Advertisement

“வேணாம்” என்றவன் “உன்னோட திங்க்ஸ் எல்லாம் எங்க இருக்கு”

“ஏன்??”

“சொல்லு”

“குவாட்டர்ஸ்ல இருக்கு”

“சீக்கிரம் போய் ரெடியாகு போயிட்டு வந்திடுவோம்”

“ஏங்க நான் அவன்கிட்ட கோவிலுக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருக்கேன் அவன் என்னடான்னா அவ பின்னாடியே போறேன்கறான்” என்று தன் கணவரிடம் புலம்பினார் வாசவி.

“நீ ஏன் இப்படி ஆகிட்டே வாசவி??”

“நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்றவன் கண்ணைக் கசக்கிக்கொண்டு சென்றுவிட்டார்.

ஆத்திரேயன் தயாராகி வரவும் மெல்லினாவும் வந்திருந்தாள். “அப்பா நாங்க வெளிய போயிட்டு வர்றோம்”

“என்கிட்ட சொல்லிட்டு போறானா பாருங்க, வந்ததுமே என் புள்ளைய மயக்கிட்டா” என்றார் அவர் தன் கணவரிடம்.

“வாசவி மயக்க அவங்களுக்குள்ள எதுவுமே நடக்கலையே” என்றார் அவர் மனைவியை ஆழ்ந்து பார்த்து.

“எனக்கு பயமாயிருக்குங்க??” என்று அவர் தன் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மெல்லினா அவர்கள் அருகில் வந்தாள். வாசவி தன் பேச்சை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு அவளை கண்டுக்கொள்ளாது போல வேறு எங்கோ பார்த்தார்.

“நாங்க வெளிய போயிட்டு வர்றோம். என்னோட திங்க்ஸ் இன்னும் குவார்ட்டர்ஸ்ல தான் இருக்கு, அதை மட்டும் எடுத்திட்டு வந்திடறோம்”

வாசவி அவளைப் பார்த்து தலையை கூட ஆட்டவில்லை. “போயிட்டு வாம்மா” என்று மாமனார் மட்டுமே தலையசைத்தார்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லவளாக இருக்க முடியாது. இதுவரை யாரும் அவளை ஒரு சொல் சொன்னதில்லை, சொல்லும்படி அவளும் நடந்ததில்லை. மெல்லினாவிற்கு புரிந்தது வாசவிக்கு தன்னை முதலில் இருந்தே பிடிக்கவில்லை என்று.

அவர் கருத்தை அவராய் மாற்றிக் கொண்டால் தான் உண்டு. அவளுக்கு தான் யார் என்று அவரிடம் நிரூப்பிக்க வேண்டுமென்பதில்லை. அதை அவளும் விரும்பவில்லை.

ஆத்திரேயன் அவளின் குவார்ட்டஸின் முன் வண்டியை நிறுத்த ‘தான் வழி சொல்லவில்லையே’ என்று நினைத்தாலும் ‘அவருக்கு தெரியாமல் இருக்குமா’ என்றும் எண்ணிக் கொண்டாள்.

“அச்சோ சாவி எடுத்திட்டு வர மறந்திட்டேன்” என்றவளை ஆத்திரேயன் முறைத்திருந்தான்.

“இங்க சென்ட்ரிகிட்ட ஒரு சாவி இருக்கும்”

“எல்லார்கிட்டயும் சாவி கொடுத்திடுவியா”

“இங்க அப்படி முக்கியமா எதுவுமே இல்லை” என்றவள் சாவியை வாங்கச் சென்றாள்.

அதற்குள் பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பெண்மணி இவளைக் கண்டு ஓடி வந்தார். “மெல்லினா எப்போ வந்தே, ஊருக்கு போறேன்னு சொன்னே, இத்தனை நாளா ஆளே காணோம்” என்றவர் அப்போது தான் அவள் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறை கவனித்தார்.

