6

அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக
அத்தான் வருவாக ஒரு முத்தம் கொடுப்பாக
என் அச்சம் வெக்கம் கூச்சம் அத அள்ளி ருசிப்பாக

“ஹேய் ஐசு கொஞ்சம் வெக்கப்படுடி” உறவுக்கார பெண்ணொருத்தி மாலையும் கழுத்துமாய் கடனே என நின்றுக் கொண்டிருந்த ஐஸ்வர்ய நந்தினி தோளில் இடித்தாள். மாலையை விட பாரமாக இருந்தது சற்று முன் அவள் கழுத்தில் ஏறிருந்த தாலி. அவளுக்கு திருமணமே நடக்காது என ஈஸ்வரன் திட்டவட்டமாக மனதில் எண்ணியிருந்தார். அதற்குக் காரணம் ஈஸ்வரன் ஒரு ஜோதிட பைத்தியம்.

விளங்கா வெட்டி ஜோதிடம் ஒருவன் ஐஸ்வர்ய நந்தினி ஜாதகத்தை பார்த்து, இந்த ஜாதகப் பெண்ணுக்கு திருமணம் என்பது எட்டாக் கனி என்று விட்டான். காசிக்கு சென்றாலும் கருமம் விட்டு போகாது என்பது போல பெண்ணாய் பிறந்தவளை ஒரு வயது வந்ததும் எவன் தலையிலாவது கட்டி விடலாமென மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார் ஈஸ்வரன். அந்த மனப்பாலில் துளி விஷம் கலந்து விட்டான் ஜோதிடன்.

அவரே எதிர்பாராத ஒரு விஷயம் அமுதன் அவரது வீடு தேடி வந்து திருமண பேச்சை எடுத்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஈஸ்வரனுக்கு ஒரு நிமிடம் சந்தேகம் வந்து விட்டது. ஆதித்த கரிகாலனை பற்றி அவர் நன்கு அறிவார். அவனது செல்வாக்கும் புகழும் ஒரு பக்கம் இருந்தாலும், அவனது அடாவடித்தனமும், அதிக பிரசங்கித்தனமும், அவரையே அலட்சியப்படுத்திய பாங்கும் அவர் மனதை விட்டு அகலவில்லை.

என்ன காரணமாக இருக்கும்?  கோடீஸ்வரன் இந்தியாவின் பெரும் புள்ளி, அவனுக்குப் பெண் கொடுக்க பெரிய பெரிய இடத்தில் எல்லாம் அடித்து பிடித்துக் கொண்டு வரிசையில் வருவார்கள், அப்படி இருக்கையில் இவன் எதற்காக என் பெண்ணை மணக்க வீடு தேடி பெண் கேட்டு வர வேண்டும்?

இது எல்லாமே ஒரு நிமிடம் மட்டுமே அவர் மனதில் ஓடியது.. மறு நிமிடம் அதிர்ஷ்ட தேவதையே இதுவரை அவர் பீடை என்று எண்ணிய மகளின் மூலம் கதவை தட்டும் போது, திறந்து சிவப்பு கம்பளம் பிரித்து வரவேற்காமல் சாணியை கரைத்து ஊற்றி விரட்டுவதா? அமுதன் அவரிடம் சொல்லியது போலவே அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை வைத்து விட்டார் ஈஸ்வரன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அன்று அமுதன் முன்னிலையில் சம்மந்தம் கேட்கும்போது வாயைத் திறந்தவர் தான், அதற்குப் பிறகு அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. இந்த சம்பந்தம் தனக்கு கிடைத்த பெரும் பேரு என்று அவர் எண்ணினார். நிச்சயத்தையும் பரிசத்தத்தையும் ஒரே நாளில் வைத்து விடும்படி அமுதன் சொல்லி விட்டார். வேலையும் செலவும், அதேசமயம் நேரமும் பற்றாக்குறையால் வேக வேகமாக அமுதன் சொல்லியபடி எல்லாம் ஆடினார் ஈஸ்வரன்.

அவர்கள் கோடீஸ்வரர்கள். செல்வ நிலையிலும், புகழிலும் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. இருந்தாலும் ஈஸ்வரன் ஒன்றும் வக்கத்துப் போய்விடவில்லை. தன் பந்தாவை காப்பாற்றவாவது தடபுடலாய் செலவு செய்தார். செல்வகுமாரி திருமணம் முடிந்து அடுத்த ஒன்றரை மாதத்தில் ஐஸ்வர்ய நந்தினி திருமணம். உறவுக்கார கூட்டம் மூக்கில் விரல் வைத்தது.

