Advertisement

9

மெல்லினாவிற்கு வீட்டிற்கு போகவே பிடிக்கவில்லை. உள்ளே சென்று தனதறையில் அமர்ந்துக் கொண்டாள். எவ்வளவு இனிமையாக கழிந்தது இன்று காலை வரை. ஒவ்வொரு பொழுதும் சுகமான தருணங்கள்.

அன்று குவார்ட்டஸில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகும் ஆத்திரேயன் முகத்தை தூக்கியே வைத்திருந்தான். அன்னை மீதான கோபமும் மனைவியின் மீதான வருத்தமும் அவனுக்கு தீரவேயில்லை.

அவனின் நேரம் அன்று அவனறையில் சாந்தி முகூர்த்தத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக் கொண்டிருந்தது. ஆத்திரேயனின் அறை மாடியில் இருக்கும் தனியறை தான்.

திருமணமாகி வந்த அன்று அவன் அண்ணனின் அறையில் தான் தங்கியிருந்தான். ஆத்திரேயன் இரவு உணவைக் கூட எடுத்துக்கொள்ளாது முன்பு தங்கியிருந்த அறையில் அடைந்து கிடந்தான்.

ஆதவன் வந்து அவனை சாப்பிட அழைத்தான். “எனக்கு பசியில்லை அண்ணா”

“ஒழுங்கா சாப்பிட வாடா நீ சாப்பிடலைன்னா அப்புறம் அந்த பொண்ணும் சாப்பிடாம இருக்கும். காலையில ரெண்டு பேருமே சாப்பிடாம வெளிய போயிட்டீங்களாம் பார்கவி சொன்னா. எனக்காக எழுந்து வா ஆதி” என்று ஆதவன் கூறவும் எழுந்து வெளியில் வந்தான்.

மெல்லினா இன்னும் வந்திருக்கவில்லை கண்கள் தன்னைப் போல அவளைத் தான் தேடியது. “நீ உட்காரு, கவி உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வருவா” என்று தம்பியின் பார்வைக்கு அண்ணன் பதில் சொல்ல மெல்ல சிரித்தான் அவன்.

“அம்மா எங்கே??”

“உள்ள தான் இருக்காங்க”

“ஹ்ம்ம்”

“திலோ சாப்பிட்டாளா??”

“அப்போவே சாப்பிட்டு தூங்க போய்ட்டா”

“ஹ்ம்ம்”

மெல்லினாவை பார்கவி அழைத்து வர டைனிங் டேபிளில் ஆத்திரேயனை கண்டதும் தான் அவளுக்கு ஆசுவாசமாகியது. அவனின் கோபம் அவளை பாதித்தது என்று சொன்னால் மிகையாகாது.

“உட்காரு மெல்லினா” என்ற பார்கவி அவள் தோளைப் பிடித்து அவனருகே அமர வைத்தாள்.

அதுவரை கொஞ்சம் இயல்பிற்கு வந்திருந்த ஆத்திரேயனுக்கு அவள் மீதான வருத்தம் தலைத்தூக்க முகம் இறுக்கமாகியது. அப்போது சரியாய் அவன் அன்னையும் வரவும் மேலும் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.

“கவி அவங்களுக்கு சாப்பாடு வை” என்றான் ஆதவன்.

“நீங்க சாப்பிட்டாச்சா??” என்றாள் மெல்லினா மிக மெல்லிய குரலில்.

“இனிமே தான் சாப்பிடணும்”

“நீங்களும் உட்காரலாமே சேர்த்து சாப்பிடலாம்ல”

“ஆமா அண்ணி உட்காருங்க அண்ணா நீயும் உட்காரு”

“எல்லாரும் சாப்பிட்டாங்களான்னு கேட்க தெரியுது. எங்களை கேட்க ஒரு நாதியும் இல்லை” என்று மீண்டும் குத்தல் பேச்சை ஆரம்பித்தார் வாசவி.

“அம்மா” என்று இம்முறை அதட்டியது மூத்த மகன் ஆதவன்.

