குழலி நாளுக்கு நாள் ஒரு சைக்கோவை போல நடந்து கொண்டாள். அவளுக்கு என்ன பிரச்சனை என்று அவளை பெற்றவர்களுக்கு கூட தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் திருமணம் நெருங்கி வரும்போது வம்படியாக ஒரு பிரச்சனையை இழுத்து அதை நிறுத்துவதையே வேலையாக செய்து வருகிறாள். முதன் முதலில் ஆதியை காதலித்து அது திருமணம் வரை வந்தது. ஊரெங்கும் பத்திரிகை கொடுத்து இரு பக்க குடும்பமும் திருமணத்தை ஆர்வமாக எதிர்பார்க்க, தேவையில்லாத பயத்தை சொல்லி ஆதியை வேண்டாமென மறுத்தாள்.
அவளது பெற்றோர்கள், திருமணம் நெருங்கி வரும் போது இம்மாதிரி செய்தால் சமுதாயத்தில் அவர்களின் பெயர் கெட்டுவிடும். அவளை அடுத்த திருமணம் செய்ய வருபவர்கள் யோசிப்பார்கள். இப்படி நிறைய சமாதானங்கள் சொன்னாலும் குழலி கேட்பதாக இல்லை. அவர்களுக்கே குழலியின் பயம் தேவையற்றதாக தெரிந்தது. ஆதியை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.
இருந்தாலும் ஆதியை திருமணம் செய்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடாவடியாக ஆர்ப்பாட்டம் செய்தாள் குழலி. சிறு வயதிலிருந்தே குழலி இப்படிதான். அளவுக்கு அதிகமான பணமும் செல்வாக்கும் சேர்ந்து அவளை ஒரு பிடிவாதக்கார குழந்தையாக வளர்த்தது. தான் நினைப்பது மட்டுமே நடக்க வேண்டும், தான் நினைப்பதையே அடுத்தவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பு அவளுக்கு நிறைய இருந்தது.
சின்ன சின்ன விஷயங்களில் கூட அவளது பேச்சை யாராவது மீறினால் அவளால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது. ஒன்று வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து துவம்சம் செய்வாள். அப்படி இல்லாவிட்டால் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் எங்கேயாவது சென்று விடுவாள். அவளின் இந்த குணம் தெரிந்து வீட்டில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அவளைப் பின் தொடரவே மாத சம்பளத்திற்கு குறைந்தது பத்து பேர் இருந்தார்கள்.
ஒரே மகள் அவள் பிறந்த பிறகு செல்வாக்கு இன்னும் உயர்ந்து விட்டது. பொதுவாக கோடீஸ்வரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனை சாமியார்கள் வடிவில் வந்து சேரும். அப்படிதான் இவர்கள் குடும்பத்திற்கும் ஒரு சாமியார் இருந்தார். அவரை குருஜி என்றே அழைப்பார்கள். குருஜி அன்று என்ன குழம்பு வைக்க வேண்டும் என்று சொல்கிறாரோ அதைத்தான் அவர்கள் வீட்டில் சமைப்பார்கள்.. அந்த அளவிற்கு குருஜி அந்த குடும்பத்தை ஆட்டுவித்தார்.
குழலி பிறந்த நேரம் ஆஹா ஓஹோ என்று இருப்பதால் அவள் ஒரு தெய்வக் குழந்தை எனக் வாய்க்கு வந்ததை அடித்து விட்டார். குழலி எது செய்தாலும் அவளுடைய பெற்றோர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவளுடைய விருப்பம் மட்டுமே அங்கே பிரதானமாக இருக்கும். இதனால் குழலிக்கு தோழமை கிடையாது. ஆதி குழலியின் சீனியர். அவனது அகம்பாவமும் திமிருமே அவனை தனித்துக் காட்டியது அனைவரிடமிருந்து.
