Advertisement

இன்று

“டேய் இவ எதுக்குடா இப்போ என்னை திட்டினா??” என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் அவன்.

நித்தேஷோ “அடேய் அவ திட்டினது மட்டும் தான் உன் மண்டையில இருக்கா?? வேற ஒண்ணும் கவனிக்க மாட்டியா நீ??”

“நித்தேஷ் நீ சொன்னது நிஜமா??”

“எதை நிஜமான்னு கேட்கறே நீ??”

“அவ மனசுல நான் இருக்கேன்னா சொன்னா அவ”

“அதை சொல்லி தான் இம்புட்டு நேரம் அவ உன்னைய திட்டிட்டு இருந்தா”

“எப்படிடா நான் அவளை சரியா பார்த்தது கூட இல்லை. அவளும் அப்படித்தான் என்னோட டீம்ல இருந்தா, வெறும் டிஸ்கஷன் டீம்ல மட்டும் தான் இருந்தா. முழுக்க இருக்க முடியாதுன்னு அப்போவே சொல்லிட்டா. எக்சிகியூஷன் முழுக்க வேற அதர் டீம் மேட்ஸ் தான் பண்ணாங்க”

“கூடிப்போனா ஒரு ரெண்டு மீட்டிங்ல இருந்தா அவ்வளவு தான். அதுக்குள்ளே எப்படிடா??”

“நீ ஐபிஎஸ் ஒரே அட்டம்ப்ட்ல பாஸ் ஆகிட்டல”

“எதுக்குடா கேட்கறே??”


“சொல்லேன்”

“ஆமா…”

“அதான் உனக்கு வேற எதுவுமே தெரியலை”

“டேய்!!”

“பின்ன என்னடா அவ பேசினதை பார்த்தா உன்னை ரொம்ப வருஷமா தெரியும் போல பேசிட்டு போறா. நீ எதுவுமே தெரியாத மாதிரி பேசுறே, எனக்கு தெரியாம எதாச்சும் பண்ணியா சொல்லுடா”


“போடா” என்று கத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான் ஆத்திரேயன்.

தயாளன் வழக்கு ஆத்திரேயனின் வசம் தானிருந்தது. அவன் தயாளனின் இடத்தில் இருந்து எடுத்த காது தொங்கட்டானை தான் பார்த்திருந்தான்.

அவனுக்கு முன்பே தயாளனை தெரியும். அவர் பெண்களிடம் சரியில்லாமல் நடந்து கொள்பவர் என்று அவனறிவான்(!?). கோவையில் அவன் ராஜனிடம் வேலைப் பார்த்த போது அவனுக்கு அவ்வளவு பிடித்தமிருக்கவில்லை.

ஆனால் அங்கு நிறைய கற்றுக் கொண்டிருந்தான். ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர்கள் என்று அவன் அறிய நேர்ந்தது அவ்விடத்தில் தான். அங்கிருந்த சில மாதங்களிலேயே அவனுக்கு மதுரைக்கு மாற்றலாகியிருந்தது.

அப்போது தான் தயாளனின் குணத்தை அறிய நேர்ந்தது. முன்பே தயாளனை தெரியும் அவனுக்கு. ஆவணம் ஒன்று வாங்க நேரில் சென்ற போது பார்த்திருந்தான் அவரை. அவருக்கு கீழே பணிபுரிவோம் என்று எண்ணியிருக்கவில்லை.

அப்போது கொஞ்ச நஞ்ச வேலையா வாங்கினார். ஆத்திரேயனை பிழிந்து எடுத்தார் மனிதன். ஆத்திரேயன் யோசித்துக் கொண்டிருந்தான் நடந்த கொலை எதனால் இருக்கும் என்று ஓரளவிற்கு அவனால் அனுமானத்திற்கு வர முடிந்தது.

ஆனாலும் தான் எங்கேயோ தவறுகிறோம் என்றும் அவனுக்கு தோன்றியது. நடந்த கொலையில் சிக்கியது பெண்ணின் கம்மல் என்றாலும் கொலையை ஒரு பெண் செய்திருப்பாள் என்று அவனால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.

தயாளனின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வந்திருக்கவில்லை. போன் செய்து அதை உடனே அனுப்புமாறு சொல்லிவிட்டு தடவியல் குழுவிற்கு போன் செய்து பேசி வைத்தான்.

இரண்டு வாரம் கடந்திருந்தது அன்றைய நாளுக்கு பின்னர் மெல்லினா அவன் கண்ணில்ப்படவில்லை. அதனால் தானோ என்னவோ அவன் கருத்திலும் அவள் வந்திருக்கவில்லை.

