Advertisement

5

அன்று

மெல்லினாவிற்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்போது. அவள் தந்தை ஸ்டேஷனுக்கு சென்றிருந்தார். தங்கை பள்ளிக்கு சென்றிருந்தாள். மெல்லினாவிற்கு பன்னிரண்டாவது என்பதால் படிப்பதற்கு அவளுக்கு விடுமுறை இருந்தது.

மெல்லினாவும் படித்து முடிந்து அமர்ந்திருந்தாள். அப்போது தான் மகேஸ்வரி சமையல் முடித்து அவளருகே வந்து அமர்ந்தார். “மெல்லினா டிவி போடுடா” என்றவாறே.

“என்னம்மா சீரியலா??”

“நானெங்கே சீரியல் பாக்குறேன், இன்னைக்கு எனக்கு பிடிச்ச படம்”

“என்ன படம்மா??”

“பாரு” என்றவர் டிவியில் ஆழ்ந்துவிட்டார்.

படம் முடிந்த வேளையில் மகேஸ்வரியின் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. மெல்லினாவிற்கோ இதெல்லாம் ஒரு படமா இப்படி ஒரே அழுகாச்சியாய் இருக்கிறதே என்று தானிருந்தது.

“ம்மா என்ன படம்மா இது ஒரே போரு”

“உனக்கென்ன தெரியும் பாவம் எவ்வளவு கஷ்டப்படுறாங்க”

“இதெல்லாம் தேவையா”

“இதெல்லாம் உனக்கு புரியாது. நல்ல படங்களை எல்லாம் யாரும் புரிஞ்சுக்கறதே இல்லை. நல்லா தங்கு தங்குன்னு குதிக்கிறாங்க அந்த படம் தான் உங்களுக்கு பிடிக்குது” என்றவர் கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து சென்றார்.

படம் பார்த்தவளின் மனதில் இப்படி கூட லவ் வருமா. இதெல்லாம் சினிமாவில தான் நடக்கும் என்று எண்ணிக்கொண்டவள் அறியவில்லை தானும் இது போலவே சிக்கிக்கொள்வோம் என்று.

இன்று

அவளுக்கு ஐஜியை பார்த்த போதே எங்கோ பார்த்த உணர்வு தோன்றியது. இப்போது ஆத்திரேயனை ஊன்றி பார்த்த போது அவன் தன் மாமனை கொண்டிருப்பது கருத்தில் பதிந்தது அவளுக்கு.

“லூசு லூசு அறிவிருக்கா உனக்கு. என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு தெரிஞ்சு தான் பண்ணியா இடியட்” என்று அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

“இப்போ என்ன உங்க லட்சணத்தை உங்க மாமாவும் தெரிஞ்சுக்கிட்டு இருப்பார். தெரிஞ்சுக்கட்டுமே உங்களை நல்லவருன்னு நினைச்சிருப்பாருல இப்போ அவருக்கு தெரிஞ்சிருக்கும்”

“நான் என்ன கெட்டவனா நடந்தேன். சும்மா கண்டதும் பேசாத”

“குற்றவாளிக்கிட்ட பேசினா நீங்களும் குற்றத்துக்கு துணை போகறீங்கன்னு தான் அர்த்தம்” என்றாள் அவளும் விடாது.

“இப்படியே பேசிட்டு இருந்தே நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”

“என்ன மிரட்டறீங்களா??”

“ஆமாடி மிரட்டுறேன் உனக்கு சீனியர் தானே நானு. அந்த மரியாதை கொஞ்சமாச்சும் இருக்கா உனக்கு. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க”

“அப்படித்தான் பேசுவேன், நீங்க பண்ணுறதை ஐஜிகிட்ட மட்டுமில்லை. முதலமைச்சர் வரைக்கும் கூட கொண்டு போவேன். நீங்க மட்டுமில்லை யார் தப்பு செஞ்சாலும் இப்படித்தான் செய்வேன். யாரும் என்னை எதுவும் செய்ய முடியாது, உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க”

“ஒழுங்கா மரியாதையா உங்க தப்பை திருத்திக்கப் பாருங்க. இல்லைன்னா இப்போ வாய் வார்த்தையா சொன்னதை நாளைக்கு கம்பிளைன்ட்டா எழுதி அனுப்பிடுவேன்” என்று அவள் தனக்கு தோன்றியது எல்லாம் பேச அவன் முழுக்க முழுக்க கொதிநிலையில் இருந்தான்.

“இப்போ நீ வாயை மூடுறியா இல்லையா”

“அப்படித்தான் பேசுவேன். பொண்ணுங்கன்னா உங்களுக்கு இளப்பமா” என்று அவள் பேச அவள் கையை பிடித்து முறுக்கிவிட்டான் அவன்.

நொடியில் லாவகமாய் அவனிடத்தில் இருந்து விலகியவள் “ச்சீய் இதான் உங்க வீரமா. இப்படித்தான் அத்துமீறி நடப்பீங்களா ஒரு பொண்ணுக்கிட்ட” என்று மேலும் மேலும் பேசி அவன் கோபத்திற்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்தாள் அவள்.

