Advertisement

“நீயே சொல்லுவ எப்போன்னு தெரியலை, காத்திட்டு இருப்பேன், உன்னோட பதிலுக்காக. அதுவரைக்கும் தேடிட்டு இருப்பேன் உனக்கு எப்போ என்னை பிடிச்சதுன்னு”

“இன்னைக்கு நாளை நான் எவ்வளவு ஆசையா எதிர்பார்த்தேன் தெரியுமா. உன்கிட்ட பெரிசா டயலாக் எல்லாம் பேசி மொக்கை வாங்கி ச்சே. என் மூடே போச்சு, காலையில இருந்து டென்ஷன் தான்” என்றான்.

“உங்களை யாரும் எதுவும் சொல்லலையே”

அவன் புரியாது பார்த்தான் அவளை. “வந்து உங்களை எதுவும் செய்ய வேணாம்ன்னு யாரும் சொல்லலையே”

அவன் பதில் எதுவும் பேசாது “எனக்கு தூக்கம் வருது” என்றுவிட்டு படுத்துக்கொள்ள “தத்தி” என்று அவள் மெல்லச் சொன்னது அவனுக்கு நன்றாகவே கேட்டது. புன்னகையை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டு அவன் மறுபுறம் படுத்துக் கொண்டான்.

“நிம்மதியா படுத்து தூங்கு” என்று வேறு சொல்ல “மண்டை கஷாயம் மண்டை கஷாயம்” என்று முனகினாள்.

அவள் விளக்கணைத்து படுக்க வந்தது மட்டுமே அறிவாள். ஆத்திரேயன் அவளை அப்படியே தன் மீது போட்டுக் கொண்டிருந்தான்.

“விடுங்க” என்று அவள் சொன்னது அவளுக்கே சரியாக கேட்க்காத போதும் அவள் கணவன் கேட்டிருந்தான்.

“நீ தான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு சொன்னியே. இப்போ நீ வேணாம்ன்னு சொல்லு நான் விட்டிர்றேன்”

மெல்லினாவிற்கு வெட்கம் பிடிங்கியது. தானே வாயைவிட்டு மாட்டிக்கொண்டோமே என்று. பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் இடையில் அழுத்தமாய் பதிந்திருந்த அவன் கரத்தை விலக்காது இன்னமும் அழுந்தி பிடித்தவன் “நீ உன் வாயால வேணாம்ன்னு சொல்லு நான் உன்னை தொடலை” என்று சொல்ல அவள் நெளிந்துக் கொண்டிருந்தாள்.

“ஒண்ணும் ஒரு நிமிஷம் தான் டைம் நீ பதில் சொல்லலைன்னா…” என்றுவிட்டு இரவு விளக்கின் ஒளியில் அவள் கண்ணைப் பார்த்துச் சொல்ல மௌனத்தை பதிலாய் கொடுத்து அவன் நெஞ்சத்தை அவள் மஞ்சமாக்க அவளையே தனக்கு மஞ்சமாக்கிக் கொண்டான் அவளின் ஆத்திரேயன்.

ஆத்திரேயன் அவள் இமைகளில் அழுந்த முத்தமிட்டவன், கன்னம் இதழ் என்று வரிசைப்படுத்த தொடங்கியிருக்க மெல்லிய முனகலும் அவள் கை வளவியின் ஓசைக்கும் மட்டுமே அவ்விடம் உரித்தாகியிருந்தது.

அடுத்து வந்த நாட்களும் அதே சந்தோசத்தோடே கழிந்திருந்தது. திலோத்தமாவை அவன் மாமன் வீட்டினர் அந்த வாரமே வந்து அழைத்து சென்றிருந்தனர்.

திங்கள் அன்று காலை இருவருமே வேலைக்கு கிளம்ப வாசவி முனக ஆரம்பித்தார். ஆத்திரேயன் முதலில் கிளம்பியிருக்க மெல்லினா அவள் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த ஸ்கூட்டியில் கிளம்பியிருந்தாள்.