முதல் இரண்டு நாட்கள் அவள் நினைவு இருந்த போதும் அதையெல்லாம் மறக்கச் செய்யும் அளவிற்கு அவனுக்கு வேலைகள் இருந்தது. தயாளன் கேசை கவனித்துக் கொண்டிருந்த அதே வேளையில் இன்னுமொரு அதிகாரியும் கொலையாகி இருந்தார். நடந்த கொலைகளை கண்டுப்பிடிப்பதே அவனுக்கு சவாலான வேலையாக இருந்தது.

இந்நிலையில் தான் மீண்டும் அவன் மெல்லினாவை சந்தித்தான். போனில் இவன் யாருடனோ பேசிக் கொண்டிருக்க அவள் இவனுக்கருகில் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

இவன் வேண்டுமென்றே அவளைக் கண்டுக்கொள்ளாதது போல(?) போனில் வெகு சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தான். அழைத்தது அவன் நண்பன் விக்ரமே.

“அந்த பைல்ஸ் தானே நானே எடுத்திட்டு வர்றேன் விக்ரம். நீ அட்ரஸ் சொல்லு, இட்ஸ் ஓகேடா எனக்கு தெரியும் நீ எவ்வளவு பிசின்னு. உனக்காக இதை செய்ய மாட்டேனா. நானும் பிசி தான் இல்லைன்னு சொல்லலை, ஆனா இது நான் தினமும் வர்ற வழி தான் கொடுத்திடறேன். ஓகேடா பை” என்று சொல்லி அவன் போனை வைக்க அதுவரையிலும் அங்கு தான் நின்றிருந்தாள் மெல்லினா.

அவன் கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டான். சில மணித்துளிகளிலேயே அவன் மேஜையில் இருந்த போன் ஒலியெழுப்பியது.

“மிஸ்டர். ஆத்திரேயன் கம் டு மை கேபின்” என்ற குரலில் அவசர அவசரமாய் எழுந்து ஐஜியை காணச் சென்றான் அவன்.

லேசாய் கதவைத்தட்டி அவன் உள்ளே நுழைய அங்கிருந்தவளை பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சியே. ‘இவ இங்க என்ன பண்ணுறா’ என்ற ரீதியில் தான் அவளைப் பார்த்திருந்தான்.

“உட்காருங்க” என்று ஐஜி இருக்கையை காட்ட அமர்ந்திருந்தான் அவன்.

சற்று முன்பு மெல்லினா ஐஜியை பார்க்க வந்திருந்தாள் வேலை நிமித்தமாய். சில தகவல்களை அவள் நேரடியாய் அவரிடம் உரைக்கும் பொருட்டு வந்திருந்தவள் வந்த வேலை முடிந்ததும் தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள்.

“எனிதிங் எல்ஸ் மெல்லினா”

“எஸ் சார்” என்று சொன்னவள் அவரை நிமிர்ந்து பார்த்தாள். ஐஜியை எங்கோ பார்த்தது போன்ற தோற்றம் அறைக்குள் நுழைந்த போதே இருந்தது அவளுக்கு. இப்போதும் அவர் முகத்தையே பார்த்திருந்தாள்.

“தென் டெல் மீ” என்று அவர் சொல்லவும் தன் பார்வையை மாற்றியவள் “சார் ஒரு அதிகாரி என்னை மாதிரின்னு வைச்சுக்கோங்க. ஒரு குற்றவாளிக்கிட்ட பேசலாமா சார்”

“நமக்கு அது தானே வேலையே, குற்றவாளிக்கிட்ட பேசி அவன் குற்றத்தை ஒப்புக்க வைக்கணும் தானே. இதென்ன கேள்வின்னு என்னை கேட்க வந்தீங்க”

“சார் நான் சொன்ன அந்த ஆளு இன்னும் பகிரங்கமா குற்றவாளின்னு உறுதி ஆகலை. அவர் கூட நட்பு ரீதியா நாம பழகலாமா சார். அது தப்பில்லையா” என்று அவள் கேட்க சிறு குழந்தை போல கம்பிளைன்ட் செய்கிறாளே என்று தான் அவருக்கு தோன்றியது.

அவளின் இந்த இரண்டு மூன்று வருட அனுபவத்தில் இதோ போல ஓராயிரம் இவள் பார்த்திருக்கக் கூடுமே. இப்போது புதிதாய் என்ன என்று தோன்றினாலும் அவள் யார் மீது கம்பிளைன்ட் செய்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்குள்.

“யாரும்மா அது??”

