காலையிலேயே வெய்யில் மண்டையைப் பிளந்தது. எட்டு மணி தானென்று நம்பமுடியவில்லை. சமையலறையில் வேர்வையில் குளித்தபடி ரவைகிச்சடியைக் கிளறிக் கொண்டிருந்தார் விஜயா. கடைசியாக ஒருமுறை அதை கிளறி விட்டு, அடுப்பை அணைத்தார். ஒரு தட்டைப் போட்டு கடாயை மூடி விட்டு, வரவேற்பறை சுவரில் இருந்த கடிகாரத்தில் ஒரு கண் வைத்தபடி, கேஸ் அடுப்புக்கு கீழே இருந்த அலமாரியைத் திறக்க குனிந்த போது இடுப்பில் அப்படியொரு வலி.
“முருகா” என்று முணங்கியபடி, அலமாரி கதவை பிடித்துக் கொண்டு மெதுவாக நிமிர்ந்தவர், அப்படியே ஒரு கையால் டிஃபன் பாக்ஸை வெளியே எடுத்து அதை மேடை மீது வைத்து விட்டு இரண்டு கைகளையும் பின்னே கொண்டு சென்று பிராப்ளம் கொடுத்தஇடத்தை வேகமாக தேய்த்து விட்டுக் கொண்டிருந்த போது,
“நீங்க எதுக்கு இப்படி சட்டு சட்டுன்னு குனியறீங்கம்மா? நான் எடுத்துக் கொடுத்திருபேன்னில்லே.” என்றபடி சமையலறையினுள் வந்தான் ஷண்முகம்.
“நீ வெளியே போ சாமி..அபிஸுக்குத் தயாரான பிறகு இங்கே வராதேன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது..நட..நட.” என்று வந்த வழியே திரும்பிப் போகும்படி மகனை விரட்டினார்.
உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருந்த தருணங்களை மனத்தில் கொண்டு வந்தவன் அதைப் பற்றி ஒரு வார்த்தை வெளியிடாமல்,“ஒண்ணுமாகாது ம்மா..கொஞ்சம் வேர்வை வழியும்..இந்தியாவோட தலை நகர்லே ஜுன் மாசத்திலே வேற எப்படி இருக்கும்?” என்று கேட்டான்.
“நம்மூர்லே எப்போதும் இந்த மாதிரி தான் இருக்கும் சாமி..சில நாள் ஜன்னல் கதவைத் திறந்து வைச்சிட்டு தான் தூங்குவோம்..அண்ணன் வீட்லேயாவது தோட்டத்திலிருந்து காத்து வரும்..அக்கா வீட்லே எப்போதும் வண்டி சத்தம் தான் கேட்டிட்டு இருக்கும்..படுத்திருந்த பாயும் தலைகாணியும் வேர்வைலே நனைஞ்சு போயிடும்..அதெல்லாம் உனக்கு நியாபகம் இருக்குதா சாமி?” என்று அவர் தயக்கத்துடன் கேட்க,
சிறு வயது நிகழ்வுகளைக் கடந்து வர, அவைகளை மறக்க எத்தனை பாடுபட்டான் என்று தெரிய வந்தால் அவர் பெரிதும் மனம் வருந்துவார் என்பதால்,“எப்படி மறக்கு ம்மா? ஹாஸ்டல்லேயும் நிறைய பவர் கட் ஆகும்.” என்று சொன்னவன் மாமா, பெரியம்மா வீட்டில் இருந்த நாள்களைப் பற்றி பேசவில்லை.
