Advertisement

“இது முதல் தரம் அதனால விட்டிருவோம்”

“புரியலை எனக்கு”

“நம்ம வீடுன்னு தான் இனி சொல்லணும்” என்று அவன் சொல்ல இதழில் புன்னகை ஒட்டிக் கொண்டது அவளுக்கு.

“சரி சொல்லுங்க”

“நம்ம வீடுன்னு சொல்லு” என்று பிடிவாதமாய் அதிலேயே நின்றான் அவன்.

“சரி நம்ம வீடு எங்க இருக்கு??”

அவன் பதில் சொல்லும் முன் “மைலாப்பூர்ல தான் இருக்கீங்களா இன்னும்” என்று அவள் கேட்கவும் ஆச்சரியத்தோடு அவளை ஏறிட்டான் அவன்.

“உனக்கெப்படி தெரியும்” என்று அவன் கேட்கவும் உள்ளுக்குள் அதிர்ந்தவள் சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு “எங்கம்மாவோட போன் நம்பர் உங்களுக்கு தெரியும் போது உங்க வீட்டு அட்ரஸ் எனக்கு தெரியாம போகுமா என்ன” என்று சமாளித்திருந்தாள்.

“உங்கம்மா சொன்னப்போ நான் நம்பலை. நிஜமாவே நீ அழுத்தமான ஆளு. உன்கிட்ட எந்தவொரு விஷயத்தையும் வாங்க முடியாது, அது நீயா சொல்லாத வரை” என்றவன் “உங்க வீடுன்னு சொல்றதை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கோ. முதல்ல கஷ்டமா தான் இருக்கும் அப்புறம் சரியாகிடும்”

“என் தங்கச்சி கல்யாணம் ஆனா புதுசு மாமா வீடுன்னு சொல்லிட்டு இருந்தா அடுத்த ஒரு மாசத்துல எங்க வீடுன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா”

“அப்போ எனக்கும் ஒரு மாசம் ஆகும் தானே” என்று இவள் சொல்ல ஆத்திரேயனோ ‘ஆத்தி இவகிட்ட ரொம்ப கவனமா இருக்கணும் போலே. நம்ம பேசுறதை வைச்சே நம்மளை மடக்குறாளே. இருந்தாலும் இவ்வளவு அழுத்தம் ஆகாது’ என்று தான் எண்ணிக்கொண்டான்.

ஆத்திரேயனின் வீடும் வந்துவிட பார்கவி மணமக்கள் கழற்றி வைத்திருந்த மாலையை எடுத்து வந்து கொடுக்க இருவரும் அதை அணிந்துக் கொண்டனர். திலோத்தமா வந்து ஆரத்தி எடுக்க “நீ எப்போ இங்க வந்தே??”

“நான் தான் மாமா கூடவே வந்திட்டேனே. நாங்க எல்லாம் பிளைட்ல வந்தோம்” என்று சொல்லிக்கொண்டே அவள் ஆர்த்தி எடுக்க இவர்களுக்கு முன்பே உள்ளே நின்றிருந்த வாசவியை பார்த்து முறைத்தான் ஆத்திரேயன்.

அவரோ வேறு எங்கோ பார்வையை திருப்பிக் கொண்டார். உள்ளே வந்ததும் “ஏன்மா உங்களுக்கு தான் முதல்லயே தெரிஞ்சிருக்கே அப்புறம் ஏன் கார்ல வந்தோம். பேசாம பிளைட் புக் பண்ணி வந்திருக்கலாம்ல”

“எனக்கென்னடா தெரியும் நேத்து தானே எங்க சித்தி சொன்னாங்க. உடனே எப்படி பிளைட் புக் பண்ண முடியும். உங்க மாமா திலோவுக்கும் சேர்த்து முதல்லையே பண்ணிட்டார், அதான் அவ அவங்ககூட வந்திட்டா” என்று முடித்தார் அவர்.

“என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல நான் பிளைட் டிக்கெட் போட்டிருப்பேன்ல” என்றான் அவன் ஆதங்கமாய்.

“அதான் இப்போ வீட்டுக்கே வந்தாச்சுல விடுடா. மத்த சடங்கை பார்ப்போம்” என்றுவிட்டு உள்ளே சென்றவர் மகளின் கையில் பால் பழம் கொடுத்துவிட்டார்.

