காட்டுப் பேய் கத்துவதைப் போல நாராசமாக ஒலித்தது ஈஸ்வரன் குரல். நர்மதா ஈஸ்வரன் கையைப் பிடித்து

” ஏங்க எதுக்கு இப்படி கத்துறீங்க? இது சம்பந்தி வீடு”

இது ஒன்றும் உங்களது வீடு கிடையாது என்பதை குறிப்பால் உணர்த்த முயன்றார். மனைவி அவ்வாறு சொல்லிய பிறகே அமுதன் முகத்தை நோக்கினார் ஈஸ்வரன்.

அமுதனுக்கு, ஈஸ்வரன் வந்தவுடனேயே  தன் வீட்டு மருமகளை தகாத வார்த்தைகள் கூறி திட்டியது பிடிக்கவில்லை. அதை முகத்தில் மறைக்காமல் தாராளமாக காட்டினார். எந்த அளவுக்கு என்றால் வீட்டிற்கு வந்தவர்களை வாங்க என்று அழைக்காத அளவுக்கு. வழக்கம்போல மகளை திட்டி விட்டது உணர்ந்த ஈஸ்வரன்

” நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க சம்மந்தி. கல்யாணம் ஆகி ஒரு நாள் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள மாமனார் வேலை செய்ய இவ சொகுசா படுத்திருக்கவும் ஏதோ தெரியாம வாயில வந்துருச்சு. நான் எப்பவும் அப்படித்தான். என் பிள்ளைகளுக்கு பெரியவங்கள மதிக்கணும்னு சொல்லி கொடுத்து வளர்த்துருக்கேன். நீங்களா இருக்க போய் சரியா போச்சு. இதுவே மத்த வீடா இருந்திருந்தா இப்படி காலாட்டிட்டு படுத்து இருக்க முடியுமா?இதான் நீங்க பொண்ணு வளர்த்திருக்கிற லட்சணமானு எங்க மூஞ்சில காரி துப்பி இருக்க மாட்டாங்க?”

” மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது சம்பந்தி. என் மருமகளுக்கு நான் வேலை செஞ்சு கொடுக்கிறது எனக்கு சந்தோஷம்தான். காலையில இருந்து அவ என்ன சும்மாவா உட்கார்ந்து இருந்தா? சொல்லப்போனா இத்தன வருஷத்துல இன்னைக்கு தான் நான் மத்தியானம் தூங்கி இருக்கேன். ஒரு வேலை என்ன செய்ய விடல. சம்மந்தி நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. இனிமே ஐசு உங்க மக கிடையாது. அவ என்னோட மக.”

மறைமுகமாக தாக்குதல் நடத்தினார் அமுதன்.

ஈஸ்வரனுக்கு இதெல்லாம் புரியாமல் போகுமா? எப்படியும் சம்பந்தி மனிதர் தன்னை உட்காரச் சொல்ல போவதில்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார். எனவே அவரே அந்த உரிமையை கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்து விட்டார் நாற்காலியில். நர்மதா பேந்த விழித்துக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.ஐசு வந்தவர்களுக்கு குடிக்க எடுத்து வர செல்ல நர்மதா பின்னோடே சென்று விட்டார்.

“ஐசு எப்படிடா இருக்க? காலையில இருந்து உனக்கு போன் பண்ண நானும் பாத்துகிட்டே இருக்கேன்? எங்க நேரம் இருக்கு? கல்யாணத்துக்கு வந்த சொந்தக்கார கூட்டம் எல்லாம் இப்பதான் கிளம்பி போச்சு. ஒரு வார்த்தை உன்கிட்ட பேச முடியல.”

” அதுக்கு என்னம்மா நான் நல்லா தான் இருக்கேன்.”

” அது வந்து ஐசு. நேத்து”

தாய் கேட்க வருவது புரிந்ததும்

” என்ன ஓகே தான்மா”

நர்மதாவுக்கு அப்படி ஒரு சந்தோஷம். மகளின் கண்ணம் வழித்து நெட்டி முறித்தார்.