“நீயும் என்னையே குறை சொல்லுடா”

“நான் ஒரு குறையும் சொல்லலை. உங்களை தான் பார்கவி அப்போவே சாப்பிட வைச்சுட்டால்ல. நீங்க ஏன் இன்னும் காத்திட்டு இருக்கீங்க, மாத்திரை போட்டு போய் படுங்க. நாங்க பார்த்துக்கறோம்” என்று சொல்லி அன்னையை அனுப்பினான் அவன்.

அவரும் முகத்தை திருப்பிக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார். எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாது அமைதியாகவே உணவை முடித்திருந்தனர் அந்நால்வரும்.

மெல்லினா பார்கவியுடன் எழுந்துச் சென்றுவிட்டாள், செல்லும் முன் ஆத்திரேயனின் முகத்தை காணத்தவறவில்லை. அவன் தான் வேண்டுமென்று அவளை பார்க்காது தவிர்த்தான்.

“ஆதி நீ போய் குளிச்சுட்டு வாடா”

“இந்நேரத்துல எதுக்கு குளிக்க சொல்றே??”

“போ நான் சொல்றதை கேளு” என்று ஆதவன் சொல்லவும் ஏதோ கொஞ்சம் புரிவது போல இருந்தது. அவனிருந்த மனநிலைக்கு இப்போது இது தேவையா என்று தான் தோன்றியது.

எவ்வளவு ஆசையாய் அவன் எதிர்பார்த்திருந்தானோ இப்போது கொஞ்சமும் ஒட்டாத உணர்வு தான் அவனுக்கு. 

“இன்னும் என்னடா யோசனை?? போய் குளி போ” என்ற ஆதவன் அவன் கையில் துண்டை துணித்து உள்ளே தள்ளாத குறையாய் அனுப்பினான்.

ஆத்திரேயன் குளித்து வர “நீ மேலே உன் ரூம்க்கு போடா”

“இன்னைக்கு தான் உங்களுக்கு இதுக்கு நேரம் கிடைச்சுதா”

“ஏன்டா கோபப்படுறே”

“கோபம் எல்லாம் படலை, கடுப்பா இருக்கு எனக்கு”

“என்னாச்சு ஆதி??” என்றான் மூத்தவன் அக்கறையாய்.

“ஒண்ணுமில்லை”

“நிஜமா ஒண்ணுமில்லைல, நான் தான் இன்னைக்கே ஏற்பாடு பண்ணச் சொன்னேன். அம்மா ஞாயிற்றுக்கிழமை தான் நல்ல நாள்ன்னு சொன்னாங்க. நான் தான் எதுக்கும் ஒரு ஜோசியர் பார்த்து கேட்டுக்குவோம்ன்னு விசாரிச்சேன்”

“அவர் தான் சொன்னாரு இன்னைக்கே நாள் நல்லாயிருக்குன்னு. அதான் ஏற்பாடு பண்ணிட்டேன். பார்கவி வேற சொன்னா காலையில இங்க நடந்த பிரச்சனை எல்லாம். நீ மூட் அவுட்ல இருக்கேன்னு தெரியும். அட்லீஸ்ட் மெல்லினா உன் கூட இருந்தாவாச்சும் நீ சரியாகிடுவேன்னு தான் செஞ்சேன்டா”

“தேங்க்ஸ் அண்ணா” என்றவன் படியேறப் போக வாசவி திலோத்தமாவிற்கு பால் எடுத்துப் போக எதிரில் வந்தார். இவனை தாண்டிக் கொண்டு சென்றவரை தடுத்து நிறுத்தினான் ஆத்திரேயன்.

“அம்மா ஒரு நிமிஷம்”

“சொல்லு ஆதி” என்றார்.

“உங்களுக்கு என்னம்மா பிரச்சனை??”

“எதுவுமில்லையே உனக்கு தான் என்னை பிடிக்கலை”

“உங்களுக்கு தான் மெல்லினாவை பிடிக்கலை”

பதிலில்லை அவரிடம், மகன் சொன்னது உண்மை தானே, அப்படியே நின்றிருந்தார்.

“பதில் சொல்ல மாட்டீங்க… சரி விடுங்க… ஆனா எதுக்கு தொட்டதுக்கெல்லாம் அவளை குறை சொல்லிட்டே இருக்கீங்க. இது நீங்க இல்லையேம்மா” என்றான் ஆற்றாமையாய்.