“பார்கவி முதல்ல அவளை சாமி ரூமுக்கு கூட்டிட்டு போய் விளக்கேத்த சொல்லு” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிட்டார்.

“வா மெல்லினா” என்று பார்கவி அழைக்க அவள் எழுந்து சென்றாள்.

“ஆதி நீங்களும் வாங்க” என்று அவனையும் அழைத்தாள் அவன் அண்ணி.

பார்கவி உள்ளே சென்று அனைத்தும் தயாராய் வைத்து தீப்பெட்டியை மெல்லினாவிடம் நீட்டினாள். “நீ ஏத்து, ஆதி நீ கூட இரு. ரெண்டு பேரும் சாமி கும்பிட்டு வாங்க” என்றவள் அந்த சிறிய பூஜையறையில் இருந்து வெளியே வந்து வாயிலில் நின்றுக் கொண்டாள்.

மெல்லினா காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டு இறைவன் முன்பு கண் மூடி பிரார்த்தித்து நின்றாள். ஆத்திரேயன் எப்போதும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் கண் மூடி நிற்க மாட்டான்.

இப்போதும் அவன் விழி திறந்து பார்த்திருக்க மெல்லினா தீவிர வேண்டுதலில் இருப்பது புரிந்தது. அவள் விழிக்கும் வரை அங்கேயே நின்றிருக்க பத்து நிமிடம் கழித்து நிதானமாய் கண் திறந்தாள் அவள்.

“வேண்டுதல் எல்லாம் முடிஞ்சதா??”

“ஹ்ம்ம்”

“போகலாமா??” என்று கேட்க தலையசைத்தாள். இருவருக்கும் பாலும் பழமும் புகட்டப்பட்டது. இரவு சாப்பாடு வெளியில் இருந்து வாங்கி வந்திருக்க முதலில் மணமக்களை சாப்பிட வைத்தனர்.

நேரம் இரவு பத்து மணியை நெருங்கி இருக்க ஆத்திரேயன் அவன் அறைக்குள் சென்றான். “என்னடா இது இங்க ஒரு செட்டப்பும் பண்ணலை, அண்ணனுக்கு நாம தானே எல்லாம் பண்ணோம். ச்சே வர வர இந்த வீட்டில யாருக்கும் பொறுப்பே இல்லை” என்று வாய்விட்டு முனகிக் கொண்டிருந்தான்.

“சரி ஒரு குளியலை போட்டிருவோம்” என்று உள்ளே சென்றவன் குளித்துவிட்டு வெளியில் வர ஆதவன் கட்டிலில் படுத்திருந்தான்.

“டேய் அண்ணா நீ என்ன இங்க படுத்திருக்க”

“அப்படித்தான் ஒரு ரெண்டு மூணு நாளைக்கு”

“என்னது??” என்று அதிர்ந்தான் மற்றவன்.

“யார் சொன்னா??”

“அம்மா” என்றவன் பதிலை கேட்டதும் கதவை திறந்துக் கொண்டு வெளியில் சென்றவன் அன்னையை தேட அவர் சமையலறையில் நின்றிருந்தார்.

“ம்மா” என்றான்.

“என்ன ஆதி”

“இன்னைக்கு என்ன நாள்”

“உன்னோட கல்யாண நாள்”

“அப்போ ஏன் அப்படி செஞ்சீங்க??”

“என்னடா செஞ்சேன்”

“மெல்லினாவை என் ரூம்க்கு ஏன் அனுப்பலை” என்று வாய்விட்டு அவன் கேட்டே விட தலையில் அடித்துக் கொண்டார் வாசவி.

“டேய் அம்மான்னு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்காடா உனக்கு” என்று திட்டியவர் “இன்னைக்கு நாம வீட்டுக்கு வர்றதுக்கு நேரமாகிடுச்சு. தவிர நல்ல நேரம் எதுவும் இப்போ இல்லையாம். ரெண்டு நாள் கழிச்சு தான் நாள் குறிச்சு கொடுத்திருக்காங்க” என்றார் அவர்.