“இங்கேயும் அப்படித் தான் இருக்கும்னு எனக்கு எப்படித் தெரியும் சாமி? நான் இந்த ஊருக்கு வந்த போது சுள்ளுனு வெய்யில் ஆனா ஒரு பொட்டு வேர்வை இல்லை..இப்போ இப்படி ஊத்துது..நான் ஓர் ஆள் இங்கே நிக்க முடியலை, காத்து போய் வர இடமில்லாம கஷ்டமாயிருக்கு..இதிலே நீ வேற விசாரணை நடத்திட்டு இருக்க..நீ போ சாமி…டிஃபனைத் தட்டிலே போட்டுக் கொண்டு வரேன்.” என்று ஷண்முகத்தை வெளியே அனுப்பி வைத்தார் விஜயா.
“வேணாம் சாமி..கரெண்ட் பில் அதிகமாகிடும் சாமி.” என்று அன்னை மறுக்க,
“இந்த மாசம் சம்பளம் முழுக்க போகட்டும்..நீங்க வாங்க.” என்று கடுமைனான குரலில் கட்டளையிட்டான் மகன்.
மகனின் கட்டளைக்கு அடிபணிந்து கிச்சிடி கிளறிய கடாயைத் தூக்கிக் கொண்டு போய் வரவேற்பறை தரையில், கார்பெட் மீது வைத்தார். அங்கே சேஃபாவில் அமர்ந்து அவனது ப்ரீஃப்கேஸை ஷண்முகவேல் சரி பார்த்துக் கொண்டிருந்த போது இரண்டு அடுக்கு ஸ்டீல் டிஃபன் பாக்ஸில் கிச்சடியை அடைக்க முயன்று கொண்டிருந்தார் விஜயா. அவனது ப்ரீஃப்கேஸை மூடி விட்டு சமையலறைக்குச் சென்று திரும்பிய ஷண்முகத்தின் கையில் வட்ட ஸ்டீல் டிஃபன் பாக்ஸ் ஒன்று இருந்தது. அதைக் கார்பெட்டில் வைத்து,
“இதிலே பேக் செய்து கொடுங்க ம்மா..எனக்குப் போதும்.” என்றான் ஷண்முகவேல்.
அதைக் கோபத்துடன் தூர வைத்து விட்டு, இரண்டு அடுக்கில் கிச்சடியைப் பேக் செய்து, அதனுடைய உறையில் போட்டு ப்ரீஃப்கேஸ் அருகே வைத்தவர்,”இரண்டுத்தையும் மிச்சம் வைக்காம சாப்பிடணும்.இப்போ இதைச் சாப்பிடு சாமி.” என்று அவன் முன் தட்டை வைத்து பள்ளிக்கூடத்திற்குப் போகும் பத்து வயது பிள்ளைக்கு சொல்வது போல் மத்திய அரசில் பெரிய பதவியில் இருந்த முப்பத்தி மூன்று வயது மகனுக்குக் கட்டளையிட்டார் விஜயா.
அதற்கு ஷண்முகவேல் பதில் சொல்ல நினைத்த போது டக்கென்ற ஓசையுடன் ஏஸி அதன் செயல்பாட்டை நிறுத்த, எப்போதுமே எதற்குமே அவனது உணர்ச்சிகளை வெளியிட்டு பழக்கமில்லாதவன்,”ச்சே..இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் போயிருந்தா இந்த ரூமாவது கூலா இருந்திருக்கும் ம்மா.” என்றான்.
“நம்மூர்லே மின்வெட்டுக்கு ஓர் அட்டவணை இருக்கும்..இல்லை ஏதாவது காரணம் இருக்கும்..இங்கே நினைச்ச போதெல்லாம் கரெண்ட் போகுது..ஃப்ரிஜ்லே ஒரு சாமான் வைக்க முடியறதில்லை..நேரத்துக்கு எதுவும் செய்ய முடியறதில்லை..ஒண்ணு முன்னாடியே செய்து வைக்கணும்..இல்லை கரெண்ட் வரட்டும்னு காத்திட்டு இருந்திட்டு தாமதமா செய்யணும்..எப்படித் தான் இங்கே இருக்கறவங்க எல்லோரும் நேரத்துக்கு ஆபிஸ், பள்ளிக்கூடம்னு போறாங்களோ.” என்றார் விஜயா.