“மெல்லினா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா. எங்களுக்கெல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை”

“அக்கா திடிர்ன்னு தான் முடிவாகிடுச்சு. யாருக்கும் சொல்லலை சிம்பிளா தான் கல்யாணம் நடந்துச்சுக்கா”

“மாப்பிள்ளை என்ன பண்றார்??”

“இங்க தான் இருக்கார்” என்றவள் அவள் வீட்டின் வாயிலில் நின்றிருந்த ஆத்திரேயனுக்கு கையை காட்ட அவளருகே வந்தான் அவன்.

“இவங்க தான்” என்று அவரிடம் சொன்னவள் “இவங்க சித்ராக்கா பக்கத்து வீட்டுல இருக்காங்க. திருவல்லிக்கேணி எஸ்ஐ தியாகுவோட வைப்”

“ஓ!!” என்றவன் அவரைப் பார்த்து லேசாய் புன்னகைத்தான்.

உள்ளிருந்து அப்பெண்ணின் கணவர் வேலைக்கு செல்ல கிளம்பி வர ஆத்திரேயனை கண்டதும் சல்யூட் வைத்தார் அவர். “சார் நீங்க எங்க இங்க??”

“என்னோட வைப் கூட வந்தேன்” என்று அவன் மெல்லினாவை காட்ட ஆச்சரியமாய் பார்த்தவர் வேறொன்றும் கேட்கவில்லை “வாழ்த்துகள்” என்று கூறி விடைப்பெற்று கிளம்பிவிட்டார்.

“அக்கா சாவி கொடுத்து வைச்சிருந்தேன் போய் வாங்கிட்டு திங்க்ஸ் எல்லாம் எடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்”

“இனிமே நீ இங்க இருக்க மாட்டியா” என்றவர் “மாமியார் வீட்டில தான் இருக்கணும்ல. சரிம்மா நீ போயிட்டு வா, கிளம்ப முன்னாடி ஒரு எட்டு வந்திட்டு போ” என்றவர் ஆத்திரேயனுக்கும் அழைப்பு விடுத்து அவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

“லேடிஸ்ன்னா கதை பேசுவாங்கன்னு தெரியும். நீ அதெல்லாம் செய்ய மாட்டேன்னு நினைச்சேன். நிறுத்தி நிதானமா கதை பேசிட்டு இருக்க” என்றான் ஆத்திரேயன்.

அவன் சொன்னதை கண்டுக்கொள்ளாது சாவியை வாங்கிக் கொண்டு வந்தவள் கதவை திறக்க உள்ளே சென்றாள். ஆத்திரேயனும் பின்னோடு சென்றான். மூன்று அறைகள் கொண்ட வீடு அது.

ஹால், சமையலறை, குளியலறையுடன் சேர்ந்த படுக்கையறை. “உட்காருங்க” என்ற மெல்லினா சமையறைக்குள் நுழைந்தாள். அவள் பாத்திரத்தை உருட்டும் சத்தம் கேட்டு ஆத்திரேயன் எழுந்து வந்தான். ‘அச்சச்சோ பாத்திரம் பண்டம் எல்லாம் மூட்டை கட்டிட போறா’ என்ற எண்ணத்தோடு உள்ளே சென்றான்.

அவளோ ஏதோ சமைத்துக் கொண்டிருந்தாள். “என்ன செஞ்சிட்டு இருக்கே நீ??” என்றான் சற்றே கோபமான குரலில்.

“நீங்க டிபன் சாப்பிடலை அதான் செஞ்சிட்டு இருக்கேன். எனக்கும் பசிக்குது” என்றாள். ஆத்திரேயனுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. “ஒரு ஐஞ்சு நிமிஷம் ரெடியாகிடும்” என்றவள் சேமியா உப்புமா செய்திருந்தாள்.

