Advertisement

6

அன்று

மெல்லினா தன் கணினியில் அவளுக்கென்று தனியாக ஒரு போல்டரை மறைத்து வைத்திருந்தாள். அவளின் பொக்கிஷங்கள் எல்லாம் அதில் தானிருக்கின்றன. அவள் நினைக்கும் போதெல்லாம் அதைத்தான் எடுத்து பார்த்துக் கொள்வாள்.

தந்தையின் ஆசைக்காகவும், அன்னையின் விருப்பத்திற்காக மட்டுமின்றி அவள் தனக்காகவும் தான் காவல்துறையை தேர்ந்தெடுத்தாள் அப்போது. வேலைக்கு சென்ற புதிதில் பிடிக்காது போனாலும் அவள் மனதிற்கு பிடித்தவன் சொன்ன வார்த்தைகள் மட்டுமே அவளை வேலையில் பிடித்து வைத்திருந்தது.

அவனை நேரில் சந்திப்போம் என்று அவள் ஒரு நாளும் எண்ணியிருக்கவில்லை. ஏனெனில் அவள் இருப்பது ஒரு ஊர் அவனிருப்பது வேறு ஊர் என்று அவளறிவாள். அவனைப்பற்றி முழுதாய் தெரியாது போனாலும் சில விஷயங்கள் அவளறிவாள்.

அவனை முதன் முதலாய் நேரில் கண்ட தருணம் அவள் என்றுமே மறக்க முடியாதது. கனவு தான் என்று அவள் நினைத்திருக்க அது நிஜமென்பதே அவன் மீண்டும் அழைக்கும் போது தான் உணர்ந்தாள்.

அவன் அவளுக்கு கண் ஜாடை காட்டியிருக்க அதை உள்வாங்கி அவள் தயாளனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பியிருந்தாள். எப்படி எனக்கு அவரின் பார்வை புரிந்தது அதற்கு அர்த்தம் தெரிந்தது போல அவர் சொன்னதை எப்படி என்னால் செய்ய முடிந்தது என்பது இப்போதுவரை அவளுக்கு அவளே கேட்டுக் கொள்ளும் கேள்வி.

அன்றே அவள் ராஜனிடம் மாட்டிக்கொண்டு தவிக்க தப்பிக்க போராடியவள் மாட்டிக்கொள்ளும் தருணம் அவள் உள்ளம் கவர்ந்தவன் மீண்டும் அவளை காப்பாற்றியிருந்தான்.

இன்று

“மாங்கல்ய தாரணம் பண்ணுங்கோ” என்று ஐயரின் குரலில் மெல்லினாவிற்கு தொண்டை அடைத்தது. கனவிலும் நடக்காது என்று நினைத்திருந்தது இதோ நிஜத்தில் நடந்துக் கொண்டிருந்தது.

மெல்லினா மெதுவாய் ஆத்திரேயன் அருகே நெருங்கியவள் “உங்ககிட்ட பேசணும்ன்னு சொன்னேனே”

“பேசலாம் பேசலாம் தாலி கட்டி முடிச்சதும் பேசலாம்”

“அதுக்கு முன்ன பேசணும் ப்ளீஸ்”

“நீ என்ன சொல்றேங்கறதை நீ என் பொண்டாட்டி ஆனதும் கேட்டுக்கறேன், இப்போ…” என்று ரகசிய குரலில் பேசியவன் பெரியவர்கள் ஆசிர்வதித்து கொடுத்த திருமாங்கல்யம் கைக்கு வரவும் இரு கரங்களால் அதை எடுத்தவன் மெல்லினாவின் கழுத்தில் கட்டி முடித்திருந்தான்.

குங்குமத்தை வாங்கியவன் அவளை அணைத்தவாறு அவளின் நெற்றில் வைத்திருக்க அவள் ஜென்மமே பூர்த்தியானதொரு உணர்வு அவளுக்கு. கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.

ஆத்திரேயன் அவள் புறம் திரும்பியவன் அவளுக்கு மட்டுமே கேட்குமாறு “வேற எந்த பொண்ணையும் நான் இதுவரைக்கும் கிஸ் பண்ணதில்லை”

“நான் முதல் முதல்ல அத்துமீறி நடந்துக்கிட்டதும் உன்கிட்ட தான். இனிமே நடந்துக்க போறதும் தான் உன்கிட்ட தான். அப்புறம் இன்னைக்கு உங்க வீட்டில தான் எல்லாமே”

“அன்னைக்கு அவ்வளவு பேசினேல்ல இன்னைக்கு என்கிட்ட தானே வரணும் என்ன பண்ணுறேன்னு பாக்குறேன்” என்று அவன் சொல்லி முடிக்கவும் அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

கேமரா புன்னகை முகமாய் இருக்கும் இருவரையும் அழகாய் படம் பிடித்தது அத்தருணம். அவளுக்கு சொல்லாணாத மகிழ்ச்சி ஆத்திரேயனின் பேச்சில். தன்னைத் தவிர வேறு பெண்ணிடத்தில் அவன் ஒரு போதும் கண்ணியம் தவறியதில்லை என்பதும் இனிமேலும் தவறமாட்டான் என்பதும் அவன் பேச்சில் இருந்து புரிந்து கொண்டவளுக்கு அப்படியொரு உவகை.

