மூடிய கதவையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள் ஐஸ்வர்ய நந்தினி. ஆதித்த கரிகாலனா? அவளுடைய கணவனா? யாரை அவருடைய விடிவெள்ளி என்று நினைத்துக் கொண்டிருந்தாளோ அந்த விடிவெள்ளியே அவளை வெளியே தள்ளி கதவை சாற்றி விட்டதா?
அதும் எப்படி? ஊரறிய, உலகம் அறியா,அவள் கழுத்தில் மாங்கல்யம் சூட்டியவன், அதனை அவனது கையாலே அறுத்து, கொட்டும் மழையில் இறவென்றும் பாராமல் மனைவியை வெளியே தள்ளி கதவை சாற்றி விட்டான்.
இங்கே நடக்கும் கூத்தை அதோ அங்கே கார்ட் ஹவுஸ் வெளியே நின்று கெட் காவலாளி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனது கண்களிலும் அப்பட்டமான அதிர்ச்சி. வேகமாக கார்ட் ஹவுஸ் உள்ளே சென்று குடையை எடுத்து ஓடி வருகிறான்.
“அம்மா என்னம்மா நீங்க மழையில நினைச்சுகிட்டு” அவன் மழையில் நனைகிறான் இவளுக்கு குடை பிடித்துக் கொண்டு. கேட் காவலாளி என அவனை நடத்தாமல் காலை உணவிலிருந்து இரவு உணவு வரை, வீட்டின் உள்ளே வந்து டைனிங் டேபிள் அமர்ந்து சாப்பிட ஆதி பணித்திருந்தான். காலை ஷிப்ட் ஆள் ஆறு மணியோட வீட்டிற்கு சென்றுவிட இது இரவு நேரம் ஷிப்ட் ஆள். ஐஸ்வர்ய நந்தினி கையால் உணவை வாங்கி சாப்பிட்டவனுக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது, தாலி கட்டி அவளை கொண்டு வந்தவனுக்கு ஏன் இதில் துளி கூட இல்லாமல் போனது?
எவ்வளவு நேரம் மானம் ரோஷம் இல்லாமல் மழையில் நிற்பது. அவன் கட்டிய தாலியை அவனே அறுத்து எடுத்து விட்டான். கதவை தட்டவோ அவனிடம் தாலி பிச்சையை கேட்டு கதறவோ அவளது மனதில் அறவே தெம்பில்லை. காவலாளி பிடித்திருந்த குடையை விலக்கிவிட்டு நிராசையோடு அந்த பெரிய வீட்டின் வாசலை ஒரு முறை பார்த்து, மெயின் கேட்டை நோக்கி நடந்தாள்.
காவலாளிக்கு எதுவும் புரியவில்லை. அமுதன் ஐயா வீட்டில் இல்லாத நேரம் இப்படியா நடக்க வேண்டும்? “அம்மா ராத்திரி நேரம்மா. மழை வேற கண்ணு மண்ணு தெரியாம அடிச்சு கொட்டுது. இந்த நேரத்துல எங்கம்மா போறீங்க? உங்களுக்கு ஐயாவுக்கும் ஏதோ பிரச்சனைனு நினைக்கிறேன். ஐயா ரொம்ப கோபக்காரர். ஆனா ரொம்ப நல்லவருமா. கொஞ்ச நேரம் நீங்க என்னோட கார்ட் ஹவுஸ்ல உட்காருங்கம்மா.ஐயாவே வந்து உங்கள உள்ள கூட்டிட்டு போவாரு.” ஐஸ்வர்ய நந்தினி அவன் பேசுவதை கேட்காமல் மெல்ல நடந்து கொண்டே இருந்தாள்.
உள்ளே நடந்த எதுவும் காவலாளிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மெயின் கேட் அருகே வந்த போது கூட காவலாளி அவள் காலில் விழாத குறையாக கெஞ்சினான். குடையாவது கொண்டு செல்லும்படி மன்றாடினான். ஆட்டோ டாக்ஸி பிடித்து வந்து கொடுப்பதாக கதறினான். எதையுமே காதில் வாங்காமல் அவனுக்கு ஒரு சிறு புன்னகையை பரிசாக கொடுத்தவள், கொட்டும் மழையில் இலக்கின்றி நடக்க ஆரம்பித்தாள்.
காவலாளி வேகமாக ஓடினான். வீட்டின் கதவை தட்டினான். ” ஐயா நான் எவ்வளவு சொல்லியும் கேட்காம அம்மா இந்த ராத்திரியில வெளிய போறாங்கய்யா. நீங்க வந்து சொல்லுங்கய்யா. மழை வேற கண்ணு மண்ணு தெரியாம ஊத்துது. ஐயா, வாங்கய்யா” காவலாளியின் கதறல் முழுவதையும் வாசல் கதவு மட்டுமே கேட்டது. உள்ளே அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான் ஆதித்த கரிகாலன்.