சுற்றமும் நட்பும் ஈஸ்வரனை கண்டு வயிறு எரிந்தது. சில மறைமுக மிரட்டல் கூட அவருக்கு வந்தது இந்த திருமணத்தை நிறுத்தி விடும்படி. அமுதன் அவரிடம் சொல்லி விட்டார். இம்மாதிரி சில்லறைத் தனமான வேலைகள் நிறைய நடைபெறும். இதையெல்லாம் மனதில் போட்டுக் கொண்டு திருமணத்தை எக்காரணமும் கொண்டு நிறுத்தக்கூடாதென. ஈஸ்வரனுக்கு தெரியாதா இதெல்லாம்? மிரட்டலை அவர் அல்வா சாப்பிடுவது போல சுவையாக அனுபவித்தார்.

பின்னே அவர் மகளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்ன சாமானியப்பட்டவனா?  ஆசியாவில் டாப் மூன்று முன்னணி கார் ரேஸ்சர்களில் ஒருவன். வரதட்சணையாக ஒரு குண்டுமணி கூட வேண்டாம் என அமுதன் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஈஸ்வரன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அமுதன் மறுத்துவிட்டார். இறுதியில் ஈஸ்வரன் என் பெண்ணுக்கு நான் செய்கிறேன்.இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை. வக்கீலாக அந்த இடத்தில் அமுதன் வாயை அடைத்தார்.

ஐஸ்வர்ய நந்தினி நடன வகுப்புக்கு செல்வது திருமண பேச்சு உறுதி செய்த மறுகணமே நின்று விட்டது. நர்மதாவுக்கு ஒரு டைம் டேபிலே போட்டு விட்டார் ஈஸ்வரன். காலையில் ஐந்து மணியிலிருந்து அந்த டைம் டேபிள் வேலை செய்யத் தொடங்கிவிடும்.

காலை 5:00 மணிக்கு ஐஸ்வர்ய நந்தினி எழ வேண்டும். அருகம்புல் சாறு குடிக்க வேண்டும்.ஆறு மணி வரைக்கும் வீட்டு தோட்டத்தை சுற்றி பைத்தியக்காரியை போல் ஓட வேண்டும். பத்து நிமிடம் ஓய்வு. ஆறு பத்துக்கு  தோட்டத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் ஏழு மணி வரை. ஆரஞ்சு தோலை நன்கு காய வைத்து அரைத்து தயிரோடு அதை முகத்தில் போட்டு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளித்துவிட்டு 8:00 மணிக்கு எல்லாம் ஆரஞ்சு ஜூஸ் குடிக்க வேண்டும்.

எட்டரை மணிக்கு காலை உணவு. எண்ணெய் அறவே சேர்க்கக்கூடாது. ஒன்பது மணியிலிருந்து 12 மணி வரை வீட்டு வேலையில் ஐசு உதவி செய்யலாம். சரியாக 12 அடித்தவுடன் மதிய உணவு உண்ண வேண்டும். ஒரு மணிக்கு முகத்தில் சோற்றுக்கற்றாழை தடவ வேண்டும். இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரைக்கும் கட்டாய ஓய்வு வேண்டும்.

மீண்டும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் இல்லையென்றால் காய்கறி ஜூஸ். நான்கு மணியிலிருந்து 5 மணி வரை தோட்டத்தில் அவள் ஆடிக் கொள்ளலாம். 15 நிமிடம் ஓய்வு. பீட்ரூட் சாறை முகத்தில் பூச வேண்டும். அதைக் கழுவி தொடைத்து அடுத்த பத்து நிமிடம் கழித்து முல்தானி மெட்டியை அரைத்து பூச வேண்டும். அதோடு ஒரேடியாக குளித்து முடித்து மாலை 7 மணிக்கு எல்லாம் இரவு உணவை உண்டு விட வேண்டும்.

ராத்திரி படுக்கும் போது கட்டாயம் குங்குமப்பூ தேன் சேர்த்து பால் குடிக்க வேண்டும். எட்டு மணிக்கு எல்லாம் படுத்து விட வேண்டும். இரவு எக்காரணம் கொண்டும் கண்விழிக்க கூடாது. தினமும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இதில் அவ்வப்போது சீரகத் தண்ணீர் பட்டை தண்ணீர் வேறு. வெளியே எங்கும் செல்லாமல் ஏசியில் அமர்ந்திருக்க சொன்னார்.

இது எல்லாம் யூட்யூப் பார்த்து அவரே தயாரித்த டைம்டேபிள். நர்மதாவே நொந்து விட்டார். ஐஸ்வர்ய நந்தினி நிலை என்ன? இந்த திருமணத்தைப் பற்றி அவளது அபிப்பிராயம் துளிக் கூட அவருக்கு தேவைப்படவில்லை. விதவிதமான முக மாஸ்க், ஜூஸ் வகைகள், எண்ணெய் இல்லாத பதார்த்தங்கள், இந்த திருமணத்திற்காக ஒன்றரை மாதமாக பத்திய சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருந்தாள் நந்தினி.