“சரி அதுக்காக அவளை உள்ள அனுப்ப மாட்டீங்களா?? நான் என்ன பண்ணிடப் போறேன் அவளை”

“டேய் டேய் விவஸ்தை கெட்டவனே. போடா பேசாம பாலுக்கு காவல் பூனை கதையா செய்ய சொல்றான்” என்றவர் தன் போக்கில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

“அம்மா பாலுக்கு காவல் பூனையா எதுக்கும்மா அப்படி சொன்னீங்க”

“பாலுக்கு காவலா பூனையை வைச்சா என்ன நடக்கும்”

“என்ன நடக்கும் அது பாலை குடிச்சிட்டு போகும் அவ்வளவு தான்”

“அதை தான் சொல்ல வந்தேன்” என்றுவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அவர் சென்றதும் தான் அவர் சொன்ன கருத்தை உள்வாங்கியவன் “டேய் ஆதி டூ பேட்டா அம்மா உன்னை ரொம்ப அசிங்கப்படுத்திட்டாங்க” என்று அவனே சொல்லிக் கொண்டான்.

செல்லும் அன்னையின் பின்னே ஓடினான். “அம்மா மெல்லினா எங்கே” என்று.

“இந்த ரூம்ல இருக்கா” என்று அவர் கைக்காட்டவும் அறைக்கதவை மெல்ல தட்டிவிட்டு திறந்தான்.

மெல்லினா கட்டிலில் அமர்ந்திருக்க பார்கவி அவள் நகைகளை கழற்ற உதவி புரிந்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லு ஆதி” என்றார் பார்கவி.

“மெல்லினாகிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவன் சொல்லவும் மற்றவளை பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்தவள் எழுந்து வெளியே செல்லப் போக “நீங்க இருங்க அண்ணி” என்றவன் “மெல்லினா வா” என்று சொல்ல எழுந்து வந்தாள் அவள்.

“சொல்லுங்க”

“வெளிய வா” என்று சொல்லவும் வெளியே வந்தாள்.

“உன்னோட திங்க்ஸ் எல்லாம் கார்ல இருக்கு. எடுத்து கொடுக்க மறந்திட்டேன், கொஞ்சம் இரு” என்று சொல்லி கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றவன் அங்கிருந்த பெட்டிகளை எடுத்து உள்ளே வைத்தான்.

அவனதும் அவளதும் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது. அவரவர் பெட்டிகளை அவரவர் எடுத்துக் கொண்டு இறங்கியிருந்தனர் அப்போது.

பெரிய பெட்டி ஒன்றை அவள் முன் கொண்டு வந்து வைத்தான். அவள் அவனை நிமிர்ந்து கேள்வியாய் பார்க்க “இது அத்தை கொடுத்தது. நீ நிறைய துணி எடுத்திட்டு வர மாட்டேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு”

“தவிர உன்னை பொண்ணு பார்க்கன்னு வரச்சொல்லி நம்ம கல்யாணமே முடிஞ்சிடுச்சுல. அதான் அத்தையே உனக்காக எல்லாமே வாங்கி வைச்சிருக்கேன்னு சொன்னாங்க”

“நாம வீட்டுக்கு போயிருந்தா இதை அங்க வைச்சு உன்கிட்டவே கொடுத்திருப்பாங்க. அம்மா திடிர்ன்னு சென்னை போகலாம்ன்னு சொல்லவும் உன்னோட தங்கச்சியை அனுப்பி பெட்டியை எடுத்திட்டு வரச்சொல்லி இருக்காங்க”

“கிளம்பும் போது வண்டியில வைச்சதுனால சொல்ல மறந்துட்டேன்” என்றான் நீண்ட விளக்கமாய்.

“நீ போய் வேற டிரஸ் மாத்திக்கோ”

“ஹ்ம்ம்”

“எதுவும் பேசக்கூடாதுன்னு விரதம் இருக்கியா??”

“ஏன் அப்படி கேட்கறீங்க??”

“திட்டுறதுக்கு மட்டும் வாய் எட்டூருக்கு திறக்கறது இப்போ பேசச்சொன்னா ஹ்ம்ம் சரி அவ்வளவு தான் பேசுறது” என்று முறைத்தான் அவன்.