“இது வீடா இல்லை போலீஸ் ஸ்டேஷனான்னு எனக்கு புரியவே இல்லை. எந்த பக்கம் பார்த்தாலும் காக்கியா தெரியுது” என்று புலம்ப “பையன் ஐபிஎஸ் முடிக்கும் போது என் புள்ளை போலீஸ்ன்னு மெச்சுக்கிட்டே, இப்போ மட்டுமென்ன என் மருமகளும் போலீஸ்ன்னு மெச்சுக்கோயேன் யாரு வேண்டாம்ன்னு சொன்னா” என்றார் சுசிந்தரம்.

“போதும் நிறுத்துங்க உங்களுக்கு என்னை சொல்றதே வேலையா போச்சு”

“ரெண்டு பேரும் ஒரே இடத்துக்கு தானே போறாங்க. ஒண்ணா போனா என்னவாம், அவன் தனியா அவ தனியா போறாங்க. பார்க்க நல்லாவா இருக்கு” என்று அடுத்து ஒன்றை ஆரம்பித்தார் அவர்.

“ரெண்டு பேரும் ஐடி கம்பெனில வேலைக்கு போனா நீ சொல்றது மாதிரி செய்யலாம். அவங்க போலீஸ்ம்மா அவன் வேலையை பத்தி அவனுக்கு தான் தெரியும், அந்த பொண்ணோட வேலையை பத்தி அதுக்கு தான் தெரியும். ரெண்டு பேரும் சேர்ந்து போறது எல்லாம் சரியா வராது. நீ அவங்களை குறை சொல்றதை விட்டு பேசாம போய் வேற வேலை இருந்தா பாரு”

“ரெண்டு புள்ளைய பெத்தேன் ஒருத்தியும் என்னை உட்கார வைச்சு ஆக்கிப் போடலை. எனக்கென்னன்னு போய்ட்டாளுக, நானே தான் எல்லாருக்கும் ஆக்கிப் போடணும்” என்று தன் புலம்பலை நிறுத்தாது சமையலறைக்கு சென்றுவிட்டார் அவர்.

தனித்தனியே கிளம்பிச் சென்றாலும் இருவரும் ஒன்றாகவே அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அவர்களின் தோழர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அதை ஒரு சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவர்கள் தங்கள் வேலையை பார்க்கச் சென்றனர்.

மாலையில் அவளைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வது என்று மேலும் இரண்டு நாட்கள் சந்தோசமாகவே தான் சென்றது.

மெல்லினா நிகழ்க்காலதிற்கு வந்திருந்தாள். கையில் இருந்த தொங்கட்டானிலேயே அவள் பார்வை நிலைக் கொண்டிருந்தது. அன்றைய நிகழ்வுகள் மனக்கண்ணில் ஓடியது.

மேஜையில் தலை கவிழ்ந்து அவள் படுக்க “மேடம் நீங்க இன்னும் கிளம்பலையா??” என்று வந்து நின்றார் அவளுக்கு கீழே பணிபுரிபவர்.

அவள் மெல்ல தலையசைத்தாள் கிளம்பிவிட்டேன் என்பது போல். மேஜையில் வைத்திருந்த அவள் வண்டியின் சாவியை எடுத்துக் கொண்டு கீழே வர மணி ஏழாகி இருந்தது.

வண்டியை எடுத்தவளுக்கு ஏனோ வீட்டிற்கு செல்லத் தோன்றவில்லை. ஆத்திரேயனின் வாடிய முகமே கண் முன் வந்து இம்சித்தது அவளை.

அவள் குவார்ட்டஸ் இன்னமும் காலி செய்திருக்கவில்லை. இன்னும் சில பொருட்கள் அங்கிருந்து எடுக்க வேண்டி இருந்தது. ஒரு வாரம் கேட்டிருந்தாள் எல்லாம் எடுப்பதற்கு.

வண்டியை குவார்ட்டஸ் நோக்கி செலுத்தினாள். சாவியை கொண்டு கதவை திறந்தவள் அப்படியே அங்கிருந்த மரசோபாவிலேயே படுத்துக் கொண்டாள்.