‘இதை செய்யறதுக்கு தான் உள்ளே போனாளா, இதை இவ செய்யாமலே இருந்திருக்கலாம்’ என்று பாவமாய் பார்த்தான் ஆத்திரேயன். “சாப்பிடுங்க” என்று சொல்லி அவனுக்கு ஒரு தட்டில் பரிமாறினாள். சாப்பிட ஆரம்பித்தவனுக்கு பசியும் புரிந்தது உணவின் ருசியும் புரிந்தது அதைவிட அதை அன்பினால் பரிமாறிய மனைவியின் செயலும் அவனை உருகச் செய்திருந்தது.

அவளைப் பார்த்துக் கொண்டே தான் சாப்பிட்டு முடித்தான். அவன் பார்வையை உணர்ந்தாலும் நிமிர்ந்து அவனை பார்க்காது உணவிலேயே கவனத்தை வைத்திருந்தாள் மெல்லினா.

சாப்பிட்டு கை கழுவி வந்தவள் படுக்கையறைக்கு சென்றாள். “அப்புறம் இதான் பெட் ரூமா” என்று உல்லாசமாய் சிரித்தவாறே மெல்லினாவை பார்த்து கேட்டான் ஆத்திரேயன்.

“இது பாத்ரூம் உங்களுக்கு தெரியாதா??” என்று அவள் பதில் கொடுக்க இவன் முகம் போன போக்கை சொல்லவும் வேண்டுமா.

“போடி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்த கட்டிலில் அமர்ந்துக் கொண்டான். மெல்லினா அங்கிருந்த ஷெல்பில் இருந்த அவள் துணிமணிகளில் அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்து ஒரு பையில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.

சும்மாயிருந்த ஆத்திரேயனின் பார்வை மனைவியின் நெளிவு சுளிவுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. “மெல்லினா” என்றவனது மூச்சுக்காற்று அவள் பின்னே உணரவும் திடுக்கிட்டு திரும்ப ஆத்திரேயன் அவள் இடையோடு கைக்கொடுத்து அணைத்திருந்தான் அவளை.

மெல்லினாவினால் அவன் பார்வையை உணர முடிந்தது. “உன்னை நான் ரொம்ப லேட்டா பார்த்திட்டேன். ஒரு இருபது இருபத்திரண்டு வயசுலவே பார்த்திருக்கக் கூடாதா. இந்நேரம் நமக்கு பெரிய பிள்ளையே இருந்திருக்கும்” என்று சொல்ல மெல்லினாவின் விழிகளில் ஈரம்.

“என்னாச்சு??” என்று அவன் கேட்க எப்போதும் போல மௌனம் சாதித்தவளை பார்த்தவனுக்கு கோபம் வர அப்படியே அவளை உதறிவிட்டு வெளியே சென்றுவிட்டான் அவன்.

“எது கேட்டாலும் பதில் சொல்றதில்லை அப்படி என்ன தான்டி உன் மனசுல இருக்கு எதையும் சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா நிக்கறே. உன்னை மாதிரி ஒரு அழுத்தக்காரியை நான் பார்த்தேயில்லைடி” என்று வெளியில் கத்திக் கொண்டிருந்தான்.

மெல்லினா சிறிது நேரத்தில் பையோடு வர கதவை பூட்டிக்கொண்டு பக்கத்தில் வீட்டில் சொல்லிக்கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.

—————-

“இன்னைக்கு என்ன மீட்டிங்ன்னு தெரியும்ல” என்று ஆரம்பித்தார் டிஐஜி.

“எஸ் சார்”

“ஓகே ஒன் பை ஒண்ணா வருவோம். என்னென்ன கேஸ் எல்லாம் ரொம்ப நாளா பெண்டிங் இருக்கு” என்றவர் ஒவ்வொருவராய் கேட்டுக் கொண்டிருந்தார்.

அந்த மீட்டிங் ஹால் முழுதும் நெறைய தலைகள். முக்கியமான மீட்டிங் அங்கு நடந்துக் கொண்டிருந்தது. வெகு நாட்களாய் முடிக்காத கேஸ் பற்றிய வாதமும், விவாதமும் தான் நடந்தது.

சிலரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தார் டிஐஜி ஏன் இன்னும் முடிக்கவில்லை என்று. எல்லோரையும் போல ஆத்திரேயனின் முறையும் வந்தது. ஐஜியும் அங்கு தானிருந்தார். 

“அந்த தயாளன் கேஸ் ஏன் இன்னும் முடிக்கலை ஆத்திரேயன்” என்று கேட்க இவன் அமைதியாயிருந்தான்.

“என்ன ஆத்திரேயன் அவர் கேட்கறார் நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ஆன்சர் பண்ணுங்க” என்றார் ஐஜி.

“நீங்க தானே அந்த ஏரியா கண்ட்ரோல். கேஸ் என்ன லெவல்ல இருக்குன்னு பார்க்க மாட்டீங்களா. எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க”

“சார் இதுவரைக்கும் எந்த துப்பும் கிடைக்கலை. கைரேகை கூட தயாளன், அப்புறம் அந்த வேலைக்காரன்னு வீட்டுக்கு ரெகுலரா வந்து போனவங்களோட கைரேகை தான் கிடைச்சுது”

“ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்க்யூஸஸ். எனக்கு இந்த கேசை முடிச்சாகணும். ஐபிஎஸ் படிச்சுட்டு வந்திட்டா எல்லாம் தெரியும்ன்னு இருக்காதீங்க. கொஞ்சமாச்சும் அறிவை யூஸ் பண்ணுங்க”

“செத்தது நம்ம டிப்பார்ட்மென்ட் ஆளு. இதுவரைக்கும் அது கொலையா தற்கொலையான்னு கூட நீங்க கண்டுப்பிடிக்கலை. அப்படி என்ன தான் இந்த ஒரு மாசமா விசாரிச்சீங்க நீங்க” என்று கடிந்தார் ஐஜி.

இதுவரை அவரிடம் இவ்வளவு மோசமாக அவன் திட்டு வாங்கியதேயில்லை. கணவன் திட்டு வாங்குவதை வேதனையோடு பார்த்திருந்தாள் மெல்லினா. அவன் திட்டு வாங்க தானும் ஒரு காரணம் என்று அவள் மனசாட்சி குத்தி குடைந்தது அவளை. 

சரியாய் ஆத்திரேயனின் பார்வையும் அவளை நோக்கியே இருந்தது. எனக்கு தெரியும் என்பது போல் இருந்தது அந்த பார்வை. மற்றவர்களை விட மிக அதிகமாய் திட்டு வாங்கியிருந்தது ஆத்திரேயனே. அவனுக்கு ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. 

அவன் அதற்குள் கேசை முடிக்கவில்லை என்றால் வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்றும் அவனை சஸ்பென்ட் செய்துவிடுவதாகவும் கடுமையான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆத்திரேயனுக்கு யார் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவில்லை. காலையில் ஆரம்பித்திருந்த மீட்டிங் மாலை ஆகியிருந்தது முடிவடைவதற்கு. மெல்லினா ஆத்திரேயனின் பின்னோடு வந்தாள்.

அவனுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை. அவன் வண்டியின் அருகே சென்று நிற்க பின்னால் நின்றிருந்தவளை அப்போது தான் கவனித்தான். என்ன என்பது போல அவன் பார்க்க “ஒண்ணும்மில்லை” என்றாள்.

“புதுசா நீ என்ன சொல்லிட போறே, எப்பவும் போல ஒண்ணும்மில்லை அவ்வளவு தானே போ. எனக்கு எதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைக்காத, எல்லாம் தெரிஞ்சு தான் பேசாம இருக்கேன்” என்றவன் வண்டியில் ஏறி அமர்ந்து கோபம் மொத்தத்தையும் வண்டியில் காண்பித்து அவளைத் தாண்டிக் கொண்டு சென்றிருந்தான்.

அவன் சென்றதும் கீழே எதுவோ விழுந்திருக்க குனித்து அதை கையில் எடுத்து பார்த்தவள் பார்த்துக் கொண்டேயிருந்தாள் அந்த காது தொங்கட்டானை.

Advertisement