Advertisement

“ஹ்ம்ம் பண்ணலாம் பண்ணலாம்”

“உனக்கு முப்பது வயசாக போகுது ஆதி. ரெட்டையில கல்யாணம் பண்ண மாட்டாங்க. இந்த வருஷம் உனக்கு எப்படியும் கல்யாணம் பண்ணிடணும்”

“உனக்கு பொண்ணு பார்க்கலாம்ன்னா ஒண்ணு ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது இல்லை பொண்ணு பிடிக்கலை, அதுவும் இல்லைன்னா அவங்க வீடு பிடிக்கலைன்னு இதுவரை இருபது பேரை தள்ளி வைச்சாச்சு” 

“எனக்கு தெரியாம இவ்வளவு வேலை பண்ணியிருக்கீங்களா நீங்க”

“பின்னே சும்மாவா இருப்பாங்க. ஆதி கோவிலுக்கு…”

“சரி வாங்க” என்றுவிட்டு அவன் முன்னால் செல்ல இவர் பின்னோடு வந்தவர் சுற்று முற்றும் பார்த்தார்.

“எங்கடா உன் போலீஸ் வண்டி??”

“எதுக்கு??”

“அதுல போனா சீக்கிரம் வழிவிடுவாங்கல அதான்”

“உங்களை கூட்டிட்டு போகறதுக்கு எல்லாம் அந்த வண்டி யூஸ் பண்ண முடியாது அதான் திருப்பி அனுப்பிட்டேன். அதுக்கு தானே இந்த வண்டி இருக்கு என்றவன் அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய அதில் ஏறிக் கொண்டார் அவர்.

கடவுளை தொழுதுவிட்டு அவர்கள் வெளியில் வர கோவில் வாசலில் மெல்லினா யாரோ ஒருவரை போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள். சற்று தள்ளி ஒரு பெண் “அவரை விட்டுடுங்கம்மா” என்று அழுதுக் கொண்டிருக்க வாசவியின் கண்கள் அப்புறமே இருந்தது.

ஆத்திரேயனும் அக்காட்சியை கண்டான். அவன் காவலன் என்பதால் மெல்லினாவை அவனால் தவறாக எண்ண முடியவில்லை. அடி வாங்குபவன் நிச்சயம் ஏதோ செய்திருக்கிறான் அதற்கு தான் அவள் அடிக்கிறாள் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது. ஆனால் வாசவியின் கண்களுக்கு ஒரு பெண் ஆணை அடிப்பதா என்று தானிருந்தது.

“என்னடா ஆதி இவ அப்படி அடிக்கிறா அவனை. அவனைப் பார்த்தா பாவமா இருக்குடா, நீ போலீஸ் தானே போய் என்னன்னு கேளுடா. பாரு அங்க ஒரு பொண்ணு வேற அழுகுது இந்த பொண்ணுக்கு எவ்வளவு திமிர் பாரேன்” என்றார் அவர்.

“ம்மா அவங்க எதுக்கு அடிக்கறாங்கன்னு தெரியாம சப்போர்ட் பண்ணாதீங்கம்மா”

“என்ன இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு ஆகாது ஆதி. நீ கேட்கலைன்னா என்ன நான் போய் கேட்கறேன்” என்றவர் அந்த புறம் செல்ல ஓரடி எடுத்து வைக்க “ம்மா பேசாம இருங்க” என்றான் அவன்.

“நீயும் கேட்க மாட்டா என்னையும் கேட்க விடமாட்டியா??”

“நீங்க வாங்க” என்று அவரை அழைத்துக்கொண்டு இவன் வெளியில் வர இவனைக் கண்ட மெல்லினா ஒரு நிமிடம் அடிப்பதை நிறுத்தியிருந்தாள். பின் என்ன நினைத்தாளோ ஆத்திரேயனை பார்த்துக்கொண்டே மற்றவனை இன்னும் வெளுத்தாள்.