வீட்டிற்கு வந்திருந்த ஆத்திரேயன் தலைவலிப்பதாகக் கூறி தன்னை யாரும் தொந்திரவு செய்ய வேண்டாமென்று சொல்லி அவனறைக்கு சென்றிருந்தான்.

கண்ணை மூடி படுத்திருந்தவன் அப்படியே உறங்கிப் போயிருந்தான். வெகு நேரம் கழித்து கண் விழித்தவன் நேரத்தைப் பார்க்க மணி ஒன்பதை தாண்டியிருந்தது. மெல்லினா கீழே இருப்பாள் என்று எண்ணிக் கொண்டு குளியலறை சென்று முகம் கழுவி கீழே வந்தான்.

“அம்மா சாப்பாடு வைங்க”

“உன் பொண்டாட்டி எப்போடா வீட்டுக்கு வருவா” என்று அவர் சொன்னது புரியாது அவரை ஏறிட்டான்.

“என்ன கேட்கறீங்க??”

“நீ வந்தே தலை வலிக்குதுன்னு சொல்லி மேலே போய் படுத்துட்ட, உன் பொண்டாட்டி இன்னும் வீட்டுக்கு வரலை. போன் பண்ணா ரிங்கே போகலை. உன்னை கேட்கலாம்ன்னா நீயும் தூங்குற” என்று சலிப்பாய் சொன்னார் அவர்.

“ஆதி என்னாச்சு மெல்லினா லேட்டா வருவேன்னு உன்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாளா??” என்று அவன் தந்தையும் கேட்கவும் தான் அவளிடம் முகம் திருப்பியது அவன் நினைவிற்கு வர எழுந்திருந்தான்.

அம்மாவும் அப்பாவும் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன் “சம்டைம்ஸ் இப்படி லேட்டாகும், நான் போய் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்” என்று எழுந்தவன் வேறு உடைக்கு மாறி தன் பைக்கை எடுத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகம் சென்றான்.

அங்கோ பார்க்கிங்கில் அவள் வண்டி இல்லை என்றதுமே உள்ளே எதுவோ குடைந்தது. ஏதோ தோன்ற தன் நண்பன் நித்தேஷுக்கு அழைத்தான்.

“சொல்லுடா என்ன இந்த நேரத்துல”

“அதுல எதுவும் உனக்கு டவுட்டா மச்சி”

“டேய் வாயை மூடுடா” என்ற ஆத்திரேயன் “உனக்கு ட்ரிப்ளிகேன் எஸ்ஐய தெரியுமா??”

“யாரு தியாகராஜனா”

“ஹ்ம்ம் ஆமா”

“தெரியுமே என்ன விஷயம்”

“அவரோட நம்பரை எனக்கு உடனே வாட்ஸ்அப் பண்ணு” என்றுவிட்டு போனை கட் செய்துவிட்டான். அடுத்த சில நொடிகளிலேயே நித்தேஷ் அவ்வெண்ணை அனுப்பியிருந்தான்.

அந்த எண்ணுக்கு உடனே அழைத்துவிட்டான் ஆத்திரேயன். “ஹலோ யாரு??” என்று எதிர்முனை கேட்டது.

“நான் ஆத்திரேயன் பேசறேன், மெல்லினாவோட ஹஸ்பன்ட்” என்று சொல்லவும் “சார் சொல்லுங்க சார்” என்றார் அவர் பணிவாய்.

“எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா??”

“சொல்லுங்க சார்”

“கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும்ன்னு மெல்லினா சொல்லிட்டு இருந்தா நான் இப்போ தான் ஆபீஸ் வந்தேன். அவ கிளம்பிட்டான்னு நினைக்கிறேன், அங்க வந்திட்டாளான்னு மட்டும் எனக்கு தெரியணுமே” என்றான் அவன்.

“ஒரு அஞ்சு நிமிஷம் சார் நான் பார்த்திட்டு கூப்பிடுறேன்” என்று தியாகு போனை வைத்துவிட்டார்.

அவர் மீண்டும் போன் செய்வதற்குள் ஆத்திரேயன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனே அறியான். தியாகு சொன்னது போல ஐந்தே நிமிடத்தில் மீண்டும் அழைத்துவிட்டார்.