“எதுக்கு சாமி வீண் செலவு..நீயும் வீட்லே இருக்கறதில்லை..நானும் நிறைய நாள் இருக்கப் போகறதில்லை..எப்படியும் ஒரு நாலு மணி நேரத்திலே வந்திடுது..நம்ம இரண்டு பேருக்கு பெரிசா ஃபிரிஜ்லே என்னத்தை செய்து வைக்கப் போறேன்? தொக்கு, புளிக்காச்சல்னு ஏதாவது இரண்டு சாமான் இருந்தா சாதம், சப்பாத்தியோட நீ சாப்பிடுவேன்னு நினைச்சேன்..இத்தனை வருஷத்திலே இப்போ தான் என் கையாலே உனக்கு சமைச்சுப் போடுறேன்..அதைக் கூட சரியாச் செய்ய முடியலை..நானாவது பகல்லே தூங்கிக்கறேன் நீ தான் சாமி சரியாத் தூக்கமில்லாம கஷ்டப்படற.” என்று பேசி முடித்த போது அவரது கண்கள் கலங்கியிருந்தன.
தில்லியில் அவருடைய மகனுடன் இருக்க கிடைத்த இந்த வாய்ப்பை கூட மறுக்க தான் நினைத்தார் விஜயா. ஆனால் மகன் தான் பிடிவாதமாக அவரை அவனோடு அழைத்துக் கொண்டு விட்டான். கிட்டதட்ட பத்து வருடங்களாக தனியாக தான் வசித்து வருகிறான். அவன் வேலை செய்யும் அலுவலகம் தில்லியில் தான் என்றாலும் பல சமயங்களில் அவனது வேலை வெளியூரில் தான் என்பதால் அம்மாவைஒருமுறை கூட தில்லிக்கு அழைத்துக் கொள்ளவில்லை. விஜாவிற்கும் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. எப்போதும் போல் அவருடைய உடன்பிறப்புக்களின் வீட்டில் மாறி மாறி இருக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார் விஜயா.
இந்த முறை விஜயாவின் அக்கா, அண்ணன் இருவருக்கும் வெவ்வேறு விதமான நெருக்கடி. மகளின் பிரசவத்திற்காக வெளிநாடு சென்றிருக்கிறார் விஜயலக்ஷ்மியின் அக்கா மகாலக்ஷ்மி. அண்ணியின் மூத்த சகோதரனுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்பட்டிருந்ததால் அவருக்கு உதவி செய்ய சென்றிருந்தனர் விஜயாவின் அண்ணனும் அண்ணியும். ஷண்முகத்தின் ஒன்று விட்ட உடன்பிறப்புக்கள் அனைவரும் சில மாதங்களுக்கு விஜயாவைப் பார்த்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தாலும் விஜயா அதை விரும்பவில்லை. வாழ்க்கையில் மீண்டுமொருமுறை திக்கு தெரியாத நிலையில் இருந்தார் விஜயா. முதல்முறையின் போது அவருடைய அப்பா அவருக்குத் துணையாக இருந்தார். இந்த முறை அவருடைய ஒரே மகனின் துணையை நாடினார் விஜயா.
