Advertisement

8

“அம்மா எனக்கு பில்டர் காபி தான் வேணும் அப்பாவுக்கும் அதானே பிடிக்கும். அதை போடச் சொல்லுங்க” என்றான் ஆத்திரேயன்.

மெல்லினா திரும்பி அவனை முறைத்தாள். “டேய் காபித்தூள் இல்லைடா. இன்னைக்கு இதே அட்ஜஸ்ட் பண்ணி குடி, புதுசு புதுசா கேட்பான்”

“என்கிட்ட காபித்தூள் இருக்கு”

“உன்கிட்டயா எப்படி??”

“அம்மாக்கு கொடுக்க வாங்கிட்டு போனேன். எனக்கும் ஒரு கால்கிலோ சேர்த்து வாங்கி வைச்சேன். அது என் பேக்ல தான் இருக்கு” என்றவள் சென்று அதை எடுத்து வந்தாள்.

“பில்டர்??”

“அதெல்லாம் வேணாம் நீ சாதாரணமாவே காபி போடு” என்றார் வாசவி.

“ம்மா அவளுக்கு பில்டர் காபி எல்லாம் போடத் தெரியுமான்னு டெஸ்ட் பண்ண வேண்டாமா. நீங்க தான் நல்லா போடுவீங்க உங்களை மிஞ்சிருவாளா அவன்னு பார்க்க வேணாம்” என்றவனை வெளிப்படையாகவே முறைத்தாள்.

“எல்லாம் போடுவா நீ முதல்ல இங்க இருந்து போ அவ வேலை பார்க்கட்டும். ஒரு நாளும் கிட்சன் பக்கம் வந்ததில்லை, இன்னைக்கு காலையிலவே வந்து நிக்கறான்” என்று முனகிக்கொண்டே அவர் அங்கிருந்து நகர ஆத்திரேயனும் சென்றுவிட்டான்.

இதற்கு மேல் நின்றால் தேவையில்லாது மெல்லினா தான் பேச்சு வாங்குவாள் என்று புரிந்து போனது அவனுக்கு. அவன் நகரவும் அவள் தன் வேலை முடித்து காபியை ஊற்றிக் கொண்டிருக்க வாசவி குளித்து வந்திருந்தார்.

“முடிஞ்சதா??”

“ஆச்சு”

“கொடு” என்றவர் தானே எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். மெல்லினா தனக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு அவள் தங்கியிருந்த அறைக்கு வர பார்கவி விழித்திருந்தாள்.

“உங்களுக்கு காபி எடுத்திட்டு வரவா, நீங்க தூங்கிட்டு இருந்தீங்களேன்னு எனக்கு மட்டும் கொண்டு வந்தேன்” என்றாள் அவள்.

“நான் இப்போ தான் எழுந்தேன் மெல்லினா. போய் ப்ரெஷ் பண்ணிட்டு குளிச்சுட்டு வந்து ஒரேதா குடிச்சுக்கறேன். அத்தைக்கு காலையில எழுந்து குளிச்சிடணும், இல்லைன்னா எதாச்சும் சொல்வாங்க” என்று தன் போக்கில் சொல்லிக்கொண்டே அவள் குளியலறைக்குள் விரைந்தாள்.

வெளியில் யாரோ கதவைத் தட்ட மெல்லினா எழுந்து சென்று கதவை திறக்க ஆத்திரேயன் நின்றிருந்தான். “காபி ரொம்ப சூப்பர்”

“அம்மாவை பில்டர் காபி போடச்சொன்னா தண்ணியா போட்டிருவாங்க. இது அப்படியே அய்யர் ஹோட்டல் பில்டர் காபி மாதிரியே இருக்கு. இதெல்லாம் எங்க கத்துக்கிட்ட”

“சமைக்கிறதுக்கு அம்மாகிட்ட கத்துக்கிட்டேன். அங்க வீட்டில எப்பவும் டீ தான் குடிப்போம். சென்னை வந்து தான் காபி அதிகம் குடிச்சு பழகினேன். ஒரு டைம் பில்டர் காபி வாங்கிட்டு வந்தாங்க. எப்படி போடுறதுன்னு நெட்ல பார்த்தேன். அப்படியே கத்துக்கிட்டேன்” என்றாள்.

அதற்குள் பார்கவி குளித்து வெளியே வந்திருக்க “என்ன ஆதி காலையிலவே இங்க விசிட்”

“சும்மா தான் அண்ணி” என்றவன் வெளியேறப் போக “நான் காபி குடிக்கப் போறேன், நீங்க உங்க பொண்டாட்டிகிட்ட பேசிட்டு இருங்க” என்று அவள் நகர்ந்துவிட இவன் கட்டிலில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

“நீ எத்தனை நாள் லீவு சொல்லியிருக்க”

“இந்த வாரம் மட்டும் தான் லீவு. திங்கள்கிழமையில இருந்து ஆபீஸ் போகணும்” என்று அவள் சொல்லவும் வாசவி உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“என்னது வேலைக்கு போறியா அதெல்லாம் வேண்டாம் வேலையை விட்டிரு” என்றார் அவர்.

