Advertisement

“நீ நினைக்கிற மாதிரி இல்லை. அவங்க சொல்லைன்னா நீயே சொல்லுவேன்னு அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. நான் முதல் முதல்ல அவங்களை பார்க்க இங்க வந்ததுமே என்கிட்ட சொல்லிட்டாங்க நீ யாருன்னு”

“நான் ஒரு மலைஜாதி பொண்ணுன்னு சொன்னாங்களா”

“அதான் சொன்னேனே அவங்க எல்லாமே சொல்லிட்டாங்கன்னு. அவ என்ன சொன்னாலும் அவ என் பொண்ணு இல்லைன்னு ஆகிடாது. நான் அவளை பத்து மாசம் சுமக்கலையே தவிர அவ என் பொண்ணு தான்னு சொன்னாங்க” என்று அவன் சொல்லவும் அவள் கண்கள் உடைப்பெடுத்தது.

“ஹேய் என்னாச்சு??” என்றவனுக்கு தான் அவளிடம் இதை சொல்லியிருக்க கூடாதோ அவள் சொன்னதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்திருக்கலாமோ என்றிருந்தது.

“கண்ணைத் துடை மெல்லினா” என்றான்.

“இப்போ எதுக்கு இதை என்கிட்ட சொல்லணும்ன்னு நினைச்சே??”

“என்னைப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும்ன்னு தான்…”

“உன்னைப்பத்தி நான் இன்னும் முழுசா தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு” என்றவன் அவளை ஆழ்ந்து பார்க்க அவன் பார்வையை தவிர்த்தவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.

“சரி கல்யாணம் முடிஞ்சது நாம கிளம்பலாமா??” என்றார் வாசவி.

ஆத்திரேயனோ மெல்லினாவின் வீட்டிற்கு தான் போகப் போகிறோம் என்று எண்ணியிருந்தான். அவர்களின் திருமணத்தை ஊட்டியில் நடத்த வேண்டுமென்பது மகேஸ்வரியின் கோரிக்கையாக இருந்தது. ஆத்திரேயன் அதை மறுக்கவில்லை. 

இதோ திருமணமும் முடிந்திருந்தது. அடுத்து பெண்ணின் வீட்டிற்கு சென்று பால் பழம் சாப்பிட வேண்டும். அவர்களின் பழக்கம் பெண்ணின் வீட்டில் தான் முதலிரவு என்று சொல்லியிருந்தார்கள். அதே கனவில் அவன் இருக்க வாசவி அதில் மண் அள்ளிப் போட்டார்.

“சீக்கிரம் கிளம்பலாம் அப்போ தான் சென்னைக்கு நைட்க்குள்ள போயிருவோம்” என்றான்.

“அம்மா என்னது சென்னைக்கா?? இங்க மெல்லினா வீட்டுக்கு தானே போகணும்”

“அதெப்படிடா அங்க நேரா போகுறது. மகாலட்சுமியை நேரா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயி தான் விளக்கேத்தணும். அவங்க வீட்டுக்கு எப்படி கூட்டிட்டு போக,நேத்தே எங்க சித்தி என்னை திட்டிடாங்க. இதென்ன புது பழக்கம்ன்னு. எதுவும் நம்ம பழக்கம் தான் செய்யணுமாம்” என்றார் அவர்.

“இப்போ என்ன செய்யணும்??”

“நம்ம வீட்டுக்கு தான் போகணும்”

“சரி கிளம்புவோம்” என்றான் அவன். அதுவரை தன் வீட்டிற்கு தான் போகப் போகிறோம் என்று எண்ணியிருந்த மெல்லினாவிற்கு தாங்க முடியாது அழுகை வந்தது.

மகேஸ்வரியின் அருகே சென்றவள் அவரைக் கட்டிக்கொள்ள அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவள் பெரிதாய் எப்போதும் அழுததில்லை ஓரிரு சமயங்களை தவிர. எப்போதையும் விட இப்போது அவளுக்கு தாள முடியாது அழுகை வந்தது.

மாறாய் மகேஸ்வரி சிரித்த முகமாய் நின்றிருந்தார். அவளின் தங்கை வெண்பா திருமணத்திற்கு வந்துவிட்டு அப்போதே கிளம்பி சென்றுவிட்டிருந்தாள்.