எவ்வளவு முயன்றும் அவள் முகத்தில் இருந்த பருக்கள் மட்டும் ஒழியவில்லை. அதை பார்க்கும் போது வார்த்தைகளால் வறுத்தெடுத்து விடுவார் ஈஸ்வரன்.

ஐஸ்வர்ய நந்தினி அமைதியாகவே இருந்தான். நர்மதாவுக்கு இந்த இடம் மிகவும் பிடித்து விட்டது. அமுதன் முகத்திலிருந்த கனிவே நர்மதா நிம்மதிக்கு பெரிய காரணம். வயது, அனுபவமும் மிக்க அந்த நல்ல தாய்க்கு நல்லவர்களை பார்த்தவுடன் தொக்காய் எடை போட தெரிந்தது. இந்த வீட்டிலிருந்து தன்னுடைய செல்ல மகளுக்கு விடுதலை என சந்தோஷமாகவே திருமண வேலைகளில் ஈடுபட்டார்.

ஒரு காலத்தில் அவர் நினைத்து பயந்தது குருட்டாம் போக்கில் ஒருவனை பிடித்து மகளுக்கு மாப்பிள்ளை என்று விடுவாரோ கணவன் என. இதற்கு பயந்து எத்தனை பூஜை செய்திருப்பார். கடவுள் அவரது பூஜைக்கு இறுதியாக கண் திறந்து விட்டார். ஈஸ்வரன் எதிலும் குறை வைக்க விரும்பவில்லை. தனது சொத்தே அழிந்தாலும் பரவாயில்லை, கௌரவம் குழையக் கூடாது என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.

இறுதியில் திருமணத்தில் வந்து நின்றது. நிச்சயத்தின் போது ஆதித்த கரிகாலன் வரவில்லை. அதுவே பெரிய மன குறையாக இருந்தது. அமுதன் ஏதேதோ காரணம் கூறினார். ஈஸ்வரனுக்கு அது பெரிய அவமானமாக இருந்தாலும், பல்லை கடித்து பொறுத்துக் கொண்டார். அமுதனுக்குமே இந்த திருமணம் நல் முறையில் நடந்தாக வேண்டிய கட்டாயம். அவரும் வேண்டாத தெய்வம் இல்லை.

இறுதியாக மணவரையில் தான் ஆதித்த கரிகாலனை நேரில் சந்தித்தாள் ஐஸ்வர்ய நந்தினி. கதைகளின் படிப்பது போல கிரேக்க சிலை மாப்பிள்ளை, ஆறடி உயரம், அழகிய உருவம், ஆப்பிள் போன்ற தோற்றம் இப்படி எதுவும் இல்லாமல் சாமானியனாக அமர்ந்திருந்தான் ஆதித்த கரிகாலன்.

அவனைப் பற்றி ஏற்கனவே பல மேகசீன்களில் படித்திருக்கிறாள். திருமணம் என்றதும் அவனைப் பற்றி கூகுளின் உதவியோடு மேலும் பல விஷயங்கள் திரட்டி வைத்திருந்தாள். ஆறடி உயரம் ஆப்பிள் நிறம் இல்லாவிட்டாலும் அவன் அழகன் தான்.

அவன் முகத்தில் பொட்டு சிரிப்பில்லை. ஐயர் மந்திரம் ஓத ஈஸ்வரன் பெருமிதத்தில் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நிற்க, அமுதனும் நர்மதாவும் கண்கலங்கி மகிழ்ச்சியோடு திருமணத்தை பார்த்துக் கொண்டிருக்க, செல்வகுமாரி சற்று வயிற்றெரிச்சலோடு அர்ச்சதையை கையில் ஏந்தி கொண்டிருக்க, பொங்கி பொங்கலாகி போனது குழலி மட்டுமே.

ஐயர் மந்திரம் ஓத ஆதித்த கரிகாலன் கண்கள் குழலியை நோக்கியது. அடுத்த நொடி தாலியை வாங்கி படக்கென்று ஐஸ்வர்ய நந்தினி கழுத்தில் கட்டி விட்டான்.அதன் பிறகு நடைபெற்ற திருமண சடங்குகள் இயந்திர கதியில் நடந்து இதோ முதலிரவு அறையில் காத்திருக்கிறான் ஆதித்த கரிகாலன்.

ஐசு பால் சொம்போடு உள்ளே வந்து அவனருகில் நின்றாள் தயங்கி.மெத்தையில் படுத்துக் கொண்டே அவன் கேட்ட கேள்வி

“ஆமா உன் பேரு என்ன?”

தொடரும்.