“அம்மா என்ன பேசறீங்க நீங்க” என்று முறைத்தான் ஆத்திரேயன்.

“என்னடா பேசினேன் சரியா தானே சொன்னேன்”

“என்ன சரியா சொன்னீங்க நீங்க. ஐபிஎஸ் ஆகுறது என்ன ஈசின்னு நினைச்சீங்களா. அதுக்கு எவ்வளவு படிக்கணும், எவ்வளவு கஷ்டப்படணும்ன்னு உங்களுக்கு தெரியுமா”

“அதுக்கு தான் எதுவும் வேணாங்கறேன்”

“நீங்க விதண்டாவாதம் பண்றீங்க, அவ வேலைக்கு போவா”

“எல்லாரும் வேலைக்கு போயிட்டு நான் மட்டும் வீட்டில தனியா இருக்கறதா”

“நீங்களும் வேணா வேலைக்கு போங்க”

“ஆதி”

“அப்பா தான் ரிடையர் ஆகிட்டார்லம்மா. திலோ இங்க தான் இருக்கா பாப்பா இருக்கா உங்களுக்கு அது போதாதா”

“ஏன் நீ வாயை திறந்து சொல்ல மாட்டியா எதுவும்” என்று மருமகளை நோக்கினார் அவர்.

“அம்மா என் முடிவு தான் அவளதும்” என்று அவன் சொல்லவும் அவனை நோக்கி நான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் கையை காட்டினாள் மெல்லினா.

“நான் கண்டிப்பா வேலைக்கு போவேன்” என்றாள் அவர் முகம் பார்த்து அழுத்தந்திருத்தமாக.

அவளின் அந்த தோற்றத்தில் அவருக்கு என்னவோ போலிருக்க சற்று அமைதி அவரிடத்தில். “பெரியவங்க பேச்சை கேட்பேன்னு உங்கம்மா சொன்னாங்க” என்று அவர் தன் ஆயுதத்தை எடுத்தார்.

“கண்டிப்பா கேட்பேன் நான் இந்த வேலையில இருக்கணும் அப்படிங்கறது எங்கப்பாவோட கடைசி ஆசை. எங்கம்மாவும் அதைத்தான் விரும்புவாங்க, விரும்பறாங்க. இந்த வேலையை நான் ஏனோ தானோன்னு செய்யலை. ரொம்பவும் விரும்பி சேர்ந்திருக்கேன் அதை யாருக்காகவும் விட மாட்டேன்”

“யாரு என் பேச்சை கேட்கறா, எல்லாம் அவங்கவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க. கூடப்பிறந்தவன் சொன்னான்னு நானே என் தலையில மண்ணை அள்ளி போட்டுக்கிட்டேன்” என்று புலம்பிக்கொண்டே வெளியேறினார் அவர்.

ஆத்திரேயன் எதுவும் சொல்லாமல் எழுந்துச் செல்ல மெல்லினா தனித்துவிடப்பட்டாள். அவள் உயிருக்கு உயிராய் நினைத்து தான் இந்த வேலையில் சேர்ந்திருந்தாள். யாருக்காகவும் அதை அவள் விடுவதாயில்லை.

பார்கவி சிறிது நேரத்தில் உள்ளே வந்தாள். “வா மெல்லினா டிபன் வந்திடுச்சு சாப்பிடலாம்” என்று அழைக்க “எனக்கு பசியில்லை” என்றாள்.

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது எழுந்து வா” என்று மற்றவளின் கையை பிடித்து எழுப்பி அழைத்துச் சென்றாள் அவள்.

“உட்காரு” என்று அவள் டைனிங் டேபிளில் அமர வைத்துவிட்டு உள்ளே செல்ல அப்போது தான் அருகிருந்தவனை பார்த்தாள். ஆத்திரேயன் இவள் முகத்தை ஆராய்ந்தவாறே அமர்ந்திருந்தான்.

“சாப்பாடு இங்க இல்லை” என்றுவிட்டு அவள் திரும்பிக் கொள்ள சிரிப்பு வந்தது அவனுக்கு.

“தெரியும்”

“அப்போ எதுக்கு பார்க்கறீங்க??”

“நான் ஒண்ணு கேட்கறேன் அதுக்கு நீ பதில் சொல்லு” என்று அவன் எப்போதும் போல் ஆரம்பிக்க “இது ஒண்ணும் போலீஸ் ஸ்டேஷன் இல்லையே” என்று சொல்லி அவனுக்கு பல்பு கொடுத்தாள்.

‘எவ்வளவு பேரை தலைகீழா தண்ணி குடிக்க வைச்சிருக்கேன். இவகிட்ட என்னால எதுவுமே திரும்பி பேச முடியலையே. பொண்டாட்டின்னா அப்படித்தான் இருப்பாங்களோ’

‘எதுக்கும் நம்ம அண்ணன்கிட்ட கேட்கணும், வேணாம் வேணாம் அவன் நம்மளை தப்பா நினைச்சிட்டா, அதான் நித்தேஷ் இருக்கானே அவனை கேட்போம். ஆனாலும் இவளுக்கு இவ்வளவு ஆகாது. ஒண்ணு சொன்னாலும் நறுக்குன்னு சொல்லி கொட்டு வைக்குறா’ என்று மனதிற்குள் மனைவியைப் பற்றி பெருமையாய்(?) நினைத்துக் கொண்டான்.