அவன் ஒரு கையில் சிகரெட் ஏந்திருக்க, இன்னொரு கரத்தில் அவன் கட்டிய தாலி மிளிர்ந்தது. இதற்கு மேல் தாமதிக்காமல் காவலாளி வேகமாக ஓடி கைபேசியை எடுத்து அமுதனுக்கு அழைத்தான். அழைப்புச் செல்லவில்லை. டவர் கிடைக்காத இடத்தில் அமுதன் இருக்கிறார் போல. இதற்கு மேல் அந்த காவலாளியால் வேறு என்ன செய்ய முடியும். இறைவன் மீது பாரத்தை போட்டு விட்டு பதற்றமாக அமர்ந்து இருந்தான்..
பிரதான சாலைக்கு வந்த ஐசுவை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு நிமிடம் பார்த்து விட்டு கடந்தனர். கொட்டும் மழையில் அசராமல் அந்த இரவு வேளையில் நடந்து கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்தி. எங்கே செல்கிறாள் எங்கே செல்வது இப்படி எதுவுமே தெரியாமல் புரியாமல், கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தனி.
பெற்ற தந்தையால் அடிமையாக நடத்தப்பட்டவள், எதிர்பாராத திருமணத்தில் கிடைத்த புதிய உறவால், அவளை அவளே அறிந்து கொண்டாள். மகிழ்வின் உச்சிக்கு அவளை கூட்டி சென்றவன், ஈவு இரக்கமே இல்லாத அரக்கனை போல அங்கிருந்து அவளை தலைக்குப்புற தள்ளி விட்டான்..அவன் மனதில் குழலி இருந்தால் எதற்காக இந்த திருமணம்?
திருமணத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்வையும் தனக்குள் அசைப் போட்டாள் ஐசு. ஒரு இடத்தில் கூட அவன் குழலியை இறக்கி பேசியதே இல்லை. அப்படி என்றால் அந்த அளவிற்கு அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள் குழலி. வேதனை தாங்க முடியாத நிலையை கடக்கும் போது, அழுகை வேதனை அனைத்தையும் தாண்டும் போது, விரக்தியான அமைதி உண்டாகும்.
கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தவளின் முன்பு சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது. அவசரமாக அந்த காரில் இருந்து இறங்கியது வேறு யாரும் இல்லை ஈஸ்வரன் தான். உறவினர் திருமணத்திற்காக தஞ்சாவூர் சென்றவர், முக்கியமான கேஸ் விஷயமாக திரும்பவும் ஊருக்கு வந்து விட்டார். வீட்டிற்கு செல்லும் வழியில் தான் மழையில் நனைந்து பரிதாபகரமாக சென்று கொண்டிருக்கும் ஐஸ்வர்ய நந்தினி பார்த்தார். அவருக்கு எதுவுமே புரியவில்லை.
இத்தனை மணிக்கு கொட்டும் மழையில் இவளுக்கு என்ன வேலை? அப்போதும் அவளுக்கு என்ன பிரச்சனை என்று யோசிக்காமல் அவளை திட்டி தீர்ப்பதற்காக வேகமாக இறங்கி அவள் அருகே சென்றார் ஈஸ்வரன் கையில் குடையோடு.
“ஹேய் நந்தினி, உனக்கு என்ன கேடா? இப்படி கொட்ற மழையில எதுக்கு நினைச்சுகிட்டு இருக்க?.. எங்க உன் புருஷன் வாய் கிழிய பேசுவான்? இத்தனை மணிக்கு உனக்கு என்ன வெளிய வேலை? நான் கேட்டுகிட்டே இருக்கேன் மாடு மாதிரி அப்படியே நிக்கிற.. நந்தினி ஹேய்” மகளைப் பிடித்து உலுக்க நிதானமாக தந்தையை ஏறிட்டவள்,
” என்னப்பா கேட்டீங்க”
ஈஸ்வரனுக்கு வந்த கோபத்தை வார்த்தையால் விவரிக்கவே முடியாது. ” உன் புருஷன் எங்க போய் தொலைஞ்சான்?எப்ப பாத்தாலும் கார் ரேஸ்னு சுத்திகிட்டு இருப்பானே. ஏதாச்சும் கார் ரேஸ்ல மாட்டி செத்துகித்து தொலைஞ்சிட்டானா? நீ எதுக்கு இத்தனை மணிக்கு மழைல நினைச்சுகிட்டு போற? எங்க தான் போய்கிட்டு இருக்க”
நரம்பில்லாத நாக்கு சாட்டையாய் சுழண்டது. முன்னை விட மிக மிக நிதானமாக தந்தையை ஏறிட்டாள்.