஆறுதல் வார்த்தைகள் என்று எண்ணி ஜோதியை அழைத்து வரச் சென்றார் மீனாட்சி.