அவன் சொன்ன தினுசில் அவளுக்கு சிரிப்பு வந்தது. “சிரிக்காத இன்னைக்கு இல்லைன்னா என்ன நீ எப்படியும் என்கிட்ட தான் வரணும். நம்ம அத்துமீறல் கணக்கெல்லாம் அங்க வைச்சுக்கறேன்” என்று அவன் சொல்ல அவள் வாய்விட்டு சிரித்தாள்.

“ஹேய் சிரிக்காதடி எதுக்கு இப்படி கத்தி சிரிச்சு என் மானத்தை வாங்குறே”

“இல்லை முதல்ல எங்க வீட்டுல வைச்சுன்னு சொன்னீங்க. அப்புறம் இங்க வைச்சுன்னு சொன்னீங்க. கடைசில நீங்க சொன்னதுல ஒண்ணு மட்டும் நடந்துச்சு. நம்மளை வேற வேற ரூம்ல விடுவா போறாங்கன்னு சொன்னீங்க” என்றுவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்தாள் அவள்.

“போதும் நீ உள்ள போம்மா” என்றான் அவன்.

மறுநாள் காலையில் எப்போதும் போல ஐந்தரை மணிக்கெல்லாம் விழித்திருந்தாள் மெல்லினா. சுற்று முற்றும் பார்த்தவள் தன் ஷோல்டர் பேக்கில் இருந்த பேன்ட் சட்டையை எடுத்து மாற்றிக் கொண்டவள் சிறிது நேரம் யோகா செய்தாள்.

யோகா முடித்து குளித்து புடவையை கட்டிக்கொண்டு வெளியில் வர பொழுது நன்றாய் விடிந்திருந்தது. அலசிய துணியை அவள் இருந்த அறையின் பால்கனியிலேயே போட்டுவிட்டு வெளியே வந்தாள்.

யாரும் எழுந்திருக்கவில்லை போல. எதிரில் இருந்த அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்க வாசவி தான் வந்தார்.

“எழுந்திட்டியா??”

“ஹ்ம்ம்”

“காபி போட தெரியுமா??”

“ஹ்ம்ம்”

“பால் வெளிய மில்க் பாக்ஸ்ல இருக்கும் எடுத்திட்டு வந்து எல்லாருக்கும் காபி போடு” என்றார்.

“கிட்சன்??”

“வா” என்றவர் அவளுக்கு சமையலறையை காட்டினார். அவளுக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக் கொடுத்தவர் “போட்டு வை நான் குளிச்சுட்டு வந்திடறேன். உங்க மாமாக்கு எழுந்ததும் காபி வேணும். ஆதி எக்ஸர்சைஸ் பண்ணிட்டு வந்ததும் காபி தான் குடிப்பான்” என்றுவிட்டு அவர் நகர்ந்துவிட்டார்.

இவள் பாலை காய்ச்சிக் கொண்டிருக்க ஆத்திரேயன் அங்கு வந்தான்.

“ஹேய் இங்க என்ன பண்ணுறே??”

“காபி போடுறேன்”

“இங்க எது எது எங்கெங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா??”

“அது தெரிஞ்சுக்கறது பெரிய கஷ்டமா என்ன”

“உனக்கு நல்லா சமைக்கத் தெரியும்ன்னு உங்கம்மா சொன்னாங்க”

“ஹ்ம்ம் சமைப்பேன்” என்று இவள் பேசிக் கொண்டிருக்கும் போதே மூக்கு வேர்த்தாற் போன்று வாசவி அங்கு வந்து சேர்ந்தார்.

“இங்க என்னடா பண்ணுறே??”

“காபி கேட்க வந்தேன்மா”

“நீ என்ன அவனை வேடிக்கை பார்த்திட்டு இருக்க, உங்கம்மா சொன்னாங்க, நேர் பெரியவங்க பேச்சுக்கு மரியாதை கொடுப்பேன்னு. நான் உங்ககிட்ட காபி போடச்சொல்லி எவ்வளவு நேரமாச்சு. நீ இவன் கூட கதை பேசிட்டு இருக்க” என்று சிடுசிடுத்தார் அவர்.

“போட்டுட்டு தான் இருக்கேன்” என்றாள்.

Advertisement