Advertisement

7

“நீ தூங்கலையா??”

“எனக்கு தூக்கம் வரலை. நானும் தூங்கிட்டா நீங்க எப்படி வண்டி ஓட்டுவீங்க??”

“இப்போ ஓட்டுற மாதிரி தான்”

“எல்லாரும் தூங்கிட்டா உங்களுக்கும் தூக்கம் வரும்ல, போரடிக்கும் தானே”

“அப்போ என்ன செய்யலாம்” என்றான் அவள் வாயில் இருந்தே என்ன சொல்கிறாள் என்று பார்க்க.

“பேசிட்டு இருப்போம்”

“நாம ரெண்டு பேரும் பேசணுமா எனக்கு இப்போ பேசுற மூடே இல்லை” என்றவனது பார்வை அவளை கள்ளத்தனமாய் பார்த்தது.

“பாட்டு கேட்போமா??”

“ஹ்ம்ம் ஓகே”

“அப்போ பாட்டு போடுங்க”

“எல்லாரும் அசந்து தூங்கறாங்க, அவங்களை டிஸ்டர்ப் பண்ணுற மாதிரி போட வேண்டாம்”

“வெயிட்” என்றவள் தன் போனை கையில் எடுத்தாள்.

“இதுல போட்டாலும் சத்தம் கேட்குமே??”

“கொஞ்சம் இருங்க” என்றவள் அவள் கைப்பையில் இருந்த ஹெட்செட்டை எடுத்து அதில் மாட்டியவள் ஒன்றை அவனிடம் கொடுத்து ஒரு பக்கம் தன் காதில் மாட்டிக்கொண்டாள். இளையராஜாவின் மனதை வருடும் மெல்லிசைப் பாடல்களை யூடியூப்பில் தேடி எடுத்து போட்டுவிட்டாள்.

எப்போதும் ஆங்கிலப் பாடல்களும்,குத்துப்பாடல்களும் தான் விருப்பமாய் கேட்கும் ஆத்திரேயன் மனைவி போட்டிருந்த மெல்லிசைப் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு வரிகளும் அவனுக்காகவும் அவளுக்காகவுமே பாடியது போன்ற உணர்வு அவனுக்குள். அவன் பார்வை இப்போது அவள் முகத்தையும் தாண்டி பயணிக்க ஆரம்பித்தது.

கணவனாய் அவளை முழுதாய் பார்த்து ரசித்தான். அந்த பயணத்தில் அவனையும் அவளையும் தவிர வேறு யாருமே இல்லாதது போலத்தான் அவனுக்கு தோன்றியது. இடையில் சற்று டிராபிக் இருந்ததால் அவனால் மெல்லினாவை பார்க்க முடியாது சாலையில் கவனம் வைத்திருந்தான்.

மெல்லினா மெல்ல திரும்பி அவனையே தான் பார்த்திருந்தாள் இப்போது. திரும்பிப் பார்க்காது போனாலும் அவள் பார்வையை அவனால் உணர முடிந்தது. சட்டென்று திரும்பி அவன் பார்க்க அவனிடம் மாட்டிக்கொண்டாள்.

இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்திருக்க அவனால் வண்டியை ஒட்டவே முடியவில்லை. முயன்று தன் கவனத்தை சாலையில் வைத்தான்.

“எனக்கொரு உண்மையை சொல்லுவியா??” என்றவனது கேள்வியில் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“பார்த்தா என்ன அர்த்தம் நான் கேக்குறதுக்கு பதில் சொல்வியான்னு சொல்லு”

“கேளுங்க”

“நீ என்கிட்ட எல்லாமே சொல்லிட்டியா??”

“இல்லை”

“என்னை உனக்கு பிடிச்சிருக்கா”

அவளிடம் மௌனம் பதில் சொல்லாது வெளிப்புறம் வேடிக்கை பார்த்தாள். “நீயே உன்னையறியாம சொல்லிட்ட இருந்தாலும் உன் வாயால இப்போ அதை கேட்க நான் பிரியப்படுறேன்” என்று அவன் சொல்லவும் பார்வையை அவனை நோக்கி திருப்பினாள்.

“பிடிக்கும்” என்றாள் ஒற்றையாய்.

“எப்போல இருந்து??” என்ற அவனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவள். கண்கள் கலங்கியது அவளுக்கு அவனுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. ‘நான் என்ன தப்பா கேட்டுட்டேன்’ என்று தான் யோசித்தான்.

“மெல்லினா” என்று அவன் மென்மையாய் அழைத்த போதும் அவள் திரும்பாது போக மற்றொரு கையால் அவள் தாடையை பிடித்து தன் புறம் திருப்பினான். “நீ எதுவும் சொல்ல வேண்டாம் போதுமா இனிமே இதைப்பத்தி நான் கேட்கலை”

“உனக்கு எப்போ சொல்லணும்ன்னு தோணுதோ அப்போ நீயே சொல்லு” என்று அவன் சொன்ன போதும் கூட அவள் முகம் தெளிவில்லாமலே இருந்தது.

