11

மறுநாள் மறு வீட்டு விருந்துக்கு செல்லவிருந்தனர் ஆதியும் ஐசுவும். வரமாட்டேன் என எங்கே வீம்பு செய்யப் போகிறானோ என்று ரொம்பவும் பயந்து விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி. இரவு நெடுநேரம் கழித்தே வீடு வந்து சேர்ந்தான். அப்போதும் அவனுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள் ஐசு. சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்று அவள் கேட்க நீ சாப்பிட்டியா என்று கேட்டான்.

” இல்லைங்க நீங்க சாப்பிடாம”

” நான் சாப்பிட்டேன். எதுக்கு இவ்வளவு நேரம் முழிச்சிருக்க. வா வந்து படு”

ஐசு அவனை பாஷை புரியாதவனை பார்ப்பது போல பார்த்தாள். அவள் சாப்பிடவில்லை என்று சொல்கிறாள். ஒரு பேச்சுக்காவது நான் சாப்பிட்டு விட்டேன் நீ சாப்பிடு என்று சொல்வதற்கு என்ன? வந்து படு என்கிறான். அவன் அப்படி சொல்லிய பிறக்கும் சாப்பிட மனம் இல்லாமல் சென்று படுத்து விட்டாள்.

சற்று நேரத்தில் அவன் உறங்கி விட்டான் என்பது சீரான மூச்சில் தெரிந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. இப்போதும் அவள் சென்று சாப்பிடலாம். ஆனால் மனம் கேட்கவில்லை. வீம்பாக படுத்து விட்டாள் ஐஸ்வர்ய நந்தினி.

சாப்பாட்டு விஷயத்திற்கு இப்படி என்றால் நாளை மறு வீட்டிற்கு செல்வதைப் பற்றி கூறினால் என்ன சொல்லப் போகிறானோ? பயத்தில் தானாய் தூக்கம் வந்தது. காலையில் ஐந்து மணிக்கு எல்லாம் விழிப்பு தட்டி விட்டது அவளுக்கு. காலைக் கடன்களை முடித்து அவள் வெளியே வந்து பார்க்கும் போது ஆதியை காணவில்லை. இவ்வளவு சீக்கிரம் எழுந்து எங்கே சென்றான்? சற்று முன் தானே பார்த்தோம்? ஒருவேளை அவசரமாக வயிற்றை கலக்கி விட்டதோ? பாத்ரூமில் தான் இருந்ததால் பக்கத்து அறை பாத்ரூம் பயன்படுத்த சென்று விட்டானோ?

குழப்பத்தோடு கீழ் இறங்கி வந்தாள் ஐசு. அமுதன் இன்னும் எழுந்திருக்கவில்லை. அவ்வளவு பெரிய வீட்டில் மூன்றே பேர் மட்டுமே. பொருட்களும் அவ்வளவாக இல்லை. அவசியமான பொருட்கள் மட்டுமே அந்த பெரிய வீட்டில் இடம் பெற்றிருந்தது. சமையலறையில் விளக்கு எறிவதைக் கண்டதும் நேராக அங்கே சென்றாள் ஐசு. வெறும் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தான் ஆதி. வேகமாக எதையோ செய்து கொண்டிருந்தான். அவனருகே சென்ற ஐசு

” என்னங்க இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்றீங்க” எட்டி பார்த்தாள்.

இரண்டு முட்டைகளை ஆம்லெட் போட்டு, நான்கு ரொட்டிகளை வாட்டி, ஆம்லெட்டை வாட்டிய ரொட்டியின் நடுவே வைத்து,சேலட் கீரையை பிரிட்ஜில் இருந்து எடுத்து கழுவி அதன் மீது வைத்து, மயோனிஸ் ஊற்றி, அதன் மீது சீஸ் வைத்து அப்படியே தட்டோடு தூக்கி மைக்ரோ ஓவனில் வைத்தான்..

இவ்வளவு காலையில் இவன் ஏன் பிரட் சாண்ட்விச் செய்து கொண்டிருக்கிறான்.

” என்னங்க பசிக்குதா? நான் ஏதாச்சும் செஞ்சு தரவா” அவளது கேள்விக்கு பதில் சொல்லாமல் பால் சேர்க்காமல் கருப்பு காப்பி கலக்கி, இரண்டு கப்புகளில் ஊற்றினான். மைக்ரோ ஓவனில் வைத்த டோஸ்ட்களை எடுத்துக்கொண்டு”வா” என்றவன் முன்னே சென்றான்.