“நீ பேசுறதை நிறுத்தலை நான் என்ன வேணா செய்வேன்”

“என்ன செய்வீங்க அடிப்பீங்களா எங்க என் மேல கையை வைச்சு பாருங்க. அப்போ தெரியும் நான் யாருன்னு” என்று இவள் பேச சட்டென்று அவள் முகத்தை இரு கைகளாலும் பிடித்திழுத்தவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டுவிட அதை எதிர்பாராத மெல்லினா அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள். பேச்சே வரவில்லை அவளுக்கு சில நொடிகளுக்கு.

ஆத்திரேயனும் வேண்டுமென்றே செய்யவில்லை(?!) ஏதோ உணர்ச்சி வேகம் அவள் பேச்சை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே தோன்றியிருக்க அக்காரியத்தை செய்து விட்டிருந்தான்.

அவன் மனசாட்சியே அவனை குத்தியது. ‘டேய் ஆதி என்ன காரியம் செஞ்சிருக்கே நீ போலீஸ்டா இப்படியெல்லாம் செய்யலாமா’ என்று அது குத்தி குடைந்தது அவனை. ‘அச்சோ நான் தெய்வமா மதிக்கற இந்த உடுப்பை போட்டுட்டே தப்பு பண்ணிட்டனே’ என்று வருத்தமும் எழுந்தது அவனுக்கு.

‘நல்ல வேளை அவ ஸ்டார் எல்லாம் எடுத்திட்டா அவ போட்டிருக்கறது வெறும் காக்கி உடுப்பு தான்’ என்று சற்று ஆசுவாசம் கொண்டவன் தானும் அந்த உடையில் இருக்கிறோம் என்பதை ஓரிரு நொடிகள் மறந்தான்.

மெல்லினா மெல்ல சுய உணர்வுக்கு வந்தவள் ஆத்திரேயனை பார்த்து முறைத்தாள். இம்முறை அவன் அமைதியாக பார்த்திருந்தான் அவளை.

“இதான் உங்க லட்சணமா உங்களை எவ்வளவு உயர்வா நான் நினைச்சிருந்தேன். நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைக்கலை”

“நான்… நான் வேணும்ன்னு செய்யலை” என்றான் மெல்லிய குரலில்.

“வேற எப்படி நினைச்சு செஞ்சீங்க?? இப்படி தான் ஒரு பொண்ணுக்கிட்ட அத்துமீறுவீங்களா??”

“என்ன அத்துமீறிட்டேன், நீ பேசிட்டே இருந்தே ரொம்ப பேசினே. உன் பேச்சை நிறுத்தணும்ன்னு அப்படி…” என்றவனுக்கு வார்த்தைகளை முடிக்க முடியவில்லை.

“ஓ!! அப்போ இது போல எத்தனை பொண்ணுங்களோட பேச்சை நீங்க நிறுத்தியிருக்கீங்க” என்றாள் அவள்.

“ஹேய் என்னை என்னன்னு நினைச்சே நீ. உன் இஷ்டத்துக்கு என்னை பேசுறதே வேலையா போச்சு உனக்கு, போடி” என்று கத்தினான் அவன்.

“இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும்” என்றாள் அவள் கோபமாய்.

அவனுக்கு கோபம் தீரவில்லை இன்னும் இன்னும் தன்னை கீழ்த்தரமாய் எண்ணி பேசுபவளை கண்டு அளவில்லாது ஆத்திரம் பெருகியது அவனுக்கு.

“என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ போடி” என்றவன் அந்த அறையில் இருந்து வெளியேறிவிட்டான். என்ன நினைத்தானோ பாதி வழியிலேயே திரும்பி வந்தவன் “நான் செஞ்சது தப்பு தான் சாரி” என்றான்.

“சாரி கேட்டா நடந்தது இல்லைன்னு ஆகிடுமா என்ன. அருவருப்பா இருக்கு எனக்கு, இன்னும் எத்தனை பொண்ணுங்ககிட்ட நீங்க இப்படி அத்துமீறி…”

“ப்ளீஸ் ஸ்டாப் இட் நான் அந்த மாதிரி இல்லை. நான் பண்ணது தப்பு தான் மன்னிக்க முடிஞ்சா மன்னிச்சுடு” என்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் அவன்.

——————

உதகையில் இருந்து மகேஸ்வரி அழைத்திருந்தார் மெல்லினாவிற்கு. “மெல்லினா எப்படிடா இருக்கே??”

“சொல்லுங்கம்மா நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க??”

“எனக்கென்னடா நல்லா தான் இருக்கேன் நீங்க யாருமே இல்லாம இன்னும் குத்துக்கல்லா இருக்கேனே” என்றார் அவர் சலித்த குரலில்.

“ம்மா இப்படில்லாம் பேசாதீங்கம்மா”

“எல்லாரும் இருந்தும் என்னை தனியா விட்டுட்டீங்களே” என்று சொல்லும் போதே அவர் குரல் உடைந்தது.

“ம்மா ப்ளீஸ்ம்மா”

“சரி சரி நான் ஒண்ணும் சொல்லலை” என்று சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டார் அவர்.