அவனை சுற்றி சுற்றி வந்து காதல் செய்தாள் குழலி. முதலில் ஆதி அவளை கண்டுகொள்ளா விட்டாலும் எறும்பு ஊரக் கல்லும் தேயும் என்பது போல அவளது காதலை கண்டு அவனும் காதலிக்க ஆரம்பித்தான். ஆரம்பத்தில் அவனது கார் ரேஸ் கனவுகளை குழலி கண்டு கொண்டதாக தெரியவில்லை. திருமணம் என்று வந்த பிறகும் கூட அது பெரிய விஷயமாக படவில்லை. குருஜி அதில் வெடிகுண்டை வைத்தார்.
அவர்தான் குழலியிடம் ஆதி கார் ரேஸில் கலந்து கொள்ள கூடாது. இதனால் அவன் உயிருக்கே ஆபத்து என கொளுத்தி போட அவர் பற்ற வைத்த நெருப்பு எரிமலையாய் கொதித்தது. ஆதியின் பிரிவிற்கு பிறகு குழலி வெளிநாட்டிற்கு சென்று விட்டாள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவள் தாயகம் திரும்ப, அப்போதுதான் அவளுடைய தந்தை கார்த்தியை பற்றி கூறினார். தன்னுடைய தேர்வு தான் இப்படி ஆகிவிட்டது, இனி பெற்றோர்கள் தேர்வை ஏற்றுக் கொள்வது தான் உசிதம் என்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள் குழலி.
கார்த்தியிடம் பேசி பழகும் போது, அவனது கண்ணியமும் அவள் சொல்லுக்கு தலையாட்டும் பாங்கும் அவளுக்கு மிகவும் பிடித்த போனது. நாளடைவில் அவள் கார்த்தியை காதலிக்கவே ஆரம்பித்து விட்டாள். எல்லாம் சரியாகிய நேரம் செல்வகுமாரி திருமணம் வந்தது. அந்த திருமணத்தில் இத்தனை ஆண்டுகள் யாரை பார்க்க கூடாது என இருந்தாளோ அதே ஆதியை பார்த்து விட்டாள்..
ஐந்து ஆண்டுகளில் அவளது காதல் முறிவடைந்ததை பற்றி அவள் கவலைப்படவில்லை. அவளை ஒருவன் நிராகரித்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆதியை பழிவாங்க தன் தந்தையை தூண்டி விட்டு வெளிநாட்டில் இருந்தே சில முயற்சிகள் செய்தாள். ஆனால் ஆதி அவர்கள் அனைவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உயரத்திற்கு சென்று விட்டான். நாட்டின் பெரும் புள்ளியான அவனை நெருங்குவது சாதாரண விஷயம் கிடையாது.
முடிந்தவரை அவனை மறப்பதற்காக முயற்சிகள் செய்து அவனை மறந்து விட்டாள். ஆனால் செல்வகுமாரி திருமணத்தில் அவனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் அனைத்தும் நினைவுக்கு வந்து பேயாட்டம் போட்டது. அவனது கண்கள் உணர்ச்சியற்று அவளை பார்த்தாலும், அவனிடம் காதல் செய்த அவளுக்கு தெரியாதா,அவனின் பார்வையின் மொழியை.
அந்த நிமிடம் தொங்க தொங்க தாலி கட்டி அவன் முன் பார் என் கணவனை என்று காட்ட வேண்டும் போல இருந்தது. நீ என்னை நிராகரித்தால் என்ன? என்னை ஆராதிக்க, எனக்கு ஒரு அடிமை கிடைத்து விட்டான் என்று காட்ட உடனே திருமணம் நடக்க வேண்டும் என கார்த்தியை நச்சரித்தாள். கார்த்தி தங்கையே காரணம் காட்டி எப்படியோ அவள் வாயை அடைக்க, கார்த்தி மீதும் அவளுக்கு வெறுப்பு வர ஆரம்பித்தது.