“சார் மேடம் இங்க தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன். கதவு உள் பக்கம் சாத்தின மாதிரி தான் இருக்கு. எதுக்கும் பார்க்கிங்ல அவங்க வண்டியை பார்த்திடறேன் சார்” என்றவன் நடந்தே பார்க்கிங் வந்திருந்தான். “சார் வண்டி இங்க தான் இருக்கு” என்று உறுதியாய் சொல்லிவிட ஆத்திரேயனுக்கு நிம்மதி பெருமூச்சு.

“தேங்க்ஸ் தேங்க்ஸ் தியாகு. ரொம்ப ரொம்ப சாரி இந்த நேரத்துல உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”

“அதனாலென்ன சார்” என்றுவிட்டு அவன் போனை வைத்துவிட ஆத்திரேயன் வண்டியை அவள் தங்கியிருந்த குவார்ட்டஸ்க்கு செலுத்தினான்.

வண்டியை நிறுத்திவிட்டு அவள் வீட்டு வாயிலில் நின்றவன் கதவை தட்ட ஓங்கி கை வைத்த நொடி அது உள் புறம் திறந்துக் கொண்டது. மெல்லினா கதவை தாழிடாமலே இருந்திருப்பாள் போல. சோபாவில் காலைக் குறுக்கி அவள் படுத்திருந்த கோலம் எதுவோ செய்ய “மெல்லினா” என்று அழைத்தான். அவசரமாய் எழுந்து அமர்ந்தவளின் கண்களில் ஈரம்.

“வீட்டுக்கு வராம இங்க என்ன பண்ணுறே??”

அவள் அந்த தொங்கட்டானை அவன் முன் நீட்டினாள். 

“இதுக்கென்ன இப்போ??” என்று அவன் சொல்லவும் முகம் வாட திரும்பிக் கொண்டாள்.

சோபாவில் அவளருகே அமர்ந்து கொண்டவன் அவள் முகத்தை தன் திருப்பி இரு கைகளாலும் தாங்கிக் கொண்டவன் “இங்க பாரு எனக்கு உன் மேல வருத்தம் தான் கோபமெல்லாம் இல்லை. அப்புறம் நான் உன்னை தப்பா நினைக்கவும் இல்லை, புரிஞ்சுதா” என்றவன் சொல்லவும் விழியில் அணைக்கட்டி நின்றிருந்த கண்ணீரை கரையுடைத்தது.

அதை மெல்ல தன் விரல் கொண்டு துடைத்தவன் “எதுக்கு உன் கண்ணீரை நீ வேஸ்ட் பண்ணுறே. என் விஷயத்துக்காக தான் நீ நிறைய அழறேன்னு எனக்கு கில்டியா இருக்கு, ப்ளீஸ்” என்று அவன் சொல்லவும் சட்டென்று கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“நான் எதுவும் செய்யலைன்னு எப்படி சொல்றீங்க??” என்றாள் மெல்ல.

“நானும் போலீஸ் தான்னு எப்படி உனக்கு நிரூபிக்கணும்ன்னு சொல்லு” என்று அவன் கேட்கவும் “இல்லை நான் அப்படி கேட்கலை” என்றாள்.

“நீ உயிரா நினைக்கிற வேலை நீ எப்படி தப்பு பண்ணுவே. எனக்கு தெரியும் நீ எதுவும் செய்யலைன்னு. ஆனா உனக்கு தெரிஞ்சிருக்கு அது யாருன்னு, யாரையோ நீ காப்பாத்த நினைக்கிறே”

“எனக்கு அந்த வருத்தம் தான் உன் மேல என்கிட்ட கூட உன்னால சொல்ல முடியாதான்னு. இன்னும் மூணு நாள்ல நான் கேசை கிளோஸ் பண்ணிக் காட்டுறேன் பார்” என்று அவன் சொல்லவும் மெல்லினா பதற்றம் கொண்டாள், அந்த அப்பாவி ஜீவன் அவள் கண் முன்னே வந்து போக கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

Advertisement