“ஆதி நீ கேட்கறியா இல்லை நான் போகவா. பாவம் அந்த பொண்ணு அடிக்க வேணாம்ன்னு சொல்லுது இவ மாட்டை அடிக்கிற மாதிரி அடிக்கிறா ராட்சசி”

“அம்மா நீங்க வண்டிக்கிட்ட நில்லுங்க” என்றவன் மெல்லினாவின் அருகே சென்றான். அவனுக்கே அவள் அவனை அடிப்பதை பார்த்து என்ன போடு போடுறா என்று தானிருந்தது.

“ஒரு நிமிஷம்” என்று சொல்ல அவனை அடிப்பதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து அருகே நின்றவனை பார்த்தாள்.

“என்ன ப்ராப்ளம்??”

“அதை தெரிஞ்சுட்டு நீங்க என்ன பண்ண போறீங்க??” என்றதும் அவனுக்கு கோபம் வந்தது. ‘திமிரு திமிரு உடம்பு பூரா திமிரு கேள்வி கேட்டா எதிர் கேள்வி கேட்குறதே வேலையா போச்சு’

‘இவ போலீஸ்ன்னா நான் யாரு நானும் போலீஸ் தான்டி. என்னையே கேள்வி கேட்குறியா’ என்றவனது ஈகோ சீண்டப்பட்டது அவளால்.

“எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு எனக்கு தெரியும்” என்றவன் யாருக்கோ போன் செய்ய அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த ஏரியா காவல் அதிகாரி ஜீப்பில் வந்திறங்கினார். மெல்லினா ஆத்திரேயனை முறைக்க பதிலுக்கு அவனும் முறைத்து நின்றான்.

அப்போது வாசவி அவனருகே வந்தார். “ஆதி என்னாச்சுடா??”

“ஒண்ணுமில்லைம்மா நீங்க போங்க”

“என்னன்னு கேட்கறேன்னு வந்திட்டு பேசாம இருக்கே” என்றவர் “ஏம்மா அவனை அப்படி அடிக்கறே??” என்று அவர் நேரடியாக மெல்லினாவிடமே விசாரணையை போட்டார்.

“அதை உங்ககிட்ட சொல்லணும்ன்னு எனக்கு அவசியமில்லை” என்றாள் பதிலாய்.

“ம்மா நீங்க போங்க இங்க இருந்து நான் என்னன்னு பார்த்திட்டு வர்றேன்”

“அந்த பொண்ணு ரொம்ப திமிரா பேசுதுடா அரெஸ்ட் பண்ணி உள்ள வைடா”

“ம்மா நீங்க போங்க” என்று அவன் பல்லைக் கடிக்கும் வேளை தான் ஜீப் வந்து நின்றது.

அவன் அன்னையை திருப்பி அனுப்பிவிட்டு காவல் அதிகாரியிடம் பேச மெல்லினாவிடம் அடி வாங்கியவனோ இப்போது அரண்டு நின்றிருந்தான். அவன் மனைவியும் தான்.

சில பல நிமிடங்கள் அந்த இடம் அல்லோலகல்லோலப்பட நடந்ததை கேள்விப்பட்டதும் ஆத்திரேயனுக்கும் அப்படியொரு கோபம் எதிரிலிருந்தவனை கொன்றுவிடும் ஆத்திரம் அவனுக்குமே வந்தது.

காவல் அதிகாரியுடன் மெல்லினாவும் ஏறிக்கொள்ள அவளிடம் அடிவாங்கியவனும் அவன் மனைவியும் கூட ஏற்றப்பட்டார்கள். ஆத்திரேயன் திரும்பி அன்னையை நோக்கி வர “என்னாச்சு ஆதி அந்த பொண்ணை அரெஸ்ட் பண்ணிட்டாங்களா” என்றார் அவர்.

“பேசாம வாங்கம்மா” என்றவன் யோசனையோடே வண்டியை எடுத்தான்.

———————

வியாழன் இரவு மகேஸ்வரி மகளுக்கு போன் செய்தார். “மெல்லினா கிளம்பிட்டியா??”

“இன்னும் இல்லைம்மா”

“சரி நான் போனை வைக்குறேன்” என்று பட்டென்று அவர் வைத்துவிட அப்போது தான் அவர் குரலின் மாறுதலை கவனித்தாள் அவள்.