சடன் பிரேக் போட்டு அவன் வண்டியை நிறுத்திவிட பின்னால் இருந்தவர்கள் எழுந்திருந்தனர். “என்னடா என்னாச்சு??” என்று ஆதவன் கேட்க “ஹான்… அது வந்து பக்கத்துல ஹோட்டல் வருது கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிட்டு காபி குடிப்போமா. அதை கேட்கத்தான் வண்டியை நிறுத்தினேன்”

“அதுக்கு வண்டியை இப்படியா நிறுத்துவ, எழுப்பி விட்டிருக்க வேண்டியது தானே ஆதி. என்னவோ ஏதோன்னு நான் பயந்தே போயிட்டேன்” என்றார் வாசவி.

“இப்போ என்ன ஹோட்டல்க்கு வண்டியை விடவா இல்லை சென்னை போய்டலாமா??”

“வேணாம் வேணாம் இங்கவே எதாச்சும் சாப்பிட்டு போகலாம். காபி குடிச்சா நல்லா தான் இருக்கும்” என்று சொல்ல மெல்லினாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வண்டியை எடுத்தான்.

அடுத்து வந்த ஹோட்டலின் முன்னே வண்டியை நிறுத்தினான். உள்ளே சென்று ரிப்ரெஷ் செய்துவிட்டு மாலை சிற்றுண்டியை ஆர்டர் செய்தனர். மெல்லினா தனக்கு காபி மட்டும் போதும் என்று அருந்தினாள்.

“ரெஸ்ட் ரூம் ஹோட்டல் பின்னாடி இருக்கு. போய் பார்த்திட்டு வந்திட்டேன் நல்லா நீட்டா இருக்கு. அம்மாவும் அண்ணியும் போயிட்டு வந்தாங்க. நீயும் வர்றியா” என்று அவன் கேட்கவும் அவளுக்கு பழைய நினைவுகள் ஓடி கண்கள் கலங்கச் செய்தது.

அவள் மதுரையில் வேலை பார்த்த போது தயாளன் மற்றும் சிலர் ஒரு கட்சி கூட்டத்திற்கு பந்தோபஸ்திற்கு சென்றிருந்தனர். வேறு காவல் நிலையத்தில் இருந்து கூட பெண்கள் வந்திருந்தனர் காவலுக்கு.

அது பெரிய கட்சியின் மீட்டிங் என்பதால் கூட்டமும் அதிகமிருந்தது. காவலுக்கு இருந்த பெண்களின் அவசரத் தேவைக்காய் அவர்கள் வெளியில் செல்ல தயாளன் “எங்க போறீங்க??”

“ரெஸ்ட் ரூம் போகணும் சார், இங்க எங்க இருக்குன்னு பார்க்கப் போறோம். போயிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்திடுவோம் சார்” என்று பதில் கொடுத்தவள் மெல்லினா.

“உங்களுக்கு ரெஸ்ட் எடுக்கறதுக்கு ரூம் வேற கட்டித் தருவாங்களா. அப்படியே மேடைக்கு பின்னாடி காலி இடமா தான் இருக்கு, இருட்டாவும் இருக்கு அங்க போய் இருங்க” என்று சொல்ல அவர்கள் முகம் வாடியது.

“நீங்க வாங்க” என்று அவர்களை அழைத்துச் சென்றாள் மெல்லினா.

“சிஸ்டர் அங்கெல்லாம் போக வேண்டாம்” என்றாள் ஒருத்தி.

“உங்களை நான் அங்க கூட்டிட்டு போகலை” என்றவள் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டின் கதவை தட்ட வயதான பெண்மணி ஒருவர் வந்து கதவை திறந்தார்.

“என்னம்மா??”

“அம்மா தப்பா எடுத்துக்காதீங்க”

“என்னன்னு சொல்லும்மா தண்ணி வேணுமா”

“அதில்லைம்மா இங்க மீட்டிங்க்கு பந்தோபஸ்துக்கு வந்தோம். அவசரமா போக இடமில்லை, நீங்க அனுமதிச்சா” என்று விட்டு அவரைப் பார்த்தாள்.

“என்னம்மா நீங்க இதெல்லாம் கேட்டுட்டு எங்களுக்காக தான் நீங்க வேலை பார்க்கறீங்க. உங்களுக்காக இதை கூட செய்ய மாட்டோமா, வாங்க” என்று அழைத்துச் சென்றவர் பாத்ரூமை காட்டிவிட்டு அப்புறம் நகர்ந்தார்.

அவர்கள் திரும்பி வந்த போது அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தீர்த்து அனுப்பி வைத்தார் அவர். தயாளன் போன்ற ஆண்களும் ஆத்திரேயன் போன்றோரும் இதே உலகத்தில் தான் இருக்கின்றார்கள் என்பதை நினைத்து இதழ் வளைத்தாள் அவள்.

“மெல்லினா” என்ற குரலில் நிகழ்வுக்கு வந்தாள் அவள்.

“வர்றியா??”