இவ்வளவு காலையில் எழுந்து என்னதான் இவன் செய்கிறான்? இரண்டே நாளில் கிறுக்கியாகி விடுவாள் போல. தோட்டத்தில் காத்தாட அமருவதற்கு அழகான குடில் போல அமைந்து இருந்தான். அங்கே சென்றவன் ட்ரெய்யை வைத்தான். அவனும் அமர்ந்து அவளை அமர சொன்னான். ஐசுக்கு இன்னுமும் அவன் என்ன செய்கிறான் என்பது புரியவில்லை.

டோஸ் தட்டை அவள் முன்பு தள்ளி வைத்தவன்

“சாப்பிடு”

புரியாமல்

“என்ன”

” சாப்பிடு”

” இவ்ளோ காலையில நான் சாப்பிட மாட்டேங்க”

” அதெல்லாம் சாப்பிடலாம். இப்ப நீ சாப்பிடுற”

அவன் குரல் கடினமாக கேட்க உடனே ஒரு டோஸ்ட்டை கையில் எடுத்துக் கொண்டாள்.

” கையில வச்சு என்ன பண்ற வேடிக்கை பாக்குறியா? ஊட்டி விட்டா தான் சாப்பிடுவியா?”

டோஸ்ட்டை ஒரு கடி கடித்தாள் ஐசு.

” நீ என்ன பார்த்தா பொறந்த?”

அரை இருட்டில் அவனது முகம் கோபத்தில் தகித்துக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்தது. அவள் என்ன செய்து விட்டாள் இவ்வளவு கோபம்? அவனின் கேள்வி வேறு வயிற்றில் குளிர் பரப்பியது.

” நான் கேட்டா பதில் சொல்லணும் ஐஸ். நீ என்ன பார்த்தா பொறந்த”

“ம்ஹும்”

” அப்புறம் நான் சாப்பிட்டா என்ன சாப்பிடாட்டி உனக்கு என்ன? உன் வயிறும் என் வயிறும் ஒண்ணா? உனக்கு பசிச்சா சாப்பிட தெரியாதா? இத்தன வருஷம் நான் சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நீ சாப்டியா? எனக்கு இந்த மாதிரி ஸ்டுப்பிட் சென்டிமென்ட் எல்லாம் பிடிக்காது. உனக்கு என் கூட சாப்பிடணும்னு ஆசையா இருந்தா நான் வரும் வரைக்கும் வெயிட் பண்ணனும்னு அவசியம் இல்ல. நீ மொத சாப்பிடு. நான் சாப்பிடும் போது கொஞ்சமா ஏதாச்சும் தட்டுல வச்சு எனக்கு கம்பெனி கொடு.

அதை விட்டுட்டு நான் வர வரைக்கும் சாப்பிடாம ஷீட். இந்த வீணாப்போன சாம்பிரதாயம் எல்லாம் எனக்கு பிடிக்காது. நேத்து உனக்கு பசின்னு எனக்கு தெரியும். வாயால உன்கிட்ட இதை நான் சொல்லிருந்தா அத மறு நிமிசமே தொடச்சி வீசிருப்ப. இப்போ வயிறு காஞ்சிருச்சு. பசி என்னன்னு தெரிஞ்சிருக்கும். ஐஸ் என்கிட்ட பேச்சுக்கே இடம் இல்ல.

தண்டனை கொடுத்தாதான் சில விஷயங்கள் உடனே புரியும்னு நான் நம்புறவன். இது உனக்கான தண்டனை மட்டும் இல்ல. இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சு தூக்கத்தை தியாகம் பண்ணி எல்லாம் எதுக்காக? உனக்கும் கஷ்டம் உன்னால எனக்கும் கஷ்டம். இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இப்ப சாப்பிடு ஐஸ்.

எனக்கு சமைக்க ரொம்ப பிடிக்கும். ஆனா இவ்வளவு காலையில் அவசரமா இதான் சமைக்க முடிஞ்சது. எப்படி இருக்கு நல்லா இருக்கா? காலையிலேயே காபி குடிச்சா மந்தமா இருக்கும். நீ என்ன பண்ணு சாப்பிட்டு இந்த கார்டன  ஒரு நாலு வாட்டி சுத்தி வா. அப்புறம் போய் குளிச்சிட்டு காபி சாப்பிடு. ஆமா எதுக்கு தூங்காம இவ்வளவு சீக்கிரம் எந்திரிக்கிற”

அவன் பாட்டில் கேள்வி கேட்டுக் கொண்டே போக இவனை எந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்ய நந்தினி.

ஐஸ்வர்ய நந்தினி ஒன்றும் மக்கு கிடையாது. செல்வகுமாரியைப் போல அவளுக்கு சுதந்திரம் இல்லாவிட்டாலும், அவள் வாசித்த பார்த்த திரைப்படங்களின் வழி அக்கறை காதல் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தாள். அவளை அவளுக்காகவே ஏற்றுக்கொண்டு, பக்கப் பலமாக நிற்பவன் கணவனாக வேண்டுமென்று அவ்வப்போது இறைவனிடம் வேண்டிக் கொள்வாள். அதைத் தவிர அவள் வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.