“மெல்லினா” என்றார் மகளின் முதுகை தடவிக் கொடுத்தவாறே. “நீ விரும்பின வாழ்க்கை தானே அம்மா அமைச்சுக் கொடுத்திருக்கேன். சந்தோசமா இருக்கறதை விட்டு எதுக்குடா அழறே” என்று அவர் சொல்லவும் அவரிடமிருந்து விலகி அவர் முகம் பார்த்தாள் அவள்.

“தெரியும் அம்மாக்கு தெரியாம இருக்குமா. அவங்க எனக்கு போன் பண்ணி பேசுனாங்க, உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா சொன்னாங்க”

“யாரோ வேணும்ன்னே விளையாடுறாங்கன்னு நினைச்சு முடியாதுன்னு சொன்னேன். மறுநாளே ஊட்டிக்கு வந்து நின்னாங்க. அவங்களை பார்த்ததுமே என்னால மறுக்க முடியலை, சரின்னு சொல்லிட்டேன். இப்போ தான் எனக்கு நிம்மதியே என் பொண்ணு விரும்பின வாழ்க்கையை அமைச்சு கொடுத்திட்டேன்”என்று அவர் சொல்லவும் அப்படியே அவர் காலில் விழுந்துவிட்டாள் அவள்.

“மெல்லினா எல்லாரும் பார்க்கறாங்க பாரு பேசாம இரு. மாப்பிள்ளை உன்னையவே பார்த்திட்டு இருக்காரு” என்று சொல்லவும் கண்ணீரை துடைத்துக் கொண்டாள் அவள்.

“அம்மா நீங்க எனக்கு கிடைச்ச வரம்”

“நீ தான் எனக்கு கிடைச்ச பொக்கிஷமே” என்றார் அவர்.

“நான் யாரோம்மா”

“இன்னொரு தரம் இப்படி சொல்லாத மெல்லினா அம்மாவால தாங்க முடியாது. நீ தான் எனக்கு எல்லாமே” என்றவரின் கண்கள் லேசாய் கலங்க தன்னையே திட்டிக் கொண்டாள் மெல்லினா.

“கிளம்பலாம் மணியாகுது” என்று வாசவி சத்தமாய் சொல்ல மகேஸ்வரி சுதாரித்தார்.

“சரி மெல்லினா கிளம்பு பார்த்துக்கோ சரியா”

“அம்மா நீங்க என்னோட வந்திடுங்கம்மா” என்றாள் அவள் அழுகுரலில்.

மெல்லச் சிரித்தார் அப்பெண்மணி, “உன்கூட வந்து இருக்கணும்ன்னு நான் ஆசைப்பட்டப்போ எல்லாம் இது தான் நம்ம இடம் இங்க தான் இருக்கணும்ன்னு என்னை இங்க இருக்க வைச்சுட்டு இப்போ போய் என்னை கூப்பிடுறியேடா” என்றார் அவர்.

“இனி தான் நான் இங்க இருக்கணும். என் பொண்ணு என்னைப் பார்க்க வருவா,அவளுக்கு அம்மா வீடு இங்க தானே இருக்கு. என் பொண்ணுக்கு பேறுகாலம் பார்க்கணும் பேரப்பிள்ளையை கொஞ்சணும். உனக்காக உன் வருகைக்காக நான் இங்க காத்திட்டு இருப்பேன்டா, தைரியமா போயிட்டு வா” என்று மகளை அவர் வழியனுப்பினார்.

மெல்லினாவின் கண்ணீர் நிற்கவேயில்லை. ஆத்திரேயன் அவள் கைகளை தன் கைகளுடன் பிணைத்துக் கொண்டவன் மகேஸ்வரியிடம் விடைபெற்றுக் கொண்டான்.

ஆத்திரேயனின் அண்ணன் ஆதவன் காரை ஓட்ட அருகே அவன் மனைவி பார்கவி அமர்ந்துக் கொண்டாள். நடுவில் இருந்த இருக்கையில் மணமக்கள் அமர்ந்துக் கொண்டனர்.

பின்னிருக்கையில் சுசிந்திரமும் வாசவி ஏறிக்கொண்டனர். திலோத்தமாவை விஸ்வநாதன் குடும்பம் தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டது.

மெல்லினாவின் கண்கள் வெளியில் நின்றிருந்த அவள் அன்னையின் மீதே இருந்தது. வண்டி கிளம்ப அவள் விழிகளும் நிறைந்தது. ஆத்திரேயன் அவள் கைகளை மெல்ல அழுத்திக் கொடுத்தான்.