ஆத்திரேயனின் தாய் மாமா ஐஜி விஸ்வநாதன் திருமணத்திற்கு வந்திருந்தார். இருவரும் அவரிடம் ஆசி பெற “அன்னைக்கே நினைச்சேன் என்னமோ இருக்குன்னு. அதான் உங்களையே பேசி தீர்த்துக்க சொன்னேன்”

“வாழ்க்கை முழுக்க பேசணும்ன்னு முடிவு பண்ணியிருக்கீங்க போல. என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் உங்க ரெண்டு பேருக்கும், சந்தோசமா இருங்க” என்று சொல்லி வாழ்த்தினார் அவர்.

இந்த திருமணம் நடக்க அவனின் மாமா தான் காரணம். அந்நிகழ்வுகள் அவன் கண் முன்னே ஓடியது. கோவிலில் இருந்து வீட்டிற்கு வந்த ஆத்திரேயன் அவன் அன்னையை இறக்கிவிட்டு பின்னோடு உள்ளே வந்தான்.

“என்ன ஆதி நீ கிளம்பலையா??” என்றார் வாசவி.

“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்மா” என்றான்.

“சொல்லுப்பா…”

“நான் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்”

“அதுக்கு வேண்டிக்க தானேப்பா கோவிலுக்கு போனோம்”

“ஆனா பொண்ணு யாருன்னு…”

“இனிமே தானே பார்க்கணும்”

“என்னை கொஞ்சம் பேச விடுங்கம்மா. பொண்ணு யாருன்னு நான் சொல்றேன்”

“ஆதி நீயும் லவ் பண்றியாடா, சொல்லு சொல்லு அந்த பொண்ணு யாரு” என்றார் அவர் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும்.

“மெல்லினா”

“நல்ல பேரு ஆதி, போட்டோ இருக்கா உன்கிட்ட”

“பொண்ணையே நீங்க நேர்ல பார்த்தாச்சு அப்புறம் எதுக்கு போட்டோ” என்றான் அவன்.

“எனக்கு புரியலை ஆதி”

“கொஞ்ச நேரம் முன்னாடி நாம அந்த பொண்ணை பார்த்தோம்”

“எங்க கோவில் வாசல்லயா நீ என்கிட்ட காட்டவே இல்லையே”

“அம்மா ஒரு ஆளை அடிச்சுட்டு இருந்தாலே அவ தான் மெல்லினா. என்னோட டிபார்ட்மென்ட் தான் ஐபிஎஸ் முடிச்சிருக்கா, கிரைம் பிரான்ச்ல இருக்கா”

“ஆதி நீ புரிஞ்சு தான் பேசறியா. அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு எப்படி செட்டாவா”

“அம்மா அவ எனக்கு செட்டாவா” என்றான்.

“ஆதி எனக்கு அந்த பொண்ணை பிடிக்கலை. அவ உனக்கு வேண்டாம்” என்று உறுதியாய் மறுத்தார் அவர்.

“எனக்கு கல்யாணம்ன்னு ஒண்ணு நடந்தா அது மெல்லினா கூட தான். உங்களுக்கு மருமக வேணுமா வேண்டாமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்றவன் அலுவலகம் கிளம்பிவிட்டான்.

வாசவி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். அவரை தேடி வந்த திலோத்தமாவிடம் சொல்லி ஒரு மூச்சு அழுது தீர்த்தார் அவர். தன் கணவர் பெரிய மகன் மருமகள் என்று ஒருவர் விடாமல் போன் செய்து ஆத்திரேயன் சொன்னதை சொல்லியிருந்தார்.

மற்றவர்களுக்கு அதில் பெரிதாய் எந்த கருத்தும் இருக்கவில்லை. ஆதிக்கு பிடித்திருந்தால் செய்ய வேண்டியது தான் என்பது தான் அவர்கள் அனைவரின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

இரண்டு நாட்கள் மகனிடம் பேசக்கூட இல்லை அவர். ஆத்திரேயனும் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. “நான் பேசலைன்னா இவனுக்கு ஒண்ணுமில்லையா. என்னன்னு கூட கேட்க மாட்டேங்கறான்” என்று கணவரிடம் புலம்பினார் அவர்.

என்ன நினைத்தாரோ தன் அண்ணனுக்கு அழைத்துவிட்டார். “சொல்லும்மா வாசவி எப்படி இருக்கே?? திலோவும் பேரனும் எப்படி இருக்காங்க” என்று தங்கையிடம் விசாரித்தார்.

“எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா”

“என்னாச்சு வாசவி குரல் டல்லா இருக்கு”

“உங்களுக்காச்சும் தெரிஞ்சுதே” என்றவர் ஆத்திரேயனின் விருப்பத்தை சொன்னார்.