“நான் எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன்”

“பொய் நீங்க அப்படியில்லை. அப்படியிருந்திருந்தா அண்ணிக்கும் உங்களுக்குமான உறவு காட்டிக் கொடுத்திருக்குமே. நீங்க அண்ணிக்கிட்ட வித்தியாசமா பழகலையே”

“ஒரு வேளை பிரச்சனை வந்திடக்கூடாதுன்னு தான் அண்ணன் அண்ணியை கூட்டிட்டு தனிக்குடித்தனம் போயிட்டானா” என்று கேட்க மகனை முறைத்தார் அவர்.

“என்னடா பிரச்சனை மூட்டிவிட பார்க்கறியா நீ”

“நான் எதையும் செய்யலைம்மா நீங்க எதையாச்சும் செஞ்சிட்டு இருக்காதீங்க. நீங்க நீங்களா இருங்க, எனக்கு தெரியும் என்னோட அம்மா எப்படின்னு நீங்க என்னை என்ன வேணா சொல்லலாம், அதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு”

“அவ என் பொண்டாட்டி என்னை நம்பி வந்தவ. அவளை நீங்க பேசுறது சரியில்லைம்மா, பிடிக்கலைன்னா பேசாதீங்க. அதைவிட்டு பேசி பேசி உங்க தரத்தை நீங்க குறைச்சுக்காதீங்கம்மா” என்றவன் அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்கவில்லை.

இவன் மாடியறைக்கு செல்ல அங்கு இவனுக்கு முன்பே மெல்லினா அமர்ந்திருந்தாள். ஆதவனும், பார்கவியுமாய் சேர்ந்து அறையை அழகாகவே தயார் செய்திருந்தனர். உள்ளே நுழையும் போதே பூவின் மணம் அவன் மனதை சற்று லேசாக்கியிருந்தது.

இருந்தாலும் முற்றிலும் அது தணித்திருக்கவில்லை. இவன் நுழையவும் எழுந்து நின்றாள் அவன் மனைவி. கதவடைத்து வந்தவன் அவளை உட்கார் என்று கூட சொல்லவில்லை.

ஏசியை அணைத்துவிட்டு சன்னலை திறந்து வைத்தான். மெல்லிய காற்று இதமாய் உள்ளே நுழைந்தது. அப்படியே நின்றுக்கொண்டு இருளை வெறித்திருந்தான் அவன். லேசாய் கோடிட்ட பிறை நிலவு அவன் மனதில் வெப்பத்தை சற்று தணித்திருந்தது.

மெல்லினாவிற்கு எழுந்து சென்று அவனிடம் பேச தைரியமில்லை. அவன் நின்றிருந்த தோற்றம் அப்படியிருக்க அவனாக வருவான் என்று பார்த்திருந்தாள்.

அவன் வருவது போல தெரியாததால் இவள் எழுந்து அவனருகே செல்ல அதை உணர்ந்தார் போன்று மெல்ல திரும்பியவன் அவளைத் தாண்டிக் கொண்டு கட்டிலின் மறுபுறம் வந்து அமர்ந்தான். தன் கைபேசியை இயக்கி ஹெட் செட்டையும் காதில் மாட்டிக்கொண்டு அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துக் கொண்டான்.

அவனை சமாதானம் செய்யும் வழியறியாது மெல்லினா விழித்துக் கொண்டிருந்தாள். மாலையில் அன்னை பேசிய போது கொஞ்சம் சமனப்பட்டிருந்த மனது முகத்தை திருப்பிக் கொண்டு படுத்திருக்கும் ஆத்திரேயனை கண்டு வருந்தவே செய்தது.

இதற்கா இத்தனை நாட்கள் தவமிருந்தாய், அவன் அன்பை பெறுவதற்கு பதில் அவனின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறாயே என்று அவள் மனதே அவளை கேள்விக்கேட்டது.

மெல்ல கட்டிலில் அமர்ந்தாள் அவனை சமாதானப்படுத்தாது ஒரு பொட்டு உறக்கம் அவளை தழுவப் போவதில்லை என்பது நிஜம். “உங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் மெதுவாய்.