பக்கவாட்டில் திரும்பி அவளைப்பார்க்க அழுது அழுது அவள் முகம் வீங்கியிருந்தது. அவளின் கூரான நாசி கோவைப்பழமாய் சிவந்திருந்தது.

இதுவரை கோபத்தில் தான் அவள் முகம் சிவந்திருந்ததை கண்டிருக்கிறான். முதல் முறையாய் அவள் அழுது பார்க்கிறான், மனதிற்கு என்னவோ செய்தது அவளை இப்படி பார்க்க.

எது தன்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்று அவனுக்குள்ளே அவனே தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறான். மெல்லினாவை எங்கோ தனக்கு பிடித்திருக்கிறது அதனால் தான் அவளை தைரியமாய் தன்னால் தொட முடிந்தது.

அவனுக்குள் தன் மனைவியை குறித்து பல கேள்விகள் உண்டு. தனக்குள் மெல்லினா இருக்கிறாள் என்று உணர்ந்ததுமே அவளை தன்னவளாக்கிக் கொண்டான். அவள் மனதில் தானிருந்த போதும் எப்படி அவளால் இருக்க முடிந்தது என்ற கேள்வி அவனை குடைந்தது.

விடையளிக்க வேண்டியவள் வினா எழுப்புவாளோ?? விடை சொல்வாளோ?? பார்ப்போம்.

இந்த பயணம் இருவருக்குமே மறக்க முடியாததாய் இருக்க போகிறது என்பதை இருவருமே அக்கணம் உணர்ந்திருக்கவில்லை. ஆத்திரேயனுக்கு மெல்லினாவை அவ்வப்போது திரும்பிப் பார்க்க கஷ்டமாக இருந்தது.

வண்டி கோயம்புத்தூர் வந்திருக்க ஆதவன் “இங்கவே சாப்பிட்டு கிளம்பிடலாமா அப்போ தான் சரியா இருக்கும்” என்று சொல்ல மற்றவர்களும் சரியென்றிருக்க வண்டியை அன்னப்பூர்ணாவை நோக்கி விட்டான் அவன்.

மணமக்களை தனித்துவிட்டு மற்றவர்கள் சற்று தள்ளி வேறு இடத்தில் அமர்ந்துக் கொண்டனர்.

“என்ன சாப்பிடுறே??” என்றான் ஆத்திரேயன் தன் மனைவியை பார்த்து.

“பசிக்கலை எனக்கு எதுவும் வேணாம்”

“பசிக்காம எப்படி இருக்கும் காலையில சாப்பிட்டது இப்போ மதியம் ஆகிடுச்சு” என்றான்.

“காலையில காபி குடிச்சேன்”

“மை காட் அப்போ நீ காலையில சாப்பிடலையா??”

“இல்லை கல்யாணம் முடிஞ்சதும் தான் சாப்பிடணும்ன்னு சொன்னாங்க”

“அதுக்காக சாப்பிடாமலே இருந்தியா நீ… வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்கல்ல அப்போவாச்சும் சொல்லியிருக்கலாம்ல. நாம மலையிறங்க போறோம்ன்னு நான் தான் கீழ போய் சாப்பிடுக்கலாம்ன்னு இருந்திட்டேன் உனக்கென்ன” என்று கடிந்தான் அவன்.

அவன் திட்டியது ஏனோ அவளுக்கு தேனாய் தித்தித்தது. அவனே உடனே கிடைக்கும் உணவு வகையான மீல்ஸ் சொல்லியிருக்க அடுத்த நிமிடம் அவர்கள் கொண்டு வந்து வைத்தனர்.

“சாப்பிடு” என்றுவிட்டு தானும் வேகமாய் உண்ணவாரம்பித்தான் அவன். சாப்பிட்டு அவர்கள் கை கழுவி வர மற்றவர்களுக்கு அப்போது தான் உணவு கொண்டு வந்திருந்தார்கள்.

ஆதவனிடம் கார் சாவியை வாங்கிக்கொண்டவன் “நாங்க கார்ல இருக்கோம்” என்றவன் அவர்கள் பதிலை எதிர்பாராது தன் மனைவியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

கதவை திறந்து அவளை அமர வைத்தவன் மீண்டும் உள்ளே சென்றுவிட திரும்பி வந்தவனின் கைகளில் சாத்துக்குடி ஜூஸ் இருந்தது. “குடி”என்று அவளிடம் நீட்டினான்.

மறுக்காது அதை வாங்கி குடித்தாள் அவள். குடித்த கிளாஸை அவளிடமிருந்து வாங்கியவன் உள்ளே சென்று கொடுத்துவிட்டு வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டு ஏசியை ஆன் செய்தான்.