அவரது நிலையை மகனுடன் பகிர்ந்து கொண்டவர், அந்த உரையாடலின் கடைசியில்,’திடீர்னு கிறுக்காகிட்டேன் சாமி..நான் கேட்டதை மறந்திடு சாமி..நான் அங்கே வரலை.. இங்கேயே இருந்துக்கறேன்.’ என்று சொல்ல, ஷண்முகம் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. தில்லிக்கு வரத் தயாராக இருக்கும்படி சொல்லி விட்டான். அவன் பேசிய தொனியைக் கேட்டு உடனே தில்லிக்கு அழைத்துக் கொள்வானென்று விஜயா எண்ணியிருக்க,இரண்டு வாரங்கள் கழித்து தான் அவரை அழைத்து வந்தான் ஷண்முகம். அவர் அவனை அழைத்து பேசிய போது அவன் தில்லியிலே இல்லை என்று அவருக்குத் தெரியவில்லை. தில்லியில், மத்திய கார்யாலயத்தில் இருந்தது அவனின் அலுவலகம். அதில் அவனுக்கென்று ஓர் அறை, தனி தொலைப்பேசி என்று உயர் அதிகாரிகளுக்கு செய்து கொடுக்கப்படும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருந்தன. அவனும் அவனைப் போல் சிலரும் சில நாள்களுக்கு,மாதங்களுக்கு என்று அங்கே பணி புரிவார்கள். சில சமயம் பல மாதங்கள் தலையைக் காட்ட மாட்டார்கள். அவர்களுக்கு வரும் தனிப்பட்ட தபால்கள், தொலைப்பேசி அழைப்புகள் என்று அனைத்தும் எப்போதும் போல் அவர்களைப் போய் சேர்ந்து விடும். அந்த நேரத்தில் அவர்கள் எங்கு இருந்தாலும் தில்லியில் இருப்பது போல் தான் அனைத்தும் நடக்கும். அனைவரும் அப்படித் தான் உணர்வார்கள். அதனால் சிறப்பு பணி மாற்றத்தில் தில்லிக்கு வந்ததைப் பற்றி இதுவரை குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் ஷண்முகவேலிற்கு ஏற்படவில்லை. காவல்துறையில் இருக்கிறான் என்பதால் அவனை விசாரணை செய்யும் துணிவு வீட்டினர் யாருக்குமில்லை.
இந்திய அரசுப் பணியில் சேர, ஒன்றிய அரசு தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளை எழுதி, நேர்காணலில் வெற்றியடைந்துகாவல் துறையைத் தேர்ந்தெடுத்தான் ஷண்முகவேல். ஜார்கண்ட் மாநிலத்தில் ஏழு வருடங்கள் போல் பணி ஆற்றியவன் அதன் பின் அங்கேயிருந்து நேரே தில்லி. அந்த மாற்றம் நடந்து கிட்டதட்ட மூன்று வருடங்களாகளாகி விட்டது. அவனுடைய முப்பதாவது வயதில் அவனைத் தத்து எடுத்துக் கொண்டது இந்தத் துறை. புத்திசாலிதனதம், திறமை, பொறுமை, வேகம், விவேகம் என்று அவனது பண்புகளை வெளிப்படுத்தும் இடமாக இருந்தது புது வேலை இடம். இந்த துறையின் அபாயங்களின் அளவு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. அதைப் பற்றி அவனுக்கு கவலை இருக்கவில்லை. அபாயங்களைக் கண்டு அஞ்சுபவனில்லை ஷண்முகவேல். எனவே இந்த வேலை அவனுக்காக உருவாக்கப்பட்டது போல் தோன்ற, யாரிடமும் தெரிவிக்காமல், குடும்பத்தினரிடம் அனுமதி கோராமல் புது வேலையில் சேர்ந்து விட்டான்.