ஆதித்த கரிகாலன் இறைவன் அவளுக்கு கொடுத்த வரமா சாபமா? அவனது கண்களில் காதல் இல்லை. வார்த்தைகளில் அக்கறை வழியவில்லை. இருப்பினும் மறைமுக குத்தலின் வழி அக்கறை காட்டுகிறான். வித்தியாசமான முறையில் அவனது பேச்சும் செய்கையும் இருக்கிறது. நல்ல புத்தியில் இருக்கும் ஒருவன் இப்படி தான் நடந்து கொள்வானா? இல்லை இவன் புத்தியே இதுதானா? குழலி இவனின் முன்னாள் காதலி என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும்.

இந்த திருமண விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து ஒரு வாழ்த்து சொல்லக்கூட குழலி இவளை அழைக்கவில்லை. இவனது இந்த விசித்திர குணத்தினால் தான் குழலி இவனை விட்டு விலக காரணமா? அவனிடமே கேட்டு விடலாமா? ஆயிரம் தான் இப்பொழுது ஐஷு தாலி கட்டிய மனைவியாக இருந்தாலும் முன்னாள் காதலியை பற்றி பேச்சு எடுக்க நாக்கு வரவில்லை. தேவையில்லாமல்  அவளது நினைவை இவளே ஏற்படுத்துவது போல் ஆகிவிடும்.

குழப்பத்தின் மேல் குழப்பமாக அன்று காலை உணவை உண்ணும் போது

” ஐஸ் என்னால அஞ்சு நாள் எல்லாம் உங்க வீட்ல தங்க முடியாது. ஒரு மூணு நாளுக்கு மட்டும் தான் அங்க இருப்பேன். நீ வேணும்னா அங்கேயே தங்கிட்டு வா”

அவனிடம் பேச்சை எடுப்பது என்று மூளையை உருக்கி கொண்டிருந்தவளிடம் அவன் இவ்வாறு கூற

” அப்ப நான் போய் உங்க டிரஸ் எல்லாம் பேக் பண்ணவா”

” எனக்கு கை விளங்காமல் போச்சா? இல்ல நான் என்னைக்கு என்ன கலர் ஜட்டி போடுவேன் உனக்கு தெரியுமா?”

என் வேலையை நானே செய்து கொள்கிறேன் என்று ஒரே வார்த்தையில் முடிக்காமல்  முகத்தில் அடித்தது போல அவன் கேட்ட கேள்வியில் ஐசுவின் முகம் வாடி விட்டது.

அமுதன்

” அவன் இப்படித்தான் ஐசு. மூஞ்சியில அடிச்ச மாதிரி பதில் சொல்வான். அவன்கிட்ட  எப்போ எப்படி பேசணும்னு எனக்கு கூட தெரியாது. எந்த நேரத்துல எப்படி இருப்பான்னு அவனுக்கு மட்டும் தான் தெரியும். முடிஞ்ச வரைக்கும் அவன நீ டென்ஷன் பண்ணாம இருந்தா நல்லது. அவனுக்கு அவனோட வேலைய அவனே செஞ்சா தான் புடிக்கும். அவன் கிடக்கான் லூசு பையன். நீ பார்த்து பத்திரமா போயிட்டு வாடா”

மாமனாரிடம் ஆயிரம் பத்திரம் கூறிவிட்டு கணவனோடு தன் வீட்டிற்கு சென்றாள் ஐஸ்வர்ய நந்தினி.

பெண் மாப்பிள்ளை வந்ததும் நர்மதா இருவருக்கும் திருஷ்டி சுத்தி வீட்டிற்குள் அழைக்க, ஈஸ்வரன் ஒரு பேச்சுக்காக ஐசுவை வா என்று அழைத்துவிட்டு வாங்க மாப்பிள்ளை என்று கை நீட்டினார்.

நீட்டிய கையைப் பிடித்தபடியே அப்படியே எக்கி சோபாவில் அமர்ந்து விட்டான் ஆதி. அவனது இந்த அதிரடி செயலால் ஈஸ்வரன் தொபுகடிர் என சோபாவில் விழுந்தார்.

” என்ன மாமா கை கொடுத்ததுக்கே பிளாட் ஆயிட்டீங்க.. பிஞ்சு பாடி போல உங்களுக்கு” மருமகனுக்கு மனதார சாபம் கொடுத்தார் ஈஸ்வரன்..