“உனக்கு ஏன் அந்த பொண்ணை பிடிக்கலை??”

“எனக்கு பிடிக்கலை அவ நம்ம குடும்பத்துக்கு செட்டாக மாட்டா??” என்றார் அவர் பிடிவாதக் குரலில்.

“சரி நீ போனை வை நான் ரேயன்கிட்ட பேசறேன்” என்றார். அவர் மட்டுமே அவனை ரேயன் என்று அழைப்பார்.

ஆத்திரேயனுக்கு அவர் போனில் முயற்சி செய்ய ஒரே ரிங்கிலேயே போனை எடுத்தவன் “சொல்லுங்க சார்” என்றிருந்தான்.

“மாமா பேசறேன்” என்றார் இவர் மறுமுனையில். அவனுக்கு எதுவோ புரிவது போல இருந்தது. எதுவாக இருந்தாலும் அவரே பேசட்டும் என்றிருந்தான்.

“சொல்லுங்க மாமா”

“இன்னைக்கு லஞ்ச்க்கு என்ன ஐடியா??”

“வாங்கி சாப்பிடணும் அம்மா செஞ்சு கொடுக்கலை”

“நாம வெளிய போவோம் ரெடியா இரு” என்றார்.

“ஹ்ம்ம் ஓகே மாமா” என்றுவிட்டு போனை வைத்தான்.

மதிய உணவு இடைவேளையின் போது அவன் கிளம்பி வெளியே வர மெல்லினா எங்கோ சென்றுவிட்டு அப்போது தான் உள்ளே வந்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்தும் பார்க்காதது போல கடந்து வந்தான் ஆத்திரேயன்.

அவனின் மாமாவின் கார் அங்கு தயாராய் நிற்க அதில் சென்று ஏறிக் கொண்டான். இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஹோட்டல் வந்ததும் இறங்கியவர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர்.

அவர்கள் வந்ததும் அருகே ஒருவரும் வந்து அமரவில்லை. பேரரை அழைத்தார் விஸ்வநாதன். “சார்” என்று பணிவாய் வந்து நின்றான் அவன்.

“ஏன் யாரும் இங்க சாப்பிட வரலை”

“இல்லை சார் நீங்க ஏதோ முக்கியமான ஆபிசியலா…” என்று இழுத்தான் அவன்.

“இவர் என்னோட ரிலேஷன் தான் நாங்க இங்க சாப்பிட தான் வந்திருக்கோம். மத்தவங்களையும் இங்க சாப்பிட அலோவ் பண்ணுங்க. அப்புறம் நாங்க ஒண்ணும் பெரிய ஆளுங்க எல்லாம் இல்லை. நாங்களும் உங்களை போல மனுஷங்க தான். எல்லாரையும் எப்படி டிரீட் பண்ணுவீங்களோ அப்படித்தான் எங்களையும் பண்ணனும்” என்றவர் இருவருக்கும் சாப்பாட்டை ஆர்டர் செய்தார்.

“சொல்லு ரேயன், வாசவி ஏதோ சொன்னா??”

“ஹ்ம்ம் ஆமா மாமா”

“யார் பொண்ணு??”

“மெல்லினா…”

“மெல்லினாவா??” என்று யோசித்தார் அவர்.

“அன்னைக்கு உங்ககிட்ட கம்பிளைன்ட் பண்ணாலே”

“வாட் அவளா??” என்று யோசித்தவர் “நீ சும்மா விளையாட்டுக்கு எதையும் சொல்ல மாட்டேன்னு எனக்கு தெரியும். தெளிவா யோசிச்சு தான் இந்த முடிவுக்கு வந்தியா” என்றார் உறுதிப்படுத்தும் நோக்குடன்.

“ஆமா மாமா…” என்றவனை கூர்ந்து பார்த்தார் அவர். அவனை எடைப்போடும் பார்வை அது. அவன் பார்த்து வளர்ந்தவன் அவன் அதனால் அதீத நம்பிக்கை அவனிடத்தில் எப்போதும் அவருக்குண்டு.

“சரி அம்மாகிட்ட நான் பேசறேன்” என்றவர் பேசி தன் தங்கையை சரிசெய்திருந்தார்.

ஆத்திரேயன் நிகழ்வுக்கு வர மெல்லினா அவன் தோளை சுரண்டினாள். “என்ன??” என்றான் திரும்பிப் பார்த்து.

“பேசணும்ன்னு சொன்னேன்” என்று அவள் சொல்லவும் “வா” என்று தனியே இவன் அழைத்துச் செல்ல வாசவி இருவரையும் முறைத்திருந்தார்.

“சொல்லு”

“நான்…”

“ஹ்ம்ம் நீ”

“நான்…” என்றவள் மீண்டும் நிறுத்திவிட அவனே தொடர்ந்தான் “நீ அவங்க சொந்த பொண்ணு இல்லை அதானே”

“உங்களுக்கு எப்படி??”

“அத்தை தான் சொன்னாங்க” என்று அவன் சொல்லவும் அவள் முகம் வாடியது.

Advertisement