அம்மாவும் அம்மாவின் குடும்பம் மட்டும் தான் அவனுடைய குடும்பம். அப்பாவுடன் தொடர்பு இல்லை. அவனுக்கு ஒரு வயது முடியும் முன்பே பெற்றோர் பிரிந்து விட்டதாக இவனிடம் தெரிவித்திருந்தார்கள். விவாகரத்திற்கு பின் அவனுடைய அம்மாவின் உடல் நிலையும் மனநிலையும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்ததால் அடுத்து வந்த வருடங்களில் அவனைப் போலவே அவனுடைய அம்மாவையும் ஒரு குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது.அவனதுஐந்து வயது வரை தாத்தா, பாட்டி வீட்டில் தான் வளர்ந்தான். அடுத்தடுத்து தாத்தா, பாட்டி இருவரும் இறைவனடி சேர, இவர்களின் பொறுப்பை மாமா, பெரியம்மா இருவரும் ஏற்றுக் கொண்டனர். கடைசி வரை அவர்களோடு தானென்று விஜயா தீர்மானம் செய்து பல வருடங்களாகி விட்டது. அவனது இடத்தை மாமாவின் பிள்ளைகளும் பெரியம்மாவின் பிள்ளைகளும் நிரப்பிக் கொண்டிருந்ததால் ஷண்முகவேலும் அவனுடைய அம்மாவிடமிருந்து ஒதுங்கி இருக்கக் கற்றுக் கொண்டான். அவரை அவனோடு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசையை எப்போதோ மனத்திலிருந்து தூக்கி எறிந்திருக்க, விஜயாவின் கோரிக்கையைக் கேட்டவுடன் அவன் தூக்கி எறிந்த ஆசை தானாகவே வந்து அவனது மனத்தில் குடியேறியது. அம்மாவோடு இருக்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காதென்பதால் விஜயாவை தில்லிக்கு அழைத்து வந்து விட்டான்.
விஜயா அவனை அழைத்து பேசிய போது நாட்டின் வடகிழக்கு கோடியில் இருந்தான் ஷண்முகவேல். திடீரென்று, ‘என்னைத் தில்லிக்கு அழைத்துப் போ’ என்று அவர் கட்டளையிட, ‘முடியாது’ என்று அவனால் அதை மறுக்கவும் முடியவில்லை, ‘டிக்கெட் அனுப்பறேன்’ என்று உடனே ஏற்கவும் முடியவில்லை. அம்மாவுடன் இருக்க அவனுக்கு பேராசை ஏற்பட, அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சில வாரங்கள் போல் ஆனது. இப்போது அதன் விளைவாக பல மாதங்கள் கழித்து அவனும் அவனது அலுவலகத்திற்கு தினமும் சென்று வருகிறான். அவனுடைய அம்மா கொடுத்து அனுப்பும் டிஃபன் பாக்ஸுடன். இது எத்தனை நாளைக்கு தொடரும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் இங்கில்லாத நாள்களில் தனியாக இருக்க அம்மாவைப் பழக்கப்படுத்த முயற்சி எடுத்து வருகிறான். தில்லியைப் பழகிக் கொள்ள தில்லிவாசிகள் போல் அவரை மாற்ற முயன்று வருகிறான். ‘நான் இங்கே கொஞ்ச நாள் தான் இருக்கப் போறேன்..அதெல்லாம் வேணாம்.’ என்ற விஜயாவின் மறுப்பிற்குப் பின்னால் மாறுதல்களைப் பற்றிய பயம் தான் என்று தெரிந்திருந்ததால் அவர் சொன்னதை ஷண்முகவேல் பொருட்படுத்தவில்லை. அவரது நலனை, சௌகர்யத்தை மனத்தில் வைத்துக் கொண்டு ஒரு சில மாறுதல்களைக் கொண்டு வர விடாது முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்.
விஜயாவின் வாழ்க்கை எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே சென்று கொண்டிருக்க, மருமகள், மருமகன், பேரன், பேத்தி என்று விஜயாவின் அண்ணன், அக்காவின் குடும்பங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. பெற்றோராக குழந்தைங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சகோதரன், சகோதரி இருவரும் சரியாக செய்து கொண்டிருந்ததைப் பார்த்து சமீபக் காலமாக ஷண்முகத்திற்கு செய்ய வேண்டிய கடமையை அவர் சரியாகச் செய்யவில்லை என்றொரு எண்ணம் விஜயாவின் உறக்கத்தைத் தட்டிப் பறித்திருந்தது. தில்லி வந்த பின் மொத்தமாக உறக்கத்தை தொலைத்திருந்தார். பகல் நேரங்களில் தான் களைப்பினால் சிறிது நேரத்திற்கு கண் அசருகிறார்.