“ஹ்ம்ம்” என்றவள் அவனோடு எழுந்துக்கொள்ள பின்னால் கூட்டி வந்தவன் அவ்விடத்தை காட்டிவிட்டு சற்று ஒதுங்கி நின்றுக் கொண்டான். அவள் திரும்பி வரவும் “ஒரு நிமிஷம்” என்றவன் சற்று தள்ளி இருளான பகுதிக்கு அவளை அழைத்துச் சென்றான்.

“உன்கிட்ட தனியாவே பேச முடியலை. எதுக்கு இப்படி பொசுக்கு பொசுக்குன்னு அழுகற, நான் கெத்தா பார்த்த மெல்லினா நீ இல்லை. நீ என்னை திட்டினா கூட எனக்கு தாங்கிக்க முடியுது”

“நீ அழும் போது அதை பார்க்கவே என்னால முடியலை. ப்ளீஸ் இனிமே இப்படி அழாதே, நான் செத்தா கூட நீ அழக்கூடாது” என்று அவன் சொல்லவும் அவள் வலக்கரம் உயர்ந்து அவன் கன்னத்தில் பதிந்தது.

“எதுக்குடி அடிச்சே??”

“இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு என்ன பேச்சு பேசறீங்க நீங்க” என்றுவிட்டு அவள் திரும்பி பார்க்காமல் செல்லவும் ஏனோ அவள் அடித்த அடி அவனுக்கு வலிக்கவேயில்லை.

அவள் முத்தம் கொடுத்தது போல் அந்த கன்னத்தை தடவிக்கொண்டான் அவன். மீண்டும் அவர்கள் காருக்கு வர ஆத்திரேயன் ஓட்டுனர் இருக்கைக்கு செல்ல ஆதவன் “ஆதி நீ ரெஸ்ட் எடு”

“இருக்கட்டும் அண்ணா நான் ஓட்டுறேன்”

“சொன்னா கேளுடா இப்போ ரெஸ்ட் எடு அதான் நல்லது” என்று கண்ணடித்துச் சொல்ல லேசாய் ஒரு புன்னகை எழுந்தது ஆத்திரேயனுக்கு. மெல்லினாவுடன் நடுவில் இருந்த இருக்கைக்கு சென்றான் அவன்.

மெல்லினா இன்னமும் அவன் முகத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை. ஆத்திரேயன் அப்படி பேசிவிட்டான் என்ற கோபம் இன்னமும் குறையாமல் இருந்தது அவளுக்கு.

இரவு கவிழ ஆரம்பித்திருந்ததால் ஆதவன் வண்டியில் இருந்த மற்ற விளக்குகளை அணைத்துவிட்டிருந்தான். ஆத்திரேயன் இருளில் கைகளை துழாவி மெல்லினாவின் கரத்தைப் பற்ற அவள் விலகிக்கொள்ள பார்த்தாள்.

ஆத்திரேயன் அழுந்த பற்றி தன் மடி வைத்துக்கொண்டான் அவள் கரத்தை. இடக்கையால் அவள் தோளைப் பற்றியவன் தன் மீது சாய்த்துக் கொள்ள அவளுக்கும் ஆறுதல் தேவையாய் இருந்தது அந்நொடி.

அவன் தோளில் தலை சாய்த்துக் கொண்டவளை உறக்கம் மெல்லத் தழுவியதில் அவர் கண்ணயர்ந்தாள். அவளை மெதுவாய் பற்றி தன் மடி மீது சாய்த்துக் கொண்ட ஆத்திரேயனும் உறங்கியிருந்தான்.

அவர்கள் சென்னைக்குள் நுழைந்த போதே அவனுக்கு உறக்கம் கலைய ஆரம்பித்திருந்தது. மெல்லினாவை பார்க்க அவள் இன்னமும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது தான் கண் விழித்த வாசவியோ “ஆதி அவளை எழுப்பி விடு” என்றார்.

“தூங்கட்டும்மா நம்ம வீட்டுக்கு போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்”

“அதுக்குன்னு தூங்கிட்டே இருக்க விடுவியா. வீட்டுக்கு போகவும் ஆரத்தி எடுக்கணும், அக்கம் பக்கம் இருக்கவங்க எல்லாம் வருவாங்க. இவ தூங்கி ‘பே’ன்னு நின்னா எப்படியிருக்கும். எழுப்பிவிடு முதல்ல” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண் விழித்திருந்தாள் அவள்.

எழுந்து அமர்ந்தவள் பின்னால் திரும்பி ஒரு பார்வை பார்க்க வாசவி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவள் வெளியில் எட்டிப் பார்க்க சென்னை வந்துவிட்டோம் என்று புரிந்தது அவளுக்கு. ஆத்திரேயனின் வீடு எங்கிருக்கிறது என்று அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

முன்பு அவர்கள் மைலாப்பூரில் இருந்தார்கள் என்றறிவாள். இப்போதும் அங்கு தானா என்று அவளுக்கு தெரியவில்லை. மெல்ல தன் கணவன் புறம் திரும்பியவள் “உங்க வீடு எங்க இருக்கு??” என்றாள்.

Advertisement