“அம்மா வெண்பா எப்படி இருக்கா?? அவங்க வீட்டில எல்லாரும் எப்படி இருக்காங்க. குட்டீஸ் வந்தாங்களா??”

“அவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க”

“என்னம்மா சலிச்சுட்டே சொல்றீங்க”

“அவ வாழ்க்கையை அவ பார்த்துகிட்டா நல்லாவும் வாழ ஆரம்பிச்சுட்டா. உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு மெல்லினா அதை எப்போ நீ வாழப் போறே”

“எனக்கென்னம்மா அவசரம்??” என்றாள் அவள்.

“உனக்கு வயசு இருப்பத்தியாறு முடியப் போகுது இன்னும் பத்து நாள்ல. என் மனசு பதறுது மெல்லினா, நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுத்தா தான் அம்மாவுக்கு நிம்மதியே” என்ற அன்னையின் உடைந்த குரலில் அவளால் எதுவும் பேச முடியவில்லை.

“அம்மா இன்னும் ஒரு வருஷம் எனக்கு டைம் கொடுங்க”

“முடியாது மெல்லினா அம்மா உனக்கு மாப்பிள்ளை பார்த்திட்டேன்”

“அம்மா ப்ளீஸ்ம்மா”

“வர்ற வெள்ளிக்கிழமை நீ ஊட்டியில இருக்க. அன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க. அப்படி நீ வரலைன்னா அம்மா இனி உனக்கில்லை, இந்த உலகத்திலயும் இல்லை. உங்கப்பா போன இடத்துக்கு நானும் போய்டுவேன். செய்ய மாட்டேன்னு நினைக்காத என்னோட வீம்பை பத்தி உனக்கு நல்லாவே தெரியும் அப்புறம் உன்னிஷ்டம்” என்று சொல்லி போனை வைத்துவிட்டார் அவர்.

—————-

“ஆதி இன்னைக்கு என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போயேன்டா”

“அம்மா எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கும்மா. என்னால முடியாது நீங்க திலோவை கூட்டிட்டு போங்க”

“டேய் அவளுக்கு இப்போ குழந்தை பிறந்திருக்குடா. இந்த நேரத்துல பாப்பாவை தூக்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் போக முடியாது”

“சரி இப்போ என்ன பண்ணலாங்கறீங்க??”

“நீ வாடா…”

“அப்பாவை கூட்டிட்டு போங்களேன்ம்மா”

“அவருக்கும் மீட்டிங் இருக்குன்னு காலையிலவே கிளம்பிட்டார்”

“ரிடையர்ட் ஆகிட்டாரு இன்னும் என்ன மீட்டிங்”


“அப்பா ஸ்கூல்ல பெரிய பதவியில இருந்தவர் அவரை நாலு இடத்துல இன்வைட் பண்ணுறாங்க போயிட்டு வர்றார்”

“இப்போ என்ன நான் உங்ககூட கோவிலுக்கு வரணும் அதானே. அண்ணனை வரச்சொல்லி கூட்டிட்டு போகலாம்லம்மா”

“இப்போ என்னடா நீ வரமாட்டா அதானே. நான் கோவிலுக்கு போகறதுக்கு நீ வா நீ வான்னு ஒரு ஒருத்தர் கால்லயும் விழுகணும் அதானே” என்று கோபமானார் அவர்.

“எப்படியோ போங்க”

“விடு நானே போய்க்கறேன் எங்காச்சும் நான் மயக்கம் போட்டு விழுந்திட்டா எவனும் உங்களுக்கு தகவல் சொல்லக்கூட மாட்டான்”

“ம்மா… ஏன் இப்படி பேசறீங்க. அப்படியாச்சும் கோவிலுக்கு போகணும்ன்னு என்ன இருக்கு. அந்த சாமி சொல்லுச்சா நீ மயக்கம் போட்டு விழுந்தாலும் கோவிலுக்கு வான்னு”

“எல்லாம் உனக்காக தான்டா கோவிலுக்கு போறேன். உனக்கு சீக்கிரம் பொண்ணு அமையணும்ன்னு வேண்டிக்கத்தான் போறேன்”

“துர்க்கைக்கு விளக்கு போட்டா நல்லதுன்னு எதிர்த்த வீட்டு சாந்தா சொன்னா. நீ வேணா பாரேன் இன்னைக்கு கோவில்க்கு போயிட்டு வந்ததும் எல்லாமே நல்லதா நடக்கும்ன்னு தோணுது”

“இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்??”

“என்ன அவசரமா?? ஏன்டா அறுபதுல பண்ணிக்கறேன்னு சொல்றியா… உங்கண்ணன் எல்லாம் இருபத்தியஞ்சு வயசுல கல்யாணம் முடிச்சான்”

“அவனது லவ் மேரேஜ்”

“நீயும் பண்ணேன்டா நான் என்ன வேணாம்ன்னா சொல்றேன்” என்று அன்னை சொல்லவும் அவன் கண் முன்னே மெல்லினாவின் முகம் தான் வந்து போனது.

Advertisement