இருவருக்கும் பார்கவி பரிமாற திலோத்தமாவும் அவர்கள் அருகே வந்து அமர்ந்தாள். “நீங்களும் சாப்பிடுங்க” என்றாள் மெல்லினா.

“நான் அப்போவே சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க”

“குட்டி என்ன செய்யறாங்க”

“நைட் எல்லாம் என்னை வேலை வாங்கிட்டு பயப்புள்ள இப்போ தான் தூங்குது” என்றாள் அவள்.

“பேசாம சாப்பிடு மெல்லினா” என்று ஒரு அதட்டு போட்டாள் பார்கவி.

“அதெல்லாம் அவ கேட்க மாட்டா அவ இஷ்டத்துக்கு தான் செய்வா” என்று வந்து நின்றார் வாசவி.

ஆத்திரேயன் நிமிர்ந்து அவன் அன்னையை முறைத்தான். அதையெல்லாம் அவர் கண்டுக்கொள்ளவே இல்லை. “சாப்பிட்டு எல்லாருமா கோவிலுக்கு போயிட்டு வருவோம்” என்றார்.

“நாளைக்கு தானே போகணும்ன்னு சொன்னீங்க”

“ஏன் இன்னைக்கு போயிட்டு வந்தா ஆகாதா” என்றார்.

“இதென்ன பேச்சுன்னு நீங்க பேசிட்டு இருக்கீங்கம்மா. உங்களுக்கு என்ன பிரச்சனை இப்போ” என்று நேரடியாகவே கேட்டுவிட்டான் ஆத்திரேயன்.

“என்னக்கென்னப்பா பிரச்சனை நீ தான் பிரச்சனையை கட்டிட்டு வந்திருக்க” என்று மறைமுகமாக மெல்லினாவை தாக்கினார் அவர்.

திருமணமாகி ஒரே நாளிலேயே இப்படியொரு பிரச்சனையை அவன் எதிர்பார்க்கவில்லை. மனைவிக்கு கணவனை பிடிக்கவில்லை அவளை திருப்தி படுத்த முடியவில்லை, இப்படியான பிரச்சனைகளை கூட சரி செய்து விட முடியும் போலும். ஆனால் மாமியார் மருமகள் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று அவனுக்கு புரியவில்லை.

கொடுமைப்படுத்தினால் தான் என்பதில்லை. ஒருவருக்கொருவர் பிடிக்காமல் ஒரே வீட்டில் இருப்பதும் கூட கொடுமை தான். இங்கு மெல்லினா அவரை எதிர்க்கவில்லை அது மட்டுமே அவனுக்கு ஒரே ஆறுதல்.

அவனுக்கு தெரியவில்லை தான் அவளுக்காய் பேசினால் அன்னையின் பிடிவாதம் கூடிக்கொண்டே தான் செல்லும் என்று. மெல்லினாவிற்க்காய் ஒவ்வொரு முறையும் அவனே தான் பேசினான்.

“அம்மா” என்றவன் பாதி சாப்பாட்டிலேயே எழுந்துக்கொள்ள சுசிந்தரம் மனைவியை கடிந்தார். “சாப்பிடும் போது பேசக்கூடாதுன்னு சொல்றது நல்ல விஷயம் தான்”

“அதே போலத்தான் சாப்பிட்டு இருக்கும் போது நீ பேசி அவனை சண்டைக்கு இழுக்கறதும் தப்பு தானே. நீ பண்ணது மட்டும் என்ன வாசவி, பாரு அவன் சாப்பிடாமலே போறான்” என்றார் அவர்.

ஆத்திரேயன் எழுந்துவிட்டிருந்ததால் மெல்லினாவும் எழுந்திருந்தாள். “மெல்லினா நீ உட்காரு”

“இல்லைக்கா வேணாம்”

“நீ ஆதியை சமாதானப்படுத்தி சாப்பிட கூட்டிட்டு வர்றியா”

“வருவாரா”

“நீ கூப்பிடு” என்றாள் பார்கவி.

மெல்லினா கை கழுவி ஆத்திரேயன் இருந்த அறை கதவை தட்டினாள். வாசவி செல்லும் அவளைத்தான் முறைத்திருந்தார்.

“யாரும் கொஞ்ச நேரத்துக்கு வராதீங்க இங்க” என்று கதவை திறக்காமலே கத்தினான் அவன்.

“விடும்மா அவனா வருவான்” என்றார் மாமனார்.

மெல்லினா மீண்டும் ஒரு முறை கதவை தட்டினாள். கோபமாய் கதவை திறந்தவன் மெல்லினாவை கண்டதும் தாமத்தித்தான்.

“சாப்பிட வாங்க”

Advertisement