அவன் தான் போனில் சத்தமாய் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தானே ஹெட் செட்டை போட்டுக் கொண்டு. அவன் தோளைத் தட்டினாள், என்னவோ ஏதோவென்று எழுந்து அமர்ந்தான்.

காதிலிருந்ததை கழற்றி வைத்துவிட்டு “என்ன??” என்றான்.

“உங்ககிட்ட பேசணும்”

“பேசு”

“ஏன் இப்படி ஒட்டாம பேசுறீங்க??”

“நான் ஓட்டிப் பேசினா மட்டும் நீ நான் கேட்குறதுக்கு பதில் சொல்லிட போறியா??”

“நீங்க கேளுங்க, என்னால பதில் சொல்ல முடிஞ்சதுக்கு கண்டிப்பா பதில் சொல்றேன்”

“எதுக்கும்மா வம்பு இது போலீஸ் ஸ்டேஷன் இல்லைன்னு என்னை லந்தடிப்பே”

“இல்லை ஒண்ணும் சொல்ல மாட்டேன்” என்றாள் நிஜமான வருத்தத்துடன்.

அருகே அமர்ந்திருந்தவளை நன்றாய் பார்த்தான், அவளின் முகம் வாடியிருந்தது. அழகாய் அலங்கரித்தும் புன்னகை தொலைத்து நின்றவளை பார்க்க அவனுக்கே பிடிக்கவில்லை. நன்றாக திரும்பி அவளை பார்த்தவாறு அமர்ந்தான். 

“நான் உன்கிட்ட நேத்து ஒரு விஷயம் சொன்னேன். அதுக்கு நீ என்னை அடிச்சே அது உனக்கு ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன். மறுபடியும் மறுபடியும் உனக்கு நான் அதை சொல்லத் தேவையில்லன்னு நினைக்கிறேன்”

“உன்னை போலீஸ் டிரெஸ்ல கம்பீரமா கெத்தா விறைப்பா சுத்தி தான் நான் பார்த்திருக்கேன். இப்படி நீ அழறதை நேத்துல இருந்து தான் பார்க்கறேன். அது எனக்கு சுத்தமா பிடிக்கலை. இனிமே நீ அழவே கூடாது”

“அப்புறம் நான் இனிமே உன்கிட்ட எதையும் கேட்க போறதில்லை. உனக்கா என்னைக்கு என்கிட்ட மனசுவிட்டு சொல்லணும்ன்னு தோணுதோ சொல்லு. கேட்டு வாங்குறதுல இருக்கற சந்தோசத்தைவிட எதிர்பாராம கிடைக்கிற சந்தோசம் தான் ரொம்பவும் அலாதியானது”

“நீ உன்னையும் அறியாம உன் மனசை திறந்து பேசினியே அதை தான் சொல்றேன். நீ ஏதோ என்னை திட்டுறேன்னு நான் கோவமா இருக்கும் போது நீ என்னை விரும்பறதா நித்தேஷ் சொன்னப்போ நான் எப்படி பீல் பண்ணேன்னு சொல்ல வார்த்தையே இல்லை”

“அது வரைக்கும் உன்னை நான் அதிகம் கவனிச்சதில்லை. கவனிக்காமலே இருந்தேன்னு சொல்ல மாட்டேன், என்னடா இந்த பொண்ணு இப்படி போட்டு அடிக்கிது, என்கவுன்ட்டர் எல்லாம் பண்ணியிருக்கன்னு கேள்விப்பட்டப்போ ஷாக் எனக்கு நீயான்னு”

“அப்படிப்பட்ட உன்னை நான் தொடர்ந்து கவனிச்சது அந்த தருணத்துக்கு பிறகு தான். ரொம்ப நாளெல்லாம் நீயா சொல்றதுக்கு நான் வெயிட் பண்ண மாட்டேன். நானே கண்டுப்பிடிக்கறேன்”

“அது கஷ்டம்” என்ற பதில் சட்டென்று வந்தது அவளிடமிருந்து.

“அதைவிட கஷ்டம் உன்கிட்ட இருந்து பதில் வாங்குறது” என்று அவள் பதில் சொல்ல முடியாது அவன் சொல்லியிருந்தான்.

Advertisement