உடனே அன்னைக்கு மீண்டும் அழைக்க ஒரு முழு அழைப்பு அடித்து ஓய்ந்தது. மீண்டும் முயற்சி செய்ய உடனே அட்டென்ட் செய்தார் அவர். “அம்மா”

“ஹ்ம்ம்”

“இன்னைக்கு என்னால கிளம்ப முடியலை. நாளைக்கு கோவையில கிளம்பறேன்”

“உன்னை நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொன்னேன். நீ சாவகாசமா கிளம்பறேன்னு சொல்றே. எனக்கு தெரியாது இன்னைக்கு நைட் நீ கிளம்பறே”

“அம்மா ஒரு முக்கியமான கேஸ் எல்லா வேலையும் முடிஞ்சது. இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கு அதை முடிச்சா அப்புறம் ப்ரீ தான் நீங்க சொன்ன மாதிரி ஒரு வாரத்துக்கு லீவு சொல்லியிருக்கேன்”

“நாளைக்கு நீ எப்போ வந்து சேருவே”

“ஒரு அஞ்சு மணிக்கு வந்திடுவேன் நினைக்கிறேன்ம்மா”

“நீ கோயம்புத்தூர் வர்றதுக்கு ரெண்டரை மணியாகும். அப்புறம் நீ பஸ்ஸை பிடிச்சு ஊட்டி வரணுமே. ஆறு மணிக்கு மேலே ஆகிடும் போல. அவங்க ஏழு மணிக்கு வர்றேன்னு சொன்னாங்க. நீ அவங்க வரும் போது தான் வருவே போல” என்றார் அவர்.

“அம்மா அவ்வளவு நேரம் ஆகாதும்மா. நான் ஒரு டாக்சி பிடிச்சு வந்திடறேன் போதுமா” என்று சொல்ல “என்னவோ பண்ணு” என்றுவிட்டு வைத்துவிட்டார் அவர்.

மெல்லினா வேலை எல்லாம் முடித்து அன்னை சொன்னது போல கடைக்குச் சென்று புதுப்புடவை பிளவுஸ் எல்லாம் வாங்கிக் கொண்டாள். தங்கைக்கு அவள் குழந்தைகளுக்கு என்று தனியே வாங்கினாள்.

அன்னைக்கும் புதுப்புடவை வாங்கிக் கொண்டவள் இரவே ஊருக்கு கிளம்பிவிட்டாள். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அவள் வரும் போது மணி பன்னிரண்டு ஆகியிருந்தது.

பேருந்து ஏதும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு படுத்துறங்கும் பேருந்து ஒன்று கிளம்பிக் கொண்டிருக்க இருக்கை வசதி இருக்கிறதா என்று பார்த்தவள் அதிலேயே கிளம்பியிருந்தாள். காலையிலேயே கோவைக்கு வந்திருக்க டாக்சி ஒன்றை பிடித்துக்கொண்டு உதகையை நோக்கி பயணப்பட்டாள் அவள்.

அவள் உதகைக்கு வந்து சேர மதியம் ஆகிப்போனது. முதல் நாள் மழை பெய்திருந்ததால் பாதையை சீரமைத்து வண்டிகளை அனுப்பிக் கொண்டிருந்ததில் தாமதமாகி போயிருந்தது. இரவு சாப்பிட்டது தான் மெல்லினாவிற்கு பசி எடுக்க ஆரம்பித்தது.

எப்படியும் தனக்கு திருமணம் என்ற ஒன்று நடந்தே தீரும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் இப்போது அன்னை திடுதிப்பென்று சொல்லவும் எதையும் தடுக்கவும் இயலாது போனது அவளால்.

மனதில் சொல்ல முடியா ஒரு வலி எழுந்தது. அவள் உயிரில் கலந்திருந்த காதல் கானலாகிப் போயிருந்ததாய் உணர்ந்தாள் அந்நொடி. வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.  மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரும் நேரமாகியது. அன்னை சொன்னது போல புதுப்புடவை அணிந்து அவள் எப்போதும் போல சிம்பிளாக தயாராகி இருந்தாள்.