” உன் மாமனார் தான் சரி. சொந்தக்காரங்க யாரையும் வீட்டு பக்கம் அண்ட விட மாட்றாரு. கல்யாணத்துக்கு வந்தீங்களா அப்படியே கிளம்பி போனீங்களானு இருக்கணும்னு சொல்லிட்டாராம். உங்கப்பா என்னன்னா போறேன்னு சொல்றவங்கள கூட உட்கார வச்சு விருந்து கொடுத்துக்கிட்டு இருக்காரு.”

இருவரும் ஹோலுக்கு வர அங்கே அமுதனும் ஈஸ்வரனும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஈஸ்வரன் மறு வீட்டுக்கு அழைக்க வந்ததை கூற, அமுதன் ஐசுவிடம் ஆதியை அழைத்து வருமாறு கூறினார். இவர்கள் முன்பு எதுவும் சொல்ல முடியாததால் தயங்கியவரே படியேறிப் போனாள் ஐஸ்வர்ய நந்தினி.அங்கே மேல் சட்டை அணியாமல், ஜீன்ஸ் போடாமல் வெறும் உள்ளாடையோடு காட்சி அளித்தான் ஆதித்த கரிகாலன். அவனைப் பார்த்ததும் வேகமாக முகத்தை மூடிக் கொண்டாள் ஐசு.

அவளது வெட்கம் அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. மெல்ல அவள் அருகே வந்து

“ஓய் ஐ…ஸ் நான் என்ன அவ்வளவு கன்றாவியா இருக்கேனா? எதுக்கு என்ன பார்த்ததும் மூஞ்ச மூடிகிட்ட”

அருகே அவன் குரல் கேட்டதும் தூக்கி வாரி போட்டது அவளுக்கு.

“நீங்க.. நீங்க”

“ம்ம்ம் நான்”

“மொத டவல் கட்டுங்க”

“ஏன்”

“ப்ளீஸ்”

“ஏன்”

“ப்ச் உங்கள மாமா கூப்பிடுறாரு”

என்றவள் வேகமாக அங்கிருந்து வெளியேற பார்க்க அவளை இழுத்து தன் பக்கம் நிறுத்திவிட்டு கதவில் சாய்ந்து நின்றான். வெறும் ஜட்டியோடு கதவில் அவன் சாய்ந்து நின்ற கோலம் அவளைக் கூச்சப்பட வைத்தது. எப்படி வெட்கமே இல்லாமல் இவன் நின்று கொண்டிருக்கிறான் என்பது அவளின் மனதில் அந்நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

” ஒரு பொண்ணு முன்னாடி இப்படித்தான் இருப்பீங்களா”

அவள் முன் அவன் அநாகரிகமாக இருப்பதை கோபமாய் சுட்டி காட்டினாள்.அவனுக்கு அதுவும் வேடிக்கையாக இருந்தது. சற்று முன்பு அவன் ஏற்றியிருந்த மது மூளையில் வேலை செய்தது.

“பொண்டாட்டி முன்னாடி இப்படி நின்னா தான் புள்ள பொறக்கும்”..

அவன் அணிந்திருந்தது ஷார்ஸ். அதற்கே இவ்வளவு பரிதவிப்பா? அப்பாவியாக அவன் சொல்ல அவளுக்கோ பற்றிக் கொண்டு வந்தது.

” நான் போறேன்”

“போ”

” நீங்க நவுந்து இந்த பக்கம் வாங்க”

” நீ இந்தப் பக்கம் வந்து கதவை திற”

” நீங்க இந்த பக்கம் வராம நான் எப்படி அந்த பக்கம் வர்றது”

” நீ எந்த பக்கம் வந்தாலும் நான் இந்த பக்கத்த விட்டு போக மாட்டேன்.”