“எதுக்கு இப்படி உம்முன்னே இருக்கே??” என்று மெல்ல பேச்சுக் கொடுத்தான்.

“அம்மா ஞாபகமாவே இருக்கு”

“அவங்களை கூட்டிட்டு வந்து இங்க வைச்சுக்கலாம்ல”

“வர மாட்டாங்க”

“ஹ்ம்ம், உங்கம்மா ரொம்ப கிரேட்” என்று அவன் சொல்லவும் திரும்பி அவனைப் பார்த்தாள்.

“போன் பண்ணி உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றேன், திட்டிட்டாங்க என்னை”

“உங்களுக்கு ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு தோணிச்சு” என்றாள் அவள் அதி முக்கிய சந்தேகமாய்.

“நல்ல கேள்வி பதிலை அப்புறம் சொல்றேன்”

“எப்போ??”

“எனக்கும் கேள்விகள் இருக்கு அதுக்கான பதில் வரும் போது இதுக்கான பதிலும் வரும்”

“என்னை பழிவாங்கவா”

“அதுக்காக யாராச்சும் காலம் முழுக்க தண்டனை அனுபவிக்கணும்ன்னு நினைப்பாங்களா என்ன??” என்று அவன் சொன்னது முதலில் புரியாதவள் புரிந்ததும் “அப்படி கஷ்டப்பட்டு ஏன் கல்யாணம் பண்ணீங்க”

“தெரியாது”

“சரி உங்கம்மா கதைக்கு வருவோம். அப்புறம் நேர்ல வந்து உங்க பொண்ணை எனக்கு கொடுப்பீங்களா மாட்டீங்களான்னு கேட்டேன். சட்டுன்னு சரின்னு சொல்லிட்டாங்க”

“வேற எதுவும் சொல்லலையா எங்கம்மா??” என்றாள் அவர் என்ன பேசினார் என்று தெரிந்துக்கொள்ளும் நோக்கோடு.

“ஹ்ம்ம் சொன்னாங்க. அவங்க பொண்ணுக்கு ரொம்ப அழுத்தம் அதிகமாம், கஷ்டத்தை கூட வாய்விட்டு சொல்ல மாட்டா என் பொண்ணு. அவளை பார்த்துக்கோங்கன்னு சொன்னாங்க” என்று அவன் சொன்ன போது அவள் மூக்கு மீண்டும் சிவக்க ஆரம்பிக்க கண்கள் கண்ணீரை பொழிய தயாராய் இருந்தது.

பேச்சை மாத்தணும்ன்னு நினைச்சு நானே சொத்தப்பிட்டனே என்று தன்னையே நொந்துக் கொண்டான் அவன். “நீ ரொம்ப சந்தோசப்படாதே உங்க வீட்டில நடக்கலைங்கறதுக்காக அப்படியே எல்லாம் உன்னை விட்டிற மாட்டேன்”

“எப்படியும் நீ என்கிட்ட தான் வந்தாகணும். ரொம்பவும் கனவு எல்லாம் காணாத உன்னையும் என்னையும் தனித்தனியா விட்டிருவாங்கன்னு” என்று அவன் சொல்லவும் அவள் முகத்தில் லேசாய் புன்னகை அரும்பியது. வீட்டினர் அனைவரும் சாப்பிட்டு வர ஆதவன் தான் வண்டி ஒட்டுவதாக கூறினான்.

“எவ்வளவு நேரம் நீ ஓட்டுவே. நீ பின்னாடி உட்காரு நான் ஓட்டிட்டு வர்றேன்” என்றான் ஆத்திரேயன்.

“இருக்கட்டும்டா நான் ஓட்டுறேன், நீ ஏன்”

“ப்ச் போ சொன்னா கேளுண்ணா. நான் ஓட்டுறேன், நீ அண்ணி பக்கத்துல போய் உட்காரு” என்றான்.

மெல்லினா கீழே இறங்கப் போக “நீ எங்க போறே??”

“பின்னாடி”

“அவங்க ரெண்டு பேரும் பின்னாடி இருக்காங்க. என் பக்கத்துல உட்காராம நீ எங்க போகப் போறே” என்று சொல்ல பேசாமல் அமர்ந்துக் கொண்டாள். உண்ட மயக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர்கள் ஒவ்வொருவராய் உறங்க ஆரம்பித்திருந்தனர்.

Advertisement