மகளை வந்து பார்த்த அன்னை “என்ன மெல்லினா இது இன்னும் கொஞ்சம் பவுடர் போட்டு இருக்கலாம்ல. இந்த லிப்ஸ்டிக் எல்லாம் போடலாம்ல என்ன பொண்ணோ, சென்னையில போய் வேலை பார்க்கற இதெல்லாம் தெரியலை” என்றார் அவர்.

“அம்மா அங்க போனா லிப்ஸ்டிக் போடணும்ன்னு யார் சொன்னா. எங்க இருந்தாலும் நான் இப்படித்தான் இருப்பேன். இது போதும் அவங்களுக்கு என்னை இப்படியே பிடிச்சா பிடிக்கட்டும் இல்லைன்னா போகட்டும்” என்றாள் அவள்.

“அதெல்லாம் அவங்களுக்கு பிடிக்கும்” என்றவர் போன் வரவும் எழுந்து சென்றுவிட்டார். அவர் திரும்பி வரும் போது “அவங்க கிளம்பிட்டாங்க” என்றார்.

“வெண்பாவை கூப்பிடலையாம்மா”

“அவ எதுக்கு??”

“அம்மா அவ என்னோட தங்கச்சி”

“எல்லாம் முடியட்டும் அப்புறம் கூப்பிடுவோம்”

“ஏன்மா எதாச்சும் பிரச்சனையா அவ கூட”

“அவ கல்யாணத்துக்கே நமக்கு கூப்பிடலை. நான் பொண்ணு பார்க்கத்தானே கூப்பிடலை அதுக்கென்ன இப்போ” என்று தன் போக்கில் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார் அவர்.

அடுத்த பத்து நிமிடத்தில் வந்து நின்ற மாப்பிள்ளை வீட்டாரை கண்டதும் அவளுக்கு என்ன சொல்ல என்றே தெரியவில்லை. இது நிச்சயம் அவன் வேலையாகத் தானிருக்கும் என்று மட்டும் அவளுக்கு உறுதி.

வந்திருந்தது ஆத்திரேயனின் குடும்பத்தினர். அவளுக்கு தான் அவனின் அன்னையை முன்பே பரிட்சயம் இருக்கிறதே. மற்றவர்கள் எல்லாம் அவனுக்கு என்ன உறவாக இருப்பார்கள் என்று ஊகம் செய்துக் கொண்டாள் அவள்.

வாசவியின் முகமே சொன்னது அவருக்கு அவளைப் பிடிக்கவில்லை என்று. “உங்க பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா??” என்றார் அவர் மகேஸ்வரியிடம்.

“என் பொண்ணு என் பேச்சை மீறி நடக்க மாட்டாங்க. பெரியவங்களை ரொம்ப மதிக்கற பொண்ணு. எனக்கு பிடிச்சா அவ கண்ணை மூடிட்டு சம்மதிப்பா” என்றார் அவர்.

ஆத்திரேயனின் தங்கையும் அண்ணியும் அவளை உள்ளே வந்து பார்த்தனர். “நீங்களும் போலீசா??” என்றாள் திலோத்தமா கண்களை விரித்து. மெல்லினா மென்மையாய் தலையாட்டினாள். “உன்னைப் பார்த்தா தெரியவே இல்லை. ரொம்ப சாப்டா தெரியுது” என்று அவனின் அண்ணி பார்கவி சொல்ல இவளின் இதழ்களில் குறுநகை ஓடியது.

“ஏன் திலோ அப்புறம் அத்தை அன்னைக்கு அப்படி சொன்னாங்க. இவளை பார்த்தா எவ்வளோ அமைதியா தெரியுது நம்ம ஆதிக்கும் சரியா தான் இருப்பா” என்றார் அவர் திலோத்தமாவிடம்.

இருவரும் அவளிடம் பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டனர். மெல்லினாவை மீண்டும் வெளியே அழைத்து அவளுக்கு பூ வைத்து பேசி முடித்தனர். அப்போது தான் இழுத்துப் பிடித்த மூச்சை மெல்லினாவினால் இயல்பாக விட முடிந்தது.

Advertisement