ஆதிக்கும் ஐசுக்கும் திருமணம் என்று தெரிந்ததும் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விடும் படி கார்த்தியிடம் கூறினாள். முதன்முறையாக அவளிடம் கடுமையாகவே பேசினான் கார்த்தி. அவர்களுக்குள் வாக்குவாதம் வந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கார்த்தி அவளை சந்தித்து விடுவான். குறைந்தது போனில் அழைத்தாவது மன்னிப்பு கேட்பான். ஐசு திருமணம் குறித்து பிரச்சனை எழுந்ததும், அவன் மன்னிப்பு கேட்பான் என குழலி காத்திருக்க கார்த்தியோ மன அழுத்தத்தில் கைபேசியை உடைத்தே விட்டான்.
ஆயிரம் இருந்தாலும் ஐசு அவனின் தங்கை. எவ்வளவு தைரியம் இருந்தால் அவனது தங்கையின் திருமணத்தை நிறுத்த அவனை வைத்தே காய் நகர்த்துவாள். ஆதித்த கரிகாலன் ஐசுவை திருமணம் செய்தால் இவளுக்கு என்ன? ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்தால் இவளுக்கு என்ன? இவள் ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும்? அப்படியென்றால் இவள் மனதில் இன்னும் ஆதி தான் இருக்கிறானா?
அவனை இன்னொரு பெண்ணுடன் பார்க்க சகிக்காமல் தான் திருமணத்தை நிறுத்த சொல்கிறாளா? அப்படியென்றால் என் காதல்.ஒரு ஆணாக அந்த நிமிடம் அவமானமடைந்தான் கார்த்தி. குழலி எப்படியோ ஆனால் கார்த்தி திருமணம் என்று வந்தவுடன் குழலியை நேசிக்க ஆரம்பித்து விட்டான்.
அவளிடம் பணிந்து போவது அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. சண்டை போட்டு ஒரு மணி நேரத்தில் அவளை சமாதானம் செய்வது அவர்களின் உறவு பாலத்தை சீராக்குவது போல அவன் உணர்ந்தான். ஆனால் குழலிக்கு அது அனைத்தும் அடிமைத்தனத்தின் உச்சம் என்று தெரிந்தது.
இறுதியாக ஐசு திருமணம் வரைக்கும், கார்த்தி குழலியிடம் பேசவில்லை. அவனுக்குமே உள்ளுக்குள் பயம் இருந்தது. தங்கைக்கு கிடைக்கும் நல்ல வாழ்க்கையை குழலி கெடுத்து விடுவாளோ..எப்படியோ அவன் பயந்தது நடக்காமல் நல்முறையில் திருமணம் முடிந்தது. அதன் பிறகு குழலியை சந்தித்து, சமாதானங்கள் கூறி, அதற்கு அவள் முறுக்கிக் கொண்டு அடுத்த மூன்று நாட்கள் பேசாமல், வேண்டுமென்றே அவனை அலட்சியப்படுத்திய அவமானப்படுத்தி, தேவையா இந்த காதல் என யோசிக்கும் அளவு கார்த்தியை கொண்டு வந்து அவனை மன்னித்தாள்.
இருந்தும் அவ்வப்போது அவர்கள் பேச்சில் ஐசுவை பற்றி விசாரிப்பதை அவள் நிறுத்தவில்லை. ஆதி ஐசுவுடன் மகிழ்ச்சியோடு வாழ்கிறான் என தெரிந்தால் இவளும் மனம் மாறி இப்போது இருக்கும் வாழ்வை ஏற்றுக் கொள்வாள் என கார்த்தி தனக்கு தெரிந்ததை அனைத்தையும் அவளிடம் கூறுவான். இப்படியாகத்தான் ஐசுவுக்கு தைரியம் கொடுத்து நடன பள்ளி தொடங்கியது, அவளுக்காக ஈஸ்வரனை மறைமுகமாக மிரட்டியது, ஐசு முகத்தில் இருக்கும் பூரிப்பே அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பற்றி பறை சாற்றுகிறது என சந்தோஷமாக குழலியிடம் பகிர்ந்தான் கார்த்தி.
எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல ஆக்கிவிட்டது குழலிக்கு. வீடு ஏறி போய் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி விஷத்தை கொட்டினால் ஐசு பயத்தில் செத்து விடுவாள் என அவள் எதிர்பார்க்க, அங்கு அவர்களின் உறவு இன்னும் பலப்பட்டு விட்டது.
தன்னை நிராகரித்த ஆதி, தான் அசிங்கம் என முத்திரை குத்திய பெண்ணோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதை குழலியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கார்த்தியின் தூய்மையான காதலை அவள் உள்ளம் உணரவில்லை. தனக்கான வாழ்வு கார்த்தி என அறியாமல் தன்னை நிராகரித்த ஆதியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என தேவையற்ற வன்மத்தை வளர்த்துக் கொண்டாள் குழலி.
தினமும் அவளது வேலையை ஐசுவை பின் தொடர்வது தான். ஐசுவை பின் தொடரவே பணம் கொடுத்து ஆட்களை வைத்திருந்தான். ஐசு நடன வகுப்பிற்கு வருவது, கோவிலுக்கு செல்வது, சில நேரங்களில் ஆதியோடு வெளியே செல்வது, இப்படி ஐசுவின் உதட்டில் ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகையை பின் தொடர்பவர்கள் கொடுக்கும் நிழற்படத்தில் கண்டு வயிறு எரிந்தாள் குழலி.
அந்த வயிற்று எரிச்சல் ஐசுவின் அண்ணனாகிய கார்த்தியிடம் திரும்பும். வார்த்தைக்கு வார்த்தை அவளை ஐசு பற்றி, அவளது முகத்தை பற்றி கேவலமாக பேச, ஒரு அண்ணனாக கார்த்தி அவளை கண்டிப்பான். என் தங்கையை பற்றி இப்படி பேசுவதை நிறுத்திக் கொள் என முதலில் மன்றாடினான். கெஞ்சி பார்த்தான் கொஞ்சிப் பார்த்தான். பின்பு முகத்தின் முன்பு விரல் நீட்டி எச்சரிக்கவே செய்தான்.
அப்போதும் குழலியின் பேச்சு ஓய்வதாய் தெரியவில்லை. இறுதியில் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல குழலியின் பேச்சு எல்லை மீற கன்னம் பழுக்க ஒரு அறை வைத்தான். தாமரை இலை நீராக இருந்து அவர்களின் உறவு இடி விழுந்து கருகிய தாமரை குளமாக மாறியது.
கார்த்தி குழலியிடம் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டான். அவளை தவிர்த்தான். குழலியின் தந்தை ஈஸ்வரனிடம் முறையிட்டார். ஈஸ்வரன் கார்த்தி கூப்பிட்டு கண்டிக்கும் போது,
” அப்பா புரியாம பேசாதீங்க. அவ ஒரு சைக்கோ. அவ கூட என்னால வாழ முடியாது. எனக்கு கல்யாணமே வேணாம். என்ன ஏன் போக்குல விட்டுருங்க” பெற்ற மகன் இப்படி சொல்லி சொல்லும் போது ஈஸ்வரன் தான் என்ன சொல்வார்?
அவருக்கும் அந்த எண்ணம் இருந்தது மனதில். ஒருவேளை குழலி உண்மையாகவே சைக்கோவா?
ஆதி தன்னை நிராகரித்தியதைப் போல கார்த்தியும் தன்னை அவமானப்படுத்தியதாய் நினைத்தாள் குழலி. அவளை ஒட்டுமொத்த கோபமும் ஐசுவின் புறம் திரும்பியது. தான் காதலித்த இரு ஆண்களும் இந்த ஒரு பெண்ணை உயர்த்திப் பேசுவதை குழலியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. புன்னகையில் மலர்ந்திருக்கும் ஐசுவின் முகத்தில் நிரந்தர சோகத்தை கொண்டு வர வழி செய்தாள் குழலி.