ஐசு அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் கதவருகே வந்து கதவை திறக்க முயற்சித்தாள். கதவு திறந்து கொண்டதும் அவன் அதனை மூடினான். திரும்பவும் ஐசு கதவை திறக்க அவன் மூடினான். இவள் திறக்க அவன் மூட சிறிது நேரம் அங்கே இந்த விளையாட்டு மட்டுமே அரங்கேறிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் கடுப்பான ஐசு கதவு திறந்த இடைவெளியில் கையை நுழைக்க அவன் அதை கவனிக்காமல் மூடிவிட்டான். லேசாக விரலில் அடி. பாவம் ஐசு வலியில் கத்தியே விட்டாள்.

கீழே அமர்ந்திருந்த கூட்டம் அடித்து பிடித்து மேலே ஓடி வந்தது. அமுதனையும் தள்ளிவிட்டு முதல் ஆளாக வந்த ஈஸ்வரன், படக்கென்று ஆதியின் அறை கதவை திறந்து விட்டார். அங்கே கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இடுப்பில் கை வைத்துக் கொண்டு வெறும் ஷார்ஷோடு காட்சியளித்தான் ஆதி. தந்தையை அங்கே கண்டதும் ஐசுவுக்கு ஒரே கூச்சம் ஆகிவிட்டது. ஒரே தாவலாக பக்கத்தில் இருந்த பாத்ரூமுக்குள் புகுந்து விட்டாள். அமுதனும் வந்துவிட

” ஐயோ மாப்பிள என்ன இப்படி நிக்கிறீங்க”

ஈஸ்வரனுக்கு கண் கெட்டு விட்டது.

” என் ரூம்ல நான் இது கூட இல்லாம இருப்பேன். என்ன மாமா பெரிய வக்கீல் நீங்க. கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே இல்லாம பொண்ணும் மாப்பிள்ளையும் இருக்கிற ரூம் கதவை இப்படியா படார்னு தொறந்துட்டு உள்ள வர்றது?”

அவன் கேட்ட கேள்வியில் ஈஸ்வரனுக்கு முகம் சிவந்தது. அதற்குள் நர்மதா வேறு

” என்னங்க என்ன ஆச்சு எதுக்கு ஐசு கத்துனா?”

மனைவி அருகே வந்ததும் அறைக் கதவை வேகமாக சாத்தி விட்டார்.

” ஹேய் போடி உன்னை யாராச்சும் மேல வர சொன்னாங்களா”

“இல்லங்க ஐசு கத்துனா”

“அவ ஏதாச்சும் பாம்பு பல்லிய பாத்து கத்திருப்பா”

“பாம்பு பல்லியா என்னங்க நீங்க? ஒளறிட்டு இருக்கீங்க? தள்ளுங்க என்னாச்சுன்னு தெரியலையே”

ஈஸ்வரனை தள்ளிவிட்டு அறை கதவை திறக்கப்போன நர்மதாவை கைப்பிடித்து இழுத்துப் போனார் ஈஸ்வரன்.

“என்னங்க கைய விடுங்க”

“பேசாம வாடி. வாயில ஏதாச்சும் வந்துர போது.”

“ஐசு பயந்தவங்க”

“ஐயோ அதெல்லாம் நீ பாத்தா இந்த வயசுல தாங்க மாட்ட. ஒழுங்கா வந்துரு”

அமுதனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்தால் எங்கே சம்பந்தி மனிதர் கோபித்துக் கொள்ளப் போகிறார் என்பதால் முடிந்தவரை சிரிப்பை கட்டுப்படுத்தினார். இருந்தாலும் அவரின் உடல் சிரிப்பில் குலுங்கி கொண்டிருந்தது.

பாத்ரூமில் மறைந்து கொண்ட ஐசுவுக்கே வெளியே நடந்த நிகழ்வினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. தந்தையின் முகம் இந்நேரம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்தாள். சற்று நேரத்தில் சிரித்து முடிந்தவள்,சிந்தனையில் அது ஓடியது. எப்போது ஈஸ்வரனும் ஆதியும் பார்த்தாலும், எதற்காக ஆதி ஈஸ்வரனை குதற்கமாக குத்திக் கொண்டே இருக்க வேண்டும்?