உடன்பிறந்த பாசத்திற்கு, பழிக்கு அண்ணன், அக்கா இருவரும் அவருக்கு செய்ததற்கு ஈடாக அவரது ஊன், உயிரைக் கொடுத்து அவர்களின் குடும்பத்திற்காக உழைத்திருந்தார் விஜயா. இப்போது மகன் ஒருவனுக்கு செய்ய அவரால் முடியவிலை. உடலில் சக்தி இல்லை. சீக்கிரமாகவே சோர்ந்து போகிறார். புது இடம் தான் அதற்குக் காரணம், போக போக சரியாகிவிடுமென்று மனத்தைச் சமாதானம் செய்து கொள்கிறார். ‘அம்மா, நீங்க ஒரு வேலையும் செய்ய வேண்டாம் எல்லாத்துக்கும் ஆள் போடறேன்.’ ஷண்முகவேல் சொன்ன போது,’அப்புறம் படுத்த படுக்கையாகிடுவேன் சாமி..எனக்குச் செய்ய ஓர் ஆள் தேவைப்படும்.’ என்று மறுத்து விட்டார் விஜயா.
வீட்டில் ஏதாவது செய்து கொண்டு இருந்தால் தான் அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும். எந்த வேலையும் செய்யாமல் ஓய்வாக அமர்ந்திருந்தால் மனமானது ஓயாமல் வேலை செய்ய ஆரம்பித்து விடும். அந்த வேலையை ஆரம்பித்து விட்டால் வேறு எந்த வேலையும் அவருக்கு ஓடாது. இத்தனை வருடங்களாகியும், மகன் வளர்ந்து வாலிபனாகி நல்ல நிலையில் இருந்தும் அவரால் பழசை மறக்க முடியவில்லை. மனத்தின் ஏதோ ஓர் மூலையில் திருமண வாழ்க்கைத் தோல்வி ஏற்படுத்திய வலியும் வேதனையும் இன்னமும் இருக்கிறது.
அவனுடைய பெற்றோரின் திருமண வாழ்க்கை முறிந்து போன கதையைக் கேட்டதிலிருந்து ஷண்முகத்திற்கு திருமணத்தில் நம்பிக்கை போய் விட்டது. அவனைப் பற்றி அவன் நன்கு அறிந்திருந்தாலும் மனத்தின், மூளையின் ஓரத்தில் அவனுடைய அப்பா, அந்தக் குடும்பத்தின் மற்ற ஆண்களைப் போல் தான் அவனுமா?’ என்ற கேள்வி உறுத்திக் கொண்டிருக்கிறது. நல்ல படிப்பு, வேலை என்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருந்ததால் அவனைத் தேடி வந்த சில வரன்களும் அந்தக் கேள்வியைக் மறைமுகமாக கேட்க, திருமணப் பேச்சுக்கள் பாதியில் நின்று போயின. அவனை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியை அவனுடைய அம்மாவிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை. திருமணப் பேச்சை யார் எடுத்தாலும், உள்ளத்தில் இருப்பத்தை மறைக்க அவனுள் புதைந்திருக்கும் பல முகங்களில் ஒன்றை அணிந்து கொண்டு அந்தச் சூழ்நிலையிலிருந்து தப்பித்து விடுவதால் முப்பத்தி மூன்று வயது வரை திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொள்ளவில்லை. இனி அவனது வயதைக் காரணம் காட்டி திருமணச் சந்தையிலிருந்து அவனை வெளியேற்றி விடுவார்களென்று சரியாக கணித்திருந்தவனுக்குத் தெரியவில்லை காதல் கடை வீதியில் அது போன்ற காரணங்கள் செல்லுபடி ஆகாதென்று.
******************
அநிருத்தன் aniruttaṉ –One who is irresistible; தடையற்றவன். One who is irrepressible; அடங்காதவன். Spy; ஒற்றன்.