“ஆத்திரேயன் சார்”

“வாட் கம் அகைன்”

“ஆத்திரேயன் சார்”

இதழ்களில் லேசாய் தோன்றிய புன்னகையை அடக்கிக்கொண்டு அவர் ஆத்திரேயனை வரவைத்திருந்தார். இதோ அவனும் அவர் முன் வந்து இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“சொல்லுங்க மிஸ்.மெல்லினா ஆத்திரேயன் வந்தாச்சு. எதுவா இருந்தாலும் நேரா பேசி தீர்த்துக்கோங்க. இனி இது போல ஸ்கூல் பசங்க கம்பிளைன்ட் எல்லாம் என்கிட்ட வரக்கூடாது இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கணும்” என்று கொஞ்சம் கண்டிப்போடும் அதே சமயம் சத்தமிடாமலும் சொன்னார் அவர்.

“என்ன பிரச்சனை சார்??”

“நீங்க குற்றவாளி கூட எல்லாம் பிரண்ட்ஷிப்பா பழகுறீங்கன்னு மெல்லினா சொல்றாங்க”

“வாட்!!” என்றவன் திரும்பி அவளை அப்பட்டமாய் முறைத்திருந்தான்.

“ஓகே நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. எதுவா இருந்தாலும் நேரா பேசுங்க, புரிஞ்சதா. ஆத்திரேயன் உங்களுக்கும் தான்” என்று அவனை சொல்லவும் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“சாரி பார் தி டிரபிள் சார். இவங்க ஏதோ என்னை ஏதோ தப்பா புரிஞ்சுட்டு பேசிட்டாங்கன்னு நினைக்கிறேன்”

“ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்பிலனேஷன் நீங்களே சார்ட் அவுட் பண்ணிக்கோங்க. இனி இது போல எதுவும் என் காதுக்கு வரக்கூடாது” என்று ஆத்திரேயனை குறிப்பாய் பார்த்து அவர் சொல்லவும் உடைந்தே போனான் அவன்.

“சாரி சார்” என்ற மெல்லினா அவரிடம் விடைப்பெற்று வெளியே செல்ல ஓரிரு நொடிகளிலேயே ஆத்திரேயனும் வெளியே வந்தான்.

அங்கு மெல்லினாவை காணவில்லை. அளவில்லாத கோபத்தில் இருந்தான் அவள் மேல்.

அவளைத் தேடிக் கொண்டு அவன் வர அவள் ஓய்வறையில் இருந்தாள். எப்போதும் அவ்வறைக்கு யாரும் செல்ல மாட்டார். அது உடைமாற்றும் அறையாகவும் உபயோகப்படுத்துவர் என்பதால் வெளி அறையில் இருந்து தான் அழைப்பது.

இவன் சென்ற போது பணி முடிந்து ஒவ்வொருவராய் கிளம்பியிருந்தனர். ஓரிருவர் மட்டுமே அங்கிருக்க இவனை கண்டவர்கள் அவனை தடுக்கவில்லை. இவன் மெல்லினாவை கேட்க அவர்கள் அடுத்த அறையில் அவள் இருக்கிறாள் என்று சொல்ல நேரே உள்ளே நுழைந்துவிட்டான் அவன்.

அவள் வீட்டிற்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் போல. “உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க நீ??”

“என்ன விஷயம்??”

“எதுக்கு என் மேலே ஐஜிகிட்ட கம்பிளைன்ட் பண்ணே”

“அப்படித்தான் பண்ணுவேன் நீங்க சரியில்லை அதை சொன்னா உங்களுக்கு வலிக்குதா”

“நீ எப்படி என்னை தப்பு சொல்லலாம். என்ன தெரியும் உனக்கு என்னைப்பத்தி நீ யார்கிட்ட கம்பிளைன்ட் பண்ணி இருக்கேன்னு உனக்கு தெரியமா இடியட்” என்று அடிக்குரலில் சீறினான் அவன்.

“ஐஜி கண்டதும் நடுக்கம் வந்திருச்சா”

“யூ ஸ்டுபிட் அவர் யார் தெரியுமா என்னோட சொந்த தாய் மாமா. ஹி இஸ் மை ரோல்மாடல், ஹீரோ எல்லாமே அவர் தான் எனக்கு. அவர்கிட்ட போய் என்னைப்பத்தி கம்பிளைன்ட் பண்ணியிருக்க என்ன நினைச்சிருப்பார் அவர் என்னை” என்று அவன் சொல்லவும் ‘அதனால தான் அவரைப் பார்த்தப்போ எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சா’ என்று எண்ணினாள்.

Advertisement